மரபிலக்கிய அதிர்ச்சி
கடந்த சில நாட்களாக ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் தொடர்பான சர்ச்சைகளைக் காண முடிகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் வந்தாலே ‘இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய மரபு’ எனும் வாசகம் தேய்வழக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பயன்படுத்துபவரிடம் எங்கே அந்த இரண்டாயிரம் ஆண்டு மரபை கொஞ்சம் விளக்குங்கள் என்றால் திணறிவிடுவார். அப்படிச் சொல்வது ஒரு பாவனை. அந்த பாவனையைத்தான் திரு.மதியழகன் அவர்களும் பயன்படுத்தியுள்ளார். அப்படிச் சொல்லும்போது அனைவரும் வாயடைத்துவிடுவர். மரபிலக்கிய வாசிப்புப் போதாமை அதற்கு ஒரு காரணம்.
முதலில் மரபிலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஒப்பிட்டதே ஒரு நகைமுரண். காரணம் மரபிலக்கியம் பா வடிவத்தில் சுருக்கிச் சொல்வது. எனவே அதில் நுட்பம் அதிகம். நவீன நாவல் விரித்துச்சொல்வது. அது இன்னும் இன்னும் என காட்சிகளை அகலப்படுத்தும். இந்த அடிப்படை பேதம் கூடவா தெரியாமல் அனைவரும் முகநூலில் லைக் போடுகின்றனர் என்பதைப் பார்க்க சங்கடமாக இருந்தது. இவர்களை சங்க இலக்கியம் மற்றும் ஈராயிரம் ஆண்டு மரபைச் சொல்லி பயமுறுத்துவது எளிது. எனவே கொஞ்சம் தெளிவு பெற சிலவற்றை விளக்கலாம் எனவிரும்புகிறேன்.
திருக்குறளில் காமம்
நான் கவிஞர் நைனா முகமதுவின் நேரடி மாணவன். எனது அரைகுறைத் தமிழறிவோடே அவருடன் தர்க்கம் செய்த அனுபவங்கள் எனக்குண்டு. ஒரு நாள் அவரோடு அவர் அலுவலகத்தில் உரையாடிக் கொண்டிருந்தப்போது திருக்குறள் விவாதம் வந்து புகுந்து கொண்டது.
‘திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப் பட்டுள்ள மலம்’ என்ற பெரியாரின் வாதத்தில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. திருக்குறளுக்கு நிகரான அறநூல் வேறுள்ளதா என இன்றளவும் எண்ணிப் பார்க்கிறேன். ஆனால் காமத்துப்பாலின் வழி திருக்குறள் மானுட மேன்மைக்கு உணர்த்த வரும் நெறி என்ன? இல்லற வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் அதன் வாயிலாக அடையும் பயன் என்ன? வேண்டுமானால் ‘இல்லறவியல்’ அவர்களுக்குப் பெரும்பயன் அளிக்கும். காமத்துப்பாலில் உள்ளனவெல்லாம் வள்ளுவர் அவர் மொழியில் எழுதிய காதல் கவிதைகளே’ என அவரிடம் சொன்னபோது; அவர் நான் காமத்துபாலினை ஓர் ஆபாசப் பாடம் போல் ஒதுக்கிப் பேசுகிறேன் என்றும், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பாட்டியைப் போன்றது எனவும் சொன்னார்.
அப்படியானால் தன் பேரக்குழந்தைகளோடு பாட்டி, தாத்தாவோடான காதல் அனுபவங்களின் பகிர்வுதான் காமத்துப்பாலா? ஆயினும் எனது முன்வைப்பினை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதே உண்மை. கவிஞர் நைனா முகமது இன்று நம்மோடு இல்லாத காரணத்தால் இச்சம்பவத்தை நிருபிக்க எனக்கும் வேறு வழியில்லை.
காமத்துப்பாலின் குறட்பாக்களின் உரைகள் பெரும்பாலும் தலைவன் தலைவி என்றே குறிப்பிடுகிறது. இதனை கணவன் மனைவி என்றே நாம் பொருளறிய வேண்டும் என்று தமிழ்ப் பற்றாளர்கள் வாதிட்டால் நான் என்ன செய்ய?
ஆணும் பெண்ணும் காதல் செய்தாலே கட்டியடிக்கும் பீடு உடைய மரபினை உடைய நம்மத்தியில், தலைவன் தலைவியின் கூடல் இன்பம், கூடிப் பிரிதல், புணர்ச்சி மகிழ்தல்,போன்றவற்றை வள்ளுவர் எழுதியதால் திருக்குறள் பேரிலக்கியம் ஆகிறது. இந்த யதார்த்தத்தினை இக்காலப் புனைவிலக்கியங்கள் கையாண்டால் கொச்சை என்பார், கொடுமை என்பார்.
