வெள்ளைப் பாப்பாத்தி ஓர் அழகான சித்திரமாக மனதுக்கு இதம் தருகிறது. அதுவும் குறிப்பாக, குழந்தைகள் குறித்த மனதை வேதனைப்படுத்தும் செய்திகளை ஊடகங்களில் படித்துப் படித்து வெறுத்துப் போயிருந்த நேரத்தில், கள்ளங்கபடற்ற குழந்தையின் உள்ளத்தை எந்தச் சடங்கமும் இல்லாமல் ரசிக்க வைத்த ஆசிரியருக்கு நன்றி. எல்லாக் குழந்தைளையும் போல கொடிமலர் தன்னுடைய உலகத்தில் மிகச் சந்தோஷமாக வாழும் சிறுமி. உலகின் அற்புதங்களை உணரவும் ரசிக்கவும் நிகழ்த்தவும் அவளுக்கு ஒரு வெள்ளை வண்ணத்தி போதும். அவள் தேவதையாகிறாள். வரம் தருகிறார். வலிகளைப் போக்குகிறார்கள். வறுமையிலும் சிரமத்திலும் வாழும் அச்சிறுமி மிகுந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியாகக் கதை முழுக்கக் குதித்தோடுகிறாள். போக்குவரத்து விளக்குகள் வண்ண மிட்டாய்களாய் அவளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. காரில் போகும் வகுப்புத்தோழன் கணபதியை முந்தி சைக்கிளில் போவதில் அவளுக்கு உற்சாகம் கொப்பளிக்கிறது. அந்தக் குழந்தை ஆனந்தமடைய ஸ்ட்ராவும் கால்பிடி அரிசிமணிகளுமே போதும். தன்னைக் கேலி செய்து வருத்தப்பட வைக்கும் கணபதியையும் சிறுகுழந்தையாக்கி, தான் ஒரு பெரிய தேவதையாகி வரம் தருகிறாள். உலகியலில் அவளிடம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவள் நிறைவானவள்.
வளர்ப்புச் சூழலாலும் வசதிகளாலும் மிகச் சிறுவயதிலேயே ‘பெரிய மனுஷனாகி’ மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்ட கணபதிக்கு அவனது குழந்தை மனதை மீட்டுத் தரும்போது தேவதையாக மாறி விடுகிறாள் கொடிமலர். இந்தக் கதை கொடிமலர் எப்படி தேவதையாகிறாள் என்பதை பற்றிதான். அவளால் ஒரு எதிரியை நண்பனாக்கி தேவதையாக முடிந்திருக்கிறது. அவன் தன் பயத்தை அவளிடம் சொல்கிறான். மகிழ்ச்சியோடு தாளை அவனுக்காக பறக்க விடுகிறாள். இவர்கள் உண்மையான குழந்தைகள். குழந்தைகளை நன்கு அறிந்தவர்களால் அல்லது இன்னமும் குழந்தை மனதை இன்னமும் தொலைத்து விடாதவர்களால்தான் எழுத்திலும் காட்சியிலும் குழந்தைகளைக் குழந்தைகளாகச் சித்திரிக்க முடிகிறது. அதற்கு மிக நுட்பமான நுண்ணுர்வு வேண்டும். கொடிமலர் அதிகப் பிரசங்கியாக இல்லை. பெரிய மனுஷ தோரணையில் வலம் வரும் கணபதியும் எரிச்சல் ஏற்படுத்தவில்லை. அவர்களின் கேலியும் மகிழ்ச்சியும் சோகமும் குழந்தைகளின் உலகத்தையே கண்முன் விரிக்கிறது.
அகதி முகாம்களில், குடிசைப் பகுதிகளில், ஏன் மிக மோசமான பேரிடர் நடந்த இடங்களில்கூட குழந்தைகளைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். அழுக்கு உடையில், பசியோடு இருக்கும் அந்தக் குழந்தைகள், அந்தச் சூழலிலும் தங்களுக்கான ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதில் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் கோபமெல்லாம் கணநேரம்தான். எப்போதும் கணபதியின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கே போகாமலிருந்த கொடிமலர், அவர் வருத்தப்பட்டதும் அவனுடேயே இருந்து அவனை ஆறுதல்படுத்துகிறாள். அவர்கள் மனதில் எதுவும் இருக்காது. மன்னிக்கவும் தேவையிருக்காது. வெள்ளை மனம் கொண்ட இந்தக் குழந்தைகள் வளரும் போது சூழ்நிலை அவர்களைப் பலிகொண்டுவிடுகிறது. அதுவும் வசதியில்லாத, அன்றாட உயிர்வாழ்வுக்குப் போராடும் நிலையில் சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போக வேண்டியதாகிறது.
உலகியலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் ருக்குவைப்போல கொடிமலர் வளர்ந்து ருக்குவாகலாம். ருக்கு கொடிமலராக இருந்திருக்கலாம். கனம் நிறைந்து, சுதந்திரத்தைத் தொலைத்துவிட்ட மனதையும் காற்றைவிட லேசாகப் பறந்துதிரியும் சுதந்திரமான உள்ளத்தை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார் நவீன். ஆசிரியராக இருப்பதால் நவீன் குழந்தை மனத்தை இன்னமும் தொலைத்துவிடாமல் இருக்கிறார். அவரின் வகுப்பறையின் கடைசி நாற்காலி கட்டுரைத் தொகுப்பில் அதைக் காணலாம். குழந்தைகள் உலககைக் கண்முன்னே கொண்டுவரும் நவீனின் எழுத்துகளால் அவரின் சில பாத்திரங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, அவரது கதைகளையும் வெறுக்க வைக்கின்றன. உதாரணம் போயாக் சிறுகதை. கதையின் இரண்டு சிறுமிகளும் தத்ரூபமாகக் கண்முன்னே வருவதால், அவர்களைச் சிதைக்கும் அந்த ஆசிரியரின் குரூர மனம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இத்தகைய நுண்ணுர்வை வெளிப்படுத்துவது மிகச் சிரமமானது. இக்கதை மேலோட்டாமான பார்வையில் மிகச்சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், உள்ளே நுழைந்தால்மட்டுமே அது காட்டும் அழகான உலகத்தை ரசிக்க முடியும். இன்றைய தேர்ந்த வாசர்கள் எதிர்பார்க்கும் சவால்மிக்க கதைக்களமோ, முடிச்சுகளோ, சிந்தாங்களோ இக்கதையில் இருக்காது. ஆனால் ஆழமான தத்துவவிசாரணை மிக அநாயசமாக நிகழ்த்தப்பட்டிருக்கும். நவீனின் மற்றக் கதைகளில் அதிகம் வெளிப்படாத நுண்சித்திரத்தை கொண்டுவந்துள்ள கதை இது. கதையை மேலும் மெருகேற்ற மிகச் சில திருத்தங்கள் போதுமானவை. வெள்ளை வண்ணத்தியை அறிமுகப்படுத்தும்போது அவை பரிசுத்தமானவை என்று சொல்லத் தேவையில்லை. சொல்லாமலே முகிழ்ப்பின் பரிசுத்தத்தை சொல்லிவிடக்கூடிய கதை இது. வாழ்த்துகள்.
அக்ரஜா, சென்னை
வணக்கம் அக்ரஜா. இப்போது அதிகாலை 5 மணி. உண்மையில் இக்கடிதம் உற்சாகம் கொடுத்து எழுந்து பதிவேற்றினேன். இக்கதையை எழுதி முடித்தப்பின் இரு விடயங்கள் நிகழும் என நினைத்தேன். முதலாவது கடகட என வாசிக்கக் கூடிய மொழி அமைப்பால் ஒரு நெகிழ்வூட்டும் சம்பவமாக இதை எடுத்துக்கொண்டு பாராட்டுகள் வரக்கூடும். அல்லது, எனது முந்தைய கதைகளோடு ஒப்பிட்டு ‘இதென்ன இப்படி இருக்கு’ என புறக்கணிக்கக் கூடும். இரண்டுமே நடந்தது. இதுவரை வந்திருக்கும் மூன்று கடிதங்களும் அவ்வாறானவை.
நீங்கள் எனது முந்தைய கதைகளை வாசித்திருந்தாலும் ஒரு படைப்பை அப்படைப்புக்கே ஆன தனித்த உலகில் சந்திக்கும் வாசிப்பை பெற்றுள்ளீர்கள். அதுதான் இலக்கிய வாசிப்பு. உண்மையில் கதை முழுக்கவுமே குழந்தை தன்மை படர்ந்திருக்க வேண்டும் என விரும்பினேன். அதன் வாசம் அடிக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக மொழியில் கொஞ்சம் முயன்று பார்த்தேன். நடந்துள்ளதா என தெரியவில்லை. தொடர்ந்து வரும் சரியான விமர்சனங்கள் வழியே அதை நான் அறிவேன். அதுவே என்னை பயிற்றுவிக்கிறது.
உண்மையில் இந்தக் காலையில் அடைந்த உற்சாகம் நான் அந்தரங்கமாக உணரும் ஒரு குழந்தையின் உளவியலை இன்னொருவரும் வந்து அடைந்ததால் உற்சாகம். நாம் அதனை அறிய முயல்வதே இல்லை. அற்புதமான நமது குழந்தைத்தனத்தைத் தொலைத்துவிட்டு வேறெதையோ அடைந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் ஒருகாலத்தில் குழந்தையாக இருந்தோம் என்பதை பெரும்பாலும் மறந்தவர்களாகிறோம். கொடிமலர் அந்தக் குழந்தமையை மீட்டுக்கொடுக்கும் தேவதைதான்.
நன்றி
ம.நவீன்