ஏகவசனத்தில் தன்னையும் தன் புனைவையும் திட்டியுள்ள மதியழகன் அவர்களின் அவதூறு கட்டுரையை தன் வலைத்தளத்தில் ம.நவீன் அவர்கள் பதிவிட்டது என்னை இந்த எதிர்வினையை எழுதத்தூண்டியது.
மதியழகன் எப்படி யாருடைய தலையீடு இல்லாமல் தான் வாசித்த நாவல் குறித்து கருத்துகளை முன் வைத்தாரோ அதேபோல அந்த நாவலை வாசித்த வாசகியாக நானும் அவர் குறிப்பிட்ட தவறான தகவல்களை சுட்டிக்காட்டும் உரிமையை எடுத்துக்கொள்கிறேன். அதன் முக்கியக் காரணம், நாவலை வாசிக்காத ஒருசிலர் மதியழகன் சொல்லும் தவறான கருத்துகளைச் சரியென நம்பி தலையாட்டுவது வியப்பாக உள்ளது. ‘எப்பொருளை யார் யார் வாயால் கேட்டாலும் மெய் பொருள் காண்பதுதான் அறிவு’ அல்லவா? ஆனால் இங்கு யாரும் மெய்யை காண மெனக்கெடவில்லை. ஆனால் அதில் இணைந்துகொள்ள விரும்புகின்றனர். முதலில் மதியழகன் அவர்கள் தன் விமர்சன கட்டுரைக்கு வலு சேர்க்கும் என்று எழுத்தாளர் ம.நவீன் அவர்களை ‘அவன் இவன்’ என ஒருமையில் அழைத்து தன் திறன் மிளிரும்படி நீண்ட விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். அதை அநாகரீகம் என்று பொதுமக்கள் உணரும்படியாக செய்ய வேண்டிய தார்மீக எண்ணம் கொண்ட வாசகியாகவும், 247 எழுத்துகளை மேலோட்டமாக தெரிந்தவன் துணிந்து பேசுகையில், எனக்கென்ன வந்தது என்று சிந்திக்கையில் இதை எழுத வேண்டியுள்ளது.
விமர்சனம் 1
பேய்ச்சி சாதாரண நாவலா?
திரு.மதியழகன் குறிப்பிடுவது போல இது ஒரு சாதாரணமான நாவல் அன்று. நூதனமான செயல்பாட்டின் அச்சுறுத்தும் அசலம். பின்னர் ஏன் மதியழகனுக்கு சாதாரணமாகத் தெரிகிறது? அவர் realism நாவல்களை வாசித்து வளர்ந்தவராக இருக்கலாம். அல்லது Naturalism வகைமை இலக்கியங்களை வாசித்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து இலக்கியம் வாசிக்கும் ஒருவர் surrealism, metaphysics, magical realism என பல்வேறு அழகியல் முறை உள்ளதையும் அவற்றிற்கான வாசிப்பு முறை உள்ளதையும் அறிந்திருப்பார்கள். (எனக்கு இவற்றைத் தமிழில் சொல்ல தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன) மதியழகன் நாவல் குறித்து அவ்வளவு எழுதியும் அந்த நாவல் பேசும் இடத்தைக் கூட அவரால் நெருங்கிச்செல்ல முடியவில்லை. நாவல் என்பதை அவர் கதையாக அணுகுகிறார். ஆனால் அந்த நாவலுக்குள் வேறொரு Sublime நிகழ்ந்துள்ளது. அது அவருக்குத் தெரியாததால் பேய்ச்சி சாதாரண நாவலாகத் தெரிகிறது. வாசிப்பில் அந்த Sublime தருணத்தை அடைபவனே பயிற்சி பெற்ற வாசகன். அது நாவலில் சொல்லப்படாது. உணர்த்தப்படும். மணம் போல முழுக்க படர்ந்திருக்கும். அப்படி வாசிப்புப் பயிற்சி உள்ள வாசகர்கள்தான் பேய்ச்சியைக் கொண்டாடுகின்றனர். எடுத்துக்காட்டாக, x நபர் ஒரு கல்லை எடுத்து குப்பை என வீசுகிறார். Y நபர் அது அங்கோர் வாட்டின் ஒரு உடைந்த பகுதியின் கல் என்கிறார். x நபருக்கு அங்கோர் வாட் என்பதும் அதன் தொன்மையும் சிறப்பும் தெரியாவிட்டால் இன்னும் அது கல்தான். ஆனால் Y நபருக்கு அது ஒரு பொக்கிஷம். இப்போது சிக்கல் கல்லில் இல்லை. அந்தக் கல்லை அறியும் பயிற்சி யாரிடம் இல்லை என்பதில் உள்ளது.
விமர்சனம் 2
நாவலில் கெட்ட வார்த்தை!
கெட்ட வார்த்தைகளைப் பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. அதன் சுருக்கத்தை சொல்வதானால், எதை ஒரு சமூகம் கீழாக நினைக்கிறதோ அது கெட்ட வார்த்தையாகிறது எனலாம். நம் சமூகத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான கெட்ட வார்த்தைகள் புழக்கத்தில் இருந்துள்ளன. கெட்ட வார்த்தை என ஒன்று இல்லை. அது பயன்படுத்தும் விதம், தொணி, இடம் ஆகியவற்றால் பொருள் மாறுகிறது.மதியழகன் நேர்மையாக விமர்சனம் செய்திருந்தால் அவர் சொல்லும் கெட்ட வார்த்தைகள் அடங்கிய வாக்கியத்துடன் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாததற்குக் காரணம் வாசகர்களைக் குழப்பவே.
நான் திருவள்ளுவர் ‘மயிர்’ எனக் கெட்டவார்த்தை சொல்கிறார் என்று எழுதுகிறேன். அந்தக் குறளை வாசிக்காமல் அதன் தேவை புரியுமா? அப்படித்தான் நாவலை வாசிக்காத வாசகர்கள் மத்தியில் நஞ்சை புகுத்தும் வேலையிது.
திரு.மதியழகனால் அடையாளம் காட்டப்படும் 10 கெட்ட வார்த்தைகளை இன்னும் மிக தீவிரமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பதுதான் மரபும் இயல்பும். ஆனால், இதை அவர் ஒரு காலும் ஒப்புக் கொள்ள மாட்டார்.