கூடல், முயங்கள் பற்றிய வருணணைகள் எக்காலமும் உள்ளதுவே. இவைப் பாடப்பட்டுள்ளப் பழைய இலக்கியங்களுக்கு மாத்திரம் புனித போர்வை இட்டு மூடுகிறது, பின்புத்தி. திருக்குறள் ஓர் உதாரணம் மட்டுமே.
“ ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்” (1330)
ஊடலின் விளைவு காதலையும் காதலர்களையும் வழுப்படுத்தும். இன்பம் விளைவிப்பது ஊடல். அதற்கு இன்பம் காதலர் முயங்கி மகிழ்தல், கூடிக் களித்தல் என வள்ளுவர் சொல்கிறார்.
வள்ளுவர் சொன்ன முயங்குதல், இடைவெளியோடானது, அளவோடு இருப்பது , என்பதெல்லாம் மெய்ப்பொருளை மறைக்க எண்ணும் உரையாசிரியர்களின் சுயக் கூற்று.
ஊடலும் முயங்களும் காதலர்க்கு இயல்பானது. இதில் பொய்பூசி மறைக்க ஏதுமில்லை என்றறிந்ததால்தான் வள்ளுவர் பொய்யாமொழியர் ஆகிறார்.‘அளவோடு இருங்கள், பாதுகாப்பைப் பயன் படுத்துங்கள்’ என்பதுவாய் வள்ளுவர் இக்குறட்பாவில் சுட்டியிருப்பதுவாய் இடமேதும் இல்லை. ஒரு வேளை நல்ல விசயத்திற்குப் பொய் சொல்லலாம் என்ற வள்ளுவரின் கூற்றை உரையாசிரியர்கள் ஆழமாக உள்வாங்கி இருக்கக்கூடும்.
வடிவங்களின் மாற்றம்
இலக்கியம் என்பதே காலத்தின் கண்ணாடிதான். உள்ளதை உள்ளபடியே பிரதிபளித்தலே அதன் வேலை. சில உள் நோக்கங்களோடுத் திரித்துக் கூறப்பட்டுள்ள இலக்கியங்களின் வாயிலாக அதனைப் படைத்தப் படைப்பாளன் தனக்குத் தானே இழைத்துக்கொள்ளும் சுய ஏமாற்றமே அன்றி வேறில்லை. தமிழன்றி இல்லாமல் உலகத்து இலக்கியங்கள் யாவுமே காலத்தால் அதன் கூறுமுறையில் மாற்றம் கண்டுள்ளனவே தவிர கூறுபொருளில் அன்று. யாராவது ஒரு விமர்சகன் பெர்சி பைஷ் ஷெல்லியின் கவிதையுடன் ஷெக்ஸ்பியரின் புனைவுகளோடு ஒப்பிட்டால் எவ்வளவு நகைச்சுவையாக இருக்கும். ஷெல்லி கவிதை நுட்பமாகக் காதலைச் சொல்கிறது செக்ஸ்பியரில் ஏன் அவ்வாறு இல்லை என்றால் நாம் சிரிப்போம் அல்லவா? காதல் என்ற உணர்வு பொதுவாக இருப்பதாலேயே கவிதை வடிவத்தில் உள்ளது நாவல் வடிவத்துக்குப் பொருந்தாது என நாம் அறிவோம். ஆனால் இதைதான் மதியழகன் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை அறிவார்த்தம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
பல்லாண்டுப் பெருமை வாய்ந்த சங்க இலக்கியங்களும் பழைய இதிகாசங்களும் தமிழின் மணிமகுடமாய்க் காண்பிக்கப்படுகின்றன. அவை தனிச் சிறப்புகள் வாய்ந்தவை என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆயினும் அதனை அணுக பலர் அஞ்சுவதற்குக் காரணம் அக்காலத்து வார்த்தைப் பிரயோகங்களின் புரியாமையே அன்றி வேறில்லை. அவ்வகையில் இவ்விலக்கியங்களுக்குத் தொண்டிழைத்த உரையாசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே.
