மனசலாயோ 9: புள்ளினங்காள்

indexபதினான்காவது நாள் சிகிச்சையை நானே முடித்துக்கொண்டேன். ஆனால் விமான டிக்கெட்டை திகதி மாற்ற அதிக தொகை வந்ததால் கேரளாவில் சில இடங்களைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஹரி ‘வலி இல்லையா?’ என பலமுறை கேட்டார். கழுத்து நரம்புகள் சத்தம் போடுவதைச் சொல்லவில்லை. சூட்டை அதிகமாக்கி ஒத்தடம் கொடுக்கிறேன் என மீண்டும் கழுத்தைக் கொப்புளிக்க வைத்துவிடக்கூடும். டாக்டர் தனது அன்பின் நிமித்தமாக 2.0 திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்கு அவர் கொதிக்கும் எண்ணெயிலேயே தள்ளிவிட்டிருக்கலாம்.  எப்போது திரையரங்கைவிட்டு வெளிவருவேன் என இருந்தது. ஆனால் ‘புள்ளினங்காள்’ பாடல் காட்சி கவர்ந்தது. அதுவே அப்படத்தின் ஆன்மா. ஆழப்புழா செல்லலாம் எனத் திட்டமிட்டிருந்த எனது முடிவைப் புள்ளினங்காள் மாற்றியது. கோட்டையம் செல்லலாம் என முடிவெடுத்தேன். கோட்டையத்தில்தான் குமரகம் எனும் சுற்றுலா கிராமமும் பிரசித்திபெற்ற பறவைகள் சரணாலயமும் இருக்கிறது.

பேருந்தில் சென்று ஆட்டோ பிடித்தேன். பேருந்து நிறுத்தங்கள் சுத்தமாகவே பராமரிக்கப்படுகின்றன. வைக்கம் சென்று சேர்ந்தபோது மாலையாகிவிட்டது.

வைக்கமில் ஒரு எளிய விடுதி எடுத்துத் தங்கினேன். வைக்கம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள mgrஓர் ஊர். ‘வைக்கம்’ என்றதும் எனக்கு இரண்டு விடயங்கள் மட்டுமே நினைவுக்கு வந்தன. முதலாவது வைக்கம் முகமது பஷீர். இரண்டாவது வைக்கம் சத்தியாக்கிரகம். நான் ஏறிச்சென்ற ஆட்டோக்காரரிடம் வைக்கம் முகமது பஷீரைத் தெரியுமா எனக்கேட்டேன். நன்றாகவே தெரிந்தது. அவரது ‘மதில்கள்’ நாவல் திரைப்படமாக்கப்பட்டு அதில் மம்முட்டி நடித்ததையும் நினைவுகூர்ந்தார். நான் அப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியதையும் பல விருதுகளை அள்ளிக் குவித்ததையும் சொன்னபோது சந்தோஷமானார். (அந்த நாவல் குறித்து நான் ஏற்கனவே கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன்.)  ஆனால் அவர் வாழ்ந்த வீடெல்லாம் தெரியாது என்றார். வேறு வழி இல்லை. ஜெயமோகனிடமே மின்னஞ்சல் செய்து அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்றேன். சில நிமிடங்களில் ‘அவர் 75 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்தார்; பின்னர் கோழிக்கோட்டுக்குச் சென்றுவிட்டார். வாழ்ந்த வீடு பராமரிக்கப்படவில்லை ‘ என்று  பதில் வந்தது. காசியில் இருந்தபோது பாரதி வாழ்ந்த வீட்டைத் தேடிச்சென்று பார்த்தது நினைவுக்கு வந்து சிலிர்த்தது.  முகமது பஷீரை பெரும்பாலும் வாசித்து விட்டேன். அவர் வாழ்ந்த இல்லத்தைக் காண முடியாதது வருத்தம். ஆனால் எம்.ஜி.ஆர் நினைவகம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். தமிழகத்தில்கூட எம்.ஜி.ஆர் ஜானகியுடன் நின்றதில்லை; கேரளாவில் ஜோடியுடன்  நின்றார்.