‘அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்” (நற் 10) எனத் தொடங்கும் பாடலை கேட்டுத் தான் பாருங்களேன்.
‘கன்றும் உண்ணாறு கலத்தினும் படாறு….பசலை உணீ இயர் வேண்டும் ஞி திதிலை அல்குல் என மனமக்களினே‘ (குறு 29) என்ற வெள்ளி வீதியாரை வசிக்கலாம்.
‘கலைதரம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்‘ (பெரும்பாணாற்றுப்படை.244)
இடைக்குக் கிழும் தொடைகட்கு மேலும் தோற்றத்தில் பாம்பின் படம் போன்று அகன்ற மைந்துள்ள உடற்பகுதி என்று அடையாளப் வியாக்ஞானமும் உண்டு. (நற்.25:5-6)
சங்க இலக்கியங்களில் 170 இடங்களில் முலை என்ற வார்த்தை வருகின்றன என்கிறது ஆய்வுகள். இவையன்றி ஏராளமான கூடல், முயங்கல் காட்சிகள் சங்கப்பாடல்களில் உள்ளன. நேரடி வர்ணனைகளாகவும் வருகின்றன. பெண்ணின் காமத்தை நேரடியாகப் பேசிய பாடல்களும் ஏராளம். தற்கால இலக்கியங்களை நாம் கண்ணோட்டமிட்டால் இன்னும் ஏராளமாக உள்ளது.
‘சிலோன் நாதன் வேசியின் தொடைகள் இரண்டினையும் விரித்துவைத்து அதன் பக்கமாய் தாழித்து அமர்ந்துகொண்டான். சுத்தமாக மழிக்கப்பட்ட வேசியின் பளபளப்பான யோனிவாசல் சற்றே அகன்றிருந்தது. வேசியின் தொடைகள் இரண்டினையும் தூக்கிக்கொண்ட அவன் அதன் மையத்தில் தன் முகத்தைப் புதைக்கலானார்‘ (பக் 26 – தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்- சாதனா) இதுபோன்ற கதைகள் இன்னும் அதிகமாய் கவனிக்கப்பட வேண்டும் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது முன்னுரையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம் மதியழகன் அவர்கள் சங்கப்பாடல்களையெல்லாம் துணைக்கழைக்கிறார். இது ஒரு ஃபேஷனாகிவிட்டது. காரணம் அப்படிச் சொன்னால் சங்க இலக்கிய வாசிப்பு பின்புலம் இல்லாதவர்கள் உண்மையென நம்பிவிடுவர். ஆனால் உண்மை தெரிந்தும் தவறான கருத்தை தவறென சொல்லாத ஒரு குழு அவரை ஆதரிக்கும்போது அவர்கள் அறிவின் மீதும் சந்தேகம் வருகிறது.
இப்போது அடுத்தக் கட்டத்தில் பேய்ச்சி நாவலில் இந்தச் சொற்கள் எங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது. கதாசிரியர் பேசும் இடம் என்பதும் கதாபாத்திரம் பேசும் இடம் என்பதும் வெவ்வேறானது. பேய்ச்சி நாவலில் வரும் சொற்கள் அந்த மண்ணின் அந்த மக்களின் புழக்கத்தில் உள்ள சொற்கள். நம்மில் பலரும் அந்தச் சூழலில்தான் வாழ்ந்து வந்திருப்போம். கோபம் அடையும்போதும் நகைச்சுவைக்காகவும் தாராளமாக அவற்றைக் கேட்டிருப்போம். நான் அண்மையில் வாசித்த கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டுப்புற கதைகளில் ஏராளமாகவே அதுபோன்ற வசனங்கள் உள்ளன. அது மக்கள் மொழி. ஆனால் பேய்ச்சி நாவலில் அந்த மனிதர்கள் பேசும் வசனங்களில் அதுபோன்ற சொற்கள் இருக்கின்றனவே தவிர கதாசிரியர் விளக்கங்களில் இல்லை.
நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் ‘வார்த்தை என்பது வசவு அல்ல’ என்ற கட்டுரையை முழுமையாக வாசித்தால் இது தெள்ளத் தெளிவாகும். வாசிக்கவே நேரம் இல்லாமல் விமர்சனங்களை மட்டும் முன் வைப்பவர்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய ஒரு பத்தியை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
“கிராமத்தான் பல நூற்றாண்டுகளாக தனது மூதாயின் மூதாய் பயன்படுத்திய சொற்களை இயல்பாக இன்னும் பயன்படுத்துகிறான். அதை எழுத்து வடிவில் கையாண்டால் கெட்ட சொல், கொச்சை, slang, வட்டார வழக்கு. ‘ஓழ்’ எனும் சொல் நாகரீகமாக மேம்பட்ட சமூக தளத்தில் புழங்கும் மொழியாக இல்லை. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கப்பட்ட சொல். அலுவலகங்களில், பள்ளிகளில், உயர்தரத்து உணவு விடுதிகளில், கல்லூரிகளில், வராந்தாக்களில் ‘fuck yaar’, ‘shit yaar’ என்றால் அது சட்டையில் தெளித்துக் கொள்ளும் வாசனைத் திரவியம்.”
விமர்சனம் 3, 4, 5, 6, 7, 8, 9
தொழிலும் கலையும்!
எழுத்தாளர் சோ. தர்மன் மிகத் தெளிவாக கூறுகிறார். “அண்டம் முழுவதுமே படைப்புக்கான கருவாக இருக்கும்போது நான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும்தான் எழுதுவேன் என்றால் நீ உன்னை சுருக்கிக் கொள்கிறாய் என்றுதான் அர்த்தம்.”.
