கொச்சியில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு மறுநாள் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று மலேசியா திரும்பலாம் என்றே திட்டம். ஆனால் கொச்சிக்கு ஏற்றிச்சென்ற காரோட்டி சொல்லியே அங்கும் ஒரு விமான நிலையம் இருப்பதும் அங்கிருந்தும் மலிண்டோ விமானம் கோலாலம்பூர் வருவதும் புத்திக்கு உரைத்தது. அது முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம். ஒரு கணினி மையத்தில் இறங்கி டிக்கெட்டை திருவனந்தபுரத்திலிருந்து கொச்சினுக்கு மாற்றினேன். ஆனால் பணத்தை தொலைபேசியின் வழியே அழைத்து பல விபரங்களை உறுதி செய்தபின்னரே செலுத்த முடியும்.
மலேசியாவில் இவ்வாறு டிக்கெட்டை மாற்றுவது மிக எளிது. இங்கு எனக்கு தொலைபேசி வசதி இல்லை. டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும் கிரெடிட் கார்ட் விபரங்களை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் பதிவு நீக்கப்படும். வாகன ஓட்டியிடம் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முகத்தில் நிரந்தரக் கடுமையைப் பூசியிருந்தார். எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தார். மலையாளப் பாடல் காரில் ஒலித்துக்கொண்டிருந்தது. கொச்சியை அடைந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாகவே வந்தேன்.
கடந்த 18 நாட்களில் நான் பார்த்த கேரளாவைப் பற்றி மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. அடிப்படையில் மலையாளிகள் தூய்மையானவர்கள். நேர்த்தியானவர்கள் எனும் சொல் இன்னும் பொருந்தும். கட்டடப் பாதுகாவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடைச் சிப்பந்திகள் என அனைவருமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துகின்றனர். உணவு பரிமாறுகையில், கேள்விக்கு பதில் சொல்கையில், சந்தேகங்களைத் தெளிவுபடுத்துகையில் என ஒரு சந்தர்ப்பத்தில்கூட அலட்சியமான குரலையோ அசௌகரியமான பார்வையையோ யாரும் செலுத்தவில்லை. எனக்கு அவர்கள் மலாய்க்காரர்களை நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். மரங்களின் பச்சையில் தூசு படியாததால் கண்களுக்கு எங்குமே குளிர்ச்சி இருந்தது. சிறு உணவகக் கழிவறைகள் கூட தூய்மையாகவே இருந்தன. கட்சி கோஷங்கள், தத்தம் தலைவர்களின் புகழ்மாலைகள் என எதுவும் சுவரொட்டிகள் வழி அவசியமின்றிக் கண்களில் படவில்லை. தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது கண்ணுக்குச் சோர்வளிக்கும் கருவேல மரங்களைப் போல கேரளாவின் நீர் நிலைகளில் காணப்படும் நீர் பதுமராகம் (water hyacinth) சோர்வளிக்கக் கூடியவை.
கொச்சி துறைமுகப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்கள் பினாங்குத் தீவைப் போலவும் அதன் நகரப்பகுதி கோலாலம்பூர் போலவும் இருந்தது. அதிகம் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு ஏற்றதுபோல அவ்விடம் அமைக்கப்பட்டிருந்தது. நான் நகரப்பகுதியில் தங்கினேன். அங்கு மலிவான விடுதிகள் ஏராளம். மலேசியாவில் 60 ரிங்கிட்டுக்கு சுத்தமான அறைகள் கிடைப்பது போல மிகக்குறைந்த விலைக்கு ஒரு மெத்தை ஒரு சிறிய அலமாரியுடன் சுத்தமான அறைகள் கிடைக்கின்றன. சில உணவகங்களே அவ்வாறான இடங்களை ஏற்பாடு செய்து தருகின்றன. கார் ஓட்டுநர் காட்டிய அத்தகைய ஒரு இடத்தில் தங்கிக்கொண்டேன். பின்னர் மிகவும் தயங்கி சூழ்நிலையைச் சொன்னேன். மலேசியாவுக்கு அழைக்க உதவி ஏதாவது செய்ய முடியுமா எனக்கேட்டேன். முன்பே சொல்லியிருக்கக்கூடாதா எனக் கூறியவர் தனது தொலைபேசியில் வெளிநாட்டு அழைப்பு முடியாது என்றார். பின்னர் ஏதோ முடிவு செய்தவராக என்னைக் குளிக்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்று வருவதாகக் கூறினார். பணமும் வாங்கிக்கொள்ளவில்லை. நான் குளித்து முடித்து வெளியே வந்த சில நிமிடங்களில் தொலைபேசியை நீட்டினார். இப்போது பேசலாம் என்றார். அதற்குள் ஏதோ மாற்றி வந்திருக்கிறார் எனப்புரிந்தது.
