போயாக்: கடிதங்கள்

கதை சொல்லும் நவீன் இம்முறையும் நம்மை ஏமாற்றவில்லை. இது அவரின் சுய அனுபவமாக இருக்க முடியாது, ஏனெனில் நவீன் எனக்குத் தெரிந்தவரை பணியிட வேலை மாறி சரவாக் மாநிலத்துக்குப் போனதில்லை. எனவே யாரோ ஆசிரியர் சொல்லக் கேட்டு எழுதியிருக்கலாம். இது என் அனுமானம். இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனால் மட்டுமே தான் செவிமடுத்த ஒன்றை புனைகதையாக்க முடியும். நீட்டல் மழித்தல் இருக்கலாம். அப்படி இதிலும் உண்டு என்று நம்புகிறேன்.

கதையின் தொடக்கத்தில் அந்த நிலம் சார்ந்த ஒரு சித்திரத்தை நமக்களிக்கிறார். மக்களின் பண்பாட்டு சித்திரமும் பழுதில்லாமல் பதிவாகியிருக்கிறது. தன் வாழ்வனுபவத்துக்கு முற்றிலும் முரணான ஒரு வாழ்க்கையை காட்டுவதோடு மட்டுமல்லாமல் மெல்ல மெல்லத் தானும் அங்கமாகிப் போகும் காட்சிகளை நம்மால் உள்வாங்க முடிகிறது. முதலையைக் கொன்று சமைத்துண்ணும் மனிதர்களைக் காட்டி தன் ஒவ்வாமையை அழகியல் குன்றாமல் சொல்லிப் போகிறார். இங்கேதான் கதையின் மையத்துக்குள் நுழைகிறோம். முதலை தரைக்கு வந்தால் அங்குள்ள மக்களுக்கு உணவாவதும், தண்ணீருக்குள் அவர்கள் சிக்குண்டால் முதலைக்கு உணவாவதுமான ஒரு சிக்கலான வாழ்க்கையைக் காட்டி, கதைக்கான பீடிகையை சன்னஞ் சன்னமாய் கொண்டு வந்து சேர்க்கிறார். தன் பண்பாட்டுக்கு சற்றும் ஒவ்வாத நெருங்கவே முடியாத ‘முதலைக்கு’ இரையாகப் போகும் பீடிகை நம்மால் கதை மையத்துக்குள் நுழைவதற்கு முன்னாலேயே மோப்பம் பிடித்து விட முடிகிறது.

கதை சொல்லி சீமாவின் மீது மெல்ல மெல்ல மனச் சாய்வு கொள்ளும் போது வில்லங்கம் தொடங்க ஆரம்பிக்கிறது. முதலையை நாம் மீண்டும் இங்கே நினைவுக்குக் கொண்டு வரும் கட்டம் இது. சீமாவின் அழகில் தன்னை இழந்துகொண்டிருக்கும் கதைசொல்லிக்கு நெஞ்சை பகீரிடச்செய்யும் அவள் மாந்தீரீக அப்பனின் சக்தி கதைசொல்லியை மட்டுமல்ல நம்மையும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால் இளம் பெண்ணின் உடலாசை இளநெஞ்சை பிழிந்துவிடாதா என்ன? கதை சொல்லி சீமாவை ஸ்பரிசிககும் போது வாசகனுக்கு முதலை என்ற அவளின் அப்பனின் அச்சுறுத்தும் அமானுட சக்தி  நமக்குள் குறுக்குவெட்டாக பிளந்து கொண்டு நிற்கிறது. அந்தச் சமூகத்தின் இளம்பெண்ணோடு உறவுகொள்ளும் ஒருவனின் நெற்றியில் ஆண்குறி முளைக்கும் என்ற செய்தி வாசகனின் நம்பகத் தன்மைக்கு முரணாக இருந்தாலும், கதையின் ஓட்டமும் அங்குள்ள மக்களின் நம்பிக்கையும் கதைக்குள் ஒன்றிவிடச் செய்வதனால் வாசகனும் நம்பகத் தன்மைமுண்டாகிறது. இந்தக் கதை அழகியலில் சறுக்கியிருந்தால் சிறார் கதையாகி இருக்கும். ஆனால் கதையின் சீரான ஒட்டத்திலும் அழகியலிலும் சிறந்தே பரிணமிக்கிறது.