ஒரு படைப்பாளரை உயிரோடு புதைக்கும் வேலை என்பது; தான் என்ன நினைக்கிறார் என்பதை உயிரோட்டமாக எழுத விடாமல் தடுப்பது. பேய்ச்சி நாவலை யார் வாசிக்க வேண்டும்? ஒரு பள்ளி மாணவனா, கல்லூரி மாணவனா, திருமணமான பெண்ணா, ஆணா? இது ஒரு குழந்தை நாவல் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேய்ச்சி நாவலை எழுதிய நாவலாசிரியர் என்ன பாலர்பள்ளி வர்ணம் தீட்டும் புத்தகத்தையா வடிவமைத்துள்ளார்? மாணவர்கள் களிப்புற. ஜனரஞ்சகமாக எழுதிய சாண்டிலியனின் சரித்திர நாவல்களைப் பள்ளி மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ள சிரமப்படுவார்களோ அது போலதான் பேய்ச்சி நாவலும். இதுபோன்ற அறிவு சாராத விவாதங்கள் எல்லாம் நம் மலேசிய இலக்கிய சூழலில் மட்டும்தான் நடக்கும்.
விமர்சனம் 10, 11:
பேய்ச்சி நாவலின் மொழி தமிழகத்துடையதா?
பேய்ச்சி நாவலில் இழையோடும் மொழி சார்ந்த சர்ச்சையை எப்படி வகைப்படுத்தலாம் என்றால் மொழியின் இயல்பு, பயன்பாடு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, வாழும் இடம், பயன்படுத்துபவரது மதிப்பு என்ற அடிப்படையில் இதில் மொத்தம் 7 வகையான மொழிகள் (மூலமொழி, திரிபுமொழி, குறுமொழி, கிளைமொழி, கொச்சைமொழி, தனி மொழி, பொதுமொழி) எந்தப் பிசிரும் இல்லாமல் நகர்ந்து இருப்பது நாவலுக்குக் கிடைத்த போனஸ்.
மறுபடியும் கெட்ட வார்த்தைப் பகுதியில் என்ன தவறு செய்தாரோ அதே தவற்றை இங்கும் செய்துள்ளார்.
முதலாவது ஒரு புனைவில் வசனம் என்பது வேறு ஆசிரியர் உரை என்பது வேறு. மதியழகன் தனது புரியாமையால் இருவகையான வார்த்தைப் பிரயோகங்களையும் ஒரே கட்டுக்குள் அடக்கியுள்ளார்.
எ.கா: அது முன்பு சரளைக் கல்லாக இருந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் மஞ்சள் தேய்த்ததில் கல்லின் கூர்விளிம்பு முடுக்குகளில் மஞ்சள் தேங்கி கூழாங்கல்லின் நேர்த்தியுடன் வடிவம் பெற்றிருந்தது.
இது வர்ணனை. வர்ணனை தூயத்தமிழில்தான் இருக்கும். இதில் சரளைக்கல்லை சரளைக்கல் என்றும் கூர்விளிம்பை அதன் அர்த்தத்திலும்தானே அழைக்க வேண்டும். அதுபோலவே மிசிறு, மிடறு போன்ற சொற்களும். அப்படிப்பார்த்தால் மதியழகன் தன் நாவல் தலைப்பை பேய் வழி கடிகை என வைத்திருக்க வேண்டாமே. ‘கடிகை’ எனும் சொல் இந்நாட்டில் புழக்கத்தில் உள்ளதா? பொதுமொழி என்பது அதுதான்.
அதுபோலவே வசனங்கள் தமிழகத்தில் இருந்து வந்த ஓலம்மா, ராமசாமி ஆகியோரின் உச்சரிப்பில் வரும்போது தமிழகத்து வாடையே அடிக்கும். என் வாசிப்பில், எழுத்தாளர் ம.நவீன் மொழியை மிக நுட்பமாகக் கையாண்டுள்ளார். நாவலில் ஒரு செட்டியார் குடும்பம் வரும். அப்பகுதி நகரத்தார் மொழி பாசையில் எழுதப்பட்டிருக்கும்.
இதைத்தாண்டி 2019இல் நாவலின் காட்சியைக் கொண்டுவரும்போது நவீனுடைய மொழி முற்றிலும் வேறாக உள்ளது.
விமர்சனம் 11, 15, 16, 17, 29, 30
வாசகர் குழப்பம்?
பேய்ச்சி நாவலை மதியழகன் அவர்கள் ஏன் வெட்டி வீசப் பார்க்கிறார்? எந்த விஷயம் அவரைக் காயப்படுத்தி இருக்கக்கூடும்? என்று யோசிக்கையில் “திடீர் திடீரென்று மணியம் மாறுவதை” (விமர்சனம் 29), “மன தைரியமான பெண் ஓலம்மா கடைசியில் கம்பத்தை விட்டு வெளியேற முடியாமல் தற்கொலை செய்வது” (விமர்சனம் 30) என இரண்டும்தான் காரணம். இதில் நிச்சயமாக எழுத்தாளர் நவீனைத்தான் குற்றம் சொல்லியாக வேண்டும். தான் என்ன எழுதப்போகிறோம், எப்படி கதாப்பாத்திரங்கள் மாறப் போகிறது, மனிதனின் நிலையில்லாத மனப்போக்கு, பேரன்பு எப்படி வன்மமாகிறது, ஒழுங்கில் எப்போது தடுமாற்றம் வருகிறது என்பது பற்றியெல்லாம் திரு.மதியழகனுக்கு முன்னமே விரிவான கடிதம் போட்டிருக்கலாம். நெஞ்சு வலியில் இருந்தாவது அவரை மீள செய்திருக்கலாம். சரி நடந்தது நடந்துவிட்டது.
விமர்சனம் 17
ஒரு கதை அந்தக் கதைக்குள் இன்னொரு கதை.
பேய்ச்சியில் பல்வேறு பயன்களை நோக்கமாகக் கொண்டு கிளைக்கதைகள் இணைக்கப்படுகின்றது. யார் இதை முதலில் பயன்படுத்தியது? பண்டைய இலக்கியங்களான புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற காப்பியங்களில் பல கிளைக்கதைகள் அமைந்துள்ளன. இன்று நவீன இலக்கிய உலகம் கொண்டாடும் விஷ்ணுபுரம், காடு என எல்லாமே இப்படியான கதைக்குள் கதை கூறும் முறையைக் கொண்டுள்ளன என்பது தாங்கள் அறியாததா?
விமர்சனம் 18, 19
Non- linear?