1924 – 1925ஆம் ஆண்டுகளில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வைக்கம் சத்தியாகிரகம். வைக்கம் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது கோயிலுக்குள் பிரவேசிக்க அல்ல;  மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், நடக்கக்கூடாது என்று இருந்த சட்டத்தை எதிர்த்த போராட்டம். ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். பெரியாரும் வைக்கம் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பிய தகவல்கள், துறவிகள் மக்களின் வாழ்வுக்காகவே தங்கள் இருப்பை வடிவமைத்துள்ளது இனி பார்க்க முடியாத ஓர் கனவுபோல வந்துபோகும்

taraiவைக்கம் சிவன் கோவில் கேரள பாணியில் செந்நிற ஓட்டுக்கூரையும் வெண்நிறச் சுவர்களும் உள்பிரகாரமெங்கும் விளக்குகளுமாக இருந்தது. ஆனால் கருவறைப் பகுதியும் முக்கிய தரைகளும் கருங்கல்லால் ஆனது. தரையில் செதுக்கப்பட்டிருந்த முப்பரிமாண உருவங்கள் வியக்க வைத்தன. இதுவரை தமிழ்நாட்டுக் கோயில்களில் நான் பார்த்திராதது. தெப்பக்குளம் ஒன்று பிரமாண்டமாக இருந்தது. மீன்கள் படித்துறையின் அருகில் குழுமியிருந்தன.

அப்பகுதியில் கொஞ்சம் உலாத்திவிட்டு தங்கும் விடுதிக்குச் சென்றேன். மிகச் சுமாரான அறை. Trivago தளத்தில் நேர்மறையாகப்  போட்டிருந்தார்கள். அவையெல்லாம் உரிமையாளர்களே பொய்யான அடையாளத்துடன் போட்டதா எனும் சந்தேகம் உள்ளே நுழைந்தவுடன் எழுந்தது. இரவில் உறங்கவிடாதபடிக்கு மூட்டைப்பூச்சிகள் தொல்லை. மின்னஞ்சலில் Trivagoக்கு ஒரு புகார் கொடுத்தேன். அடுத்த சில நிமிடங்களில் விடுதி உரிமையாளர் ஓடிவந்து மெத்தையை மாற்றினார். “ஏன் Trivagoவில் சொன்னாய் கேள்வி கேட்டுக்குடைகிறார்கள்” என நொந்துகொண்டார். உணவகங்கள் பெரும்பாலும் அந்நேரத்தில் அடைக்கப்பட்டு இருந்தன. திறந்திருந்தவை கொஞ்சம் ஆடம்பரமாகத் தெரிந்தது. பக்கத்தில் மருத்துவமனை ஒன்று இருந்தது. மலேசியாவில் பொது மருத்துவமனை காண்டீன்களில் உணவு மலிவாகவும் சுத்தமாகவும் இருக்கும். இன்னும் ஒரு வாரத்தை ஓட்ட வேண்டும் என்பதால் மருத்துவமனை காண்டீனில் நுழைந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டேன். 40 ரூபாய்க்கு ஒரு சப்பாத்தி, கடலைக் கறி, டீ கிடைத்தது.

மறுநாள் காலையில் பயிற்றுப் பணி வேலைகள். முடித்து மின்னஞ்சல் அனுப்பியதும்  குமரகம்navin 01 புறப்பட்டேன். 14 ஹெக்டர் பரப்பளவில் உருவாகியிருக்கும் இந்தப் பறவைகளின் சரணாலயத்திற்கு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் அரிதான பறவைகள் வருகின்றன. இந்தச் சரணாலயம் வேம்பநாடு காயலில் அமைந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநரும் அதை காயல் என்றுதான் குறிப்பிட்டார். நல்ல தமிழ் வார்த்தை. இந்தியாவிலேயே மிகவும் நீளமான காயல்  இது. காயல் என்றால் கழிமுகத்தை ஒட்டி அமைந்திருக்கும் உப்புநீர் நிறைந்த நீர்வழி எனப்பொருள். இது ரப்பர் மரத்தோட்டமாக இருந்தது ஆங்கிலேயரால் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. வருகின்ற பறவைகள் குறித்தோ அவ்விடம் குறித்த சிறப்புகள் பற்றியோ வழக்கம்போல எதையும் அறியாத இருவர் டிக்கெட் விற்பனை செய்துகொண்டிருந்தனர். சின்னஞ்சிறிய எழுத்துகளில் உள்ள விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருந்தது. அதுபோல வேறு இருக்கிறதா எனக்கேட்டேன். அவர்கள் அதையே அப்போதுதான் பார்ப்பதுபோல படிக்க ஆரம்பித்து இல்லை என்றார்கள். பக்கத்தில் சின்னதாய் ஒரு கண்காட்சிக்கூடம் இருந்தது. சரணாலயத்தைச் சுற்றிவிட்டு திரும்பியவர்கள் கால் வலியால் அமர அக்கூடம் பயன்படுகிறது என உள்ளே நுழைந்தபோது நொந்துகொண்டேன்.

