ஒரு மின்ன‌ஞ்ச‌லும்… த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!

மின்ன‌ஞ்ச‌லுக்கு முன்பு:

பொதுவாக‌ உண‌வுக‌ள் குறித்த த‌டைக‌ள் என்னிட‌ம் பெரிதாக‌ இருந்த‌தில்லை. என‌து ஜீர‌ண உறுப்புக‌ள் மிகுந்த‌ க‌றாரான‌வை. என் உட‌லுக்குத் தேவையில்லாத‌ உணவு என்றால் நான் உண்ட‌ அடுத்த‌ நிமிட‌மே ‘வெளியே போ!’ என‌ வ‌ந்த‌ வாச‌ல் வ‌ழியே க‌ழுத்தைப் பிடித்து வெளியே த‌ள்ளிவிடும். அதை நான் பெரும்பாலும் த‌டுப்ப‌தில்லை.

க‌ம்ப‌த்தில் வ‌சித்த‌போது என் அண்டைவீட்டுக்கார‌ர் வேட்டையாடுவ‌தை தொழிலாக‌க் கொண்டிருந்த‌தால் உடும்பு, அலுங்கு, காட்டுப்ப‌ன்றி போன்ற‌வை அவ்வ‌ப்போது சாப்பிட‌க்கிடைக்கும். இவ‌ற்றையெல்லாம் சாப்பிட‌ முடிந்த‌ என்னால் எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ஆட்டிறைச்சியைச் சாப்பிட‌ முடிந்த‌தில்லை. உள்ளே நுழைந்த‌ சிறிது நேர‌த்திலெல்லாம் அங்கே இங்கே முட்டி மோதி நெஞ்சு க‌ரிப்பெடுத்து வெளியேறிவிடும்.

ஒருமுறை ம‌லேசியாவிலிருந்து ல‌ண்ட‌னுக்குச் செல்ல ‌’அபு டாபி’ விமான‌ நிலைய‌த்தில் இற‌ங்கி ல‌ண்ட‌னுக்குச் செல்லும் விமான‌த்திற்கு மாறிய‌போது ப‌சி வாட்டி எடுத்த‌து. உண‌வுக்காக‌க் காத்துக்கொண்டிருந்த‌ போது சிரித்துக் கொண்டே உண‌வு கொடுத்த‌ விமான‌ப் ப‌ணிப்பெண்ணை ர‌சிக்க‌க் கூட‌ அவ‌காச‌ம் கொடுக்காம‌ல் சிவ‌ந்திருந்த இறைச்சித் துண்டை எடுத்து க‌டித்தேன். அதுவ‌ரை என் நாவு உண‌ராத‌ ருசி. ப‌க்க‌த்தில் இருந்த‌ ப‌யணியிட‌ம் இது என்ன‌ இறைச்சி என்று கேட்டேன். மாட்டிறைச்சி என்றார். உட‌னே சிவ‌பெருமான் சூழ‌த்தை எடுத்து வ‌ந்து என் க‌ண்க‌ளில் ந‌ச்சு ந‌ச்சென்று குத்துவ‌து போல‌ உண‌ர்ந்தேன். ப‌யந்து போய் க‌ண்க‌ளை மூடினால் அம்மா அப்ப‌த்திருப்பியோடு நாக்கைக் க‌டித்த‌ப‌டி மிர‌ட்டினார். க‌ண்க‌ளை மூட‌வும் முடியாம‌ல் திற‌க்க‌வும் முடியாம‌ல் திண்டாடினாலும் மாட்டிறைச்சி வெகு சுல‌ப‌மாக‌ அம்மாவையும் சிவ‌பெருமானையும் வென்றிருந்த‌து.