மலிண்டோவை அழைத்தபோது வழக்கம்போது எண் ஒன்றைத் தட்டுங்கள், இரண்டைத் தட்டுங்கள் என சாகடித்தார்கள். இவ்வாறு செய்வதால் அதிக தொகை வரக்கூடும். வாகனமோட்டுநர் பதற்றம் அடையக்கூடும் என ஓரக்கண்ணால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவழியாகப் பேசி கூடுதலாக 100 ரிங்கிட் செலுத்தியபின் டிக்கெட்டை கொச்சிக்கு மாற்றி மின்னஞ்சலுக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டனர். அதுவரை நான் பேசிக்கொண்டிருந்த மலாய் மொழியை அவர் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். முகத்தில் கடுமை இன்னும் இருப்பதுபோலவே தோன்றியது. பேசி முடிந்ததும் 70 ரூபாய் காட்டியது. வாகனத் தொகையுடன் தொலைபேசியில் பேசியதற்கு 100 ரூபாயைக் கூடுதலாகக் கொடுத்தேன். “நான் தமிழகம் சென்றுள்ளேன். ஆட்டோவில் ஏறி மலையாளத்தில் பேசினால் 400 ரூபாய் என ஆட்டோக்காரர் சொல்வார். அதுவே தமிழில் பேசினால் 200 ரூபாயாகக் குறையும். எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு அளவிடக்கூடாது. உனக்கு எவ்வளவு பதற்றமாக இருந்திருக்கும். நீ முன்பே சொல்லியிருக்கலாம்” என்றவர் 100 ரூபாயைத் திரும்பக் கொடுத்தார்.
பயணம் நெடுகிலும் எந்தச் சிக்கலும் இல்லை. தீக்குளிப்பு சம்பவத்தில் பெரிய விளைவுகள் எதையும் நான் அந்தப் பயணத்தில் காணவில்லை. கொச்சி கோலாகலமாக இருந்தது. பக்கத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்து மனசலாயோ எழுதினேன். இணையத் தொடர்பு மிக மோசமாக இருந்தது. நள்ளிரவுக்குப் பின் உள்ளே நுழைந்த ஒரு தம்பதிகளிடம் தொலைபேசியில் வைஃபை தொடர்பை 5 நிமிடம் தர முடியுமா எனக்கேட்டேன். சரி என திறந்துவிட்டார். கட்டுரையை பதிவேற்றம் செய்தபின் கடும் களைப்பு. கொஞ்சம் மெத்தையில் சாய்ந்தபோது இரவு உணவு உண்ணவில்லை என நினைவுக்கு வந்தது. உறங்கிவிட்டேன். வெளியே கூச்சல் கேட்டுதான் கண்விழித்தேன். அது கலவரத்தின் கூச்சல். நமக்கென்ன “மோடி வாழ்க” எனச் சொல்லிவிட்டு கூட்டத்தில் புகுந்து ஓடிவிடலாம் என எட்டிப் பார்த்தேன். மோகன்லால் நடிக்கும் ‘ஒடியன்’ திரைப்படத்தின் முதல் ஷோவுக்காக அவரது ரசிகர்கள் கூடி சிறு மேடை அமைத்து ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக இருந்தனர்.
ஒடியன் திரைப்படத்தின் புரோமோவை ‘2.0’ திரைப் படத்தின்போதே பார்த்தேன். மோகன்லால் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். காலையில் சில பணிகளுக்காக இணைய இணைப்பு தேவைப்பட்டதால் மீண்டும் பக்கத்து அறைக்குச் சென்றேன். பூட்டிக் கிடந்தது. அதிகம்தான் தூங்கியிருக்கிறேன். காலையில் தாமதமாக எழுவது ஒரு தினத்தின் ஆன்மாவைக் கொல்வதுபோல. உற்சாகம் இருக்காது. நான் பள்ளி விடுமுறை நாட்களிலும் காலையிலேயே எழுந்துவிடும் ரகம். அடுத்து என்ன செய்வதெனத் தெரியவில்லை. கடைகள் பலவும் அடைத்துக்கிடந்தன. பல் துலக்காமலேயே திரையரங்கில் நுழைந்து ஒடியன் டிக்கெட் வாங்கினேன். மீண்டும் அறைக்கு வந்து குளித்துவிட்டு திரையரங்கில் நுழைந்தேன். திரைப்படத்தை ரசிப்பதிலும் கதாநாயக கொண்டாட்டங்களிலும் மட்டும் கேரள மக்கள் தமிழக சினிமா ரசிகர்களோடு பெரும்பாலும் ஒத்துப் போகின்றனர். மோகன்லால் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் தொடங்கி திரையரங்கில் அவர் தோன்றும்போது முன்னே சென்று ஆரவாரம் செய்வது வரை ஒரே நாயக வழிபாட்டு கலாசாரம்தான்.
