மனசலாயோ : கடிதங்கள் 2

46670559_299852633983828_6854628398367506432_nஎழுத்தாளர் நவீன் அவர்களுக்கு வணக்கம், நல்ல படைப்புகளை வாசிக்கும்போது நானுமே என்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொள்ளுமபடியான ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது. அதன் மீதான புரிதல் நமக்குள் ஒரே இடத்தில் நிலையாய் நின்று விடுவதில்லை. அது ஒரு கொடியைப் போல படர்ந்து பரவிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு ஆழமான புரிதல் நம்மில் நின்று வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பாகத்தான் உங்களின் இந்த பயணக் கட்டுரையை நான் பார்க்கிறேன். பொதுவாக நான் யாருடைய படைப்புகளையும் வாசித்து விமர்சித்ததும், கருத்துரைத்ததும் இல்லை. காரணம் அந்த அளவிற்கு நான் ஒரு தீவிர வாசகரல்ல.

ஆனால் எனக்குள் எழுத வேண்டுமென்ற ஒரு ஆர்வம் மட்டும் எப்போது நின்று நிதானமாக புகைந்து கொண்டே இருக்கும். அது எப்பொழுது, யாரால் அனைக்கக்கூடும் என்ற அபாயகரமான  கேள்விக்குப்  பக்கத்தில் இருந்து கொண்டிருப்பதை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், உங்களின் இந்த பயணக் கட்டுரை என்னை அழுத்தமான ‘குரலில்’ எழுது என்றழைப்பது போல உள்ளது. எனக்காக நான் எழுத வேண்டும். என் வாழ்க்கைக்குறிய நினைவுகளை சேமிக்க வேண்டும் என்ற புதிய எண்ணத்தின் வெளிபாடு அது. அந்த எண்ணம் உங்களின் இந்த பயணக் கட்டுரையின் தாக்கம்.

மிக மிக யதார்த்தமாக, இயல்பாக எழுதும் கட்டுரையில் இத்துணை ஆழமாக ஒரு உணர்வை பகிர முடியுமா என்ற கேள்விக்கு இப்பொழுது பதில் தேவை இல்லை. உங்களின் இந்த பயணத்தின் ஒவ்வொரு நாட்களும்  பணத்தால் அடையாத அழகை எழுத்துகள் மீட்டுக் கொடுப்பதாய் நான் உணர்கிறேன். பணமும், பகட்டும் தரக்கூடிய சொகுசை தாண்டி நுட்பமான ஒரு அழகை உங்களின் எழுத்து இந்த பயணத்தில் எழுதியுள்ளது. அது ஒரு படைப்பாளி மட்டுமே பார்க்கக்கூடிய அழகு. 12,000 ரூவாய் படகு வீடு தராத அனுபவத்தை 1,800 ரூவாய் அறை தந்துள்ளது உங்களது பயணத்தில். சுருக்கமாகச் சொல்லுவேண்டுமானால் எளிமையின் அழகு இந்தப் பயணம்.

இன்று நினைவுகளை, காட்சிகளை, வயதை ஒரு பிம்பமாகக் சேமித்துக் கொடுக்கும் எத்தனையோ அதி நவீன புகைப் பட கருவிகளுக்கு மத்தியில் இன்னமும் துரிதமாய் ஓர் அனுபவத்தைப் பதிவு செய்யும் வல்லமை எழுத்துக்கு மட்டுமே உண்டு என சிந்திக்கக்த் தூண்டுகிறது உங்களின் இந்த கட்டுரை. கண்களில் ஊடுறுவும் காட்சிகள் அவரவர் பார்வைக்கு ஏற்ப மனதில் ஒரு உரையை வளர்க்கிறது. அந்த உரையின்  உள்ளுணர்வை பகர்கிறது உங்களின் எழுத்து. நானும்கூட இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் அதில் முழுக்க முழுக்க நான் நானாகவே இருக்க வேண்டுமென்ற அவா இப்பொழுது என்னை அதிகம் ஆட்கொள்கிறது. என் பயணத்தில் நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை செய்ய வேண்டும். தனிமையாக மேற்கொள்ளும் பயணத்தில் வெறுமையைத் தாண்டி இருக்கும் அமைதி இந்த கட்டுரை முழுக்க படர்ந்திருக்கிறது.

