மலேசிய ‘டான் குயிக்ஸாட்’

don.1மதியழகன் வல்லினம் குறித்து கூறியுள்ள அவதூறுகள் என் பார்வைக்கு வந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அவரது அறிவின் வளத்தை படம்பிடித்துக்காட்டியபின்னர் (http://vallinam.com.my/navin/?cat=32) மீண்டும் தன் வெற்றுக்கூச்சலைத் தொடங்கியுள்ளார் என நினைக்கிறேன். அவற்றை முழுமையாக வாசித்தேன். அவற்றில் பாதி அவதூறுகள் வல்லினத்தின் மீதும், மீதி என் மீதும் என் நண்பர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன.

மதியழகனுக்கு பதில் சொல்வது கொஞ்சம் சலிப்பான செயல்தான். சரியாகச் சொல்ல வேண்டுமானால் ‘டான் குயிக்ஸாட்’ எனும் ஸ்பெயின் நாவலில் வரும் மையப்பாத்திரம் அவர். அப்பாத்திரத்தில் வருபவன் திடீரென ஓர் இரவில் தன்னை ஒரு வீரனாக நினைத்துக்கொள்வான். தன்னிடம் உள்ள துருப்பிடித்த கத்தியுடன் ஒடிசலான குதிரையில் ஏறி ஊர் முழுதும் திரிவான். விளக்குக் கம்பம் அவனுக்கு ஒரு வீரனாகத் தெரியும். அதனுடன் சண்டையிட்டு மோதிக்கொண்டு காயமடைவான். துணி துவைத்துவிட்டு கழுதையுடன் வருபவர்களை போர்வீரர்கள் என நினைத்து சண்டைக்குச் செல்வான். இதனால் பல இடங்களில் அடிவாங்குவான். ஆனால் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு ‘ஒரு வீரனுக்கு இதெல்லாம் சாதாரணம்’ என தொடர்ந்து செயல்படுவான். நாவலை வாசிக்கின்ற நமக்கு முதலில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் உற்சாகம் பிறக்கும். ஒரு வீரனுக்கான எந்தத் தகுதியும் இல்லாமல் உருவாகும் அவனது செயல்களின் பிடிவாதம் உற்சாகமாக நாவலை வாசிக்க வைக்கும். ஆனால் வாசிக்க வாசிக்க ‘டான் குயிக்ஸாட்’ தன் உள்ளுணர்வில் மிகநிச்சயமாக தன்னை வீரனாக நினைக்கிறான் என்பதை எண்ணும்போது பரிதாபம் தோன்றும். அவனை உசுப்பிவிட்டு அவன் பைத்தியக்காரத்தனத்தை ரசிக்கும் நாவலின் பிற கதாபாத்திரங்கள் மேல் கோபம் வரும். மதியழகனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுதான். பாவம்.

அவர் தன்னை எழுத்தாளர் என நம்பத் தொடங்கிவிட்டார். அதற்காக எல்லா சாகசமும் செய்துக்காட்டுகிறார். வல்லினத்தில் 2016இல் நடந்த சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற பிறகு மேலும் ஒரு சிறுகதைப் போட்டியில் பங்குபெற்றார். பரிசு கிடைக்கவில்லை. பின்னர் குறுநாவல் பதிப்பு திட்டத்தில் பங்குபெற்றார். வல்லினம் பதிப்பிக்கும் தரத்தில் அந்தக் குறுநாவல் இல்லை. அடுத்து என்ன செய்வது? நிராகரித்தவர்களை நிராகரிப்பதுதானே வழி. நீ யார் என்னை நிராகரிக்க எனக்கேட்பதன் வழியும் உன்னைவிட நான் பெரியவன் எனக்கூறிக் கொள்வதன்வழியும் பின்னர் தனக்கு பரிசு கிடைக்காத அவமானத்தில் ஏற்பாட்டுக்குழுவை தூற்றுவதால் முடிந்தால் தனிப்பட்ட அவதூறு செய்வதாலும்தானே அந்த அவமானத்தை சமன் செய்யமுடியும்? (முக்கியக்குறிப்பு: இவ்வளவு குறையுள்ள வல்லினத்திற்கு மதியழகன் ஏன் 2018 வரை  படைப்புகளை அனுப்பினார் என்பது பற்றியெல்லாம் யோசித்துக் குழம்ப வேண்டாம். மேலும் இவ்வளவு குறையுள்ள வல்லினத்தில் பெற்ற பரிசுத் தொகையை நூறு நூறாக கொடுப்பதாகச் சொன்ன அவரது வீரசபதமெல்லாம் எனக்குப் பொருட்டில்லை. டான் குயிக்ஸாட் எதையும் செய்வான். எப்படியும் செய்வான். தொடர்ந்து பிறர் பார்வைக்கு வீரனாக இருப்பது மட்டுமே அவன் லட்சியம். அதற்காக எந்தக் கூத்தும் செய்வான். )

இந்நிலையில் மதியழகன் எழுதியுள்ள குறிப்புகளில் என்னைப் பற்றிய வசைகளுக்கு எவ்வித பதிலும் நான் சொல்லப்போவதில்லை. அவர் தாராளமாக அதை தொடரலாம். டான் குயிக்ஸாட் உளவியல் சிக்கலை நான் நன்கு அறிவேன். மேலும் டான் குயிக்ஸாட் தன்னை ஒரு வீரன் என்பதை தானே நம்ப மறுத்தால் அவன் வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும்.