தன் அப்பா சுகவீனப் பட்டுப் போக கதைசொல்லி தன் ஊர் திரும்பும் போது மீண்டும் முதலையைப் பற்றிச் சுட்டி தன் தீரா அச்சத்தையும் அழுத்தமாகவே பதிவு செய்கிறார் .

நிலக் காட்சி இன்னும் அழுத்தமாக பதிவாகி இருக்கலாம். நவீனின் சிறந்த கதைகளில் ஒன்று போயாக்.

கோ.புண்ணியவான்

***

நல்ல கதை. உயிர்களின் / மனிதர்களின் comfort zone பற்றிய கதையாக வாசித்தேன். முதலை நீரிலும் நிலத்திலும் வாழ்வது. பண்பாட்டு உராய்வை பேசும் கதைக்கு உகந்த தலைப்பு. நீரிலும் நிலத்திலும் முதலை வாழ்ந்தாலும் அதன் இயல்பான அல்லது ஆற்றலுடன் வாழுமிடம் நீர். கதைசொல்லி தனது இடத்தை விட்டு வெளியேறி வருகிறான். இரண்டு வேறு பண்பாடுகள். அதுவும் ஆங்கிலம் கற்பிக்க. கதையில் நினைவுகூறபடுவது போல். வெள்ளையர்களுக்கு பின் பல காலம் கழித்து வேற்று பண்பாட்டிலிருந்து வருகிறான். அதுவும் வெள்ளையரை போல் தானொரு மேம்பட்ட பண்பாட்டின் பிரதிநிதியாக பரமக்குடிகளின் வாழ்வை ஆங்கிலம் கற்பித்து உய்விக்கும் நோக்குடன். அங்கே மாற்று பண்பாட்டின் வழக்கங்கள் அருவருப்பை தருகிறது. தாய் வழி vs தந்தை வழி பண்பாட்டு உராய்வு ஒரு தளம். இறுதியில் மேலாதிக்க மனபாங்கிலிருந்து குற்ற உணர்வு மன நிலையில் வெளியேறுகிறான். அது சீமாவை சார்ந்தது மட்டும் அல்ல. மொத்த ஈபான் மக்களுக்கும் தனது எல்லையை உணர்ந்து மீள்வதாக நான் புரிந்து கொள்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்

***

முதலைகள் அருவருப்பையும் பயத்தையும் மட்டுமே எனக்கு இந்த வயது வரை அளிக்கின்றன, நான் அடிப்படையில் ஒரு உயிரியியலாளன் என்ற போதிலும் கூட. தர்க்கங்களை மீறிய பயம் இருக்கிறது. தனிமை எப்போதும் இயல்பாக நடக்கும் நிகழ்வுகளை அதீதப் பயத்தின் காரணமாக முடிச்சு போட்டுக் கொள்வது கதை சொல்லிக்கும் நிகழ்கிறது. கதையைப் படிக்கும் பேn தே அந்த பயத்தினை அடைந்தேன் வாழ்த்துக்கள் நவீன்.

தண்டபாணி முருகேசன்

***

தொன்னூறுகள் வரையிலான தமிழ் திரைப்படங்களில் ஒரு அம்சத்தைக் காண முடியும்.  ஒரு நாயகன் மூட்டை முடிச்சுகளுடன் கிராமத்தை நோக்கி வருவது. கதை சொல்லியும் அவ்வாறே செல்கிறான். ஆனால் இக்கதை அவனை லட்சியவாதியாக எல்லாம் காட்டாமல் தடுமாற்றங்களும் தான் சாராத கலாச்சாரத்தின் மீது அறியும் ஆவலும் அதேநேரம் ஒவ்வாமையும் உடையவனாக கட்டமைத்திருக்கிறது. கதைக்களம் புதிதே. அறியாத ஒரு பழங்குடி கிராமத்திற்குள் நுழையும் போது ஒரு வாசகனாக நான் இன்னும் கூட எதிர்பார்ப்பேன். மது வகைகள் உணவு பழக்க வழக்கங்கள் என ஒரு நம்பத் தகுந்த விரிவான சித்திரத்தை கதைக்களம் கொண்டுள்ளது.

