பேச்சி : கடிதங்கள்

20180304_162353கதைக்குள் நுழைவதற்குள், கதைசொல்லியை நான்கு வார்த்தைகள் திட்டிவிட வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை வியக்கும்படிச் சொல்லிச் செல்லும் யுக்தியை எங்கிருந்து ஐயா கௌவிக்கொண்டீர்கள்?

ஒரு சிறுகதையில் இவ்வளவு சொல்ல முடியுமா என்ற வியப்பை அள்ளிக் கொட்டுவதில் அப்படியென்ன வெறி உங்களுக்கு?

சிறிய புள்ளியான கருவை நீங்கள் பாட்டுக்கும் கிறுக்கித் தள்ளி திகைக்க வைப்பதில் யார் மேல் இந்த ஆதங்கம்?

அடிக்கடி புதியவைகளை எழுதித் தள்ள எங்கிருந்து கிடக்கிறது நேரம்?

அடர்ந்த வாசிப்பால் மாறி வருகிறீர் ஒரு சிறுகதை ராட்சசனாய்! கவனம்.

பேச்சி:

தாத்தா….பெற்றோர் விடுபட்டு…பேரன்…பிறகு அந்த பேரனின் மகன். அப்பா சொல்லும் தாத்தாவின் கதையை அவனுக்கேற்றாற்போல் வரைய முனைகிறான் புதியவன்… அதை சொல்வதைப்போலவே அமைக்க துடிக்கும் கடைசி காலத்தில் பழையவர்.

கேட்டவற்றை உள்வாங்கி தான் விரும்பிய பாணியிலே மடிக்கணினியில் புதைக்க விரும்பும் புதியவனிடம்… தனக்கேற்ற பாணியிலே கதை அமையவில்லையே என உள்ளுக்குள் குமுறும் முதியவர் என்ற சிக்கலில் இருவரையும்  பேச்சியாகவும் முனியாகவும் காட்டிச் செல்கிறது கதை.

தனக்குள் இருக்கும் நிஜங்களும் கற்பனைகளும் நிறைந்த தன் தாத்தா காலத்து  கதையை, எப்படியாவது இந்த உலகின் பார்வைக்கு பதிவிட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆர்வத்தை முதியவரிடம் பார்க்க முடிகிறது. அக்கதையை வாசிப்பவர்கள் அதி முக்கியமாக தங்கள் குல தெய்வமான பேச்சியை பிரமித்து புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நிஜங்களை விட கற்பனைகளை மிகைப்படுத்தி சொல்லிவிடுகிறார் மகனிடம்.

தான் எழுதும் கதையை வாசிப்பவன் எப்படி பார்ப்பான்? கதை பேசப்படுமா? அவனுக்கு அது புகழையும் அபார விமர்சனங்களையும் கொட்டிக் கொடுக்குமா என்பதிலே முழு கவனமாக இருக்கும் மகன். அவன் பாணியிலேயே கதையை வேறொன்றாக முடிக்க முயல்கிறான்.

கதையின் முடிவு இருவரில் யார் விரும்பியபடி அமையுமோ என்ற வினாவோடு முடியும் கதையின் கதை!

அப்பாவின் கதையில் வரும் பேச்சி, முனி, பேச்சியாக மனைவி, தாயாக பேச்சி, முனியாக பன்றி என பிரம்மிக்க வைக்கும் கற்பனைகள் அடர்த்தி. மனைவி கதா பாத்திரம் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவளுள் பேச்சியைப் பாத்தேன்.

நவீனை வாசித்தவரை ‘பேச்சி’ இன்னொரு மைல்கல்.

கலைசேகர், ஈப்போ

நவீன் அவர்களுக்கு, தொடர்ந்தார்போல் உங்களது சிறுகதைகளை வாசித்து வந்தததில் ‘பேச்சி’ ஒரு நாவலின் உச்சமான முடிவுபோலவே எனக்குத் தோன்றியது. தாங்கள் எழுதிய ‘நாகம்’ ஒரு பெண்ணின் காமத்தை; காமத்தில் இருக்கும் அவளது வன்மத்தை; அதில் பெண் காமம் நாகத்தின் படிமத்தைச் சொன்னது. அடுத்ததாக ‘போயாக்’ ஒரு ஆணின் காமத்தை; ஒரு பெண் தனது இச்சையால் எவ்வளவு நெருங்கி வந்தாலும் ஆணே தனக்கு தேவையான ஜோடியை அடைவதை இக்கதையின் கரு முன்னிறுத்தியது. ‘யாக்கை’  ஒரு ஆணை விரட்டி ஓட விடும் பெண்ணை; ஆணல்ல பெண்ணே தனக்கான ஜோடியை அடைகிறாள் என்பதை; அவள் உடல் அவளுக்கானது என்றது. இப்போது ‘பேச்சி’, இதெல்லாம் இல்லை பெண் என்பவள் பெரும் சக்தி. அவளே பேய்; அவள்தான் தாய் என்கிறது. அவள் நினைத்தால் எப்படிப்பட்ட ஆணையும் அடக்கிவிடுவாள் என்கிறது. என் வாசிப்பில் ஒரு நீண்ட ஆய்வில் ஈடுபட்டு இறுதியாக நீங்கள் ஒரு கண்டுப்பிடிப்பைச் செய்துள்ளதாகவே எண்ணிக்கொண்டேன்.

மகேந்திரன்

(Visited 67 times, 1 visits today)