‘ஒடியன்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைந்து இந்திய மொழிகளிலும் தேய்ந்துபோன அதே கதை. பாலக்காட்டில் ஒருவித அறிய பூர்வீகக் கலையைக் கற்றுள்ள கதாநாயகனின் மேல் பழிபோட அவனுக்கு நெருக்கமானவர்களையே கொலைகள் செய்து அப்பழியை கதாநாயகன் மேல் போடும் வில்லன். இதனால் தொடர்ந்து தன்னைப் பழிவாங்க தன் அன்புக்குரியவர்கள் பலியாகக்கூடாது என காசிக்குச் சென்று 15 வருடம் கழித்து திரும்பி வருகிறார் ஒடியன். பின்னர் என்ன நடக்கிறது என்பது மிச்சக் கதை. பிரகாஷ்ராஜ் வில்லன். கூடவே காதல், நட்பு எல்லாம் உண்டு. பழைய பரோட்டாவில் முட்டையை ஊற்றி சிதைத்து கொத்துப் பரோட்டாவாக இது புதுசு எனக்கொடுப்பது போல ஒடியன் கற்றுள்ள கலைகளை வைத்து கொஞ்சம் புதுமையாகக் காட்ட முயல்கிறார்கள். மலையாளிகள் கொஞ்சம் உடல் பருமனாக உள்ளவர்களைக் கொண்டாடத் தயங்குவதில்லை. நான் ஷகீலாவை சொல்வதாக கருதவேண்டாம். அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி உயிர்மை பதிப்பகம் சென்னை நூல் கண்காட்சியில் தனது பதாகையில் பிற எழுத்தாளர்களின் நூலைவிட ஷகிலாவை மையப்படுத்தியபோதே அவருக்கு தீவிர இலக்கியவாதி அந்தஸ்து வந்துவிட்டதை அறிக.
படம் முடிந்து மீண்டும் அறைக்கு ஓடிவந்து பக்கத்து அறையைப் பார்த்தேன். பூட்டிக்கிடந்தது. கொஞ்சம் கூட அக்கறையில்லாதவர்கள். நேற்று உதவி கேட்டானே அவன் என்ன செய்வான் எனக் கொஞ்சம் கூட சிந்திக்க இல்லை. kayees பிரியாணி கேரளாவிலேயே அதிக ருசி என்றார்கள். உண்மையில் ருசிதான். வெளியில் வந்து ஆட்டோ ஓட்டுநரிடம் கொச்சினைச் சுற்ற வேண்டும் என்றேன். அவர் நீண்ட பட்டியல் இட்டார். நான் சொல்லும் இடத்திற்கு அழைத்துச்சென்றால் போதும் என்றேன்.
முதலில் நான் செல்ல விரும்பியது சீன வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் கடற்பகுதி. இது சீனர்களால் மீன் பிடிக்கப் பயன்பட்ட ஒரு பிரத்தியேக வலை. இந்த வலை கரையில் இருந்து இயக்கப்படும் நிலையான அமைப்பைக் கொண்டது. ஏறக்குறைய ஆறு பேர் இணைந்தே இதை இயக்க முடியும். அங்கிருந்த முதியவர் ஒருவரிடம் பேசினேன். அப்போதெல்லாம் மூங்கில் கழிகள் மூலம் ஒருவரே இதை இயக்குவார்கள் என்றார். ஆனால் போர்த்துகீசியர்கள் கொச்சியில் இம்முறையை வளப்படுத்தியதால் இதற்கு பயன்படும் உபரிப்பாகங்களின் பெயர்கள் அனைத்தும் போர்த்துகீசிய மொழியில் உள்ளதை உச்சரித்துக்காட்டினார். அவர்களுடன் இணைந்து ஒருமுறை வலையை இழுத்துப் பார்த்தேன். இரண்டு மீன்கள் கிடைத்தன. காதல் ஜோடிகள் போல என்றேன். ஆம் நல்ல சாவு எனச் சிரித்தனர்.
அடுத்ததாக St. Francis Church. 1503 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஐரோப்பிய கிறித்துவ தேவாலயம் இது. அதோடு இதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்து 1498 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் வந்திறங்கியதை வாசித்திருப்போம். மூன்றாவது முறையாக அவர் இந்தியா வந்தபோது கொச்சியில் உயிரிழந்தார். அவரது உடல் முதலில் இந்தத் தேவாலயத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் பதினான்கு ஆண்டுகள் கழித்து எஞ்சியுள்ள மிச்சங்களை அவரது சொந்த தேசமான போர்த்துகலுக்கே எடுத்துச்சென்றனர். அவரைப் புதைத்த இடத்தின் அடையாளம் அங்கு உள்ளது.