முதலை வகுப்பறையில் சாதாரணமாக படுத்துக்கிடப்பதை பார்க்கையில் கதை சொல்லி அடையும் துணுக்குறலை நானும் அடைந்தேன். முதலையை நோக்கி கதை நகரும் போது இக்கதை உச்சத்தை நோக்கி ஏறுகிறது. ஆனால் அந்த இழையை தவறவிட்டு சட்டென காதல் கதையாக நகர்வது சற்றே அலுப்பேற்படுத்துகிறது. அவன் தப்பிச்செல்ல முடிவெடுக்கும் தருணம் பழங்குடிகளின் மாயங்களுக்கு அஞ்சுவது என பிற்பகுதியுடன் முதலை எனும் படிமத்தை பொருத்திப்பார்க்க முடிந்தாலும் அதை இன்னும் வலுவாக பயன்படுத்தி இருக்கலாமோ என எண்ணுகிறேன். மற்றபடி மிகச்சரளமான தொய்வடையாத சறுக்காத நடை அதிலும் ஒரு மெல்லிய எள்ளல் தொனி என இக்கதையிலும் தான் சுவாரஸ்யமான கதை சொல்லி என்பதை நவீன் உறுதி செய்கிறார். நல்ல கதை .

சுரேஷ் பிரதீப்

***

ஈபான் இனமக்களை வேறு கலாச்சார ஒரு ஈர்ப்புடன் பார்க்கும்போது சீமாவின் தந்தையின் மாந்திரீகத்தால் கவலையுற்று வெளியேற நினைக்கிறான். அது பிடிக்காத முதலைக் கறிபோல அவன் மனதை தாக்குகிறது. வெவ்வேறு இனமக்கள் ஒன்றாகும்போது ஏற்படும் கவர்ச்சியும்/வெறுப்பும் என கதை மாறுவது அழகு. முதலை நிலத்தில் வரும்போது உணவாவது, மனிதன் நீரில் அதற்கு உணவாவதும் தான் அதன் கரு. நன்று.

கே.ஜே. அசோக்குமார்

***


வழக்கமாக நவீனின் கதையை உள்வாங்க குறைந்தது இரண்டு மூண்டு வாசிப்புகள் தேவையாகும். இக்கதையை ஒரே வாசிப்பில் உணர்ந்தும் விமர்சிப்பதற்காக மீள் வாசிப்பில் நுழைந்து வந்தேன்.

ஆற்றில் நீரறந்தும் மான்குட்டியின் மிகப்பக்கத்திலேயே சலனமின்றி படுத்துக்கிடக்கும் முதலை, தேவையாகும் வேளையில் நேர்த்தியுடன் லபக்கென்று கௌவிச் செல்லும் லாவகம் போல… கதைசொல்லி சொல்ல எண்ணியதை நேர்த்தியான கதைநடையுடன் நிசப்தமாய் முடிவில் வைக்கிறார்.

இதுபோல் கதைச்சொல்லும் துணிச்சல் மலைநாட்டின் படைப்பிலக்கியத்தில் பிற எழுதாரரிடம் உள்ளதா? என்பது பெரிய கேள்விக்குறி. உடலமைப்பின் உறுப்புகளையும், உணர்ச்சிகளின் உறுத்தல்களையும் யாரைப்பற்றியும் கருதாது சுவாரசியமாக சொல்லிச்சென்ற யுக்தி அபாரம்.

தனக்கேற்பட்ட காம உளைச்சலில்… மதுபான சேர்ந்திருக்க முதலைத்தனமாய் காரியம் முடித்து தப்பியோடும் காட்சியமைப்பில் ‘போயாக்’ வேறொரு தளத்தில் ஊறுகிறது.

கெட்டிக்காரத்தனாமாய் தலைப்பை வைத்து, முதலைகளின் அச்சுறுத்தல்களை ஆங்காங்கே மையமிட்டு… முதலைக்கு இறையாகியோ அல்லது தாக்கவரும் முதலையிடம் தப்பித்து ஓடிடுவானோ என்ற யூகிப்புகளை நிரப்பிவைத்து… எதிர்பாரா விதத்தில் அவனையே முதலையாய் சித்தரித்திருப்பது சிறப்பு.

சில குழப்பங்கள்…

மலாய் தெரியாத சிம்பா, இபான் தெரியாத ஆசிரியர் என்றிருக்க… எந்த மொழியில் கதைகள் சொல்லப்பட்டன? இடையிடையில் சில வார்த்தைகளுக்கு மட்டும் ஆங்கில அர்த்தம் போதிக்கவே ஆங்கில ஆசிரியரா?

