மனசலாயோ 8: திருமுகப்பில்

padmanabhaswamiஏறக்குறைய பத்தாவது நாளில் நான் மருத்துவரிடம் ஊருக்குப் புறப்படப்போகும் மனநிலையைச் சொன்னேன். கழுத்து வலி குணமாகியுள்ளதையும் நரம்புகளின் சத்தம் மட்டும் மிச்சம் இருப்பதையும் கூறினேன். டாக்டர் இன்னும் முடிக்கவேண்டிய சில வைத்தியங்களைத் துரிதப்படுத்தலாம் என்றார். நான் ஊர் திரும்புவதற்குள் எனது ஆசை ஒன்றைக் கூறினேன். அது பத்மநாப சுவாமி கோயில் செல்வது. 2011-இல் அதன் பாதாள அறைகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மூலமே எனக்கு இக்கோயிலின் பெயர் அறிமுகம்.


எதன் வழி தெரியவந்தாலும் கேரளாவின் தவிர்க்க முடியாத ஆன்மிக அடையாளங்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள உள்ள பத்மநாப சுவாமி கோயில். செல்லும்முன் கொஞ்சம் இணையத்தில் தேடி அதன் வரலாற்றை வாசித்துக்கொண்டேன். சேரமான் பெருமான் இக்கோயிலை முதன்முதலில் எழுப்பியதாகவும் 1686-ல் தீப்பிடித்த இந்தக் கோயில் அழிந்ததும் திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மாவின் முயற்சியால் 1729-ல் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது என்றும்  ‘தி இந்து’ நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12,000 சாளக்கிராமத்தினாலும் ‘கடுசர்க்கரா’ என்ற ஒன்பதாயிரமூலிகை கலவையாலும் புதிய மூல மூர்த்தி நிறுவப்பட்டது எனக்குறிப்பு இருந்தது. ஆதலால் மூலவருக்கு சாத்தப்படும், அர்ச்சிக்கப்படும் மலர்களை மயிலிறகினால்தான் அகற்றுவார்களாம்.

சாலிகிராமத்தைச் சொல்கிறார்களா எனக் குழப்பத்தில் மீண்டும் இணையத்தில் தேடியபோது நேபாளத்தில் இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் உள்ள பகுதியில் உற்பத்தியாகும் கண்டக நதியில் கிடைக்கும் கருநிறக் கல்தான் சாளக்கிராமம் எனப் புரிந்தது. விக்கிபீடியா இக்கல் கண்ணனின் நிறம் கொண்டது என்றும் இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப் பயன்படும் சிறப்புக் கல் இது என்றும் சொல்கிறது. மொத்தத்தில் பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

பொதுவாக வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லும் முன் ஓரளவு அதைப்பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. சிற்பங்களை அல்லது கட்டிடக்கலையை ரசித்தபடி புராதனக் கோயிலில் நுழைவதென்பது ஒரு புறா கோயில் மதிலில் சென்றமர்வதுபோல. வரலாற்றை அறிந்து செல்வது கருடன் கோயிலின் மேல் வட்டமடிப்பதுபோல. இரண்டும் வேண்டியிருக்கிறது.

கோயிலில் வேட்டியைக் கட்டிக்கொண்டு ஆண்கள் மேலாடை இல்லாமல்தான் நுழைய வேண்டும். பெண்கள் சேலை அணியாதுபோனால் கேரள பாணியில் அவர்களும் முண்டு (வேட்டியை இடுப்பில்) கட்டிக்கொள்ளலாம். அதிகக் கூட்டம் இல்லாமல் இருந்தது. கைத்தொலைபேசி கொண்டுசெல்வதில் தடை. தென் இந்தியாவின் எல்லா பெரிய கோவில்களையும் போல, இந்தக் கோயிலுக்கும் நான்கு வாசல்கள் உண்டு. பிரதான வாசல் வழி நுழைந்து நடந்தால் கருவறை. நான் பணம் கட்டி சிறப்பு வழியில் சென்றேன். சட்டென திருமாலின் முன் நிறுத்தப்பட்டேன்.

‘திருமுகப்பில்’ சிறுகதையில் ஜெயமோகனின் வரிகள் நினைவுக்கு வந்தன. ‘ஒளிர்ந்த பொற்கிரீடம் சூடிய கன்னங்கரிய பெருமுகம் மூடிய கண்களுடன் ஒளி கன்னங்கரிய கன்னங்களில் கரிய திரவம்போல வழிந்தது.’ ஆம் உண்மையில் கரிய திரவம் வழிந்தது.