பொதுவாக‌ என் உண‌வு ப‌ழ‌க்க‌த்தோடு எப்போதுமே ஒத்துப்போகாத‌வ‌ர் அம்மா. என‌து உண‌வுப்ப‌ழ‌க்க‌ம் ம‌னித‌த்த‌ன்மைய‌ற்ற‌து என‌ விம‌ர்சிப்பார். அவை உண்ப‌த‌ற்காக‌ப் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌த‌ல்ல‌ என‌ வாதிடுவார். நானும் விடாம‌ல் ‘கோழி, மீன் ம‌ட்டும் சாப்பிடுவ‌த‌ற்குப் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌தா என்ன‌? நீங்க‌ள் விடுங்க‌ள் பின்ன‌ர் நான் விடுகிறேன்’ என்று நாய‌க‌ன் ப‌ட‌வ‌ச‌ன‌மெல்லாம் பேசுவேன். ம‌ற்ற‌தெல்லாம் ப‌ரவாயில்லை ‘மாடு சிவ‌னின் வாக‌ன‌ம் அதையெல்லாம் சாப்பிட்டுவிடாதே’ என்பார். நான் விடுவேனா என்ன‌ சேவ‌ல்கூட‌த்தான் முருக‌னின் கொடியில் உள்ள‌து அதையும் விட்டுவிட‌லாம் என்பேன். ம‌த‌ம் கொண்டுள்ள‌ கீழான‌ ந‌ம்பிக்கைக‌ள் மீது நான் க‌ட்டுப்படாத‌தை அம்மா அறிவார். ச‌ட்டென‌ சென்டிமென்டாக‌த் தாக்க‌த் தொட‌ங்குவார். “டேய்… தாயில்லாத‌ குழ‌ந்தைக்கு ப‌சுதாண்டா பால் த‌ருது, மாடு தாய்க்கு நிக‌ரான‌து அதை உண்ண‌லாமா?” என்பார் உருக்க‌மாக. “அப்ப‌டியானால் நான் காளையைச் சாப்பிடுகிறேன்” என்பேன். அம்மா த‌லையில் அடித்துக்கொள்வார்.

நான் அம்மாவிட‌ம் வாதிடுவேனே த‌விர‌ மாட்டிறைச்சியைச் சாப்பிட்டுப்பார்க்கும் எண்ணம் என‌க்குத் தோன்றிய‌தில்லை. மாட்டைவிட‌ அள‌வில் சிறிதாக‌ இருக்கும் ஆடே என் உட‌லுக்கு ஒத்துக்கொள்ளாத‌தால் மாடு உள்ளே சென்றால் ஏதும் அட்ட‌காச‌ம் செய்யும் என‌ ஒதுங்கியே இருந்தேன். ஆனால் முத‌ன்முறையாக‌ மாட்டிறைச்சி உள்ளே சென்ற‌ பிற‌குதான் நான் என் உண‌வுப் ப‌ழ‌க்க‌த்துக்கான‌ த‌த்துவ‌த்தைக் க‌ண்ட‌டைந்தேன். பொதுவாக‌ ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ள் ம‌ன‌தின் ஆழ‌த்தில் இருக்கும் குற்ற‌ உணர்ச்சியைத் த‌ங்க‌ளுக்கே தெரியாம‌ல் இருக்க‌, புதிதாக‌க் க‌ண்ட‌டையும் த‌த்துவ‌ங்க‌ளைப் போல் நானும் புதிய‌த் த‌த்துவ‌த்தைக் க‌ண்ட‌டைந்தேன்.

அத‌ன‌டிப்ப‌டையில் உண‌வு என்ப‌து ம‌னித‌ர்க‌ளின் தேர்வு. அவ‌ர‌வ‌ர் ந‌ம்பிக்கைக‌ள், விருப்ப‌ங்க‌ள், சீதோசன‌ நிலைக‌ள், உட‌ல் தேவைக‌ள் என‌ சூழ‌லுக்கு ஏற்ப‌வே உண‌வு ப‌ழ‌க்க‌ங்க‌ள் அமைகிற‌து. எலியைக் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்கும் ம‌க்க‌ள் இருக்கும் உல‌கில்தான் எலியை உண்ப‌வ‌ர்க‌ளும் வாழ்கிறார்க‌ள். கோழி இறைச்சியைச் சாப்பிடுவ‌து அருவ‌ருக்க‌த் த‌க்க‌து என‌ நினைக்கும் ஓர் இன‌க்குழு இருந்தால் ந‌ம்மை எவ்வாறு அவ‌ர்க‌ள் க‌ணிப்பார்க‌ள்! என்ப‌ன‌ போன்ற‌ தொட‌ர் எண்ண‌ங்க‌ள் ல‌ண்ட‌ன் ம‌ற்றும் ப்ரான்ஸில் நான் சுத‌ந்திர‌மாக‌ வ‌யிற்றை நிர‌ப்ப‌ வ‌ழிய‌மைத்த‌ன‌.