ஒரு படத்தில் சிலம்பரசன் சொல்வதுபோல கேரளாவில் மனிதர்களைவிட தேவாலயங்களே அதிகம் காணப்பட்டன. பிரமாண்டமானவை. பழங்காலத் தேவாலயத்தில் இருந்த பொருள்களை ஒரு தொல்பொருளகத்தில் வைத்திருந்தனர். 1724இல் அமைக்கப்பட்ட டச்சுக்காரர்களின் சுடுகாடு ஒன்று இருந்தது. திரைப்படம் எடுக்க நல்ல இடம் என்றேன். அடிக்கடி சூட்டிங் அங்கு நடக்கும் என்றார் ஆட்டோக்காரர். அவர் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும். அருகிலேயே ஒரு சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. ஆசிவ் அலி (Asifali) நடித்துக்கொண்டிருந்தார். மலையாளத்தின் இளம் பிரபல நடிகர். கதாநாயகியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி. தமிழில் கட்டளைகள் பறந்தன. தமிழ் நடன இயக்குநராம். தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்தேன். உடனே இருவர் ஓடி வந்தனர். யாரோ ஒருவருடைய கட்டளையின்படி வந்த அவர்கள் என் பக்கத்தில் இருந்தவரின் கைப்பேசியை வாங்கி “சார் படம் பிடிச்சீங்களாமே; அழிச்சிடுங்க” என்றனர். அவர் தாயின் மீது சத்தியம் செய்யாத குறையாக இல்லை என நிரூபித்துக்கொண்டிருக்க நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
மறுநாள் மலேசியா திரும்ப மனம் தயாராகிவிட்டிருந்ததால் அறைக்குச் செல்ல வேண்டும் என மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அம்மாவை பார்த்து 20 நாட்கள். பெரும்பாலும் நான் எழுதுபவற்றை குடும்பத்தில் உள்ளவர்கள் வாசித்துவிடுவர். புதிதாகச் சொல்ல சிலவற்றை வைத்துள்ளேன். புறப்படும்போதே ‘தனியா இருக்கும்போது உன்னையே நீ மறுபரிசீலனை செய்து பார்’ என்று டாக்டர் சண்முகசிவா சொன்னார். செய்துகொண்டேன். இந்தக் கேரளப் பயணத்தின் அற்புதம், தொடக்கமே ஜெயமோகனைச் சந்தித்ததுதான். நான் தமிழ் எழுத்தாளனாக இருப்பதில் பெருமைப்படும் கனங்களில் ஒன்று அவரது அருகாமை. அது அரூபமான அருகாமை. இன்று பல இளம் எழுத்தாளர்களுக்கும் அந்த அருகாமை உற்சாகப்படுத்துவதை அறிவேன்.
காலையில் இருந்த திரையரங்க பரபரப்பு இப்போது பெரும்பாலும் குறைந்துவிட்டது. ‘ஒடியன்’ படம் தோல்வி என கீழே பேசிக்கொண்டார்கள். எது வெற்றி? எது தோல்வி? ‘ஒடியன்’ வசூழ் ரீதியாக வென்றிருந்தால் மட்டும் அதை வெற்றியில் சேர்க்கலாமா? நஷ்டப்பட்டு நடத்தப்படும் ஒரு இலக்கிய இதழ் முயற்சியை தோல்வியென்றும் மலினச் சிந்தனையைப் புகுத்தி லாபகரமாக விற்பனையாகும் ஜனரஞ்சக இதழை வெற்றி என்றும் வரையறுக்கலாமா? வெற்றி தோல்வியின் வரையறை விற்பனையும் வசூழும் மட்டும்தானா? ‘முட்டாள்கள்’ தன்னிச்சையாக உதடு உச்சரித்தது. இரவில் கொச்சியின் பரபரத்த சாலையை அறையின் சன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இந்த இறுதிப்பகுதியை எழுதுகிறேன். நெடுநாட்களாகிவிட்டன இத்தனை வாகனங்களின் சத்தங்களைக் கேட்டு. வெறுமனே அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மலேசியாவுக்கு நான் சென்றபின் இப்படிப் பரபரப்பாக ஓடும் எனது வாகனத்தை வேறொருவன் அவசரமற்று எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டிருப்பான். அவன் கண்களை நான் என்றுமே சந்திக்கக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.
முற்றும்