பேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)

ஓர் எழுத்தாளனின் சுவைக்கேற்ப உருவாவதல்ல நாவல். அது எழுத்துகளோடு வாழபோகும் ஒரு வாசகனின் குறுகிய கால குடும்பம். அவன் வெளியேயும் உள்ளேயும் நின்று கதாபத்திரங்களோடு பயணிக்கப் போகிறவன். அவனே அந்த கதைக்கு நாயகனாகவும் மாறலாம் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுக்கலாம். ஆனால், எழுத்தாளன் என்பவன் தன் கதையைக் கற்பனையாகவும் அல்லது உண்மையைக் கற்பனை சுவையோடு ததும்ப சமைப்பதே ஆகும். தான் பார்த்த, படித்த, அனுபவித்த எல்லாவற்றையும் வாசகனுக்கு அதே உணர்ச்சிகளோடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது நாவலின் தனிச் சிறப்பு.

ம. நவீன் அவர்களின் இந்த பேய்ச்சி நாவல் எல்லா இடங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறது. வரலாற்று ஆவணங்களைப் பத்திரப்படுத்திய நாவலாசிரியர், மனிதர்களின் சொற்களை; அந்தந்த காலக்கட்டங்களில் திரிந்த வட்டார வழக்குகளை, உணர்வு மேலோங்கிய நிலைகளில், உணர்ச்சி வசப்படும் தருணங்களில், என அத்துனையையும் ஒளிவு மறைவு இல்லாமல் அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருப்பது நாவலாசிரியரின் தனிச்சிறப்பு.

தமிழ்நாட்டில் இருந்து மலாயாவுக்கு வந்திறங்கிய தமிழர்களின் நிலையை, நாவலாசிரியர் பக்கத்தில் இருந்து குறிப்பெடுத்துத் தருவது எதிர்கால வாசகர்களுக்குக் கண்களில் குருதியை வரவைக்கலாம்.

நாத்திகத்தையும் ஆத்திகத்தையும் பேசும் பேய்ச்சி நாவல் எந்த சமயத்தையும், மதத்தையும், சாதியையும் – உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை. அந்தளவில் நாவலாசிரியர் அனைவரின் நன்மதிப்பையும் பெறுகிறார். என்னத்தான் இளரத்தம் நாத்திகத்தில் பேரார்வம் பெற்றிருந்தாலும் முதுமை காலத்தில் ஆத்திகத்தில் நிம்மதி தேடுவதை மறுப்பதற்கில்லை என்ற வாதத்திற்கு எடுத்துக் காட்டாகவும் சம்புவை கொண்டு வந்து நிறுத்துகிறார். மணியத்தின் எண்ணங்களில் விளையாடும் நாவலாசிரியர், அவரை சில வேளைகளில் ஆத்திகம் பக்கம் கொண்டு சென்று நிழல் போல் காட்டி இருப்பது இன்றைய மனிதர்களின் உணர்வுகளை படித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. நாத்திகத்தை எதிர்த்தோ அல்லது ஆத்திகத்தை ஆதரித்தோ இந்நாவல் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்றாலும் விமர்சனத்துக்கு உட்பட்டதே.

பெண் என்பவள் மென்மையானவள் என்கிற விலங்கை வன்மை என்னும் ஆயுதம் கொண்டு உடைக்கிறார் நாவலாசிரியர் ம. நவீன். ஓலம்மா தன் மகளிடம் வேண்டும் நிலையில் மட்டும் கோபத்தைக் காட்டினாலும், பெயரன் அப்போயிடம் அதை தொட்டுக்க ஊறுகாய் போல காட்டியிருக்கிறாள். சமூகத்தின் மேலுல்ல அக்கரையின் கரணியமாக, சினத்தின் உச்சிவரை செல்லவும் அவள் தயாராக இருக்கிறாள். மதுக்கடைக்குச் சென்று சின்னி மீது சபலமடையும் குடும்பத் தலைவன்களை பேய்ச்சி ஆத்தாவாக மாறி கண்டிக்கிறாள். கணவன் மணியம், சின்னியிடம் காம போதைக்கு அடிமையாகி போனதற்காக தானே நஞ்சை காக்கும் பாம்பாகி கடிக்கிறாள். சின்னிக்கு தானே நீதிபதியாகி காளியம்மன் போல தண்டனையளிக்கிறாள்.

இயற்கை அன்னையாக மாறும் ஓலம்மா, சேவல், பெட்டை, குஞ்சுகள், ஆங்சாகள், செடிகொடிகள், இரம்புத்தான், வாழைமரம் போன்றவற்றை பராமறிக்கிறாள். அதே இயற்கை அன்னை, அவற்றுக்கு ஆபத்து வரும் வேளைகளில் தானே எமனாவது போல எரித்தும், அடித்தும், வெட்டியும் கொலை செய்கிறாள்.

