மறுநாள் மந்தமாக விடிந்தது. திகதி, நேரம் மறந்திருந்தேன். மெதுவாக எழுந்து வெளியே சென்ற போது படகுகள் காயலில் மிதந்துகொண்டிருந்தன. பிள்ளைகள் புத்தகப் பைகளுடன் படகில் சென்றுகொண்டிருந்தனர். கொண்டு வந்திருந்த டீ சட்டைகளை துவைக்கவில்லை என்பதால் புதிதாக சில வாங்கியிருந்தேன். குளித்துவிட்டு அணிந்தபோது உற்சாகம் தொற்றிக்கொண்டது. காற்றில் இன்னும் அதிகாலையின் குளிர்ச்சி இருந்தது. பிளாக்கி (நாய்க்குட்டி) யாரோ புதியவர் ஒருவரிடம் கொஞ்சிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் “தொ வரேன்” என்பதுபோல வாலை ஆட்டியது.
பலவிதமான பறவைகள் காயல் நதியில் நீந்திக்கொண்டும் மீன் பிடித்துக்கொண்டும் இருந்தன. சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். சிலர் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். சிலர் தூண்டில் வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அந்தக் காலை எல்லா காலையும் போல இல்லை. அவ்வளவு நிதானமான முகங்கள். நிதானம் ஒரு தொற்றுநோய்தான்போல. அது நமக்குள் புகுந்து நம்மையும் தொற்றிக்கொள்கிறது. எழுந்து நடந்தபோது உடல் கனமற்று இருந்தது. கொஞ்சம் முயன்றால் பறந்துவிடலாம் எனத்தோன்றியது. படகில் நான்கு ரூபாய் செலுத்தி உணவகம் சென்றேன். அங்குதான் ஃபிரான்சை சந்தித்தேன்.
அந்த உணவகத்தில் ஆட்களே இல்லை. காப்பி குடித்துக்கொண்டிருந்த ஃபிரான்ஸ் என் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்ததும் ஆர்வமாக வந்து பேசத்தொடங்கினார். அது டான் குயிக்ஸாட். நான் ஓர் எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொண்டபோது ஆர்வமானார். முதலில் நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என நினைத்தவர் மலேசியா என்றதும் “நான் அங்குள்ள தியோமான் தீவுக்கு சில வருடங்களுக்கு முன் சென்றுள்ளேன். மிக அழகான தீவு என்றார்.”
“நானும் ஃபிரான்ஸ் சென்றுள்ளேன்” என்றேன். “நிச்சயமாகப் பாரிஸாக இருக்கும்.” என்றார். அவர் கண்களில் கேலி இருந்தது. சாம்பலில் கொஞ்சம் பழுப்பைக் கலந்ததுபோல கண்கள். உறுதியான மூக்கு. தலைக்கு மேலே கண்ணாடியை அணிந்திருந்தார். “ஆமாம். ஆனால் சுற்றிப் பார்க்க அல்ல. ஷோபா சக்தி என்ற எழுத்தாளரைப் பார்க்க” என்றேன். பின்னர் “உனக்கு அவரைத் தெரிந்திருக்கக்கூடும்” என்றேன். கேள்விப்பட்டதில்லை என்றார். ஷோபா சக்தியின் நூல்கள் ஆங்கிலத்தில் கிடைப்பது தொடங்கி அவர் நடித்த ‘தீபன்’ திரைப்படம் 2015இல் கேன்ஸ் விருது வாங்கியது வரை சொன்னேன். “தெரியாது” என்றார். பின்னர் “நீயும் எழுத்தாளன்தானே உன் பெயர் என்ன?” என்றார். சொன்னேன். அவர் பெயரைக் கேட்டபோது “ஃபிரான்ஸ்” என்றார். நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது “ஆமாம் ஃபிரான்ஸ்” என்றார். நான் சிரித்தேன். அவர் என்னை ஏமாற்றுவதாக நினைத்தேன். அவர் நிதானமாகக் கூறினார். “பலரும் என் பெயரைக் கேட்டதும் உன்னைப் போலவே ஓரிரு முறை விசாரிப்பர். பின்னர் சிரிப்பர். என் பெயர் எனக்குக் கொடுக்கும் நம்பிக்கையை நீ அறிந்துகொள்ளும் தருணம் அந்தச் சிரிப்பு நின்றுவிடும்” என்றார்.