சீமா மற்றும் சிம்பாவுக்கு தந்தையைத் தவிர வேறாரும் இல்லையா? எந்நேரமும் உதவ காத்திருந்த மக்கள் இரவு முழுக்க சிம்பா ஆசிரியரின் வீட்டில் இருந்ததை உணராமல் எங்கே சென்றார்கள்?

இவைகளைத் தவிர… அண்மையில் நான் வாசித்த கதைகளில் ஒரு வித்தியாசம் நிறைந்த கதையாக ‘போயாக்’ உற்றுப்பார்க்கிறது.

கலைசேகர்

***

வணக்கம் நண்பரே. இரண்டாம் வாசிப்பில் தான் கதையை ஓரளவுக்கு உள்வாங்கிக் கொண்டேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு ஆங்கில ஆசிரியராக கல்வியில் பின் தங்கிய ஒரு உட்புற பகுதிக்கு செல்வது பின்பு அங்கு ஏற்படும் கலாச்சார அதிர்ச்சிகள் என்று ஒரு பகுதி கதை நகர்ந்து சீமா மற்றும் சிம்பாவின் வரவு கதையை வேறு கோணத்தில் நகர்த்தி செல்கிறது.முதலை தரைக்கு வந்து தாக்கினால் அத்துமீறல் அதுவே நாம் ஆற்றுக்கு சென்றால் அதுக்கு நாம் இரை என்பது ஆண் பெண் உறவுக்கு உள்ள விளக்கமாக தோன்றுகிறது. சீமாவின் தந்தைக்கு இருக்கும் விசேஷ சக்தி அச்சம் தந்தாலும் சீமாவின் அருகாமை தடுமாற்றம் தருகிறது. பின் தந்தையின் நிலைமை பற்றிய சேய்தி தண்டனையாகவே படுகிறது. பிறகு கணத்த மழை,சிம்பாவின் வருகை,அவளும் நேர் வகிடு எடுத்து தலை சீவி இருந்தது, காலையில் மழை தூறல்,சிம்பாவை தூக்கி சென்று அவள் வீட்டில் படுக்க வைக்கும் போது அவள் கன்னத்தில் காய்ந்து இருந்த கண்ணீர் பிசு பிசுப்பு என்ன நடந்து இருக்கும் என்று இலை மறை காயாக சொல்கிறது.காட்டு பன்றியின் கண்கள் இரவில் பார்த்த சிம்பாவின் கண்கள் போல இருந்தது என்று சொல்வதும் தெளிவு படுத்துகிறது. இந்த இடத்தில் கதைச் சொல்லியை ஒரு முதலையாக கருதலாம். அதன் பிறகு படகில் ஏறியதும் படகோட்டியின் செய்கை தலைமையாசிரியர் சொல்லிய அவர்கள் இனத்து மக்களுக்கும் முதலைக்கும் உள்ள ஒப்பந்தத்தை நினைவுறுத்துகிறது. நன்றி.

மகேந்திரன் ராஜேந்திரன்

***

நேர்த்தியான கதையோட்டம். உங்கள் கதைகளில் சில முடிச்சுகளை போட்டுக்கொண்டே வந்து முடிவில் சொல்லாமல் சொல்லி செல்லும் முறையை இக்கதையிலும் பார்த்தேன். மூன்று முக்கியமான் இடங்களை கவனிக்காவிட்டால் கதையின் சாரம் பிசகும். முதலை தரைக்கு வந்தால் மனிதனுக்கு உணவாவது மனிதன் நீரில் அதற்கு உணவாவது போல கதையில் வரும் ‘நான்’ செய்த வன்முறைக்கு அது நடந்த இடத்தை காரணம் காட்டி உள்ளூர சொல்லிக் கொள்ளும் ஆறுதல் கணம் அருமை. மனிதன் தனதத்தனை தவறுகளுக்கும் இப்படித்தான் ஏதாவதொன்றை சொல்லி தன்னைத்தானே மன்னித்து விடுகிறான், குறைந்த பட்சம் குற்றவுணர்விலிருந்து தற்காலிக விடைபெற்று விடுகிறான். குடியிருப்பையும் அந்த மனிதர்களையும் இன்னும் கூட காட்சிபடுத்தியிருக்கலாம்.

விஜயலட்சுமி

 

(Visited 399 times, 1 visits today)