எனது தனி வாழ்வில், சில வருடம் முன்பு தனிப்பட்ட முறையில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை தமிழ் நிலத்தில் அரசு தனது பள்ளிகள் வழியே குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வியும், அது அந்தக் குழந்தைகளை சென்று சேரும் விதத்தையும் ஒரு தன்னார்வலனாக கடலூர் மாவட்டத்தின் பல அரசு ஆரம்ப பள்ளிகளில் சென்று தங்கி அவதானித்திருக்கிறேன் .
[விதி விலக்குகளை தவிர்த்து] உள்ளதில் எது சீரழிந்த காய்கறிகள்; எது அழுகிய அரிசி, எது பயன்படுத்த தகுதி அற்ற பண்டமோ, அதுவே பெரும்பாலும் பள்ளிக்கு வந்து சேரும். மொத்தமாக போட்டு ஒரு கூட்டாஞ்சோறு. பல பள்ளிகளில் குழந்தைகள் உடன் சேர்ந்து உண்டிருக்கிறேன். வெளிநாட்டில் பன்றிகளுக்குக் கூட அந்த உணவை அளிக்கமாட்டார்கள் என நாஞ்சில் ஒரு கதையில் எழுதி இருப்பார் .
நூறு பிள்ளைகள் இருக்கும் பள்ளியில் ஐநூறு பிள்ளை என கணக்கு பதிவேடு சொல்லும். ஐநூறு முட்டைகள் வரும். அதில் நானூற்று தொண்ணூற்றி ஒன்பது முட்டைகள் திருடப் பெரும். இந்த பாம்பின் கால்களை அறிந்த மற்றொரு பாம்பு, நேரடியாக வெந்த முட்டைகளையே பள்ளிக்கு அனுப்பியது. பல தலைமை ஆசிரியர் வீட்டு நாய்கள் தினமும் வெந்த முட்டை தின்று கொழுத்தன.
நானறிந்த ஆசிரியன் ஒருவன். குழந்தைகளுக்கான இலவச சீருடைகளை தலையணை உறைகளாக தைத்து சல்லிசான விலைக்கு விற்றான். ஒரு ஆசிரியன் பள்ளிக்கே போகாமல், நூறு சதவீத வருகை காட்டி வாழ்ந்தான். உடல் நோக ஒன்றாம் தேதி வங்கி சென்று தனக்கான சம்பளத்தை வாங்கும் தியாக வாழ்வு வாழ்ந்து பணி ஓய்வு எய்தினான். எந்த எதிர்காலமும் இல்லாத கூலித் தொழிலாளிகள், புறக்கணிக்கப்பட்ட சாதிகளின் குழந்தைக்கு இதை காட்டிலும் ஒரு பெரிய களப்பணியை ஒரு ஆசிரியன் செய்துவிட முடியுமா என்ன ? செயல்வழி கற்றல் எனும் பெரும் திட்டம் பல கோடி முதலீட்டில் உள்ளே வந்து, அதனை கோடியும் கல்வி நிர்வாகிகள் வீட்டு மாடியாக மாறிப்போனது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வினாடி வரை, கடலூர் மாவட்டத்தில் அரசு அளிக்கும் ஆரம்ப கல்வி முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் குழந்தைகள் ஐம்பது என்றால், அதில் ஐந்து குழந்தைக்கு மட்டுமே அரிச்சுவடி தெரியும். இரண்டு குழந்தைக்கு மட்டுமே தனது பெயரை பிழையின்றி எழுதத் தெரியும்.
மேற்கண்ட விஷயங்களுக்கும் வெள்ளை பாப்பாத்தி கதைக்கும் எப்படி சம்மந்தம் உண்டோ, அல்லது எப்படி சம்மந்தம் இல்லையோ, அப்படித்தான் இருக்கிறது இங்கே நமது குழந்தைகளின் பால்யம் மீது வந்து விழும் கல்வி சூழல். இங்கே கடலூரில் கொடி மலர் எதிர் கொள்ளும் சூழலை விட, அங்கே கூலிம் பட்டணத்தில், கொடி மலர் எதிர்கொள்ளும் சூழல் கருணை மிக்கது போலும். அவளது ஆசிரியர் உணவு, உடை, கல்வி அனைத்தயும் அளிக்கிறார். அதையும் அப்பா போல அன்புடன் அளிக்கிறார். ருக்கு அந்த சிக்னல் விளக்கை எதிர்க்கொள்கையில் அவள் பணி இடத்தில் அவள் எதிர் கொள்ளும் பாலியல் சீண்டலை விவரிப்பது கதையின் அழகிய தருணங்களில் ஒன்று. அவனது கை எல்லை மீறும் போது ருக்கு நிற்கும் சாலை சமிக்ஞ்சை விளக்கு பச்சைக்கு மாறுமா அல்லது சிகப்புக்கு மாறுமா ?
