கோழைத்தனத்தின் கூச்சல்கள்

எனக்கு மலேசிய இலக்கிய நிலை குறித்தெல்லாம் தெரியாது. முகநூல் பக்கம் வருவதும் மிகக் குறைவு. ஆனால் வெளியில் இருந்து பார்த்து சிலர் மேல் மரியாதை உண்டு. ஆனால் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களைப் பார்க்கும்போது பலர் மேல் மரியாதை இல்லாமல் போகிறது. குறிப்பாக கவிஞராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாகரன் மீது மரியாதை குறைந்து பரிதாப உணர்வே மேலோங்கியது. நான் கவிஞர்களின் ஆளுமையை பாரதி வழி அறிந்துள்ளேன். கவிஞர்கள் அப்படித்தான் துணிவாக இருப்பார்கள் போல என்றும் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட கோழைகளெல்லாம் கவிஞர்களாக இருப்பார்களா என கருணாகரனைக் கண்டு மனம் நொந்தேன்.

ம.நவீன் கருணாகரன் கவிதைகள் மீது விமர்சனம் வைக்கிறார். கருணாகரனுக்கு அதை மறுக்கும் ஆற்றல் இல்லை. உடனே தனக்குக் கூட்டுச் சேர்க்க போலியாக மதியழகன் நாவலைப் புகழ்ந்து நட்பு வைக்கிறார். அதன் பின்னர் ம.நவீன் அவர்களுக்கு எதிர்வினை எனும் பெயரில் புலம்பித்தீர்க்கிறார். அந்தப் புலம்பலில் சம்பந்தமே இல்லாமல் “எங்கே துணிவிருந்தால் மதியழகன் நாவலை குப்பை என சொல்லுங்கள்” எனச் சவால்விடுகிறார். அதை வாசித்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது. நாவலை வாசிக்காமல் ஏன் ஒருவர் அதை குப்பை எனச் சொல்லவேண்டும்? ஒருவேளை கருணாகரன் மதியழகன் நாவலை அடியாழத்தில் அப்படி கருதியிருக்கக் கூடும். ஆனால் சொல்லத் துணிவில்லை. எனவே பதற்றத்தில் அப்படி உளறுகிறார். இவ்வளவு இழிவான சூழல் கொண்ட இடத்தில் என்னைப்போன்றவர்கள் எல்லாம் ஏன் இலக்கியம் என ஏதாவது வரவேண்டும்; ஒதுங்கியே இருக்கலாம் என நினைத்தபோது இலக்கிய அறத்துக்காக எழுதிய கலைசேகர், இளம்பூரணன், லாவண்யா, அ.பாண்டியன், குமரன், ஶ்ரீவிஜி, ஜோன்சன், என நீண்ட பட்டியல் எனக்கு நம்பிக்கையை உருவாக்கியது. அதேபோல பேய்ச்சி நல்ல படைப்புதான் என நிறுவும் வகையில் கட்டுரைகள் எழுதிய அர்வின்குமார், புனிதவதி ஆகியோர் மீது மதிப்பும் கூடியது.

ஒருசில வல்லினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் வழி இவர்கள் வல்லினம் குழுவினர் இல்லை என அறிகிறேன். அவர்களை நான் நிகழ்ச்சிகளில் பார்த்ததும் இல்லை. ஆனால் கீழ்மையான சிந்தனைகள் தலைத்தூக்கும்போது இவர்கள் பேச முன்வருகிறார்கள் என்பது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கிறது.