பல எழுத்தாளர்களின் எழுத்து வரம்புக்கு உட்பட்ட நாவலாக இல்லாமல் அடிமட்ட பாமர மக்களின் வாழ்க்கை முறையை அப்படியே, எந்த பலுக்கலும் இல்லாமல், ஒழுக்கம் வேண்டி நீக்காமலும், கொச்சை தன்மையை படரவிட்டிருக்கிறார் நாவலாசிரியர். தொலைக்காட்சி பெட்டி, வானொலி, தொலைபேசி ஆகியவை அதிகம் ஆதிக்கம் செய்யாத காலத்தில், கூடல், விரைப்பு, விரிப்பு, தொடை, மார்பு, மயிர், அழுத்தம், என இரப்பர் தோட்டத்து வாழ்க்கைக்குள் கொண்டு சென்று பச்சையாக படம் போட்டுக் காட்டுகிறார். இது எதிர்காலத்து வாசகனுக்கு இலகுவாக புரியும்படி எளிய நடையில் இருப்பதால் பரம்பரையைப் பற்றி தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும்.

முனியம்மா சின்ன பிள்ளையாய் இருக்கும்போது அவளுக்காக ஓலம்மா மரவள்ளி இலை குச்சியில் சங்கிலி செய்து போட்டு விடும் காட்சி – என்னையும் ஒரு நிமயம் சிறுவன் காலத்திற்கு கைப்பிடித்துக் கூட்டிச் சென்றார் நாவலாசிரியர். பக்கத்து வீட்டுப் பாட்டியும், அம்மாவும் நானும் செம்மனை காட்டிற்குள் மட்டை வெட்ட போகும் போது, சில மூலிகைச் செடிகளைக் காட்டுவார் பாட்டி. அது போலவே அப்போய்க்குப் பொட்டை இராமசாமி வீட்டுத் தோட்டத்தில் சொல்வது எங்களைப் போன்ற இளைஞர்களின் கைகளில் இந்த நாவல் கிடைத்த பரிசு.

எல்லா நிலைகளிலும் நன்றி மறவாத நாய் தமிழர்களோடு வந்திருக்கும் வரலாறு சங்க இலக்கியங்களிலும் பேசப்பட்டிருந்தாலும், கருப்பன் தனி நன்மதிப்பைப் பெறுகிறான். முனியம்மா வந்தால் வீட்டிற்குள் வரவே சங்கடப்படும் கருப்பன் அவள் இல்லாத போது உரிமையாளன் குமரனைத் தேடி அறைவரை செல்லுவது அதன் மேல் அன்பை அதிகப்படுத்துகிறது.

கோப்பேரன் காத்தாயி இருவரின் தொடக்கத்தை நாவலின் கதை பின்னலாக இல்லாமல் மூலமாக வரைத்திருக்கும் நாவலாசிரியர் தமிழ்நாட்டிற்கும் மலாயாவிற்கும் இடையே இருக்கும் பிறப்பின் இரகசியத்தை கண்டறிந்து நெடி மாறாமல் தூவி சென்றிருக்கிறார்.

தண்டல், சீன முதலாளி, நிலத்து உரிமையாளன், குடித்தவன், சின்னி, இராமசாமி, மணியம் போன்றவர்களுக்கு பேய்ச்சியாக இருந்து தண்டனை வழங்கிய நாவலாசிரியர் குற்றத்திற்கு காரணமாகிய ஆசோவை பழிவாங்காமல் மறைத்து விட்டாரே என்கிற குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது.

இரப்பர் தோட்ட பாட்டாளிகளின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக வாரம் இருமுறை திரைக்கட்டி படம் ஓட்டுவது, இயக்கங்களில் இணைந்து சேவையாற்றுவது, பரப்புரைகள், மொழிப்பெயர்பாளர்கள், ஆசிரியர்கள், தூதுவர்கள், நல்லவர்கள், தூய எண்ணம் படைத்தவர்கள், தலைமையாரியர், தேக் குரு, மாணிக்கம் பிள்ளை, வெள்ளைகார துரை, எல்லாவற்றையும், எல்லாரையும் அவரவர் பாணியில் சரியாக நடிக்க வைத்துள்ளார் ம. நவீன்.

மருத்துவ மூலிகைகள், அதன் பெயர்கள், பறவைகள், பிற உயிரினங்கள் என அனைத்து வகையான அஃறிணையையும் மறந்து போன சமூகத்தின் முன் கொண்டு வந்து விளக்கமளிக்கிறார்.

மொத்தத்தில் இது நாவல் அல்ல. ம. நவீன் அவர்களின் அறிவியல், வரலாறு, மூலிகை மருத்துவம், போமோ, சமயம், பகுத்தறிவு, காமம், உணர்வு வெளிபாடு அடங்கிய ஆய்வு தொகுப்பு!

இது மக்களிடையே சென்று சேர வேண்டிய முக்கிய நூல்!

ஆதித்தன் மகாமுனி

(Visited 110 times, 1 visits today)