என் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இப்படி உரிமையுடன் அழைப்பதற்கு காரணம் உங்களின் அண்மைய சிறுகதையான ‘வெள்ளை பாப்பாத்தி’ என்பதை சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறேன்.
‘நாகம்’ சிறுகதையைப் படித்தவுடனேயே நீங்கள் எனக்கான எழுத்தாளர் என்று முடிவெடுத்தேன். சில அறியாமைகளை முகநூலில் கேட்டிருந்தேன். பதில் சொல்லவில்லை 🙂
‘வெள்ளை பாப்பாத்தி’ எனக்கு மிகுந்த அணுக்கமான சிறுகதையாக உள்ளது.
கொடிமலர்: இவள் தன்னை தேவதையாக நினைக்கிறாள். எந்த தேவதை என்பதே முக்கியம். கொடுமைகளில் சிக்குண்ட Cinderella காப்பாற்ற வரும் Fairy Godmother தேவதை ஆகும். கொடிமலர் Cinderellaதான். துன்பங்களால் கஷ்டப்படுகிறாள். ஆனால் அவள் தன்னைக் காக்கும் Godmother தேவதையாக உருவகித்து கொள்கிறாள்.
ருக்கு: ருக்குவும் கொடிமலரின் இன்னொரு பரிணாமம். அவளுக்கும் துன்பம் உண்டு. ஆனால் துன்பத்தை Cinderella போல சகிக்கப் பழகுகிறாள். அவமானங்களை அனுமதிக்கிறாள்.
இரு கதாபாத்திரங்களின் ஒற்றுமை: பலவீனமானவர்களில் எப்போதுமே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி இடம் உண்டு. ஆனால் அந்த பலவீனம் வெளியே தெரியாமல் மறைக்க அன்பு காட்டுவது, விட்டுக்கொடுப்பதாகச் சொல்வது, உதவுவதாக சொல்வது, பொறுமை காப்பது எல்லாமே பெண்களால் இயல்பாக கடைபிடிக்கப்படுகிறது எனச்சொல்வதில் எனக்குக் கிஞ்சிற்றும் கூச்சம் இல்லை. இந்தக் கதையில் கொடிமலரும் ருக்குவும் அதையே செய்கிறார்கள். அப்படி செய்தால்தான் அவர்களால் நிம்மதியாக வாழ்க்கையை நிம்மதியுடன் ஓட்ட முடியும்.
கணபதி : இவன் எதிர்க்கதாபாத்திரம். ஆனால், அவனுக்குள் இருக்கும் குழந்தை தன்மையை மறைத்துக்கொண்டு பெரியவர்களுக்காக எப்படி வாழ்கிறான் என தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளால் அதிக நேரம் பெரியவர்களாக வாழ முடியாது.
கதையின் நுட்பம்: இந்தச் சிறுகதையின் நுட்பமே அம்மாவின் கதாபாத்திரம்தான். வாசக ஊகத்திற்கு விட்டுள்ள இடைவெளியால் அம்மா இறுதிக்காட்சியில் அவளுக்கு அந்நியமாகத் தெரியும் காரணம் நிரப்படுகிறது. அதன் மூலமே கதையின் இறுதியில் கொடிமலர் அம்மாவை விளக்கும் ஒரு இணை கதாபாத்திரமாக எனக்குத் தோன்றுகிறாள்.
கதாபாத்திரங்களின் பிணைப்பு : இவர்கள் எல்லாமே சரம் சரமாக ஒரு சங்கிலியின் மணிகள் போல கோர்த்து வைக்கப்பட்டுள்ளதே இக்கதையின் சிறப்பு. பலமிக்கவர்கள் வாழும் இவ்வுலகில் பலவீனமானவர்களும் எப்படி தங்களை தக்கவைத்துக்கொள்கிறார்கள் என கொடிமலர் மற்றும் அவளது அன்னைவழி கதை நகர்கிறது.
அரசியல் : கதையில் பேசப்படும் அரசியல் முக்கியமானது. மனிதர்களால் ஒரு நடவடிக்கை நடக்கும்போது அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் இயந்திரத்திடம் அது இல்லாததும் கதையின் பின்னணியில் பேசப்படும் அரசியல்.
அ. கணபதி அம்மா கொடுக்கும் மாலைக்கு கோயிலில் கிடைக்கும் முக்கியத்துவம்.
ஆ. சமிக்ஞை விளக்கு ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செயல்படும்போது தோட்டக்காரர் அச்செயலை செய்யும்போது கைக்கொள்ளப்படும் பாராபட்சம்.
இ. ஆசிரியர் புள்ளிகள் கொடுப்பதில் உள்ள பாராபட்சம்.
ஈ. ‘கெப்பாலா’ (supervisor என பொருளா?) வேலையிடத்தில் காட்டும் பாராபட்சம்
இப்படி சிறு அதிகாரம் யார் கையில் கிடைத்தாலும் அதை பிரயோகிப்பதில் காட்டும் பாராபட்சங்களின் அரசியலயே இக்கதைக்குள் இருக்கும் அரசியல்.
முடிவு: அதிகாரங்கள் கையாளும் பாராபட்சங்களில் சிக்குண்டுள்ள இரு பலவீனமான பெண்கள் (கொடிமலர் – ருக்கு) தங்கள் தங்கள் உலகில் எவ்வாறு வாழப்பழகுகிறார்கள் என காட்டிச்செல்லும் கதை இது. பலவீனமானவர்கள் எப்படி பலமானவர்களுக்கு வரம் தருபவர்களாக மாறுகிறார்கள் என சொல்லிச்செல்கிறது.
நன்றி
ப்ரியா