திரு.மதியழகன் பேய்ச்சி நாவலை மிக தவறான கண்ணோட்டத்தில் பார்த்திருப்பது வாசகர்களைக் குழப்ப நிலைக்கு இட்டுச் செல்லும். முதலில் கால ரீதியாக இந்நாவல் மூன்று முக்கிய கால நிறுவைகளை அளக்கிறது. 1981, 1999, 2019 இந்நாவலைச் சரியான யுக்தியுடன் வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் 2019-ஆம் ஆண்டுதான் நாவலை நிறைவு செய்யும் இறுதி அத்தியாயத்தின் போக்கு. ஆனால், அரவம் அமைக்காமல் திரு.மதியழகன் மிக டெக்னிக்கலாக ‘non linear’ என்ற வார்த்தையைத் தூவி விட்டு நாவலை துச்ச நோக்கில் பார்த்திருக்கிறார்.
முதலில் Non- linear (unreliar narrator) என்ற யுக்தியை மிகக் குறைவான கதை சொல்லிகளே உபயோகிப்பார்கள். Non- linear யுக்தியைப் பெரும்பாலும் ஆங்கில நாவல்களில் காணலாம். சாருவின் பெரும்பாலான புத்தகங்கள் இவ்வகையைச் சார்ந்தது. எளிய உதாரணத்தில் வேண்டும் என்றால் ‘பாட்சா’ படம் மாதிரி வரைமுறைபடி, ஒரே நேரான டைம் லைனில் பயணிக்காத எழுத்து. இந்த வகையில் பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் இருந்து முந்தைய கால கட்டத்திற்குக் கதை சென்று மீண்டும் நடப்புக் காலத்தில் எங்கு விட்டார்களோ அங்கே சென்று நிற்பது.
Non- linearisme என்றால் என்ன, எப்படி கையாள்வது போன்ற விஷயங்களைச் சுய லாபம் இல்லாத ஒரு நாவலாசிரியர் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனென்றால் இது போன்ற யுக்திகள் வாசகர்களுக்கு ஏற்ப அமைக்கப்படும் ‘method’ இல்லை. புதிய பரிணாம சிந்தனையை – creativity-யினுள் புகுத்தி வாசகர்களை மேல்மட்டத்தில் இருந்து (intellectualisme) என்ற பார்வையில் வாசிக்க வைக்கும் ஒரு பெரிய முயற்சி. இங்கு உழைப்பைப் போட்டிருப்பவர் நாவலாசிரியராக மட்டும் இருக்காது. வாசகர்களும் நாவலில் வேறு பரிணாமங்களை அடைவார்கள்.
பேய்ச்சி மலேசிய இலக்கியம் எப்படி உள்ளதோ அப்படியாக மட்டும் எழுதப்பட்டதல்ல. இன்று உலக இலக்கியச்சூழலோடு போட்டிப்போடும் படைப்பு.
விமர்சனம் 20
பேய்ச்சியில் காலக்குழப்பமா?
மதியழகன் தன் கட்டுரையில் சொல்லியுள்ளதாவது,
/அதே போல் கதையில் நவீன் சொல்லும் கால கட்டமும் பெரிய குழப்பமாக இருக்கும். ‘எம்ஜிஆர் நடிப்பதை விட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும்’(பக்:48) என நாவலில் சொல்லப்படும் ஆண்டு 1981. ஆனால் எம்ஜிஆர் நடிப்பை நிறுத்திய ஆண்டு 1978./
மதியழகன் சொல்லும் பகுதி மணியம் எனும் மனிதன் எப்படி ஒரு ஆளுமையாக மாறுகிறார் என விவரிக்கும் பகுதி. 1981இல் தன் மனைவியைத் தைப்பூசத்திற்கு அனுப்பிவிட்ட மணியத்தின் ஆளுமை கதை ஆசிரியரால் விளக்கப்படும். அதாவது, மணியம் 8 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்திற்கு எந்த நிலையில் வந்தார், எப்படி போராட்டங்கள் நடத்தினார், அதில் எப்படி தோட்டத்தில் திரைப்படத்தைக் கொண்டு வந்தார் என விவரிக்கப்பட்டிருக்கும். அவை எதுவும் அந்த வருடத்தில் (1981இல்) நடப்பதல்ல.
எல்லா காட்சிகளுமே எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து (அதாவது 1974) தொடங்கி 1980 வரை நடப்பவை. அதற்கு முன் என்னவெல்லாம் நிகழ்ந்து ராமசாமி முக்கிய ஆளுமை ஆனார் எனச் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதை அறிய Non- linear ரக நாவல்களையெல்லாம் வாசிக்க வேண்டியதில்லை. தமிழின் சிறந்த நாவல்களாகச் சொல்லப்படும் எதை வாசித்தாலும் இந்த உத்தி முறை இருக்கும். மதியழகன் அவர்கள் இல்லை என பதில் சொன்னால் அதையும் நான் நிரூபிப்பேன்.
விமர்சனம் 21
ஜப்பானிய ஆட்சி ஐந்து ஆண்டு காலமா?
இதற்கெல்லாம் விடைகொடுக்கவே பயங்கர ஆத்திரமாக வருகிறது. Penjajahan Jepun di Tanah Melayu என்ற மலேசிய சரித்திர புத்தகத்திலும் Pengajian Malaysia என்ற தொடர் சரித்திர புத்தகங்களிலும் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்தது 8-டிசம்பர் 1941-31 ஜனவரி 1942 வரை மலாயாவை கைப்பற்றிய காலம். 8/12/1941 – 15/8/1945 ஆட்சி காலம்.. ஆட்சி புரிந்தக் காலம் என்பது 3 – 31/2 வருடக் காலங்கள் மட்டுமே. ஆனால் திரு.மதியழகன் வாழ்ந்த காலகட்டங்களில் மட்டும் 5 வருடங்கள் ஜப்பானியர்கள் ஆட்சியில் இருந்தார்கள் போல. ஆனால் அதையும்கூட அவரிடம் சொல்லி திருத்தாமல் முகநூலில் லைக் போடுபவர்களின் வரலாற்று அறிவையெல்லாம் சோதிக்க வேண்டியுள்ளது.