பேய்ச்சியை வாசித்த வாசகியாக அதில் மூழ்கி திழைத்த சில தத்துவார்த்தமான கணங்களுக்காக, அதில் நான் கண்டடைந்த பேய்ச்சியின் அருளுக்காக, இயற்கையின் நியதிக்காக இந்த கட்டுரையை எழுதியாக வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது. இது இலக்கியத்துக்குமானது. பேய்ச்சிக்குள் பேச்சி வாழ்கிறாள். அது அவளுக்கான நாவல். அவளே தன்னை மீட்டுக்கொள்வாள். பெரும் கற்பனையில் எதிரே வரும் திமிங்கலத்தை கவனிக்காமல் தானே பெரியவன் என குருட்டுத் தைரியத்தில் வேகமாக முன்னோக்கிச் செல்லும் சில குட்டி மீன்களைப் போல மதியழகனின் நிலைதான் பரிதபாத்திற்குரியது. இதுவரை வந்த எதிர்வினைகளுக்கு அவரால் அறிவார்த்தமான பதில் சொல்ல முடியாது என்பதை அவரே அறிவார். அவரால் முடிந்ததெல்லாம் தனிமனித தாக்குதல், வசை, கிசுகிசு, கேலி, புலம்பல் மட்டுமே. அதற்குள் ஆங்காங்கு சில இலக்கியம் சார்ந்த சொற்களைத் தெளிப்பார். அதை சிலர் அற்புதமான கட்டுரை எனப் பாராட்டுவர்.

முன்பு நான் பட்டியலிட்ட பலரும் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளை கவனமாக வாசித்தேன். அவை மதியழகன் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலானவற்றை முறித்திருந்தன. ஒரு வேளை அதை ஒரு நடுநிலை மனதோடு வாசித்தால் அது மதியழகனுக்குமே புரியும்தான். காரணம் எழுதியவர்கள் அனைவரும் அவ்வளவு தெளிவாக விரிவாக காட்டுகளுடன் அறிவார்த்தமாகவே எழுதியிருந்தனர். எனவே, அவர்கள் பேசத் தவறிய சில கேள்விகளுக்கான பதிலாகவே என் கட்டுரை அமைகிறது.

பேய்ச்சி நாவலில் இடம்பெரும் மொழி வழக்கு மலேசியாவுக்குறியதல்ல அது தமிழ் நாட்டின் சாயலை அதிகம் கொண்டுள்ளதாக மதியழன் கூறியிருந்தார். அது அவருடைய பார்வை. ஒரு வேளை அவர் வாழ்ந்த வட்டாரத்துக்கும் காலத்துக்குமான மொழி வழக்கு அப்படியில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் தனது சுற்றத்தை மட்டும் அளந்து அதை மட்டுமே நம்பி துணிந்து ஒரு இலக்கியத்தை விமர்சித்திருப்பதுதான் ஒரு இலக்கியவாதிக்கான தரமா? “சரளைக் கல்லாக, கூர்விளிம்பி, ஊட்ட சுத்தி, வெக்கையாக, கோழிய உட்டுட்டீரு, பண்ணப்போறாப்படி, மருவாதை, செக்கில் அரைப்பது, உம்ம வாத்தியாரும், தூங்கன பெறவு, இஞ்சன பாரு, விரை, கை உட்றாதீங்க, நா ஆரு கோவப்பட, பெறவு, ஞாவகமெல்லா, அது நீர் முழுங்கிடே, ஆரு ஊட்ட ஆரு விக்கிறது, உத்துட்டா, செத்துட்டா உட்டுடு!, எந்த ஞாவகமும் வாணாம்” இப்படி ஒரு நீண்ட பட்டியலில் வந்திருக்கும் சொற்கள் தமிழ் நாட்டில் மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என வாசிக்கும்போது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இவற்றில் பெரும்பாலான சொற்களை என் பாட்டி இன்றளவும் பயன்படுத்துவதுண்டு. அவரை ஒத்த வயதையுடைய மற்றவர்களும் அப்படி பேசுவதுண்டு. ஏன் நானுமே அவர்களோடு அப்படிப் பேசி விளையாடியதுண்டு. முக்கியமாக மறுவாதை, ஊடு, ஞாவகம், வாணாம், பெறவு, இஞ்சன, வாத்தியாரு ஆகிய சொற்களைச் சொல்லியே ஆக வேண்டும். எனக்குத் தெரிந்து இன்னும் சில மூதாட்டிகள் வானத்தை மானம் என்றே உச்சரிக்கின்றனர்.