மகாவிஷ்ணு ஆதி சேடன் மீது சயனித்திருக்கும் நிலையில் இருந்தார். அங்கிருந்த அர்ச்சகர் மலையாளத்தில் அதன் சிறப்புகளை விளக்கிக்கொண்டிருந்தார். புரிந்தவர்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். ‘திருமுகப்பில்’ சிறுகதையில் வரும் அர்ச்சகர்கள் என் நினைவுக்கு வந்தார்கள். அக்கதை ஜெயமோகனின் கடுமையான விமர்சனத்தின் வெளிபாடு. இந்தியா சுதந்திரம் பெற்றபின் தமிழக ஆலய நிர்வாகத்திற்குள் திருவட்டார் ஆதிகேசவ கோயில் வந்ததுமே கோயிலின் மூன்று நிலவறைகள் திறக்கப்பட்டு இருபதாண்டுகளுக்கும் மேலாகச் சூறையாடப்பட்டன என ‘அனந்தபத்மநாபனின் களஞ்சியம்’ எனும் கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருப்பார். ‘விஷ்ணுபுரம்’ நாவலுக்கு கருவாக அமைந்த கோயில் அதுவெனவும் மற்றுமொரு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனதிற்கு நெருக்கமான ஆலயம் என்பதே என் கணிப்பு.

‘திருமுகப்பில்’ சிறுகதையில் Alvin Isaac Kallicharran (காளி சரண்) திருவட்டார் ஆதிகேசவன் கோயிலுக்கு வருகிறார். அவர் பிரபலமான கிரிக்கெட் வீரர். கறுப்பர். திருவனந்தாபுர பத்மநாபசுவாமி ஆலயத்தில் அவர் நுழைவு மறுக்கப்பட திருவட்டாரு வருகிறார். காளி சரண் மூலம் பணம் கிடைக்கும் என மூன்று வாசலையும் திறந்து காட்டுகின்றனர் அர்ச்சகர்கள். இருளை உருக்கி வார்த்து வடித்தது போல நான்கடி உயரத்தில் அறை நிறைத்து படுத்திருந்த மாபெரும் திருமேனியைக் கண்ட காளி சரண் ‘இதுதான் கடவுள். மனிதர்களின் கடவுள்’ என்கிறார்.

அனந்த பத்மநாபரை மூன்று வாயிலில்களில் தரிசனம் செய்ய வேண்டும். முதல் வாயிலில் இலுப்பை மரத்தடியில்  பத்மநாப சுவாமியின்  முகத்தையும் சிவபெருமானுக்கு அருள்பாலிக்கும் வலது கரத்தையும் காணலாம்.  இரண்டாம் வாயிலில் பிரம்மன் மகா விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வரும் தாமரை மலரில் அமர்ந்திருந்தார். பத்மம் என்றாலும் தாமரை. நாபன் என்றால் தொப்புளை உடையவன் என்று பொருள். தாமரையைப் போன்ற தொப்புளையுடைய திருமால் அவர்.  ஸ்ரீ தேவியும் பூமாதேவியும் இரு புறங்களிலும் இருக்கும் உற்சவரும் இங்குதான் இருக்கிறார். மூன்றாவது வாயிலில் பெருமாளின் பாதம்.

அர்ச்சகர்கள் பக்தர்களிடம் சிலையின் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். காளி சரண் கண்ட கறுமையை. கறுமையில் இருக்கும் சூனியத்தை. இருப்பது போலவும் இல்லாதது போலவும் உள்ள மாயையை அர்ச்சகர்களில் ஒருவராவது கண்டிருப்பார்களா எனத் தெரியவில்லை. அப்படிக் காண பக்தி அவசியம் இல்லை. கற்பனையே தேவையாக உள்ளது. கற்பனைதான் கண்களுக்குப் புதிய கோணங்களைக் கொடுக்கிறது. மலேசியாவில் நான் எந்தக் கோயிலுக்கும் செல்வதில்லை. எந்த வழிபாடும் செய்வதில்லை. தமிழகத்தில் கோயில்கள் வரலாற்றுக்கானவை. கலைகளுக்கானவை. அதை நிராகரித்து எந்த நுண் ரசனையையும் பெறுவது சாத்தியமல்ல.

வெளியே வந்தபோது சுற்றி இருந்த 360 தூண்களிலும் பெண்கள் விளக்கு ஏந்தி உள்ளதுபோல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலையும் அளவில் ஒன்றாக இருந்தாலும் தோற்றத்தில் வித்தியாசம் கொண்டிருந்தது. அவை ஏந்தியிருந்த விளக்குகளும் கல்லிலேயே செதுக்கப்பட்டிருந்தன. அதில் எண்ணெய் இட்டு திரி இட்டு தீபம் ஏற்றுகிறார்கள். தீபத்தின் சுடர் சிலைகளின் மார்க்கச்சைகளை எரித்து கருமையாக்கி இருந்தது. தொலைவில் இருந்து பார்க்கும்போது சிலைகள் கறுப்புக்கச்சைகளை அணிந்து வரிசையில் நிற்பதாய் காட்சிக்கொடுத்தது.

வெளியே வந்தபோது படிக்கட்டில் ஒரு துறவி சுற்றிலும் சூழ இருந்த பக்தர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் நின்று கேட்டபோது மலையாளத்தில் மஹாபாரதம் சொல்வது தெரிந்தது. என்னை அனுமதித்திருந்தால் ‘திருமுகப்பில்’ சிறுகதையைச் சொல்லியிருப்பேன்.

திருமுகப்பில் சிறுகதை

தொடரும்

(Visited 556 times, 1 visits today)