விமர்சனம் 22,23, 24, 26, 27, 28,29,30, 31, 32
முன் முடிவுகளின் குழப்பம்
இந்த விமர்சனக் குறிப்புகள் அனைத்தும் மனிதனின் கொள்கை முரண்பாட்டு சிந்தனைகளின் உச்சம். எனக்கு 7 khaan maaf என்ற ஆங்கில திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் priyangka chopra விரும்பும் ஒருவன் மத போதகராக, மிகவும் தூய்மை மிக்க (holy) போன்ற தோற்றத்துடன் சித்தரிக்கப்படுவான். மதம் சார்ந்த கேள்விகளுக்கு அவ்வளவு மென்மையாகவும் திண்மையாகவும் பதிலளிப்பான். அவனுடைய சுபாவத்தை கண்டு அவனுக்கென்று ஒரு பெரிய தொண்டர் கூட்டமே செயல்பட்டு வந்தது. அவனுடைய போதனையில் மயங்கிய priyangka chopra மதம் மாறி அவனைத் திருமணம் செய்து கொள்வாள். மத போதகராக வலம் வந்த அவன், படுக்கை அறையில் ஒவ்வொரு முறை உறவுக்கொள்ளும் போதும் உடலில் முக்கிய பாகங்களில் சதையைக் கத்தியால் கிழித்து தன் மனைவி கத்துவதை இரசித்து ஆக்ரோஷமாக உறவுக் கொள்வான். அவனுக்கு தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ள ஒருவரின் வலியும் வேதனையும் தேவைப்படுகிறது என்பதாக படம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘The water’ படமும் இது போன்ற சாயலை ஒட்டிய கதையாகத்தான் அமையும்.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், கதாசிரியர்கள் சீரியல் கிள்ளராக இருப்பதும், ஒரு பட்டம் பெற்ற டாக்டர் பெண்களுக்கு செக்ஸ் டாச்சர் கொடுக்கும் வன்மமும் நடப்பதை நாம் அறிவோம். செய்யும் தொழிலுக்கும் மனதில் உதிக்கும் எண்ணங்களுக்கும் எவ்வகையிலும் சம்பந்தம் இல்லை. ஒருவன் எல்லாமுமாகவும் வாழ முடியாது. ஒரு பஸ் ஓட்டுனர் பின்னொரு நாளில் கதாசிரியராக வருவதும், பஸ் கண்டக்டராக இருந்தவர் நடிப்பில் கைத்தேர்ந்தவராக வருவதும் வாழ்வில் நாம் காணும் மாற்றங்களே.
ம.நவீன் அவர்கள் அவருக்குள் இருந்து புறப்படும் மிக சாதூரியமான creativity – யைக் கொச்சைப்படுத்தும் குழுவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி license எடுக்காமல் வாகனத்தைச் செலுத்த முடியாதோ, அதே போல ஒரு தனி மனிதனின் எண்ணம், சிந்தனை மாறாமல் வளராமல் இருந்தால் இந்த நாவலை தொடுவதும் அபத்தம்தான். காரணம் இது நமக்கு அறிமுகமான மனிதர்களை, நாம் இப்படித்தான் இருப்பான் மனிதன் என நம்பும் ஒருவனை அறிமுகம் செய்யவில்லை. அது நாவலின் பணியும் அல்ல.
காமத்தைப் பற்றி எழுதுபவன் காமுகன் என்றால், சிறைச்சாலையைப் பற்றி எழுதுபவன் ஒரு குற்றவாளியா என்று சிந்தனை நீள்கிறது. மனநிலை பாதிப்புற்றோர் மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு மருத்துவரென்ன நோயாளியா என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு மனிதன் எல்லா காலக்கட்டங்களிலும் எந்த ஆன்ம வளர்ச்சியும், சிந்தனை தொடர்ச்சியும் இல்லாமல் இருப்பான் என்றால் அவன் பிறந்ததின் பயன்தான் என்ன? மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாமும் எல்லா காலகட்டங்களிலும் மாறக்கூடியது.
இப்போ இங்கே பிரச்சனை என்னவென்றால் தன் கைக்கு கிட்டாத புத்தகத்தை கஷ்ட்டப்பட்டு தேடி, படித்து தவறாக புரிந்து கொண்டு அனுபவசாலிகளிடம் கருத்து பரிமாற்றம் செய்யாமல் பக்கம் பக்கமாக வசனம் எழுதுவது தான். தான் முன் வைக்கும் விமர்சனக் கருத்துகள் மேல் நம்பிக்கை இருப்பின் அதை உரியவரிடம் வாதிடுவதைத் தவிர வேறு என்ன சிறந்த செயல் இருக்க முடியும்? நீதியை நிலைநிறுத்தும் பேய்ச்சி, தன்னுடன் உரையாடும் சாமானியர்களுக்கு என்ன சொல்ல வருகிறது?
விமர்சனம் 25
வாசக அவசரமும் அவமானமும்
மதியழகன் அவர்கள் குறை சொல்வதற்கென்றே நாவலை அவசர அவசரமாக வாசித்துள்ளார் என்பது விமர்சனம் 25ஐ வாசித்தால் புரியும். நாவலில் வரும் தலைமை ஆசிரியர் பெரியார் பக்தராம். சீர்த்திருத்த புத்தகங்களை வைத்திருப்பவராம். இப்படியெல்லாம் எழுதி ஏன் இவர் அவமானப்படுகிறார். நாவலில் தலைமை ஆசிரியர் பெரியாரியவாதி அல்ல. அவர் கோயிலுக்குச் செல்வார். எம்.ஜி.ஆர் ரசிகர். விவேகானந்தர் நூல்களை வாசிப்பார். ஆனால் மதியழகன் எங்கிருந்து இந்த புதிய கருத்தைக் கண்டடைந்தார் எனத் தெரியவில்லை.