மின்ன‌ஞ்ச‌லுக்கு பின்பு:

என‌க்கு வ‌ரும் ‘ஃபோர்வ‌ர்ட்’ மின்ன‌ஞ்ச‌ல்க‌ளைத் திற‌ந்து பார்ப்ப‌தில் என‌க்கு எப்போதும் பெரும் ச‌லிப்பு ஏற்ப‌டுவ‌துண்டு. அதிலும் குழ‌ந்தைக‌ளின் வித‌வித‌மான‌ அழ‌குப்ப‌ட‌ங்க‌ளை என‌க்கு அனுப்புப‌வ‌ர்க‌ள்தான் அதிக‌ம். என‌க்கு அதுபோன்ற‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்தால் க‌டுப்பேறும். வெள்ளையாக‌, கொழுகொழுவென‌ இருக்கும் உருவ‌ங்க‌ள் ம‌ட்டும்தான் குழ‌ந்தைக‌ள் போல‌ அந்த‌ப் ப‌ட‌ங்க‌ள் போதிக்கும். அதுபோன்ற‌ப‌ட‌ங்க‌ளை க‌ணினி முக‌ப்பில் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளின் பிள்ளைப் பாச‌த்தை நான் எப்போதுமே பெரிதாக‌ப் பொருட்ப‌டுத்துவ‌தில்லை. த‌ங்க‌ளிட‌ம் இல்லாத‌ ஒரு வ‌டிவால் ஈர்க்க‌ப்ப‌ட்ட‌ வெற்று ஏக்க‌மாக‌ என‌க்குப் ப‌டும். ஆனால் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் அண்மையில் அனுப்பிய‌ ஒரு குழ‌ந்தையின் ப‌ட‌ மின்ன‌ஞ்ச‌ல் என்னை திடுக்கிட‌ வைத்த‌து.

அதில்… கோழியை ஆய்வ‌து போல‌ குழ‌ந்தைக‌ள் ஆய‌ப்ப‌ட்டு உண‌வாக‌ச் ச‌மைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். குழ‌ந்தைக‌ளின் மூளைக‌ள் புட்டிக‌ளில் ப‌த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அந்த‌ ப‌ட‌ங்க‌ளோடு பின்வ‌ருமாறு செய்தி இருந்த‌து.

‘நீங்க‌ள் பார்த்துக்கொண்டிருப்ப‌து நிஜ‌ம். ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டாம். இது ஜ‌ப்பானின் பிர‌ப‌ல‌மான‌ உண‌வு. ஜ‌ப்பான்ம‌ருத்துவ‌ ம‌னையில் இற‌ந்து போன‌ குழ‌ந்தைக‌ளை 10000 லிருந்து 12000 யென் வ‌ரை விலை கொடுத்து வாங்க‌லாம். அதிலும் வாட்ட‌ப்ப‌ட்ட‌ சிசுக்க‌ளின் இறைச்சி மிக‌வும் பிர‌ப‌ல‌ம். மிக‌வும் க‌வ‌லைக்கிட‌மான‌ செய்தி இது.’