வண்ணங்கள் அற்ற பட்டாம் பூச்சி, கொடிமலர் போன்றதொரு குழந்தை கொள்ளும் பால்யத்தின் குறியீடாக மாறும் அதே சமயம், பால்யம் மட்டுமே கொள்ளக்கூடிய தனித்தன்மை அதன் குறியீடாகவும் விளங்குகிறது. நவீன தமிழ் இலக்கிய மரபில் சிறுகதைகளில், புதுமைப்பித்தன் துவங்கி நமது முன்னோடிகள் கதைகளில் பால்யம் எவ்வாறு தொழிற்படுகிறது என்று அவதானிப்பது ஒரு முக்கியமான பார்வையை வாசகனுக்கு அளிக்க கூடியது. யாரேனும் ஆய்ந்து சொல்லட்டும். அதுவரை பொதுவாக இப்படி வகுக்கலாம். குழந்தைகள் வழியே, அவர்களின் தன்மை வழியே முன்வைக்கப்படும் விமர்சனம் முதல் வகைமை [நாஞ்சில் நாடனின் கிழிசல் போல]. பால்யத்தின் தனித்தன்மையான ஒரு நிலையை சுட்டி நிற்கும் கதைகள் இரண்டாம் வகைமை[கிராவின் கதவு போல]. குழந்தைமை மட்டுமே சென்று தொடக்கூடிய மானுட உச்சம் அதை சுட்டும் கதைகள் மூன்றாம் வகைமை[கு அழகிரி சாமியின் ராஜா வந்திருந்தார் போல] .
இந்த வகைமையில் இந்த இரண்டாயிரத்துக்குப் பிறகான ஆண்டுகளில் இளம் தலைமுறை எழுத்தாளர்களால் தமிழில் எழுதப்பட்ட [வாசகனுக்கு மலேசிய, இலங்கை, தமிழ்நாடு பேதம் எல்லாம் கிடையாது ] பால்யம் சார்ந்த சிறுகதைகள் மிக சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே தேறும். அதிலும் கலை கோரும் சவாலை வென்ற கதைகள் அநேகமாக இல்லை என்றே சொல்லி விடலாம். பால்ய உலகுக்கு கூடு விட்டு கூடு பாயும் சவாலை ஏற்று, அதில் வெற்றி கண்டிருக்கிறார் நவீன் .
கணபதியின் அப்பா வழியே பால்யம் மீது திணிக்கப்படும் வண்ணமிகு கல்வி அமைப்பு மீதான மௌன விமர்சனத்தை இக்கதை முன்வைக்கும் அதே நேரம், பால்யம் மட்டுமே கண்டெடுக்கும் தனித்தன்மை மீதும் கவனம் கொள்கிறது. இதை எழுத்திக்கொண்டிருக்கும் இக்கணம் நான் இறுதியாக ஒரு பட்டாம் பூச்சியை கண்ட நாளை நினைவடுக்குகளில்தான் தேடிக்கொண்டிருக்க இயலும். ஆனால் கொடி மலர் போன்றதொரு குழந்தை, இக்கணம் தனித்துவமான வெள்ளை வண்ணத்துப் பூச்சி உடன் வாழ்த்து கொண்டிருக்கும் .
நவீனின் இக்கதை ஒரே சமயத்தில் விமர்சனம், தனித்தன்மை, இவற்றை கடந்து சமத்துவம் என மூன்று நிலைகளிலும் பால்யத்தை நிறுத்தும் மாயத்தை நிகழ்த்தி இருக்கிறது. ஆம் கணபதி கொடிமலரை நோக்கி சிரிக்கும் இறுதி கணம் இக்கதையின் சிகர முனை. கணபதிக்கும் கொடிமலருக்கும் போட்டி உண்டு, ஆனால் அது வன்மம் இல்லை. கணபதி அப்பாவின் வன்மத்துக்கு ஒரு கருவி மட்டுமே. அதை கடந்து வந்து கணபதி அளிக்கும் புன்னகை அவனது பால்யத்தில் நின்று அளிப்பது. தனித்தன்மை அற்ற கல்வியால் களங்கப்படாத, குழந்தைகள் மட்டுமே வாழும் பால்யம் எனும் தேவதை உலகை சார்ந்த புன்னகை .
தமிழின் சிறந்த கதைகள் என நூறு தேர்வு செய்தால் அதில் கு.அழகிரி சாமியின் ராஜா வந்திருந்தார் இருக்கும். கறாராக பத்து மட்டும் என தேர்வு செய்தாலும் அதிலும் அந்தக் கதை இருக்கும் . அக் கதையை இன்றும் அப்படி இந்த கதைல என்ன இருக்கு என்று வியக்கும் வாசகன் உண்டு . இந்த வெள்ளை பாப்பாத்தி கதையும் அப்படித்தான். இதில் என்ன இருக்கிறது என ஒரு பகுதியினர் மோவாயை தடவியபடி யோசித்துக்கொண்டே இருக்க, அவர்களின் மேல் கணபதியின் புன்னகையும் , கொடிமலரின் வெள்ளை பட்டாம் பூச்சியும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.
கடலூர் சீனு