இதுவரை உங்களின் பிற படைப்புகளில் இல்லாத ஒரு தாய்மை உணர்வின் வாசம் இக்கட்டுரையில் குறிப்பாக மனசலாயோ 10-ல் இருப்பதை உணர முடிந்தது. இது உங்களின் பிற படைப்புகளின் விட மேன்மையானதாக இருந்தது. ஒரு வேளை நான் உங்களின் எல்லா படைப்புகளையும் வாசிக்காதது இப்படிக் கூற காரணமாக இருக்கலாம்.

“நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை எனச் சொல்ல வாய்வரவில்லை. சட்டென கோபமாக “போ… போயி கூம்பிடு. என் கையில் மீன் இருக்கு. நான் வர முடியாது” என்றவர் என் கையில் சற்றுமுன் வாங்கியப் பூவைத் திணித்தார் செருப்பணியாத அவர் பாதங்கள் கோயில் வாசலில் இருந்த புறா எச்சங்களை மிதித்துக்கொண்டிருந்தன. தயங்கியபடி உள்ளே சென்றேன்.”

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இறைத்தன்மை மிக்க அந்தத் தாயின் நம்பிக்கையை உடைக்காமால் அவரது வேண்டுகோளை ஏற்று கோவிலுக்குள் நீங்கள் சென்றது எனக்கு அபாரமாக பட்டது. என் மனதில் பட்டதைக் கூறுகிறேன், அந்த ஒரு எண்ணத்தின் வெளிபாடு, அதுதான் இறைத்தன்மை என்பதாக அப்போது எனக்குப்பட்டது. யாருக்காகவும் எதையும், முக்கியமாக வாழ்க்கை நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க தயாரில்லாத பெரும்பான்மையானோருக்கு மத்தியில் யாரென்று தெரியாத ஒரு தாயின் நம்பிக்கைக்கு நீங்கள் செய்தது மிக மேன்மையானது.

நான் கொஞ்சம் உறுதியாகச் சொல்லவே மலிவான காலணியைக் கொடு என மலையாளத்தில் கடைக்காரனிடம் சொன்னார். கடைக்காரன் பொம்மைப் படம் போட்ட ஒரு காலணியை எடுத்து நீட்டவும், நான் தரமான காலணியை எடுத்துப்போடச் சொன்னேன். அவர் போட்டுப் பார்த்தார். நன்றாக இருக்கிறது என்றார். இனி அவர் மீண்டும் படகு பிடித்து வேறு நிறுத்தம் போகவேண்டும். சமைக்க வேண்டும். அதை அவர் மகன் விரும்பிச்சாப்பிடக்கூடும். நான் அவரைப் புறப்படச் சொன்னேன். அர்ச்சனை செய்த பூவை அவர் கையில் கொடுத்து “உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் ஆகும். இதை அவருக்காகச் செய்தேன்.” என்றேன்.

பயணக் கட்டுரையின் இறுதி பகுதியில் சொல்லப்பட்டுள்ள இந்த அனுபவமானது அதை எழுதிய உங்களை மிக அழமாகச் சொல்லியுள்ளது. நமக்கானவர்கள் எப்போது நம் பக்கத்தில், நம் வீட்டில் இருக்கிறார்கள் தினமும் நம்முடன் பேசுகிறார்கள் என்றில்லாமல், இந்த உலகின் எல்லா மூலைகளிலும் நமக்கானவர்கள் இருக்கிறார்கள். எங்கேயாவது, எப்போதாவது அவர்களைப் பார்க்கும் ஒரு சில தருணத்தில்தான் இதுபோன்ற அழகான அனுபவங்கள் நம்மைக் கடக்கின்றன.

பவித்திரா

(Visited 323 times, 1 visits today)