இரண்டு கிலோ மீட்டர் உள்ளே நடக்க வேண்டும். நான் சென்ற நேரம் அதிகம் பறவைகள் வருவதற்கான காலம் இல்லை. ஆனால் காயலுடன் ஒட்டி அமைந்த கானகத்தில் நடப்பது உற்சாகமாக இருந்தது. உண்மையில் பறவைகளைக் காண பிரத்தியேகக் கண் வேண்டும். மலேசியாவில் ஃபிரேசர் மலை பறவைகளின் சரணாலயம். குறிப்பிட்ட மாதங்களில் ஜப்பானில் உள்ள பறவைகள் அங்கு வரும். நான் ‘பறவை மனிதர்’ துரையுடன் அங்கே சுற்றியுள்ளேன். அவர் பறவைகளைக் காண்பதில் நிபுணர். எந்த மரத்தில் எந்தப் பறவை அமர்ந்திருக்கும் எனக் கணித்துச்சொல்பவர். பறவைகளின் ஒலி எழுப்பி அவற்றை அருகில் வர வைப்பவர். அவரை நான் நேர்காணல் எடுத்திருந்தேன். ஆனால் சோர்வில்லாமல் பறவைகளைக்காண அதற்குறிய ரசிப்புத்தன்மையும் ஆர்வமும் அவசியமாகிறது. மணிக்கணக்காக ஒரு பறவையைத் தொலைநோக்கியில் ரசிக்கும் ரசனை குணமெல்லாம் என்னிடம் எப்போதும் உருவானதில்லை. இசையை நுட்பமாக ரசிப்பதுபோல அதுவும்  ஒரு பயிற்சிதான்போல.

navinதுரை கூறியுள்ளபடி, பறவைகளைக் காணச் செல்கையில் பளிச்சென உடை அணிந்து செல்லக்கூடாது. பறவைகள் அந்தப்பக்கமே வராது. தொலைநோக்கி இருந்தால் அவற்றை இன்னும் நெருக்கமாக ரசிக்க முடியும். பழக்கம் இல்லாமல் அவற்றை நம்மால் அடையாளம் காணவே முடியாது. சிறிய பறவைகள் அசையாமல் பல சமயங்களில் நம் அருகில் அவை இருந்தாலும் தெரிவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பறவையை தேடிக்கண்டடைய நிறைய பொறுமை தேவை. என்னிடம் அப்போது மூன்றும் இல்லை. அன்றைக்கான மேற்கல்வி பணியை முடித்துவிட்டு கையில் கிடைத்த பளிச்சென்ற நீலச் சட்டையைப் போட்டுக்கொண்டு புறப்பட்டேன். தொலைநோக்கியும் கைவசம் இல்லை. ஆறு மணிக்கு அடைத்து விடுவார்கள் என்பதால் எனக்கு மூன்று மணி நேரமே அவகாசமும் இருந்தது. இரண்டு கிலோ மீட்டர் உள்ளே சென்றதும் பணியாளர் ஒருவர் இருந்தார். ஆகஸ்டு மாதங்களில் சைபீரிய கொக்குகள் இங்குவந்து குஞ்சு பொரித்து அவற்றை அழைத்துச் சென்றுவிடும் என்றார். பசுமை சூழ்ந்த அவ்விடத்தில் வெண்கொக்குகளை கற்பனை செய்து பார்த்தேன். அடுத்த ஆகஸ்டுதான் வரவேண்டும் நினைத்துக்கொண்டேன். ஆறு மணி வரை காத்திருந்து அவருடன் பேசிக்கொண்டே திரும்பினேன். மூன்று நாள் வேலை மூன்று நாள் விடுமுறை என ஊர் திரும்புவாராம். அந்த இயற்கை சூழ்ந்த இடத்தை இளம் காதலர்கள் தவறாகப் பயன்படுத்துவதாக நொந்துகொண்டார். ஆர்வமாக வளைத்து வளைத்து படம் பிடித்தார். குளத்தில் உள்ள ஆமைகளைக் காட்டினார். சில செடிகொடிகளின் பெயர்களைச் சொன்னார். நல்ல மனிதர்.

மீண்டும் ஒரு ஆட்டோவைப் பிடித்து குமரகத்தில் வேறு என்ன ஸ்பெஷல் எனக்கேட்டேன். தென்னங்கள் என்றார். அசலான தென்னங்கள் கிடைக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லவா எனக் கேட்டார். ‘பாக்கத்தான போற இந்தக் காளியோட ஆட்டத்த’ எனும் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின்  குரல் எனக்குள் எங்கோ கேட்டது.

                                                                                                                                                                                                                       தொடரும்

(Visited 497 times, 1 visits today)