என் பாட்டியின் வயது 67. அவர் பிறந்த வருடம் 1953. அவர் ஓலம்மாவைப் போல இந்தியாவில் பிறந்த இங்கே வந்தவர் அல்ல. இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவர். அவருக்கு அவரின் அப்பா பேசிய மொழியின் சாயல் இன்றளவும் இருக்கிறது. அதே போல நம் மலேசியாவில் வாழக்கூடிய மக்களின் தமிழிலும்கூட இடங்களுக்கேற்ப மாறுபடுவதுண்டு. பொதுவாக நெத்திலி என சொல்லும்போது, கெடா மாநிலத்தில் உள்ளவர்கள் அதைக் குச்சி கருவாடு என அழைப்பர். ‘சிவிங்காமை’ கித்தா சோக்லெட் என அழைப்பதைக் கேட்டுள்ளேன். இது ஒரு நாட்டில் வாழக்கூடிய மக்களின் சுற்று வட்டாரத்தையும் அவர்களைச் சுற்றி இருக்கும் பெரும்பான்மையான மக்களின் மொழிவழக்குப் பொருத்தும் அமையக்கூடிய மிக சாதாரண மாற்றம். தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த வந்தவர்களின் தாக்கம் ஒரு மண்ணில் அதிகம் இருக்கும் போது அங்கே அந்த மொழியில் அதன் சாயல் இருப்பது எப்படி முரணாகும். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் என் பாட்டியிடம் அந்த மொழியைக் கேட்கிறேன். ஒரு சின்ன ஏரணத்தால் வரும் புரிதல் இது. ஒரு தனித்த படைப்பாளனுக்கே உரிய அவதானிப்பால் மட்டுமே அந்த மொழியை படைப்புக்குள் கையாள முடியும். இதே சமயத்தில் நான் பார்த்த அனுபவத்தின் வழி இப்படித்தான் பேசுவார்கள் என்பதும் தவறாகும். ஒருவேளை 1981இல் இன்னும் வளர்ச்சியடைந்த பிற மக்களின் கலப்பு உள்ள இடத்தில் மொழி வேறாக இருக்கலாம். எனவே ஒரு சாட்சியாக இருந்தே நான் இந்தச் சொற்கள் மலேசியாவில் புழக்கத்தில் உள்ளன என உறுதியாகக் கூற முடியும்.

மேலும் இது சார்ந்த இன்னொரு குற்றச்சாட்டு. தமிழ் நாட்டு சாயலில் இருப்பதால் இது மலேசியர்களுக்கான நாவலே இல்லை எனவும் இது தமிழ் நாட்டிவர்களுக்கான நாவல் எனவும் இன்னொரு கேலிக்குறிய வகைமையினை மதியழகன் முன் வைத்துள்ளார். நான் மிக அண்மையில் இலக்கியத்தில் நுழைந்தவள். ஆனால் அதன் நுட்பங்களை அறிய தொடர்ந்து வாசித்து வருகிறேன். இமையம் போன்ற எழுத்தாளர்கள் தனது படைப்பையே தமிழ் இலக்கியம் எனும் அடிப்படையில் வகை பிரிக்கிறார். தன் புனைவை தமிழ் நாட்டுப் படைப்பென சுருக்கிக்கொள்ளவில்லை. பேய்ச்சியும் அவ்வாறானதே. அது ஒரு தமிழ் புனைவு. அப்புனைவு தமிழகத்தில் தொடங்கி மலேசிய மண்ணை விரிவாகப் பேசுகிறது. நாளையே ஒரு மலேசியர் முழுக்க ரஷ்ய களத்தைக் கொண்டு ஒரு நாவல் எழுதுவார். அப்படியானால் அவரை மலேசிய எழுத்தாளர் இல்லை என நிராகரித்துவிடுவோமா? மற்றபடி இதில் தமிழக சாயல் என்பது என்ன? உத்தியா? தரமா? நுட்பமா? அப்படியென்றால் எதன் அடிப்படையில் உலக இலக்கியங்கள் வாசிக்கப்படுகின்றன? மதியழகன் சொல்வதுபோலவே அது தமிழக சாயலில் இருந்தால் படிக்க வேண்டியதில்லை என்பதை மற்றவர்களும் ஒப்புக்கொண்டால், ரஷ்ய இலக்கியங்களையும், அமெரிக்க இலக்கியங்களையும், பெங்காள இலக்கியங்களையும் நாம் வாசிக்கக் கூடாதல்லவா? அவற்றில் மலேசிய தன்மை இருக்காது அல்லவா? இல்லை அப்படி வாசிப்பது குற்றமா? அதை மொழிப்பெயர்ப்பது அவசியமில்லையா?

