கடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்!

indexவெள்ளைப் பாப்பாத்தி

ஒரு இடைவெளிக்குப் பின் எழுதும் கருத்துரை அல்லது சிறிய எதிரொலி. சிறிது நேரம் அழகு காட்டி மறையும் வண்ணத்துப்பூச்சி வாழ்வு. அவ்வுலகில் நிறைந்திருப்பது அடர்த்தியான வண்ணங்களும் சிறகுகளும் மட்டுமே.

வெண்டைக்காயில் தொங்கட்டான் போட்டு தங்களை அழகுப்படுத்திக் கொண்ட ‘கோணங்கியின்’ கொல்லனின் பெண் மக்கள் : தின்பண்டத்துக்கு ஏங்கிய தன் குழந்தைகளுக்கு சோழ தட்டையை நிலக் கசக்காய் கசக்கி கொடுத்த கொல்லன். இந்த உலகுக்குள் ஊடுருவிப் புதைந்திருப்பது அற்புத வாழ்வியல் வண்ணங்கள். கவிதை மொழியில் பின்னிக் கலந்த கதையுலகம்.

சா. கந்தசாமியின் கதைப்புலம் குழந்தைகளின் நிழலோட்டத்தோடு சிறு கீற்றாய் இழையோடும் காதல். ‘சிலுவை’ என்பது மதம் சார்ந்த சொல் அல்ல. தனக்குள் பல பரிமாணங்களை உள்ளடக்கிய படிமம்.

குழந்தைகளின் உலகுக்குள் புதைந்து கதை உலகமாக்குவதற்கு தனி கவித்துவ மனம் தேவை. ம.நவீன் முயன்றிருக்கிறார்.

கொடிமலர், ருக்கு மற்றும் கணபதி நடமாடும் உலகு வண்ணங்கள் தோய்ந்த அற்புத உலகு. காட்சிப்படுத்தலில் நவீன் வென்றிருக்கிறார். குழந்தைகளின் சிறகு முளைத்த உலகைக் காட்ட ஆழமான ஆளுமை வேண்டும். நவீன் முதல் அடி எடுத்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது. நம்மை குழந்தமைக்கு மனம் திரும்பச் செய்ய நவீன் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

வாழ்வியல் களத்தில் ருக்குவிடமிருந்து உதிர்ந்த மறைந்த சிறகுகள் ‘கொடிமலரிடம்’ உருப்பெறுகிறது. இது அற்புதமான நீட்சி. நம் வாழ்வியல் வடுக்கள் மறைந்து மனம் முழுதும் வண்ண மகரங்கள் படர இந்த நீட்சியால் மட்டுமே இயலும்.

‘சிலுவை’ போல ‘வண்ணத்துப்பூச்சியும்’ ஒரு படிமமே. கொடிமலருக்கும், கணபதிக்கும் ஊடாக இழையோடுவது ஈர்ப்பு மற்றும் காதல். பழிப்புக் காட்டுதலும், போட்டி சண்டைகளுக்கு இடையில் மறைந்திருப்பது ஈர்ப்பாகவே உணர்கிறேன்.

காற்றில் அசைவுறும் ரிப்பன் நம் வாசிப்பின் வழி உருவகப்படுத்திக்கொள்ளும் முன் நவீன் வண்ணத்துப்பூச்சியாக எளிமைப்படுத்திவிடுகிறார். கொடி மலர் தன்னை தேவதை என அவளாகவே சொல்லிவிடுகிறாள். எளிமைப்படுத்தப்பட்ட உலகு வாசகர்களை எளிதாகச் சேர்ந்துவிடுகிறது.

உறக்கத்தில் தேவதைகளோடு நடைபெறும் உரையாடலில் குழந்தைகளின் உதட்டோரம் மலரும் மெல்லிய புன்னகை. ஒரு விமர்சகனாக தன்னை முன்னிறுத்திக்கொள்வதை தவிர்க்கையில் நவீன் எனும் படைப்பாளி முழுமையாக வெளிப்பட முடியும் என்பது என் அபிப்பிராயம். தன்னுள் அலைவுறும் சிறகுகளை உணரும் உழைப்பின் வழி நவீனால் உருவாக்க முடியும் புதுமொழி வீச்சை.

அதற்கான நம்பிக்கையை இச்சிறுகதை கொடுக்கிறது.

பம்பாவாசன்

(Visited 99 times, 1 visits today)