அந்த‌ப் ப‌ட‌க்காட்சியின் அத்த‌னை கொடூர‌ங்க‌ளையும் தாண்டி அதை ப‌ட‌மெடுத்துக் கொண்டிருக்கும் ப‌ட‌ப்பிடிப்பாள‌ரைத்தான் நான் கூர்ந்து நோக்கிய‌ப‌டி இருந்தேன். ஒரு டாக்குமென்ட‌ரியைப் ப‌ட‌மாக்குவ‌து போல‌ சீரிய‌சாக‌க் காண‌ப்ப‌ட்டார். என‌க்கு 1994 ல் சூடான் வ‌றுமையைப் ப‌ட‌ம்பிடித்து புளிட்ச‌ர் ப‌ரிசை “Pulitzer Prize” வென்ற‌ கெவின் கெர்த‌ர் (Kevin Carter) ச‌ட்டென‌ நினைவுக்கு வ‌ந்தார். ப‌சி கொடுமையில் இன்னும் ஒரு கிலோ மீட்ட‌ர் தொலைவில் இருக்கும் உணவு கிட‌ங்குக்குத் த‌வ‌ழ்ந்துப் போய்கொண்டிருக்கும் ஒரு குழ‌ந்தை எப்போது இற‌க்கும் என‌ பிண‌ந்தின்னி க‌ழுகு காத்திருக்கிற‌து. இந்த‌க் காட்சியைப் ப‌ட‌மாக்கிய‌ கெவின், நிழ‌ல்ப‌ட‌ம் எடுத்த‌தோடு த‌ன் வேலையைப் பார்த்துக்கொண்டு கிள‌ம்பிவிட்டார். அவ‌ர் எடுத்த‌ நிழ‌ல்ப‌ட‌ம் பெரும் ச‌ர்ச்சைக்குள்ளாக‌ எல்லோருக்குமே அந்த‌க் குழ‌ந்தை என்ன‌ ஆன‌து என்ப‌துதான் கேள்வியாக‌ இருந்த‌து. கெவினுக்கும் அத‌ற்கான‌ ப‌தில் தெரிய‌வில்லை. இந்த‌க் கேள்வி அவ‌ரை ப‌ல‌மாக‌த் துளைக்க‌ ம‌ன‌ உளைச்ச‌லால் த‌ற்கொலை செய்துகொண்டு மாண்டார்.

க‌லைக்கும் வாழ்வுக்குமான‌ பிணைப்பை கெவின் இற‌க்கும் த‌ருண‌த்தில் அறிந்திருக்க‌லாம். அந்நேர‌த்தில் அவ‌ரை இத்த‌னை நாட்க‌ள் காப்பாற்றி வ‌ந்த‌ எல்லா த‌த்துவ‌ங்க‌ளும் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கும். எந்த‌த் த‌த்துவ‌ங்க‌ளாலும் உண்மையை எதிர்க்கொள்ள‌ முடியாத‌தை அவ‌ர் அந்த‌ நிமிட‌ம் அறிந்திருப்பார். அவை அவ்வ‌ப்போது வாழ்வின் இறுகிய‌ப் பிடியில் இருந்து த‌ப்பித்து ஓட‌ ம‌ட்டுமே உத‌வுகின்ற‌ன‌ எனும் உண்மையே அவ‌ரை முத‌லில் கொன்றிருக்கும்.

இதை எழுதும்போது அம்மா இந்த‌ மின்ன‌ஞ்ச‌லை பார்க்காத‌வ‌ரை த‌ப்பித்தோம் என‌ ச‌மாதான‌ம் செய்து கொள்கிறேன். அப்ப‌டி அவ‌ர் பார்த்துவிடும் த‌ருண‌த்தில் எழுப்ப‌ப்ப‌டும் கேள்விக‌ள் என்னுள் அச‌ரீரியாய் ஒலிக்கின்ற‌ன‌. உண‌வு தொட‌ர்பாக‌ நான் உருவாக்கிய‌ எல்லா த‌த்துவ‌ங்க‌ளும் கெவின் போல‌ த‌ற்கொலை செய்துகொள்ள‌த் த‌யாராகின்ற‌ன‌.

(Visited 295 times, 1 visits today)

One thought on “ஒரு மின்ன‌ஞ்ச‌லும்… த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *