பொதுவாக சொல்லிவிட்ட எதையும் என்னால் எழுத இயலாது. சொல்லியது கடந்து இன்னும் சொல்லாமல் விட்டவை இருந்தால் மட்டுமே பேசியதை எழுத முடியும். போயாக் கதை குறித்து உங்களிடம் உரையாடி விட்டேன் உரையாடலில் .விடுபட்டது ஏதேனும் இருப்பின் அதை எழுதலாம் என எண்ணினேன். இதோ அந்த விடுபடலை எழுது முன் உங்களுடன் உரையாடியவற்றின் மையத்தை தொகுத்து முன் வைத்து அதன் பின் விடுபடலை தொடர்கிறேன் .
தொழில்நுட்ப குறைபாடு .
கதை நிகழும் காலத்தில் இருக்கும் தெளிவின்மை . உதாரணமாக கதைசொல்லியால் ரூமா பாஞ்சாங்கில் இருந்து புறப்பட விமான டிக்கட் போட முடிகிறது , ஆனால் அவனுக்கு அவன் அப்பா உடல் நலம் குன்றிய தகவல் இரண்டு நாள் தாமதமாக கிடைக்கிறது . ஆற்றை கிடப்பதால் அவன் இழக்கும் நவீன உலக வசதிகளில் தலையாயது தகவல் தொடர்பு என்றாகிறது .எனில் காலம் அதில் சரியாகவும் அதே சமயம் குறிப்புணர்தலாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும் .
கால ஓட்டத்தில் பழகி விட்டது போன்ற சொற்தொடர்கள் கதை சொல்லின் தன்னுரையில் வெளிப்படக் கூடாது .அது சிறுகதை உருவாக்கும் உணர்வு கட்டமைப்பை பலவீனம் செய்யும் .
கலை குறைபாடு . [ஒன்று ]
//சிம்பாவின் அப்பா இளம்குமரிகளுடன் உறவு வைத்துக்கொள்பவனுக்கு மட்டும்தானே நெற்றியில் ஆண்குறி வளர வைப்பார் எனும் குழப்பம் அச்சமாக எழுந்தபோது ஒப்பந்தப்படி ஆற்றில் இருப்பதால் நாங்கள் முதலைகளின் இரையாகலாம் எனப்படகோட்டி சொல்வதாகப் புரிந்துகொண்டேன்.//
கதையின் இறுதி இது. இலக்கியப் புனைவின் பணி என்ன? சொல்லப்பட்ட கதை முடியும் போது ,அது வாசகனுக்குள் சொல்லப்படாத கதை ஒன்றினை துவங்கி வைத்திருக்க வேண்டும் .
மாறாக இந்த இறுதி வரிகள் கதையை அங்கேயே முடித்து வைத்து விடுகிறது. இந்த வெளிப்படையான கூறு முறையால், இது வெறும் கதை சொல்லின் பிரச்னை என்ற அளவில் நின்று விடுகிறது .
மாறாக அந்த இறுதி, கதை சொல்லியின் தன்னுரையாக அன்றி முற்றிலும் ஒரு காட்சி படிமமாக உருவாகி இருந்தால், இந்த கதை பேசும் சிக்கல் முழுக்க முழுக்க வாசகனின், ஆழத்தை சேர்ந்த சிக்கல் ஒன்றின் பரிசீலணையாக மாறி இருக்கும் .
இலக்கியப் புனைவு வாசிக்கப்படுவது கதை சொல்லியின் சிக்கல் என்ன என தெரிந்து கொள்வதற்கு அல்ல. வாசகனாகிய எனது சிக்கல் என்ன என புரிந்து கொள்வதற்கு .
கலை குறைபாடு .[இரண்டு ]
கதையில் அழகாக உருவாகி வந்த இடங்கள் இரண்டு, அம்மா உடல் நிலை மேல் வாசகனை மையம் கொள்ள செய்து விட்டு, அப்பா உடல் நிலை சரிவு வழியே அதை உடைப்பது . சீமா வை மையம் கொண்டு பின்தொடர வைத்து சிம்பாவை முன் வைத்து அதை உடைப்பது .
இதுவேதான் கதையின் மையமான போயாக்கை முன்வைத்தும் நிகழ்ந்திருக்க வேண்டும், சிம்பாவின் மந்திரவாதி அப்பா மீதான பீதி மீது வாசக கவனத்தை குவித்து முதலை வழியே அதை உடைத்திருக்க வேண்டும். முன்னுள்ளது கதையின் வடிவ ஒறுமையை தக்க வைக்கும் எனில் ,பின்னுள்ளது கதையின் உணர்வு ஒருமையை தக்க வைக்கும் .
போயாக் முதலைக்கு ஈபான் மொழியில் இலங்கும் பெயர் என்பது கடந்து முதலை சார்ந்து தனித்துவமான விஷயங்கள் ஏதும் கதைக்குள் இல்லை. உதாரணமாக முதலைகளுக்கு பயம் கிடையாது .காரணம் அவற்றுக்கு வலி அறியும் உணர்வு கிடையாது. இது அந்த பழங்குடியின் பலம் மற்றும் வன்முறை, அவர்களின் உணவு இவற்றில் பிரதிபலித்தால் கதையின் ஆழம் கூடுகிறது .
சிம்பா சொல்லும் கதைகளில் இந்த முதலை எல்லை காவல் தெய்வமாக ,தண்டிக்கும் கடவுளாக, மூதாதை வாகனமாக விதவிதமாக வடிவு கொள்ளும் எனில் இந்த கதை அதன் மைய முடிச்சை இன்னும் இறுக்கம் கொண்டதாக முன்வைக்கும் .
மௌனமாக இந்த மைய படிமத்தை கதைக்குள் உலவ விடும் பல தருணங்கள் கதை உள்ளேயே அமைந்திருக்கிறது . உதாரணமாக நெருங்கும் சீமாவை உன்மத்தம் கொண்டு இடையை வளைக்கிறான் .அவள் முதலை தோலால் செய்த இடை பட்டி அணிந்திருக்கிறாள் . அவன் பதட்டம் கொள்கிறான் . இப்படி மௌனமாக குறிப்புணர்த்தலாக ,போயாக் கதைக்குள் உலவிக்கொண்டே இருக்க பல தருணங்கள் இருக்கிறது .
இறுதியாக முதலை எனில் எப்போதும் அது வெறும் முதலை அல்ல , கூர் மூக்கு முதலை, வட்ட மூக்கு முதலை, என முதலையில் அடிப்படையாக இரண்டு வகை உண்டு, இந்த கதையில் இத்தகு நுண் தகவல்களோ , முதலையின் இறந்த கண் எவ்வாறு இருந்தது, போன்ற நுண் விவரணைகளோ இல்லை .
களம் , உள்ளடக்கம், இரண்டிலும் வலிமையான கதை. கூறு முறை பலவீனத்தால் இலக்கை தவற விட்ட கதை.
கடலூர் சீனு
சீனு, ஆம் தாங்கள் சுட்டிய சில பகுதிகளின் போதாமைகளை உணர்கிறேன். குறிப்பாக முடிவு. மிக்க நன்றி.
ம.நவீன்
ஶ்ரீவிஜி
ஒரு இளம் பெண்ணின் அந்த வயதுக்கேயுண்டான சலனத்தை தனது இச்சைக்கு வடிகாலாக பயன்படுத்தி அதன்பின் விலகிச் செல்லும் ஒரு ஆண் முதலையின் கதை எனப் புரிந்துகொள்கிறேன். ஆயிரம் தமிழ் சுநிமாக்களில் பார்த்த அதே கதைதான். இருந்தும் புதியதொரு பண்பாட்டுத் தளத்தில் அதை இருத்துவதன் மூலம் , அதற்கொரு அனுமாஷ்ய திறப்புகளை (மாந்த்ரீக அப்பா , நெற்றியில் முளைக்கும் குறி ) ஏற்படுத்தியிருக்கிறீர்கள் . கதையில் எனக்கு மிகவும் பிடித்தது உங்களின் மொழி . கொஞ்சம் தவறினாலும் விரசமாகி விடக்கூடிய கதையின் நடுப்பகுதியில் , erotic வாசனை அறவே வராமல் அட்டகாசமாக எழுதியுள்ளீர்கள் . அந்த இடங்களை நான்கைந்து முறை படித்துத் தீர்த்தேன் .
அதேபோல் கதையில் நீங்கள் தவறவிட்ட இடம் . அல்லது மிகச் சுருக்கமாக முடித்துவிட்ட இடம் ஒன்றுண்டு எனக் கருதுகிறேன் . பயத்தோடு கூடிய குற்ற உணர்வில் மனித மனம் தனக்கு கிடைக்கும் புற சமிக்ஞைகளை இருவேறு விதமாக புரிந்து கொள்வது பற்றி . கதையிலேயே படகோட்டி நீரைக்காட்டி கைகள் இரண்டையும் திறந்து திறந்து மூடும்போது , முதல் தடவை கதைசொல்லி அந்த உடல் பாவனையை தன்னளவில் நிராகரித்துச் செல்வதும் … கதையின் இறுதியில் முதலையுடனான ஒப்பந்தம் கதைசொல்லிக்கு ஞாபகம் வருவதும் நுணுக்கமான அவதானிப்பு . புதியதொரு களத்தின் விவரணைகளைக் குறைத்து அந்த குற்ற உணர்வை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருந்தால் கதை இன்னுமொரு அடுக்குக்கு விரிந்திருக்குமோ என எண்ணிக்கொள்கிறேன் .
மற்றுமொன்று… கதைசொல்லியே ஒரு முதலையாக அவதாரம் எடுப்பதும். அவனே பிறிதொரு இடத்தில் முதலைக்கு இரையாவதன் சாத்தியங்கள் இருப்பதும் ஒரு அழகான முரண். அந்த திசையில் இந்தக்கதை பயணம் செய்திருந்தால்கூட வேறொரு பரிமாணம் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். உங்களின் மொழிவளத்திற்கு அதற்கான சாத்தியங்கள் நிச்சயம் உண்டு . வருடத்தின் ஆரம்பத்தை அமர்க்களமாக ஆரம்பித்து உள்ளீர்கள்.
செல்வன் காசிலிங்கம்
இருவேறு முரண் கலாசாரப் பின்னணி கொண்ட இரு உள்ளங்கள் மனத்தளவில் சிக்கிக்கொண்டு வெளியேறும்படியாக கதை அமைந்திருக்கிறது. மனிதன் ஆற்றுக்குச் சென்றால் முதலைக்கு உணவு; முதலை கரைக்கு வந்தால் மனிதனுக்கு உணவு என்பது கதையின் கருவாக அமைவதோடு அது ஆசிரியருக்கும் சிம்பாவுக்கும் குறியீடாக அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல பதிவு!
சேகரன்