நான் சட்டென அமைதியானேன். எனக்கு ஃபிரான்ஸ் பேசும் பாவனைப் பிடித்திருந்தது. நான் இதுவரை ஒரு பிரஞ்சு நாட்டவரிடம் பேசியதில்லை. ஒரு கருத்தை அவர் மிகச்சரியாகத் தேர்வுசெய்த வார்த்தைகள் மூலம் சொல்லும்விதத்தில் அவரது ஆளுமை வெளிப்பட்டபடி இருந்தது. “எங்கள் நாடு மிக அழகானது. நான் அந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதால் சொல்லவில்லை. நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். ஆனால் ஃபிரான்ஸ் வளமான நாடு” என்றார். நான் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். “நான் வளம் என்பதை பண்பாடு என்பதுடன் சம்பந்தப்படுத்துகிறேன். பண்பாட்டை பேணாத; அதை பாதுகாக்காத ஒரு நாட்டில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் நவீனமடைந்தாலும் அது வளமான நாடு கிடையாது. பிரான்ஸில் நீ பயணம் செய்தால் பலவிதமான காட்சிகள் அடுத்தடுத்து மாறிக்கொண்டே வருவதை பார்க்கலாம். முதலில் பார்த்ததுபோல ஒரு காட்சியை நீ மீண்டும் இன்னொரு இடத்தில் பார்க்கவே முடியாது. காரணம் அங்கு அத்தனை வகையான நிலத்தன்மைகளும் சீதோஷண நிலையும் உள்ளன. அச்சூழல் அங்கு என்ன உருவாக வேண்டும் என தீர்மானிக்கிறது. அதுவே ஃபிரான்ஸை கவர்ச்சியாக்குகிறது.” என்றார்.
“நான் குறுகிய காலமே இருந்ததால் முழுமையாக அந்நாட்டைப் பார்க்கவில்லை” என்றேன்.
“ஆனால் இப்போது ஃபிரான்ஸ் முன்புபோல இல்லை. இப்போது உள்ள இளைஞர்களுக்கு தங்கள் பண்பாட்டை மதிக்கத் தெரியவில்லை. பொருள்களை வாங்குபவர்களாக இருப்பதும், விரும்பியதை வாங்கி உண்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் என அவர்கள் பொழுதுகள் கழிகின்றன. அதன்வழி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்புகிறார்கள். பிறரையும் நம்ப வைக்க முயல்கிறார்கள். மேலும் எங்கள் அரசாங்கமும் வருபவர்களை எல்லாம் வா வா என நாட்டுக்குள் அனுமதிக்கிறது.” அப்படி அவர் சொல்லும்போது ஒரு மன்னரை பணிப்பெண் அரண்மனைக்குள் அழைப்பதுபோல எழுந்து நின்று பணிவுடன் செய்துகாட்டினார். “அவ்வாறு வரும் வெளிநாட்டினரால் பல சிக்கல்கள்” என்றவர் மரத்தாலான கனமான நாற்காலியை இழுத்துப்போட்டார். உறுதியான உடல் அவருக்கு. சதை முறுக்குடன் சுறுசுறுப்பாகவே இருந்தார். அப்போது அவர் ஆர்டர் செய்திருந்த தோசை வந்தது “சட்டினி…” என உற்சாகமானார். தோசையைவிட சட்டினியே அவருக்குப் பிடித்திருந்தது. ஒரு கரண்டியில் அள்ளிச் சாப்பிட்டார்.
அவர் என்ன வேலை செய்கிறார் எனக்கேட்டேன். அதை சொல்வது சிரமம் என்றவர் “நிலைகொள் விவசாயம் (Permaculture) கேள்விப்பட்டுள்ளாயா?” என்றார். “இல்லை” என்றேன். “எனது தாத்தாவுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அது Toulouse எனும் இடத்தில் உள்ளது. நான் அதில் இவ்வகை விவசாயம் செய்கிறேன். வழக்கமான விவசாயத்தில் ஒரே வகையான பயிர்களை நடுவார்கள் இல்லையா? இது அப்படியல்ல. பழமரங்கள், காய்கறிகள், பூச்செடிகள் எல்லாம் ஒரே நிலத்தில் வளர்ப்போம். கூடவே வாத்துகள், முயல்களையும் அதே தோட்டத்தில் வாழ விடுவோம். இந்த முறையின் மூலம் விவசாயத்தை தொழிலாகத் தனித்து செய்யாமல் இயற்கையோடு இணைந்த மனித குடியிருப்பாக மாற்ற முடியும்” என்றவர் உனக்குப் புரிகிறதா என்றார்.