இந்த எதிர்வினை வழி நான் பேச நினைப்பது ஜாதிகள் சார்ந்த பார்வை. ம.நவீன் அவர்கள் பறையன் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக பெரும் கூச்சலிடுபவர்களுக்கான எனது பதில் இது. ம.நவீன் இதுவரை தோட்டப்புறங்களில் நடக்கவே நடக்காத ஒன்றை தன்னுடைய கற்பனையில் கொண்டுவந்து எதையும் தானே உருவாக்கி எழுதவில்லை. மேலும் அப்படி அவர் குறிப்பிட்டிருக்கும் அந்த சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே பேசும் வசனங்கள் அவை. மற்ற சமூகத்திலிருந்து ஒருவர் அப்படி இன்னொரு தரப்பைச் சொல்லியிருந்தால் மட்டுமே அது வசை என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும். அல்லது பிறரை வசைப்பாட கோபத்தில் கூறினாலும் அது ஒரு சமூகத்தை அவமதிப்பதில் அடங்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. அது ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் காத்திரமான உரையாடல். தோட்ட மக்களின் உச்ச நிலை கோப வெளிபாடுகள் அப்படியான சொற்களில்தான் பெரும்பாலும் உதிர்ந்திருக்கின்றன. கொஞ்சம் நடுநிலையில் நின்று அறிவார்த்தமாக இலக்கியத்தை வாழ்வியலோடு பொருத்தி பார்த்தால் மட்டுமே புரியும். அதாவது அறிவுள்ளவர்களுக்கு.

ஒரு நவீன இலக்கியவாதி ஒரு போதும் தன்னுடைய படைப்பில் ஜாதிகளை முன்னிருத்த மாட்டான். பேய்ச்சி நாவலில் அது யதார்த்த கூறுகளின் அடிப்படையில் படைப்பாளியின் நுன்மையான அவதானிப்பால் அமைந்தது. தனக்குள் என்றோ பதிவாகிப்போன ஏதோ ஒரு சூழல் எப்படியோ படைப்புக்குள் வார்க்கப்படுகிறது. யதார்த்த்தைக் கொல்லாமை வேண்டும் என்பதற்காக அமையும் சூழல்கள் அவை. ஒரு வேளை அதை எழுதாமல் விட்டு தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டிருக்கவும் செய்யலாம். ஆனால் ஒரு படைப்பாளன் தேடும் புனிதத்துவம் தனக்கானதல்ல அது அவன் படைப்புக்கானது. இப்படி எதிர்வினைகள் வருமென ஒரு படைப்பாளன் தன் வார்த்தைகளை முடக்க முற்படும்போது படைப்புகளின் யதார்த்நிலை செத்துவிடுகிறது.

நவீன இலக்கியம் எதையும் வலியுறுத்தாமல் காட்டும், அதைப் பார்த்து வாசகன் தன் புரிதலுக்கும் சிந்தனைக்கும் ஏற்ப தனக்குள் புதிய படிமங்களை உருவாக்குகிறான். எனவே, வாசகனின் பார்வையைப் பொருத்தே சூழல்கள் அவனுக்குள் படிமமாகின்றன. படைப்பின் பெரும் வெளிகளுக்குள் ஒற்றைவரியை மட்டும் பார்ப்பவனுக்கு காட்சிகள் குறுகிப் போகும். அது மிகப் பெரிய பரந்த வெளியின் ஒரு சின்ன பகுதியை மட்டும் பூதக்கண்ணாடியால் பார்ப்பது போல. தொலைவிலிருந்து முழுமையாக தரிசிக்கும்போது அதன் அர்த்தம் நமக்குச் சரியாகப் புரியும். அர்த்தம் புரியாத ஒரு சொல்லை மட்டும் தனியாக எத்தனை முறை வாசித்தாலும் அது புரியாது. அதை ஒரு வாக்கியத்தோடு வாசிக்கும்போதுதான் அர்த்தம் புரியும். அப்படிதான் பேய்ச்சி என்ற ஒட்டு மொத்த நாவலை முழுமையாக நோக்கும்போது சர்ச்சைப்படுத்தப்படும் இந்த சொல்லுக்கான இன்னொரு அர்த்தம் நமக்குப் புலப்படும். அது யதார்த நிலையின் வெளிபாடென.

