சுற்றுலாவில் இரண்டு வகை உண்டு. முதலாவது மனமகிழ்ச்சிக்காகச் சுற்றுலா செல்வது. மற்றது அனுபவத்திற்காகச் செல்வது. ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்றெல்லாம் இல்லை. வட்டமிடும் கருடனை இங்கிருந்து ரசிப்பது ஒரு ரகம் என்றால் அதனுடன் சேர்ந்து அது என்னவாக இருந்து உலகைப் பார்க்கிறது என அறிய முயல்வது மற்றுமொரு வகை. நான் தனியாகச் செல்கையில் இரண்டாவது ரகத்தையே தேர்ந்தெடுக்கிறேன். அதில் ஒரு வசதி உண்டு. எந்த வசதியின்மை ஏற்பட்டாலும் யாரிடமிருந்தும் முகச்சுளிப்புடன் அசூசையின் குரல் ஒலிக்காது. அவ்வகை முணுமுணுப்பு மொத்தப் பயணத்தையும் கெடுக்கும் ஒலி. அதைவிடக் கொடுமை சகித்துக்கொள்வதாகக் காட்டப்படும் சாந்தமுகம். பயணம் என்பது பயணம்தான். அங்கு எதுவும் நடக்கும். அப்படி நடக்கும் ஒவ்வொன்றுமே பயணம் கொடுக்கும் அனுபவம்தான். புகார்கள் இன்றி நிகழ்வதை கவனிப்பதே பயணம் நம்முள் உருவாக்கும் இன்னொரு மாயவழியை அனுமதிக்கும் சூத்திரம்.
ஆழப்புழா (அலப்பி) பற்றி மலேசியாவில் வெகு பிரபலமாகப் பேசுவதுண்டு. படகு வீட்டில் பயணம் செய்வதும், அந்தப் படகு வீட்டில் அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், வரவேற்பறை, சமையலறை, மேல்மாடியில் பால்கனி என ஒரு நவீன ஹோட்டல் வசதிகொண்ட அனைத்தும் உள்ளடக்கிய இடமாக அதை வர்ணிப்பார்கள். அதில் சமைத்துக் கொடுக்கப்படும் நீர்வாழ் உயிரினங்களை உண்பதும், அப்படியே காயல் ஓரம் மக்களின் வாழ்வைக் காண்பதும், விரும்பினால் நினைவுப் பொருள்கள் வாங்குவதும் என சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடம்தான் அது. புதிய திருமண ஜோடிகள்தான் அதிகம் வருவதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம். பணத்தைச் செலவழித்து கிடைக்கும் சொகுசை காதலுக்கான பரிசாக நினைக்கும் அரைக் கிறுக்க வர்க்கத்தினர் அதிகம்.
இம்முறை குமரகத்தில் இருந்து ஆழப்புழா செல்ல வண்டி எடுத்தேன். ஒரு கிலோ மீட்டருக்கு 14 ரூபாய். மடிக்கணினியையும் பெட்டியையும் சுமந்துகொண்டு பேருந்தில் ஏறி இறங்கச் சிரமமாக இருந்தது. வண்டி ஓட்டி இணையத்தில் முன்பதிவு செய்யச் சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருந்தார். எனக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. பொதுவாகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் பொய்களும் கூடவே குட்டிப்போட்டுத் திரியும். மேலும் நான் செல்வது உல்லாசத்துக்கல்ல. பெரிய சொகுசுகள் தேவையில்லை. சுற்றுலாத்துறையில் வணிக உத்தியே ‘போனா வராது பொழுது போனா கிடைக்காது’ எனச்சொல்லி நம்மிடம் அவசர அவசரமாக ஏதாவது ஒன்றைத் தலையில் கட்டுவதுதான். ‘போனா மயிரு’ என நிதானமாக பேரம் பேசினால் பணம் அவசியம் இல்லாமல் பறிபோகாது.