விமர்சனம் 27
கதாபாத்திர முரண்
internal conflict / external conflict மற்றும் Transition சரியான முறையில் பேய்ச்சி நாவலை சரியான தளத்தில் வாசித்தால் மணியமும் ஓலம்மாவும் முரணாக செயல்படும் கதாப்பாத்திரங்கள் அல்ல. ஆனால், தங்களுக்குறிய நிலையில், பாணியில் தங்களுடைய இருப்பு நிலையை பிரதிபலிக்கும் மானுட சமுதாயத்தின் மொத்த தொகுப்பு. இதில் என்ன மறைமுக விருட்சம் என்றால் இந்நாவலில் வெளிக்கொணரப்படும் 20க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் ஒன்று கூட நல்ல கதாப்பாத்திரம் என்றோ, கெட்ட கதாப்பாத்திரம் என்றோ சொல்ல முடியாத நிலையை யாரால் கண்டுக் கொள்ள முடிகிறதோ அவர்கள் மட்டும்தான் பேய்ச்சியின் ஞானப்பாதயை அடைய முடியும்.
இதை conflict என சொல்லவே மாட்டார்கள். புறச்சட்டகக் கதை (Frame Stones) என்றுதான் இலக்கியங்கள் கூறுகின்றன. இது எப்படி பேய்ச்சி நாவலில் கையாளப்பட்டிருக்கிறது? மா.இராமலிங்கம் அதற்கு இப்படி வரையறுக்கிறார். ‘முதலில் ஒரு கதைக்குரிய பின்னணியை உருவாக்கிக் காட்டி, படிப்போர் இதுதான் கதை போலும் என்று நம்பும் சமயத்தில் ஒரு எடுத்துரை முகவர் இன்னொரு கதையை எடுத்துரைப்பது போல இவை எழுதப்படும்’ என்கிறார்.
ஒரு சாதாரண நாவலில் ‘காட்சிப்படுத்துதல்’ என்பது கதைகளில் கூறப்படும் நிகழ்வுகள், பாத்திர இயல்புகள் போன்றவற்றை விளக்கவும், படிப்போரின் கண்ணெதிரே தெளிவாக நிகழ்வினைக் கொண்டு வந்து நிறுத்துவதற்கும் ஏதாவது ஒரு காட்சியமைப்பை வலுப்படுத்தத் தோன்றும். பேய்ச்சியில் காட்சிப்படுத்துதல் என்பது தலைமை மாந்தரின் தோற்றத்தைக் காட்சிப்படுத்தல், நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்தல் மற்றும் மனநிலையைக் காட்சிப்படுத்தல் போன்ற அனைத்தையும் ஒரு சேர முக்கிய கதாப்பாத்திரங்களில் காணலாம். ‘நீண்ட கட்டுரை’ மதியழகன் அவர்களுக்கு மட்டும் புரிந்து கொள்வதில் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்கு என்பது புரியவில்லை.
விமர்சனம் 13
‘சில டிபிக்கல் வார்த்தைகள்?
நாவலில் தமிழகத்திற்கு மட்டுமே வழமையான சொற்களை மலேசிய சூழலில் பயன்படுத்தியுள்ளதாக மதியழகன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்:
‘பொஞ்சாதி’ – 1981இல் பேசப்படும் வசனத்தில் உள்ள சொல். அப்போதெல்லாம் மனைவியை மனைவி என அழைப்பார்களா என்ன? இல்லை ஆங்கிலத்தில் ‘ஒய்ப்’ என சொல்வார்களா? அல்லது பொண்டாட்டி என முறையாக அழைப்பார்களா?
‘பொலவி’ – 1991இல் வரும் வசனம். “பெரிய பொலவி… சொல்ல வந்துட்டா… ” – வசனத்தில் வேறு எப்படி வரும். பெரிய புலவி என்றா? பேச்சு வழக்கில் நம்மூரில் பொலவி என்றுதானே குறிப்பிடுவோம்.
‘செம்பக எல்லை’ – இது தமிழகச் சொல் இல்லை. மதியழகன் அவர்கள் ஊரின் பெயராக நினைத்திருக்கலாம். தூயத் தமிழ்ச் சொல். செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திற்கு எதிரில் அமையும் பக்கத்தை செம்பக்கம் என்பர். செம்பக்கம் என்பது வடிவியலில் தூயத் தமிழ். அது மக்கள் பேச்சில் ‘செம்பகம்’ என அழைக்கப்படுகிறது. அந்தச் செம்பக்க மூலையில் உள்ள செம்பனைத் தோட்டத்தைக் குறிக்க ‘செம்பக எல்லை’ எனச் சொல்லப்பட்டுள்ளது.
இவற்றை ஆராய்ந்த அதேசமயம் எனக்கு ஒரு கேள்வி பிறந்தது. ம.நவீன் அவர்கள் எழுதியுள்ளது புனைவு. நாவலில் வட்டார வழக்கு வரும் சுதந்திரம் உண்டு. சில சமயம் ஆங்கில சொற்களை வசனங்களில் இணைக்கவும் சுதந்திரம் உண்டு. மதியழகன் அவர்கள் எழுதியுள்ளது கட்டுரை. அதுவும் நீண்ட கட்டுரை. அதில் Just Ignore, டிபிக்கல், re-writing போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். சொற்கள் குறித்து கவனமாகப் பேசும் மதியழகன் அவர்கள், கட்டுரையின் மொழியில் இதுபோன்ற அவசியமற்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது குறித்து யாருக்கும் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை பேய்ச்சி நாவலையோ எழுத்தாளர் நவீனையோ யாராவது வசைப்பாட வேண்டும்.
ஒரு படைப்பாளி என்பவன் தன்னை சுக்கு நூறாக உடைத்து, சிதறிய அணுக்களில் ஒரு முறையாவது ஒவ்வொரு வாழ்க்கையையும் வாழாமல் வாழக் கூடியவன். சுருங்கச் சொன்னால், கலைஞர்கள் தங்களை உள்ளே சென்று அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறி வரும் மொழி. இது மொழி நிபுணத்துவமென்றும் கூறலாம். பேய்ச்சி கதை ராமசாமியின் அப்பா தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி மலாயாவுக்கு வேலை தேடி வரும் சூழலில் எந்த மொழியைப் பயன்படுத்தி இருக்கக்கூடும்?