எனக்கு சு.வேணுகோபால் நினைவுக்கு வந்தார். அவர் மலேசியா வந்திருந்தபோது செம்பனைத் தோட்டங்களைக் கண்டு பெரும் அயற்சி அடைந்தார். “ஒரு நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே வகையான மரம் மட்டும் இருப்பது அழிவுக்கான கூறுகள்” என அவர் முதல் பார்வையிலேயே கூறியிருந்தார். “தோட்டம் என்றால் மக்கள் அதில் வாழ வேண்டும். மக்களோடு சேர்ந்து விலங்கினங்களும் வாழ வேண்டும். மரங்களுக்கு மத்தியில் வேறு சில மரங்களும் செடிகளும் இருக்க வேண்டும். அதுதான் வாழ்வதற்கான நிலம். விமானத்தில் இறங்கும்போது பசுமையாகத் தெரிந்த இந்நாட்டின் செம்பனைத் தோட்டங்கள் கண்களுக்குக் கடும் சலிப்பைக் கொடுக்கிறது” என்ற அவரது குரலில் இருந்த அதே இயற்கை மேலிருந்த நேசம் ஃபிரான்ஸிடமும் வெளிப்பட்டது. அவரிடம் பேசிய பின்னர்தான் இப்படி ஒருவகை வேளாண்மை முறை உள்ளதை அறிந்தேன்.
“தாவரங்கள் நம்மைவிட அறிவாளிகள். அவற்றுக்குத் தங்களை தற்காத்துக்கொள்ளத் தெரியும். நான் அவற்றுடன் வாழ்கிறேன். நான் அமைத்துள்ள தோட்டம் Pyrenees மலையின் அருகில் உள்ளது. அது ஸ்பெயினையும் பிரான்சையும் பிரித்துள்ள மலை. தினமும் அதைப் பார்ப்பேன். ஒரு மணி நேரத்தில் என்னால் ஸ்பெயின் செல்ல முடியும்.” என்றார். பின்னர் என்னைக் கூர்ந்து பார்த்து “நீ எந்த மாதிரியான எழுத்தாளன்” என்றார். சொன்னேன். செய்துகொண்டிருக்கும் பணியைச் சொன்னேன். “எப்படிச் சோர்வாகாமல் நீண்ட காலம் செய்கிறாய்” என்றார். சிரித்தேன். அவர் பேச்சை வேறெதுவும் தடை செய்யக்கூடாது என நினைத்தேன். மேலும் அவர் செய்துகொண்டிருக்கும் பணிகளுக்கு முன் நானெல்லாம் ஒன்றும் இல்லை எனத்தோன்றியது.
“நீ The Mediterranean நூலை வாசித்துள்ளாயா” என்றவர் ” நீ வாசிக்க வேண்டும் Fernand Braudel என்பவர் எழுதியுள்ளார். பெரிய புத்தகம். மூன்று தொகுப்பாக உள்ளது. அதில் அவர் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இயற்கையுடன் இசைந்து வாழ்கிறார்களோ… இயற்கை எவ்வளவு வளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு மக்களும்…” என நிறுத்தியவர் “அதற்கு முன்னேற்றம் எனச் சொல்ல முடியாது. ஆனால் முன்னேற்றம் போல ஒன்றை அடைவார்கள்” என நிறுத்தினார். இன்னும் கொஞ்சம் சட்டினி கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்டவர் தொடர்ந்தார்.
“ஃபிரான்ஸ் வளமான நாடு என நான் சொல்வது நாங்கள் அறிவாளிகள் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒரு தேசத்தில் மணல் பரப்பு மட்டும் உள்ளது என வைத்துக்கொள்வோம். அந்நாட்டின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் ஒற்றைத் தன்மையானதாக இருக்கும். உனக்கு நதி, வனம், மலை இருந்தால் அவற்றை உன் நாடு பாதுகாத்தால் அதுதான் வளர்ச்சி.”
“ஆனால் இங்கு வளர்ச்சி என்பது பணம் சார்ந்து மட்டும்தானே கவனிக்கப்படுகிறது” என்றேன். அவரைத் தொடர்ந்து பேச வைக்க வேண்டும் என அவ்வாறு சொன்னேன்.
“பார், நவீனமயமாகும் நாடுகளில் வாழும் மக்கள் பண்பாட்டை விட்டால் அது வீழ்ச்சிக்கான அடையாளம். நீங்கள் இயந்திர மனிதர்கள். உதாரணமாக ஜப்பானியர்களைச் சொல்வேன். அது மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு. ஆனால் அவர்கள் பண்பாட்டை இழந்துவிட்டார்கள். வேலைக்குச் சென்று, சிரித்துப்பேசி, பொருள்களை வாங்கி, வீட்டுக்கு வந்து உறங்குவதா வாழ்வு? இன்று அவர்கள் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. வேலையிடத்தில் அளவுக்கதிகமான அழுத்தம். உறக்கம் போதாமல் அலுவலகத்தில் உறங்குகிறார்கள். அதிகம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து முடங்கிவிடுகிறார்கள். நாம் இயற்கையின் ஒரு பகுதி. நாம் அதிலிருந்து துண்டித்துக்கொண்டால் இழப்பு நமக்குதான்.” கொஞ்சம் நிறுத்தி “நான் உன் சட்டினியையும் எடுத்துக்கொள்ளவா?” எனக் கேட்டார்.
“தாராளமாக” என அவர் பக்கம் தள்ளினேன். “உங்களுக்கு எத்தனை வயது?” எனக்கேட்டேன். “50” என்றார். அவர் பேசும்போது முகபாவத்தில் மாற்றங்கள் இருந்துகொண்டே இருந்தன. நான் எதன் காரணமாகக் கேட்கிறேன் என அவர் அறிந்துகொண்டதற்கான அறிகுறிகள் அவை.
“உறுதியாக இருக்கிறீர்கள்.” என்றேன். “தினமும் உடற்பயிற்சி செய்வேன்.” ஆம் அவர் பதில்களைத் தயாராக வைத்திருந்தார். நுண்ணுணர்வாளர். மனதைப் படித்து விடுகிறார்.
“அதற்கு அதிகம் கட்டொழுங்கு வேண்டும் அல்லவா?” என்றேன் மீண்டும்.
“கட்டொழுங்கு என்பது தேவையின் அடிப்படையில் அமைவது. எங்கு தேவை உண்டோ அங்கு கட்டொழுங்கு இருக்கும். நான் உடற்பயிற்சி செய்யாவிட்டால் என் முதுகெலும்பு வளைந்துவிடும். அப்படி ஒரு நோய். எனவே நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். அது என்னை உறுதியான உடல் உள்ளவளாக மாற்றிவிடுகிறது. மேலும் நான் திருமணம் செய்யவில்லை. எனது தோட்டத்தை நானே சொந்தமாக நிர்வகிக்கிறேன். அவசரம் இல்லாமல் ரசித்தே அதை செய்கிறேன். தனிமைப் பயணங்கள் எனக்கு விருப்பமானவை. நான் விதியை நம்புகிறேன். நாம் அதிகம் அலட்டிக்கொள்ளாவிட்டால் அது நம்மை உரிய இடத்திற்கு அனுப்பும். ஆனால் நாம் அடுத்தவர்களை பார்த்து வாழ்கிறோம். ஃபிரான்ஸின் இளம் தலைமுறையினர் வசதியான வீடுகளையும் ஆடம்பர கார்களையும் வாங்குவதையே தங்கள் சாதனையாக நினைக்கின்றனர். வீட்டில் உள்ள முதியவர்களையும் குழந்தைகளையுமே மறந்துவிடுகின்றனர். “
நிச்சயம் நான் சராசரியான ஒரு பிரஞ்சு பிரஜையிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் பிரான்ஸிடம் விடைபெறும்போது ஒரு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். சம்மதித்தார். “இங்கு சூரியன் அழகாக உதிப்பதைப் பார். அது இந்த உலகை ஒளியால் புதுமை செய்கிறது. நாம் அதன் துணையுடன் தாவரங்களால் புதுமை செய்யவேண்டும்.” என விடைகொடுத்தார். அவர் சொல்லாடல்களில் கவித்துவம் மிளிர்ந்தன. ஒரு பாலர் பள்ளி ஆசிரியை போல அபிநயத்துடன் பேசினார்.
அறைக்குச் சென்றபோது உரிமையாளர் ஓடி வந்தார். அன்று நான் கொச்சிக்குச் செல்வதாக இருந்தது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் திரும்பபெற வலியுறுத்தி, பா.ஜ.கா போராட்டத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் கேரளா தலைமைச்செயலகம் முன்பு தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் இதனால் கேரளாவில் நாளை முழு அடைப்பு என்றும் கலவரம் வரவும் சாத்தியம் உள்ளதாகக் கூறினார். நான் கொச்சி செல்லாமல் இருப்பது நல்லது என்றார்.
‘நாங்களெல்லாம் பயணமுன்னு புறப்படுவதே கலவரம் பண்ணதான். இதுல தனியா கலவரம் வேறயா’ என வடிவேலு பாணியில் பெட்டியைத் தூக்கினேன்.
தொடரும்