வெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

index‘வெள்ளை பாப்பாத்தி’ குழந்தைகளின் உலகத்தில் குழந்தமையைத் (innocence) தவிர வேறு எந்த விழுமியங்களுக்கும் பொருள் இல்லை என்று உணர்த்தும் கருவை களமாகக் கொண்டு பயணிக்கும் விழுமியத்தின் உரு. இருந்தாலும் சிதைந்த கருவின் ஒரு துளி உதிரம் போல அபலைப் பெண்களின் அவலத்தை தன்னை அறியாமலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ருக்குவின் ‘மினி சைக்கிள்’, 80களில் துண்டாடப்பட்டத் தோட்டக்காட்டு பெண்களின் வேலை இல்லா கையறு நிலை என் மனக்கண் முன் என் சகோதரிகளையும் நவீன் போன்றொரின் அம்மாக்களையும் நிழலாடச் செய்தது இது. அன்றைய பிழைப்பு நெருக்கடி மட்டுமல்லாமல், ருக்கு போன்ற அபலைகளின் சமுதாய மதிப்பீடுகள் சார்ந்த தனி மனித ஒழுக்க இடுக்குகள் குவிந்த அடையாள சிக்கலும் கூட. அனுபவத்தில் இல்லாத நெருக்கடிகளைக் கையாள முடியாத அடையாளக் குழப்பங்கள் நிறைந்த இருண்ட வாழ்க்கையின் சித்தரிப்பு எழுத்தாளனின் பிரக்ஞை இன்றியே வெளிப்பட்டுள்ளது. அவரின் ஆழ்மனதின் அதிருப்திகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் குழந்தைகள் உலகத்தில் இந்த அத்துமீறல்கள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. பெரியவர்களுக்குத்தான் இத்தனை மன வேறுபாடுகளும். நமக்கு பெரியவர்கள் என்ற தோரணை எத்தனை சுமை என்று கச்சிதமாகக் கதாசிரியர் கொடிமலர் மூலம் உணர்த்தி விடுவதில் நிச்சயமாக வெற்றி பெருகிறார். ருக்குவுக்கு ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளில் உடல் சார்ந்த பிரக்ஞை பெரும் சுமை. தலைமை ஆசிரியருக்கோ தன் மகனைத்தவிர வேறு யாரும் வகுப்பில் முதலாக வந்துவிடக்கூடாது என்ற கௌரவச் சுமை. அதை அறியா பருவத்தில் சுமக்கின்ற கணபதிக்கு வயதுக்கு மீறிய கர்வத்தின் சுமை.

இதை எதையுமே உணராத வயதும், அறியாத மனமும் உடைய கொடிமலருக்குக் குழந்தமை என்பது வண்ணத்துப்பூச்சியாய் சுமைகளற்று சிறகு விரிக்கிறது. அந்த மெல்லிய இறக்கைகளை தொலைத்தவர்களுக்கு, சுமைகளையே மீண்டும் மீண்டும் தேடி அலையும் மனித வாழ்க்கை எவ்வளவு துரதிஷ்டமானது என்று படிக்கப் படிக்க உணர வைக்கும் நவீனின் கதை சொல்லும் போக்கு கவித்துவமானது.

கொடிமலர் தேவதையாகி கணபதிக்கு அருள்வதாகக் கதையை நகர்த்தி எந்தத் தத்துவ சிக்கலும் இல்லாமல் ஆன்மீகம் கமழ வைக்கிறார். வாழ்த்துகள் நவீன். தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடைய சிறந்த கதைகளில் மிகச் சிறந்தது இது.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, கூலிம்

(Visited 130 times, 1 visits today)