ஆனால் வல்லினம் குறித்த அவதூறுகளுக்குப் பதில் சொல்லியாக  வேண்டியுள்ளது. அதற்கு காரணம் உண்டு. வல்லினம் பிற அமைப்புகளிடம் முன்வைக்கும் கருத்துகளுக்கு மாற்றாக அந்த அவதூறுகள் இருப்பதால் மட்டுமே இதை எழுத வேண்டியுள்ளது. மதியழகன் கூறியுள்ள கருத்துகளும் அதற்கான பதில்களும் கீழே தெளிவாகத்  தரப்பட்டுள்ளன. குழப்பத்தில் உள்ளவர்கள் தெளிவுபெறலாம்.

வல்லினம் 100க்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் 20,000 ரிங்கிட் கொடுத்தார்கள். இது குறித்து நவம்பர் 2018 வல்லினத்தில் பதிவாகியுள்ளது.

முதலில் இந்தத் தகவலே பிழையானது. தேசிய நில திதி கூட்டுறவு சங்கம் 2017இல் வல்லினம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘வல்லினம் 100’ களஞ்சிய முயற்சியைக் கண்டு பாராட்டி, அதில் அடங்கியுள்ள எங்களின் முன்னெடுப்பில் நம்பிக்கை வைத்து, அவ்வமைப்பின் மூலமாக 2018இன் இறுதி கலை இலக்கிய விழாவுக்கு 20,000 வெள்ளி நிதியுதவி வழங்கியது. அதாவது 2018இல் வெளியிடப்பட்ட 10 நூல்களுக்கும் 4 ஆவணப்படங்களுக்குமான நன்கொடை அது. அதையொட்டி அவர்கள் வழங்கிய கடிதத்திலேயே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நவம்பர் 2018 கட்டுரையில் அதைத்தான் குறிப்பிட்டுள்ளோம். அறிய விரும்புபவர்கள் வாசிக்கலாம்: (http://vallinam.com.my/version2/?p=5837)

வல்லினத்தில் வெளிவந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ‘வல்லினம் 100′ என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் போட்டார்கள்.

இதுவும் தவறானது. வல்லினம் 100 களஞ்சியத்தில் 50% படைப்புகள் இந்தக் களஞ்சியத்திற்கென்றே எழுதப்பட்டவை. அனைத்துமே வல்லினத்தில் வெளிவந்தவை அல்ல. 2017 செப்டம்பருக்குப் பின் வல்லினம் 100இல் படைப்புகள் வல்லின அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

அதில் என்னுடைய சிறுகதையும் ஒன்று உள்ளது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற 11 சிறுகதைகளில் அதுவும் ஒன்று. அந்த புத்தகத்தின் மூலம் வல்லினமும் நவீனும் ஈட்டிய பல ஆயிரம் வெள்ளி பணத்துக்குரிய ராயல்டி தொகையை எந்த எழுத்தாளர்களுக்கும் இப்போது வரை கொடுக்கவில்லை.

இதுவும் அவதூறான கருத்துதான். வல்லினம் 100க்காக பல படைப்பாளிகளிடம்  படைப்புகள் பெறப்பட்டன. சில குறிப்பிட்ட தலைப்புகளை வழங்கி ஆராய்ந்து கட்டுரை எழுதவும் பணிக்கப்பட்டது. இவ்வாறு கேட்டு எழுதப் பணிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டுரைக்கும் 250 ரிங்கிட் நூல் வெளிவரும் முன்பே வழங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, மதியழகன் பங்குபெற்ற சிறுகதைப் போட்டியின் அறிவிப்பில் படைப்புகளை நூலாக்கம் செய்ய வல்லினம் முழு உரிமை பெற்றிருக்கும் என்று மிகத் தெளிவாகவே அதன் அறிவிப்பில் கூறியுள்ளோம். போட்டியில் பங்குபெற்று பரிசு வழங்கப்பட்டபின்னர், அச்சிறுகதையின் உரிமம் வல்லினத்திற்கு உரியதாக இருக்கும்பட்சத்தில் அக்கதையை எத்தனை முறை எங்கும் பதிப்பிக்க வல்லினம் பதிப்பகத்திற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ‘வல்லினம் 100’ நூலில் வெற்றிபெற்ற கதைகள் சேர்க்கப்பட்டன. ஒருவேளை மதியழகன் விதிமுறைகளை முழுமையாக வாசிக்காமல் இருந்திருக்கலாம். அதற்கு வல்லினம் பொறுப்பேற்க முடியாது. உண்மையை அறிய விரும்புபவர்கள் வாசிக்கலாம்: (http://vallinam.com.my/version2/?p=2928)

அந்த புத்தகத்தின் மூலம் பெறப்பட்ட இருபதாயிரம் ரிங்கிட் உட்பட எந்த விற்பனை கணக்கும் காட்டப்படவில்லை.