மூன்றாவதாக நான் பேச நினைப்பது மணியத்தைச் சில இடங்களில் அவன் எனவும் சிலவிடங்கள் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளது தொடர்பான தவறான கண்ணோட்டம். அது மதியழகன் சொல்வது போல நவீனுடைய போதாமை அல்ல. அதுவும் ஒரு யுக்தி. அவன், அவர் என்ற சொற்கள் வந்திருக்கும் பகுதிகளைக் கொஞ்சம் ஆழ்ந்து, வாசித்தால் அதற்கான காரணம் தானாகவே புரியும். ஆனால், என்ன செய்வது அப்படி ஒரு புரிதல் வருவதற்கு முதலில் அடிப்படை வாசிப்புப் பயிற்சி அவசியமாகிறதே. எனவே, அது இல்லாதவர்களுக்கு நாம் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. ஊர் தலைவனாக ஏற்கப்படும் காலத்திற்கு முன்பான மணியம் ‘அவன்’ எனவும் மக்களிடையே நல்ல பேருடன் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் காலகட்டத்தில் ‘அவராக’ மணியம் சுட்டப்படுகிறார். இதற்கான காலம் வந்து வந்து போவதால் மதியழகன் குழம்பி இருக்கிறார் போல.

மதியழகனின் இலக்கியப் பார்வை என்னை பிரம்மிக்க வைக்கிறது. உண்மையில் மதியழகன் என்னைக் குழப்புகிறார். பேய்ச்சி நாவலைக் குப்பை எனச் சொல்லும் அவரே பல ஆண்டுகளாக தமிழ் நாட்டில் எழுத்துத் துறையில் உள்ளவர்களால் மட்டுமே இந்த மொழி பயன்பாட்டில் எழுத முடியுமெனவும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் திருத்தம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். உண்மையில் அவரையே அறியாமல் அவர் பேய்ச்சி நாவலைப் பாரட்டியிருக்கிறார். பேய்ச்சி நாவலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பாராட்டு இது. ஒரு மாபெரும் வீரனின் சாகசத்தைப் பார்த்து ஒரு கோழை இந்த சாகசத்தை ஒருவனால் செய்திருக்கவே முடியாது என வாய்ப்பிழப்பானே. அந்த வாய் அவர் வாய்.

‘இப்படியான திறன் இதற்கு முந்தைய எந்த படைப்பிலும் நவீனிடம் நாம் பார்க்க முடியாது. நவீனின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நடை மொழியில் இருக்கும்.’ இதுவும்கூட அபாரமான பாராட்டுதான், காரணம் ஒரு படைப்பாளர் ஒரே நடையில் ஒரே வடிவில் கதை சொல்வானென்றால் அது அவனது படைப்பாற்றல் வெளிகளைச் சுருக்கிக் காட்டும். அவன் இன்னும் வளரவில்லை என பொருள். ம.நவீன் படைப்பாற்றல் பரிணாமம் கண்டுள்ளதை இங்கிருந்து அறியலாம். நான் தற்போது புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பை வாசித்து வருகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம்; ஒவ்வொரு மொழி. ஜெயமோகன் கதைகளைச் சொல்லவே வேண்டாம். ஊமைச்செந்நாய் மொழியும் அனல்காற்று மொழியும் ஒன்றா என்ன? ஒவ்வொன்றும் தனித்தனி. மலேசியாவில் ஒருவர் அப்படி இருக்கிறார் என்பது பெருமையே. அதை மதியழகன் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அடுத்ததாக மணியம் என்ற பாத்திரத்தின் மீதான குறைபாடும் முக்கியமானது. பெரியாரின் பற்றாளன் என்பதால் ஒரு தனி மனிதனுக்கு நிலையற்ற மனநிலை இருக்கக்கூடாதா என்ன? யாராக இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் என்பதை நாம் சில சமயம் மறந்து விடுகிறோம். பற்றறுத்து துறவு பூண்ட சாமியார்கள் சிலர் சபலப்படுவதெல்லாம் இந்த மனித இயல்பு அடிப்படையில்தானே. கணவனை பொறுத்துக்கொண்ட கண்ணகி மதுரை எரிக்கும் வீரம் கொண்ட கதையெல்லாம் எவ்வளவு பழையது? எழுதும் முன் எதையுமே வாசிக்க மாட்டார்களா? யோசிக்க மாட்டார்களா?