ஒரு பவித்திரமான பிம்பம் கொடுத்துப் பாரட்டப்படுகிற நம் பழைய இலக்கியங்கள்தான் இன்றைய புனைவிலக்கியங்களின் மூலம். ஆனால் அவை கொச்சைத் தன்மை அற்றவை, ஏற்க இயலா விடயங்கள் இல்லாதவை எனக் கூறிவிடலாகாது.
மரபிலக்கியங்கள் இல்லாத இன்றைய ஒழுக்க மரபு
வாராழி கலச கொங்கை
வஞ்சி போல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசால் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?
என ராமன் அனுமனிடம் தன் மனைவி சீதையைப் பற்றி வர்ணிப்பதை கொஞ்சம் ஓய்விருந்தால் உரைநடையில் எழுதிப்பார்க்கலாம்.
இவை எதனைச் சொல்ல வருகின்றன. இன்றையப் புனைவிலக்கியங்களில் காட்சிப்படுத்தப்படும் பாலுணர்வு மற்றும் பிறப்புறுப்பினைக் குறிக்கும் பதங்கள். தவிர…?
மந்த இலக்கிய மதியாளர்கள் விளம்புவதனை அப்படியே ஏற்றுக்கொண்டால் சங்க இலக்கியங்களும் இதிகாசங்களும் இதற்கு விதிவிலக்குதான்.
சீவகன் என்னும் மண்ணுலக மன்மதன் தன் வாழ்நாளில் எட்டுப் பெண்டீரை வசீகரித்து நிகழ்த்தியக் கூத்து சீவக சிந்தாமணி. ஐவரோடு ஒருத்தி என்றும், பின் ஒருவனோடு ஓராண்டு வாழ்தல் என்று மகாபாரதம் காட்டுகிறது. பலரோடுக் கூடி பாண்டவர்களை ஈன்றக் கதையும், இயலாதக் கணவன் விளைத்தப் பயனால் முனிவனோடுக் கூடிப் பிள்ளைப் பெறுவதும் இங்குதான் நிகழ்கிறது. இதில் உச்சம், இராமாயணத்து இந்திரன் அகலிகை வரலாறு. கூடலின் பாதியில் தான் புணரப்பட்டுக் கொண்டிருப்பது இந்திரனால் என்றறிந்தும் அதை ஏற்றலை ஆபாசம் இல்லை; பேறு என்பேன்; கைத்தட்டுங்கள் !
போர் முடிந்து நேரே வீடு திரும்பாது ஆடவர்கள் பரத்தையர்களோடுக் கூடிவிட்டு வருதல், மலருக்கு மலர் தாவும் வண்டுப் போல பல பரத்தையர்களோடு மகிழ்ந்திருந்து வருதல் போன்றப் பாடல் அமைப்பு கலித்தொகை, கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களில் காணக் கிடைக்கிறது. மதுரைக் காஞ்சியிலும் இத்தகவல் இடம் பெறுகிறது. இதனை நுனிப்புல் மேய்ந்த சங்க இலக்கியங்கள் சரி என்றால் அதனை ஆழம் பார்த்து அப்பட்டமாய் இந்த இழிச்செயலை எடுத்துரைத்த இன்றைய இலக்கியங்களும் பிழைதான்!
கலையிலும் கருத்தியலும் இலக்கியத்தின் இரு கண்கள். இரண்டும் ஒருங்கே வார்க்கப்படுவதே நிறைவான இலக்கியம்.
மூலை தோறும் முலை
குறிப்பிட்ட ஒரு சொல்லினைப் பிழையாக உச்சரிக்கையில் அதன் பொருளானது பாழ்படுவது தமிழுக்கு விளைந்த தனி இயல்பு. இது வேறு. மாறாக ஒரு தனித்தமிழ்ச் சொல்லினை பேச்சு வழக்கினில் சொல்லிடும்போது அது கொச்சைத் தன்மை எய்துகிறது எனவியலுமா?
புனைக்கதையை எடுத்துக்கொள்வோம். அதில் இடையிடையே நிகழும் உரையாடலை நாட்டார் மொழியிலோ அல்லதுப் பேச்சு வழக்கிலோ எழுத வேண்டியது கடமையாகும். அவ்விதம் பிரயோகம் செய்யப்படுகிற வார்த்தைகளானவை பிறப்புறுப்புகளைக் குறிப்பதுவாய் அமைந்துவிடுகிற நேரங்களில் அவை தகாதவைகளாய் ஆகிவிடுகின்றன.