நான் காயல் ஓரம் இருந்த ஒரு விடுதியில் தங்கினேன். அதற்குள் பலவித பேரங்கள் பேசப்பட்டன. நீரில் மிதந்து செல்லும் படகு வீடு என்றால் 12,000 ரூபாய்தான். அது மிக மலிவு என்றனர். வேண்டாம் என்றதும் கரை ஓரமாக மிதக்கும் படகு வீட்டில் தங்கினால் 6,000தான் என்றனர். ஏற்கனவே நான் ஒரு மிதப்பில்தான் இருக்கிறேன் என எதிரிகள் கருதுவதால் தன்னடக்கம் கருதி அதையும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். 1,800 ரூபாய்க்குக் காற்றாடியுடன் கூடிய ஒரு அறை கிடைத்தது. யாரோ கட்டிவிட்டுச்சென்ற கயிற்றுக்கட்டில் ஒன்று மரத்தில் இருந்தது. அதில் படுத்தபடி எதிரே காயலில் படகு வீடுகள் வந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதுவரை அப்படி ஒரு அறை இருப்பதையே சொல்லாமல் இருந்த நிர்வாகி பெட்டியைக் கொண்டு வந்து உள்ளே கொஞ்சம் ஏமாற்றத்துடன்தான் வைத்தார். அருகில் நெருங்கியவர் “மூன்று மணி நேர போட் சவாரி ஏற்பாடு செய்ய முடியும். ஒரு மணி நேரத்திற்கு 700 ரூபாய். உங்களுக்கு 600 ரூயாக்கு ஏற்பாடு செய்யவா. தோ இப்ப வந்துவிடும். சொல்லிடவா… சொல்லிடவா” எனத் துடித்தார். நான் அவரை அமைதிப்படுத்தி பின்னர் சொல்வதாகச் சொன்னேன். மௌனமாகத் திரும்பியவர் மீண்டும் திரும்பி வந்து “உணவு ஏதும் சாப்பிடுகிறீர்களா? இங்கு மிகவும் சுவையாக சமைப்பார்கள். பிரஷ்ஷான மீன் கறி கிடைக்கும். மெனு எடுத்து வரவா” என்றார். நான் பார்த்துக்கொள்வதாக அழுத்தமாகச் சொல்லவும் புறப்பட்டார். ஃவைபை எதுவும் இல்லாத எளிமையான அறைதான். ஆனால் சுத்தமாக இருந்தது. வெளியே நடப்பட்டிருந்த தென்னங்கன்று மட்டைகளுக்கு இடையில் வானமும் நீரும் தெரிந்தது.
எனது மொத்தக் களைப்பையும் போக்கியது Dachshund வகை நாய்க்குட்டி. எனக்காகவே பல வருடங்கள் காத்திருந்ததுபோல ஓடி வந்தது. மேலே தாவி முத்தமிட்டது. குட்டி நாய்கள் அப்படித்தான். அவை சதா யாருக்கேனும் காத்திருக்கின்றன. அன்பைப் பெறவும் கொடுக்கவும் அவற்றிற்குத் திகட்டுவதே இல்லை. கொஞ்ச நேரம் வாஞ்சையுடன் விளையாடியவன் தொலைவாகச் சென்று முன்பு போலவே ஓடி வந்து தாவியது. அதற்கு இருப்புகொள்ளவில்லை. புதிதாக வந்தவனை எப்படி உபசரிப்பது எனத்தெரியாமல் தடுமாறியது. பின்னர் அதுவாகவே ஒரு விளையாட்டை உருவாக்கி என்னை மகிழ்ச்சிப்படுத்த முயன்றது. ஓடிவந்து என் கால்களுக்கு இடையில் புகுந்து தூரமாகச் செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் ஓடிவரும்போது நான் அதை அணைத்துத் தூக்க வேண்டும். அந்த விளையாட்டு எனக்கும் பிடித்திருந்ததால் உடன்பட்டேன். இரண்டு முறைக்கு ஒரு தரம் அருகில் இருக்கும் தொட்டியில் நீர் அருந்திக்கொண்டது. நான்கு முறைக்கு ஒருதரம் சிறுநீர் கழித்துக்கொண்டது. நிர்வாகி அதன் உற்சாகத்தை அடக்கி கூண்டில் அடைத்தார். நான் அறைக்குள் நுழையும் வரை எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தது.
ஆயிரக்கணக்கான படகுகள் இங்கே தினமும் பயணிக்கும் காயல் இது. காயல் ஓரமாக வாழும் மக்கள் காரை நிறுத்தி வைத்திருப்பது போல அவரவருக்கான படகுகளையும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பேருந்து வசதி போலவே பெரிய படகுகள் 20 நிமிடத்திற்கு ஒருமுறை செல்கின்றன. பேருந்து நிறுத்தம் போல பல இடங்களில் படகு நிறுத்தமும் உள்ளது. அவ்வப்போது ஹாரனெல்லாம் அடித்து சாலையில் கார் ஓட்டுவதுபோலவே விதிமுறையைப் பின்பற்றுகின்றனர். மாலையில் ஆண்களும் பெண்களும் பொருள்களை வாங்கிக்கொண்டு அதில் பயணப்படுவதை பார்க்க முடிந்தது. சிவப்புப் புடவை அணிந்திருந்த ஒரு அம்மாவைப் படம் பிடித்தேன். கூர்ந்து நோக்கினார். பின்னர் சிரித்தார். “சொந்தப் படகா?” எனக் கத்திக் கேட்டேன். “வாடகை” என்றார்.
