கடிதம் : சிவமணியம்

அன்புள்ள நவீனுக்கு,White butterfly 04

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி,  நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை,  நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து,  அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள்.  என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன்.

சிறுவர் பள்ளியில் போட்டியாளராகவும், அணுக்க தோழர்களாகவும் ஒன்றாகப்   படிக்கும் சிறுமியான கொடிமலரும், சிறுவனான கணபதியையும்தான் கதையின் முதன்மைப் பாத்திரங்கள். முன்பு ரப்பர் தோட்டத்தில் வேலைபார்த்த தன் தந்தை இறந்த பின்  ஒரே துணையான அன்னை ருக்குவுடன் வளர்கிறார் வெள்ளை பாப்பாத்தி கொடிமலர். அன்னை தோட்ட வேலையில் சகிக்க நேரும் பாலியல் தீண்டல் சுரண்டலை அறியாத அதிஅழகியான கொடிமலர், ‘இயந்திர வாகனங்களில் முதலில் வருபவைகளுக்கே முதலிடம்’ என்ற  சாலையின் கறாரான விதிப்படி இயங்கும் சிவப்பு சமிக்ஞையைக் கூட மிட்டாயாக்கி விழுங்க கற்பனை செய்பவள். தந்தையின் தோள் வலியினை தன் மந்திரக்கோல் கொண்டு மறைய வைக்கும் குட்டி ஜப்பான் கொடிமலர். சிலம்பில் அரிசி முத்தையும், காகிதத்தின் பின்புலத்தில் பச்சை வண்ணமிட்டு அசையும் வெள்ளை வண்ணத்துப்பூச்சியை படைக்கும்  படைப்பு மனம் கொண்டவள்.

சிவப்பு மண் புழுதியின் நடுவே தலைமை ஆசிரியரின் காரில் வந்திறங்கும் கணபதி வாய்ப்பு நேரும்போதெல்லாம் கொடிமலரின் தோல்வியை வக்கணை (பழிப்பு) காட்டி கொண்டாடுபவராக இருக்கிறார், மதிப்பெண் புள்ளிப் போட்டியில் முதலில் வருவதே குறியாக இருக்கிறார் கணபதி. கொடிமலர் படைப்பூக்கத்துடன் படைத்த வெள்ளை வண்ணத்துப்பூச்சி ஓவியத்திற்கு புள்ளி குறைவாக கிடைக்கிறது. அதனால் துவண்டு விழுந்த கொடிமலரை நோக்கி, பாதத்தை கையாக்கி கார்க் கண்ணாடியில் ஆட்டியபடி வெற்றியை கொண்டாடும் ஆக்கிரமிக்கும் குறிவிடைத்த ஆணாக மாறுகிறார்  சிறுவன் கணபதி. இரும்பு இயந்திரங்கள் மெல்லிய சிறகினை அழுத்த நேர்ந்தாலும், அதனால் பாதிக்காமல், பெருங்கடல்களையும் கண்ட அடுக்குகளையும் ஒரு வீச்சில் தாண்டும் வல்லமை கொண்ட அதிபெரிய வெள்ளை அன்னப் பறவையாக (Whooper swan) என் மனதில் பறந்து விரிகிறாள் இந்த கொடிமலர்.

சில வாரங்களுக்கு முன் நடந்த ஊட்டி இலக்கிய கருத்தரங்கில் , தேவதை கதைகள்(Fairy tales) தொடர்பான விவாதம் நிகழ்ந்தது. இந்த வகைக் கதைகளில் வரும் வண்ணங்களுக்கு நினைவுகளுடனான தொடர்பு வலிமையானது எனவும், அவற்றை கனவுகளுடனும் , குணங்களுடனும் தொடர்பிட்டு விரிக்கலாம் எனவும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கதையை அதற்கு ஒரு நல்ல சான்றாக பார்க்கிறேன். வண்ணங்கள் மிகுந்த  இந்த ‘வெள்ளைப் பாப்பாத்தி’ கதையில் வரும் வெண்மையை குழந்தைமை, தேவதைத்தன்மை, நேர்மைத்தன்மை, தெய்வீக குணங்களாகவும், சிவப்பினை ஆக்கிரமிப்பு, கட்டற்ற அதிகாரம், பேரார்வம் கொண்ட அதீத போட்டி மனப்பாங்காகவும் . மஞ்சள் நிறத்தினை அவமதிப்பு , கையறுநிலை, நோய்மைநிலை எனவும் பொருத்திப் பார்க்கிறேன்.

சமீப காலமாக படித்த சிறுகதைகளில், பார்த்த திரைப்படங்களில் முழுக்க எங்கும்  வியாபித்திருந்த சதை மோதல்களும், இரத்த வாடை தெறித்தல்களாலும் சோர்வான மனது  ஒரு மாறுதலுக்காக , அதிதூய இந்த தேவதைக் கதையை வாசித்ததால் சுகானுபவம் பெற்றது.   இந்தக் கதையுடன் கு அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ கதை நேரடியாக தொடர்பிருந்தாலும்,  ருக்கு, கொடிமலர் உறவினை அசோகமித்ரனின் ‘தண்ணீர்’ கதையில் வரும் ஜமுனா, சாயா பாத்திரங்களுடன் தொடர்பு படுத்த தோன்றுகிறது. அதில் ஒரு பகுதியில், ஒரு மழைநாளில் சுற்றுச் சுவர் தாண்டி , பக்கத்து வீட்டிற்கு சென்று,  அதன் மாடியிலிருந்து வழியும் மழைநீரை குடத்தில் பிடித்து கொண்டு செல்வாள் ஜமுனா. இதனை ஜமுனா சோரம் போன தருணமாக அசோகமித்ரன் விவரிக்கிறாரோ என எண்ண வைத்தது. இந்தக் கதையிலும் ருக்கு சோரம் போக வாய்ப்பிருந்ததை, கொடிமலரை அவள் தண்ணீரை விரயப்படுத்தாமல் மலம் கழிக்க வைக்கும் நிகழ்வுடன் பொருத்திப்பார்க்க தோன்றுகிறது. ஜமுனாவின் மனநிலை சரியில்லாத அன்னையை பார்க்க வரும் போது, வெள்ளை மலர்களை பறித்துக் கொண்டிருப்பார் அன்னையை பராமரித்து வரும் அவருடைய மாமா. அவருக்கு உரையாடல்கள் அந்தக் கதையில் கிடையாது. ஆனால் இந்த வெள்ளைப் பூ பறிக்கும் சித்திரத்தில் அவரின் வெள்ளை மனதினை வாசகனுக்கு கடத்தியிருப்பார் அசோகமித்ரன். அதுபோல பாண்டிய மன்னனாக நடித்த, கொடிமலரிடம் செய்தியை கூறும் ‘கதிர்வேலுவின்’ குணத்திலும் வெண்மையைப் பார்க்கிறேன்.

மடக்கிய ஆள்காட்டி விரலை மேலும் கீழும்  ஆட்டியபடி, கீழுதட்டில் நாக்கினை மோத வைத்து காட்டிய பளிப்புச் செய்கையினை  என்னை குழந்தை போல செய்ய வைத்ததற்கு நன்றி 😉


நன்றி,

சிவமணியன்

 

(Visited 115 times, 1 visits today)