தமிழ் நாட்டின் மொழி வாசத்தை மறந்து மலாயாவின் மலேசிய மொழியை கையாண்டிருக்க வாய்ப்பு சற்றும் இல்லை. அதைக் கூட விமர்சகர் சரியாகப் புரிந்து கொள்ளாத பட்சத்தில் இரண்டாம் தலைமுறையினராகிய ஓலம்மா, மணியம், ராமசாமி ஆகியோர் முழுக்க முழுக்க தமிழ் நாட்டின் மொழி வாடையில்தான் பிரவேசமாகிறார்கள். எனவே வசனங்களுக்கும் கதை சொல்லலுக்கும் உள்ள வித்தியாசத்தை எழுத்தாளர் அறிவது நலம்.
விமர்சனம் 31,32
ர்,ன்
நாவலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. மதியழகன் அவர்கள் நாவலிலும் (நிலங்களின் நெடுங்கணக்கு) இந்த விமர்சனக் கட்டுரையிலுமே எழுத்துப்பிழைகள் இருக்கும்போது அவர் பார்வையில் மலினமான எழுத்தாளராக இருக்கும் எழுத்தாளர் நவீனுக்கு ஒன்றிரண்டு இடங்களில் ஏற்படுவது சகஜம்தானே. மதியழகன் அவர்கள் குறிப்பிட்டதுபோல (பக்122)இல் இந்தச் சிக்கலை கவனித்தேன். அது எழுத்துப்பிழைதான். ஆனால் அது நாவல் முழுவதும் உள்ளதா என்றால் இல்லை. எழுத்தாளர் நவீன், மணியத்தின் இரண்டு காலக்கட்டங்களைச் சொல்கிறார். நினைவோட்டத்தில் மணியம் இளைஞனாக இருக்கும் போது ‘ன்’ என்றும் அவர் முதியவரான சமகால கதையில் ‘ர்’ என்றும் பயன்படுத்துகிறார். இது திட்டமிட்டு அவர் பயன்படுத்துவதே அன்றி தவறி செய்யவில்லை.
விமர்சனம் 40 ‘வாசிப்பதற்கு உகந்த நாவலாக இல்லை.’ என்கிறார்.
அவருக்கு இல்லாதது பற்றி நாம் கவலை அடைய முடியாது. வாசித்த வாசகர்களின் கடிதங்கள் ம.நவீன் வளைத்தளத்தில் தொடர்ந்து வருகிறது. உற்சாகமான கருத்துகளாக உள்ளன. நான் தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கில மற்றும் மலாய் நாவல்களின் வாசகி. எனக்கு அது உகந்த நாவலே. இந்த சர்ச்சையெல்லாம் உருவாகும் முன்னரே இந்நாவல் குறித்து என் வாசிப்பு அனுபவத்தை எழுதியதும் அதன் பொருட்டே.
விமர்சனம் 41: ‘சர்ச்சையை ஏற்படுத்தி நாவலைப் பிரபலப்படுத்த வேண்டும்.’ என்கிறார்.
இந்த நாவலைப் பொறுத்தவரை சர்ச்சையை உண்டாக்கியது திரு.மதியழகன். பேய்ச்சியை அதன் வழி பிரபலப்படுத்தியுள்ளதும் அவரே.
பண்புநலன்கள் தன் நூல் விமர்சனத்தில் பொதுவாக நூலில் சமூக சிந்தனையின் தாக்கம், நன்னெறிப் பண்புகளின் உறைவிடம் போன்ற கூறுகளின் அடிப்படையில் நாவலை ம.நவீன் நகர்த்தவில்லை என்பது சீர்திருத்தவாதி திரு.மதியழகன் அவர்களின் மிகப் பெரிய குற்றச்சாட்டு.
எப்படி சொல்லப்பட்டது பண்பு நலன்கள் பேய்ச்சியில், என்ன சொல்லப்பட்டதென இந்த இரண்டு விஷயங்கள்தான் ஒரு வாசகன் எந்த நிலையில் பேய்ச்சியை அணுகி இருக்க முடியும் என்பதன் வெளிப்பாடு.
ஒரு வாசகனால் இலக்கிய வாசிப்பில் ஒரு நிலைக்கு வந்த பிறகு (oblique poetry) தமிழில் ‘வக்ரோத்தி ஜீவிதம்’ என்பர்.
‘வக்ரோத்தி’ என்பது வக்ர+உக்தி எனப் பிரிவுப்பட்டுக் கோணற் கூற்று முறை (நேரடிக்கூற்று, மறைமுக கூற்று, கூட்டமான முறையில் கூறும் கூற்று) எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவு நூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுத்தி வளைத்து அழகுப்படுத்திக் கூறுதல் என்பதாகும்.
ம.நவீன் அவர்கள் மொழி ஆளுமயைப்பற்றி அனைவரும் அறிந்ததே. சாதாரண மொழியை விட வேறு விதமாக மொழியை வளைத்துக் கையாளும்போது அது பேய்ச்சியில் ஒவ்வொருவரிடமும் உரை நிகழ்த்தும் விளைவுதான் வக்ரோத்தி எனப்படுகிறது. இது மேலோட்டமாக பாலர் பள்ளி புத்தகங்களை வாசிக்கும் உக்தி நிலையில்லை; அதையும் தாண்டியது.
பேய்ச்சியில் இழையோடும் சமுதாய சீர்த்திருத்த பண்பு நலன்களை இப்படியும் பதிவு செய்யலாம்.