மாலை நெருங்கியதும் அருகில் மேளம் அடிக்கும் சத்தம் கேட்டது. வழக்கமான மேளச் சத்தமல்ல. சற்று தொலைவில் நடந்து சென்றால் கிருஷ்ணன் கோயில் இருப்பதாகவும் அங்கு விஷேச பிரார்த்தனை நடக்கும் என்றும் சொன்னார்கள். விடுதிக்குப் பின்புறமாக உள்ள ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றேன். நானே மிகவும் விரைவாக நடக்கும் ஆள். என்னை முந்திக்கொண்டு ஒரு பெண் நடந்து சென்றார். எங்கே செல்கிறீர்கள் எனக்கேட்டேன். ‘அம்பலம்’ எனக் கைகாட்டினார். நானும் அங்குதான் செல்கிறேன் எனச்சொல்லி பேச்சுக்கொடுத்தேன். ஏன் நடைபாதை முழுக்க சகதியாக உள்ளது எனக்கேட்டேன். இவ்வாண்டு ஆகஸ்டில் பெய்த அசாதாரணமான மழை காரணமாக கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் அதுவும் ஒன்றெனக் கூறினார். அதை நான் அறிந்தே வைத்திருந்தேன். கழுத்துவரை நீர் வளர்ந்து படகுகளில் ஏறி தப்பிய கதையைக் கூறினார். நடந்து சென்ற ஒற்றையடிப்பாதையில் இடதுபுறம் இருந்த வயல்வெளியை நீர் போர்த்திக்கொண்டதைச் சொன்னார். கேரளா முழுக்க முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த கதையைச் சொன்னார். பின்னர் கடவுளைத் தொழ வேகமாக கோயிலை நோக்கி ஓடினார்.
நான் வயல்வெளியில் நின்று கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைவில் அஸ்தமனச் சூரியன் தரையிறங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு இறங்கினாலும் வெள்ளத்தில் அது மூழ்கப்போவதில்லை. இளைஞர்கள் வெட்டவெளியில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். தொலைத்த வாழ்வை நினைத்துக்கொண்டேன். கோயிலுக்குச் சென்று வேடிக்கை பார்த்தேன். செண்டை மேளம் வாசித்துக்கொண்டிருந்தனர். மத்தளத்தைக் காட்டிலும் தடிப்பான ஒலி. அப்போதுதான் படகில் பார்த்த சிவப்புச் சேலை அம்மா, காலணியை தொலைவாகக் கழற்றி வைக்கும்படி சொன்னார். அருகில் பார்க்க கோபக்கார அம்மாவாகத் தெரிந்தார். அசடுவழியச் சிரித்தபோது சிரித்தார். “நான் புதியவன். மன்னிக்க வேண்டும்” என்றேன். எழுந்து நின்று பரவாயில்லை என அன்போடு சொன்னார். நான் அந்த இடத்தை விட்டு வெளியே சென்று பட்டணத்தில் எங்காவது சாப்பிட வேண்டும் என்றேன். அப்படிச் செல்ல மலிவான வழிமுறைகளைக் கேட்டறிந்தேன். கொஞ்ச நேரம் நிற்கச் சொல்லிவிட்டு எங்கோ சென்று வந்தவர் “ப்பா” என தன்னைப் பின் தொடரச் சொன்னார். என் பாட்டி கோழிகளை அப்படித்தான் அழைப்பார். அவர் படகில் ஏற்றிக்கொண்டு வாடகைக்கு எடுத்த இடத்தில் படகைக் கட்டினார். காலணி அணிந்திருக்கவில்லை. “மறந்துட்டேன்” எனச் சொல்லிக்கொண்டார். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு வெற்றுக்காலில் பொதுப் படகு வரும் ஒரு ஸ்டேஷன் முன் நின்றார்.
அவர் பெயர் டெய்ஸி. என்னைப் பற்றி விசாரித்தார். ஏன் மனைவி இல்லாமல் தனியாக வந்திருக்கிறேன் எனக்கேட்டார். சொன்னேன். கொஞ்ச நேரம் யோசித்தவர் நான் உன்னை வேறு இடத்திற்கு அழைத்துச்செல்கிறேன் என்றார். எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றேன். தொலைவில் படகு வந்தபோது தொலைபேசியில் வெளிச்சம் காட்டச்சொன்னார். காட்டினேன். அது பேருந்துக்குக் கைகாட்டுவதுபோல. ஒருவருக்கு நான்கு ரூபாய் மட்டுமே. ஆழப்புழா பட்டினம் நிறுத்தம் வந்ததும் இறங்கச் சொன்னார். வழி நெடுகிலும் தனது குடும்பத்தைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். அவர் கணவர் மாரடைப்பினால் வேலைக்குச் செல்லவில்லை. மூன்று மகன் ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி கடைசி மகனுக்கு மட்டும் 32 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற கவலை எப்போதும் உள்ளது என்றார். அவர் பேசியது முழுக்கவே மலையாளம். நான் முழுமையாகத் தமிழில் பேசினேன். எனக்கு அவர் பேசுவது எளிதாகப் புரிந்தது. எப்போதும் உணர்ச்சிகளின் மொழி உலகம் முழுக்கப் பொதுவானதுதான்.
