நவின், ஜெயமோகனோ , ராமகிருஷ்ணனோ சொல்லி கேட்டிருக்கிறேன். படைப்பாளி யானை போல இருக்க வேணும் என்று. முட்டி மரத்தை சாய்க்கவும் முடியவேணும். தும்பிக்கை நுனியில் ஊசியை எடுக்கவும் முடியவேணும். போயாக், பேச்சி மரத்தை சாய்த்தது. வெள்ளை பாப்பாத்தி ஊசியை எடுத்தது. அம்மாவின் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. முடிந்தால் அதை மெருகேற்றலாம். கொடிமலரின் வருங்காலத்தைக் குறியீட்டால் காட்டதான் அம்மா என்றால், அது தேவை கூட இல்லை.
ஆனால் எல்லா போதாமையையும் கொடிமலரின் கதாபாத்திரம் நீக்கிவிட்டது. கதையின் முதலில் அவள் தேவதைபோல நினைப்பதை நாம் குழந்தை உள்ளம் என வாசிக்கிறோம். கதை முடிவில் அவள் உண்மை தேவதை என கணபதிக்கு அவன் குழந்தை பருவத்தை மீட்டுக்கொடுக்கும்போது அறிகிறோம். அற்புதம்.
அருணாசலம், தமிழகம்
தலைப்பு வெள்ளையாக இருப்பினும்…வித விதமாக உணர்வலைகளை விவரிக்கும் ‘கலர்புல்’ வண்ணமயமான கதை இது.
ஒரு சிறந்த கதைசொல்லியால் அவர் எடுத்துக்கொண்ட கருவையும், களத்தையும், கதாபாத்திரங்களையும் கண் முன்னாள் நடப்பதைப்போல் சங்கமித்துக் காட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நவீன். கதையை நகர்த்தும் யுக்தியும், அழகுபடுத்தும் கற்பனைகளும் வியக்க வைக்கின்றன.
ஒன்றாம் வகுப்புக்குச் செல்லும் ஒரு சிறுமியின் வித்தியாசமான கற்பனை வளம் அபத்தமாகச் சிதைக்கப்படுவதையும்…
தான் தான் எப்போதும் சிறந்தவன் என்றிருக்கும் சிறுவன் தோல்வியைத் தழுவும் சூழலுக்குச் சென்று மீண்டு வருகையில் அவனுக்குள் ஏற்படும் அதிர்வையும்…
அவை இரண்டுக்கும் இடையில் கணவனிழந்து அல்லல் படும் பெண்மணியின் போராட்டங்களையும்…
எங்கேயும் பிசறாமல் வாசித்ததும் மனதில் ஆழமாய் பதிந்து…உள்ளுக்குள் சில வெள்ளை பாப்பாத்திகள் பறக்கின்றன!
பாண்டிய மன்னன் சேவலை விரட்டும் இடத்தில்…முகம் வலியெடுத்தது, கண்கள் கலங்கின…சிரிப்பால்.
மீண்டும் ஒரு சிறந்த படைப்பை வாசித்த மகிழ்ச்சி.
வாழ்த்துகள் நண்பரே!
அந்தரத்தில்,
கலைசேகர்