வல்லினம் பதிவு பெறாத ஓர் இலக்கியக்குழு. எனவே எங்கள் செயல்பாட்டுக்காக யாரிடமிருந்தெல்லாம் பண உதவி பெற்றோமோ, அவர்களுக்கு நிகழ்ச்சி முடிந்து முழு கணக்கறிக்கையை சமர்ப்பித்தோம். பூவன், சுவாமி பிரம்மானந்தா, டாக்டர் சண்முக சிவா போன்ற தனி மனிதர்களுக்கும், மை ஸ்கில்ஸ், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் வல்லினத்தின் இறுதி கலை இலக்கிய விழாவின் முழு வரவு செலவு விவரங்கள் அனுப்பப்பட்டன. அதற்குப் பிறகு நடந்த ஆசிரியர்களுக்கான சிறுகதை போட்டியிலும் இதையே கடைப்பிடித்தோம். (எப்போதுமே அப்படித்தான்) நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்குள் வரவு – செலவுக் கணக்கு தெளிவாக வழங்கப்படும். அதே சமயம் கலை இலக்கிய விழா 10இல் வெளியிடப்பட்ட நூல்களுக்கும் 20% ராயல்டி நூல் வெளியீட்டுக்கு முன்னமே நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

வல்லினம் இலங்கை, தமிழகம், சிங்கப்பூரில் வல்லினம் 100ஐ விற்று சம்பாதித்தது.

அப்படிச் செய்வது தவறில்லைதான். எப்படியானாலும் நூல் ஒரு பண்டம். பண்டத்தை விற்பதுதானே முறை. ஆனால் உண்மை வேறாக இருக்கும்போது விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. தமிழகத்தில் உள்ள ‘யாவரும் பதிப்பகத்திடம்’ சுமார் 30 நூல்கள் இலவசமாகவே வழங்கப்பட்டது. இதன் முக்கிய காரணம் மலேசியாவின் சமகால இலக்கியம் அங்குள்ள வாசகர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே. அதேபோல சிங்கையில் நண்பர் ஷாநவாஸ் கேட்டுக்கொண்டதின் பேரில் 50 நூல்களை அனுப்பி வைத்தோம். அன்பின் பேரில் மலேசியச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (Children of Darkness) சிங்கையின் மொழிப்பெயர்ப்பாளருக்கு விற்பனையான பணத்தை அப்படியே ஷாநவாஸ் மூலம் கொடுக்கப் பணித்தோம். ஈழத்தில் மலேசிய பணம் 30 ரிங்கிட்டுக்கு 70 ரிங்கிட் மதிப்புள்ள நூல்களை அறிமுகக் கூட்டங்களில் விற்பனைக்கு வைத்தோம். இதை எழுதும்போது அந்தந்த நபர்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லக் காரணம் உண்டு. என்னுடன் முரண்பட்டிருக்கும் தோழர்கள் பலருக்கும் அவர்களும் நண்பர்களே. தாராளமாக விசாரித்துக்கொள்ளலாம். பொதுவில் எவ்வளவு வசைபாடினாலும் அந்தரங்கத்தில் வல்லினம் பண லாபம் பொருட்டு மலேசிய இலக்கியத்தை நகர்த்தவில்லை என்பதை அறிந்திருக்கக்கூடும். எல்லோர் மனதிலும் உண்மை என ஒன்றிருக்கும் அல்லவா?

சரி. இப்போது பலரும் தெளிவடைந்திருக்கலாம். இத்தனை தெளிவாக விளக்கியபிறகும் வசை பாடுபவர்களின் குரல்கள் ஓயுமா என்றால் நிச்சயம் ஓயாது. ஆகவே இந்த விளக்கங்கள் அவதூறுகள் பரப்புவதை நோக்கமாக கொண்டவர்களுக்கும் அந்த அவதூறுகளில் மகிழ்ந்து முதுகுசொறிந்து மகிழ்ந்து கொள்பவர்களுக்கும் பயன்படாது என்பதை அறிவேன்.  இந்த அவதூறு எழுந்த பிறகு அதன் உண்மையை அறியமுடியாமல் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே.

நன்றி.

(Visited 499 times, 1 visits today)