இந்நிலையில், பெரும்பாலும் அவ்வார்த்தைகளில் முதல் கண்டெடுப்பு இராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட நம் இலக்கியங்களில் இருந்துதான். உதாரணங்களாக, முலை,பேச்சு வழக்கில் ‘மொலை’ ஆனது. ஆண் குறி – குஞ்சி, விரை – கொட்டை போன்றவை நாட்டார் வழக்கில் திரிந்தவைகளாகும்.
என் தோழி ஒருத்தியை “மொலை வளந்த அளவுக்கு மூளை வளரலை!” என அவள் அம்மாவே என் காதுபடத் திட்டியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவ்வசையின் உள்விளக்கம் என்னைப் பிரம்பிக்கச் செய்தது.
சிலப்பதிகாரத்துக் கண்ணகி ஒரு காவியத்தலைவி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் அவள் பாமரத்தியே. உண்மைக் கதாபாத்திரமாகச் சொல்லப்படும் கண்ணகி, தான் கொண்டிருந்த பத்தினித் தன்மையினால் மதுரை நகரையே எரித்துவிடும் வல்லமைக் கொண்டிருந்தாள். அவள் தனது முலையை அறுத்து வீசி மதுரை நகரைத் தீ முட்டியிருக்கிறாள். ஏன் இளங்கோ உள்ளதை உள்ளபடிச் சொல்லி கண்ணகியை மாசு படுத்திவிட்டார். கண்ணியம் காக்கும் பொருட்டு கண்ணகி தனது எஞ்சிய மாணிக்கப் பரல்களை வீசித் தீ மூட்டினாள் எனச் சொல்லியிருக்கலாமே. கதையோடு ஒன்றி வந்ததுப் போலவாவது இருந்திருக்கும்.
சிலப்பதிகாரத்தின் இரட்டைக் காப்பியமான மணிமேகலையிலும் ‘முலை’ முடிவுக்கு வரவில்லை.
“ பூண்முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி”
அதாவது, பசிப்பிணி தாழாது போகும் போது அது பூண் அணிந்த முலைகளையுடைய மனைவியரோடு பிறர் கடைவாயில் நின்று இரந்து நிற்கச் செய்து விடுமாம். இவ்விடம், வலை அணிந்தப் பெண் கொலுசணிந்த மனைவி என்று இயற்றப்பட்டிருந்தாலும் தகுமே. இது சாத்தனாரின் சதி என்றோ, இயலாமை எனவோ சொல்லவியலுமா?
மேற்கூறியவை வாழ்வியல் கதைகள். மாறாக பக்தி இலக்கியங்களிலும் முளைக்கத்தான் செய்கின்றன முலைகள்.
உண்ணாமுலையானின் பக்தன் நந்தி, மாணிக்கவாசகராய் பிறவியெடுக்கிறார். திருவாசகம் அருளினான். ஓர் இடத்தே அவர்,
“ போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ”
எனப் பாடி பூண்முலை உடையப் பெண்களை ஈசனைப் பாடி பொன்னாலான ஊஞ்சலியே ஆட அழைக்கிறார். பாட்டுடைத் தலைவன் பரமன் என்பதால் ஈசன் பொறுத்தாற்கொள்வார். கொங்கையினைப் பாடியதால் கோபம் வந்திருக்குமே அம்பாளுக்கு. யாரையும் அங்கதிற்பதல்ல என் நோக்கம். இவ்விடங்களில் எல்லாம் வந்துள்ள வார்த்தைகளைச் சாட வேண்டுமா, அல்லது தத்தம் சூழல், தன்மை, உட்பொருள் போன்றவை உற்று நோக்கப்பட்ட வேண்டுமா ? ஆய்க…
ஓர் இடிச் செய்தி சொல்கிறேன். திராவிடச் சிந்தனை மிகுந்தவர்கள் கம்பனை தமிழின் துரோகி என்கிறார்கள். அவர்களில் அதிகமனோர் இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் என்பதனாலும், இராமாயணம் ஒரு மதம் சார்ந்த நூல் போன்று பிம்பம் தருவதும் அதற்குக் காரணம் என்றாலும் இராமாயணத்தில் கொச்சையான, ஆபாசமான சித்தரிப்புகள் உள்ளதுவே இதன் பிரதானக் காரணம்.
ஆண் என்பவன் தன் மனைவியை மாற்றான் ஒருவன் இரசிக்கின்றான் என்றுத் தெரிந்தாலேயே சண்டைக்குப் போகக் கூடியவன். ஆனல், கம்பரோ தனது இராமாயணத்தில் இராமன் அனுமனிடம் சீதையில் கொங்கைகள் கலசம் போலவும், அவளது ‘அல்குல்’, அதாவது பெண்ணுறுப்பு தங்கடல் போன்றும் இருக்கும் என்றுச் சொல்வதுப் போல் இயற்றிய இடம் உண்டு.
“ வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தங்கடற்கு உவமை தக்கோய்”
எப்படித்தான் பழுது பாராட்டினாலும் இது கொச்சையிலுங் கொச்சையே. ஆபாசத்தின் உச்சமே. தகா வார்த்தைப் பயன்பாட்டின் தடமே ஆகும். இதே பாடலினைக் கம்பன் இந்த நூற்றாண்டில் பிறந்து ஒரு புனைக்கதை எழுதியிருந்தால் இப்படி இருந்திருக்கலாம்.
“ மாயாண்டி குடியிருந்தக் கிராமத்தை சுனாமி தாக்கிவிடுகிறது. தன் நண்பர்கள் ஐவரின் மனைவியரோடு கடற்கரைக்குக் குளிக்கச் சென்றிருந்த மாயாண்டியின் மனைவி வேலாயி ஆழிப் பேராலையில் சிக்கி இறந்துக் கரை ஒதுங்கியதாய் சந்தேகிக்கப் படுகிறார். காவற்துறையினர் இறந்தப் பிரேதங்களைப் பிணக்கிடங்கிற்குக் கொண்டு சென்றனர். வேலாயியின் உடலை அடையாளம் காட்டச் சொல்லி மாயாண்டி அழைக்கப்படுகிறான். பீதி கௌவியவனாய் பிணவறையில் நுழைந்த மாயாண்டிக்கு வேலாயினது பிணம் அங்கே இல்லை என்றறிந்ததும் ஓர் இனமயறியா விடுவிப்பு. அவன் மனைவி இதில் இல்லை என்றும், உயிரோடு இருக்கும் அவளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என கூச்சலிடுகிறான். காவற்துறை ஆய்வாளர் ‘அதெப்படி அவ்வளவு திடமாகச் சொல்கிறாய்?’ என வினவ, ‘சாமி, இந்தப் பொம்பளைங்க எல்லாம் அம்மணமாய் கிடக்குதுங்க. என் வேலாயி கடல் ஆத்தா மாதிரி இருப்பா. அவளே நீங்க மேலே பாத்திங்கன்னா காளி கோயிலு கலசம் மாதிரியும், கீழே பாத்தா தினமும் எனக்கு சோறு போடுகிற இந்த வெள்ளிக்கடல் மாதிரியும் இருக்கும் சாமி, அதான்’ என்றான் மாயாண்டி.
ஆய்வாளர் மிக நல்லவரென்பதால், மாயாண்டிச் சொன்ன ‘மேல் கீழ்’ அடையாளங்களை எல்லோரிடமும் நன்கு ஆய்ந்து, பார்த்து கண்டு பிடித்துத் தருவதாக வாக்களித்தார். மாயாண்டியின் காதல் உண்மை என்றால் வேலாயி நிச்சயம் கிடைத்து விடுவாள். பிராத்திப்போம்.’’
கம்பன் வீட்டிக் கட்டுத்தறியும் கதை பாடும். இதை என்னால் விருத்தத்திலும் சொல்லியிருக்க முடியும்! முன்பே கூறியது போலத்தான். இலக்கியம் அதன் கூறுமுறையை மாற்றியிருக்கிறதே அன்றி கூறுபொருளை அல்ல. யதார்த்தவியலில், உள்ளதை உள்ளபடி கொணரும் இலக்கியமே நீண்டு வாழும்.
ம.நவீன் தன் நாவலில் அக்காலக்கட்ட மக்கள் ஆங்கிலம் கலந்து பேசினார்கள் என எழுதினால்தான் தவறாகும். கொச்சை மொழியும் சாதிய சாடலும் அப்போது சாதாரணம். ஆனால் உண்மை என்னவென்றால் இதுபோன்ற சர்ச்சையில் லைக் போட்டு சந்தோசப்படுபவர்கள் அந்த நாவலையும் வாசித்திருக்க மாட்டார்கள்; மதியழகன் எதிர்வினையையும் முழுமையாக வாசித்திருக்க மாட்டார்கள்; இப்போது என் பதிலையும் முழுமையாக வாசிக்கப்போவதில்லை. அவர்கள் வேலை லைக் போட்டு சந்தோசப்படுவது மட்டுமே.
நகைச்சுவை நடிகர் விவேக்கின் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
“வசனமாடா முக்கியம் படத்தப் பாருடா !”
த.குமரன்