அவர் ஒரு கிருத்துவர். திருமணத்துக்குப் பின் கிருத்துவராகிவிட்டதாகவும் ஆனால் தான் இன்னமும் கோயிலுக்குச் செல்வதாகக் கூறினார். ஆழப்புழா நிறுத்தத்தில் இறங்கியபின் நடக்கத் தொடங்கினோம். “செருப்பை மறந்துவிட்டேன்” என மீண்டும் சொல்லிச் சிரித்துக்கொண்டார். குடும்பத்துக்காக நடந்து நடந்து காய்ப்புக்காய்ச்சிய கால்கள் உணர்ச்சியை மறந்திருக்கலாம். நின்று ஒரு இடத்தில் மீன் வாங்கினார். தன் மகனுக்குப் பிடிக்கும் என்றார். பின்னர் கொஞ்ச தூரம் நடந்து பூக்கள் வாங்கினார். மகன் படகு ஓட்டும் வேலை செய்வதாகக்கூறினார். பேசிக்கொண்டே இருந்தவர் நேராக ஒரு கோயிலின் முன் என்னை நிறுத்தினார். அது முல்லைக்கல் பகவதி அம்மன் கோயில். ராஜராஜேஸ்வரி மூலவராக இருக்கிறார். “என் பையன்கள் எல்லாருக்கும் இங்கு வேண்டி அர்ச்சனை செய்துதான் திருமணம் நடந்தது. உனக்கும் நடக்கும். உடனே சென்று வேண்டி அர்ச்சனை செய்” என்றார்.
நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை எனச் சொல்ல வாய்வரவில்லை. சட்டென கோபமாக “போ… போயி கூம்பிடு. என் கையில் மீன் இருக்கு. நான் வர முடியாது” என்றவர் என் கையில் சற்றுமுன் வாங்கியப் பூவைத் திணித்தார். செருப்பணியாத அவர் பாதங்கள் கோயில் வாசலில் இருந்த புறா எச்சங்களை மிதித்துக்கொண்டிருந்தன. தயங்கியபடி உள்ளே சென்றேன். அர்ச்சனைச் சீட்டு எழுதினேன். அர்ச்சனை செய்தேன். இராஜராஜேஸ்வரி பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது. திரும்பி வர வாசலில் ஆர்வத்துடன் காத்திருந்தார். “உனக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் மோனே” என்றார் மகிழ்ச்சியாக.
மீண்டும் படகு நிறுத்தம் செல்லும் முன் தென்பட்ட செருப்புக் கடைக்கு அவரை அழைத்துச்சென்று செருப்பு வாங்கிக்கொள்ளச் சொன்னேன். தயங்கினார். நான் கொஞ்சம் உறுதியாகச் சொல்லவே மலிவான காலணியைக் கொடு என மலையாளத்தில் கடைக்காரனிடம் சொன்னார். கடைக்காரன் பொம்மைப் படம் போட்ட ஒரு காலணியை எடுத்து நீட்டவும், நான் தரமான காலணியை எடுத்துப்போடச் சொன்னேன். அவர் போட்டுப் பார்த்தார். நன்றாக இருக்கிறது என்றார். இனி அவர் மீண்டும் படகு பிடித்து வேறு நிறுத்தம் போகவேண்டும். சமைக்க வேண்டும். அதை அவர் மகன் விரும்பிச்சாப்பிடக்கூடும். நான் அவரைப் புறப்படச் சொன்னேன். அர்ச்சனை செய்த பூவை அவர் கையில் கொடுத்து “உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் ஆகும். இதை அவருக்காகச் செய்தேன்.” என்றேன். வாழை இலையில் அம்மனின் பாதங்களில் வைக்கப்பட்ட கோயிலில் தந்த பூவையும் குங்குமத்தையும் வாங்கக் குனிந்தவர் மீண்டும் நிமிரவில்லை. ஒன்றும் பேசாமல் அர்ச்சனை இலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் இருட்டில் சென்று மறையும்போது அவரது காப்புக்காய்ச்சிய பாதங்களைப் பார்த்திருக்கலாம் என்றுத்தோன்றியது. அதுவும் தாயார் பாதம்தான்.
தொடரும்