1. மதியழகன் அவர்கள் ஆபாச காட்சிகள் உள்ளதாக கூறியுள்ளார். அவர் குறிப்பிடுவது ஒரு பாலியல் வல்லுறவு காட்சி. மணியம் ஒரு சீனப்பெண்ணை வன்புணர்ச்சி செய்வார். அதன் பின்னர் தன் மனைவியால் கொல்லப்படுவார். (குற்றம் செய்தவன் தண்டிக்கப்படுகிறான். மதியழகன் இதை குறிப்பிடாமல் அந்த பாலியல் வன்புணர்வு காட்சியை மட்டும் சொல்லி அதன் தரத்தை கீழே இறக்குகிறார்)
2. இது ஜாதியை கீழாக பார்க்கும் நாவலாக இப்போது வர்ணிக்கப்படுகிறது. உண்மையில் வெட்டியானாக தன் வாழ்க்கையை விட்டு ஓடிவரும் ஒருவன் எப்படி தன்னை ஒரு சமூகத்தின் தலைவனாக உயர்த்திக்கொள்கிறான் என்றும் எல்லா நம்பிக்கையையும் இழந்த ஒரு தலித் பெண் எப்படி தன்னந்தனியாகக் கம்பத்தில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக்கொள்கிறாள் என்றும் சொல்லும் காட்சிகள் தீவிரமாக இடம்பெற்றுள்ளன. (இதனால் இளைஞர்கள் தன்னூக்கமே பெற முடியும்)
3. சமூகம் கல்வி இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் எப்படி பிறர் நம்மை கூறுபோட்டு கொல்வார்கள் என இரு சாராயம் விற்கும் சீன கடைக்காரர்கள் மூலம் சொல்லப்படுகிறது. (இதில் சமூக ஒற்றுமை கூறப்படுகிறது.)
4. பெண்தன்மை கொண்ட ராமசாமிக்கு வாழ்க்கையில் அடைந்துள்ள சங்கடத்திலிருந்து மீண்டு, பெரிய நாட்டு மருத்துவராக உருவாகியுள்ளது அதுபோன்ற திருநங்கைகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் பகுதி.
இதைதவிர பேய்ச்சி நாவலில் மட்டும் explicit நன்னெறிப் பண்புகள் தோராயமாக 46-உம், implicit நன்னெறிப்பண்புகள் 88-க்கும் மேம்பட்டு காணப்படுகின்றன.
இவற்றையெல்லாம் மீறி, மதியழகன் அவர்கள் தன் கட்டுரையில் முன் வைத்துள்ள சில அபத்தமான / ஆபத்தான கருத்துகளையும் சுட்டிக்காட்டி இதனை முடிக்கிறேன்.
அ. நாவலில் அடுத்து என்ன நடக்கும் என சுலபமாக அறிந்துகொண்டு விடலாம்.
இல்லை. இந்த நாவலின் சிறப்பே இவ்வளவு நாம் பேசியப்பின்பும் நீங்கள் மட்டுமே அறியக்கூடிய வேறொரு கரு உள் உரைந்திருக்கும். அதை அனுபவிக்கவே முடியும். அதற்காக நீங்கள் பேய்ச்சியை வாசிக்க வேண்டும்.
ஆ. திரைப்படத்தில் புளித்துப்போன காட்சிகள் இருக்கும். உதாரணமாக சாராயம் காய்ச்சும் காட்சி.
இல்லை. சாராயம் காய்ச்சும் காட்சி என அவர் பானைகள் அடுக்கி வைத்துள்ளதைச் சொல்லியுள்ளார். அதை மீறி எப்படி அது காய்ச்சப்படுகிறது என தெளிவான சித்தரிப்பில் நாவலில் விளக்கப்பட்டிருக்கும். அது திரைப்படங்களில் இல்லை.
இ) 1981இல் பீடி குடிப்பவர்கள் குறைவு. சிகரெட் குடிப்பவர்கள் பீடி குடிக்க மாட்டார்கள்.
கதையின் களம் கெடா மாநிலத்தில் உள்ள லுனாஸ் எனும் பகுதி. இன்னும் முழுக்க வளர்ச்சியடையாத அவ்வூரில் 1981இல் பீடி இருப்பது சாதாரணம். மேலும் புகைக்கு அடிமையானவன் சிகரெட் கிடைக்காதபோது உண்ணாவிரதம் எடுப்பதுபோல பீடி பிடிக்க மாட்டான் என்பதெல்லாம் நல்ல நகைச்சுவை.
மதியழகன் அவர்களின் இந்தக் கட்டுரையை விமர்சனம் என ஏற்பது அபத்தம். எனவே இந்த எதிர்வினையை மீண்டும் தொகுத்துக்கூறி முடிக்கிறேன்.
கட்டுரையின் உள்நோக்கம்
மதியழகன் கட்டுரையின் முதலிலும் கடைசியிலும் உள்நோக்கம் இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தாலும் எழுத்தாளரை ஒருமையில் அழைப்பதன் வழியே அவர் நோக்கம் புரிகிறது. கருத்துகளைவிட திட்டித்தீர்ப்பதே அதிகம் இருப்பதால் அது இன்னும் தெள்ளத்தெளிவாக ஆகிறது. கெட்ட வார்த்தைகளாக அவர் சுட்டுவதை முழுமையாகச் சொல்லாமல் சில வெற்றுக்காட்சிகளைக் காட்டி அதை வைத்து விலாசுவதன் வழி அவருக்குக் காழ்ப்புணர்ச்சி இருப்பது உறுதியாகிறது.
அடிப்படையற்ற மதியழகன் அவர்களின் திட்டவட்டமான பிழைகள்
இதில் வரலாற்றுப் பிழை கொண்ட தகவலைச் (ஜப்பான் ஆட்சி காலம்) சொல்வதன் மூலம் அவரது வரலாற்று அறிவு கேள்விக்குள்ளாகிறது. பெரியார் பக்தரில்லாத ஒருவரை (தலைமை ஆசிரியர்) அவ்வாறு வர்ணிப்பது அவர் வாசிப்பின் அவசரப்போக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
புரியாமை
பேய்ச்சி நாவலில் ‘ன்’ மற்றும் ‘ர்’ பயன்பாட்டின் சூட்சுமம் அறியாதது அவரது மேலோட்டமான வாசிப்புக்குச் சான்று. அதேபோல கதையில் சூட்சுமமாகச் சொல்லப்படும் காலக்கட்டத்தை எண்ணி அவர் குழம்புவது அவரது மேலோட்டமான வாசிப்பை உறுதி செய்கிறது.
மதியழகன் எழுத்தாளர் நவீனுடைய மொழியாற்றலை சில இடங்களில் வியக்கிறார். ஆனால் அவரது முந்தைய குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாத நாம் இதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அந்த ஆச்சரியத்தின் மூலம் மதியழகன் அவர்கள் பேய்ச்சியை மறைமுகமாக அங்கீகரிக்கிறார். அதற்காக அவரை வாழ்த்துவோம்.