மணியம் பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒரு சராசரி மனிதர். அதிலும் ஒரு நிலையான மனநிலையில்லாதவர். அதை மிகச் சரியாகவே கண்டடைந்திருக்கிறார் மதியழகன். ஆனால் அந்தக் கண்டடைதலே அவருக்கு சிக்கலாக இருப்பதுதான் குழப்பம். திடீர் திடீர் என மணியம் அவரை திகிலடைய வைத்திருக்கிறார். அதை மாற்றிச் சீராக எழுதவேண்டுமென்றால் அது சினிமாத்தனமாக இருக்குமல்லவா? ஆனால் மதியழகன் சினிமாத்தனமான காட்சிகள் எனச் சாடும் இடங்களெல்லாம் அவர் கட்டுரையின் நகைச்சுவைப் பகுதிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

மதியழகன் அவர்கள் முன்வைத்திருக்கும் ஏகப்பட்ட குற்றங்களில் என்னை அதிகமாகக் குழப்பங்கூடிய குற்றமொன்றும் உள்ளது. அவர் எழுதியதை அப்படியே இங்கே பதிவிடதான் வேண்டும்.

“7. இன்று பல பள்ளிகளில் LGBT ஒரு பெரிய சிக்கலாக, தலைவலியாக உள்ளது. அதற்குக் காரணம் LGBT தவறில்லை. அது சரியானது என்று பொதுவில் விவாதம் செய்வதே அதற்கான காரணம். இன்று பல இடைநிலைப்பள்ளிகளில் பெண் பிள்ளையும் பெண் பிள்ளையும் காதலிப்பதும், ஆண் மாணவனும் ஆண் மாணவனும் காதலிப்பது சகஜமாக நடக்கிறது.

8. இன்று பல பள்ளிகளில் இது மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சில மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளி மாற்றிக் கொண்டு செல்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பெரிய தலைவலியாக உள்ளது. இளையோரிடையே ஒழுக்க சீர்கேடாக இது உருவாகி உள்ளது.

9. நவீன் இப்போது செய்திருப்பதும் இதுதான். இது போன்ற வார்த்தைகளை வெளிப்படையாக தன் நாவலில் வேண்டுமென்றே புகுத்தி, அதை இன்றைய இளையோர்களிடையே விதைக்கிறான். இதை படிக்கும் இளையோர்கள் இது போன்ற வார்த்தைகளை கூச்சமின்றி பேசவும்; தங்கள் படைப்புகளில் தாராளமாக பயன்படுத்தவும்; பள்ளி தேர்வுகளில் பயன்படுத்தவும் தயங்க மாட்டார்கள். இது நிச்சயமாக சமூதாய சீர்கேடுகளில் ஒன்றாக உருவாகும். நவீன் சமூக சீர்கேடுகளை தயங்காமல் செய்யக்கூடியவன்.”

LGBT என்பது lesbian (பெண்ணை விரும்பும் பெண்), gay(ஆணை விரும்பும் ஆண்), biseksual (ஆண் பெண் இருவரிடமும் ஈர்ப்புள்ளவர்கள்), மற்றும் transeksual (ஆண் தன்மைக் கொண்ட பெண் அல்லது பெண் தன்மை கொண்ட ஆண்) ஆகிய நான்கு வகையில் வரையறுக்கப்படுகிறது. இந்த நான்கு வகையில் மதியழகன் கூறியிருப்பது lesbian மற்றும் gay ஆகிய இரண்டு வகையை மட்டும். அதிலும் நாவலில் பயனபடுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் இந்த எண்ணங்களை இளையோர்களிடம் விதைப்பதாகக் கூறியுள்ளார். மதியழகனின் அறிவுச்சுடரை நான் இந்த வாக்கியத்தில்தான் புரிந்துகொண்டேன்.
உலகம் தெரியாத ஒரு சிறுவன் நடந்து செல்கிறான். அப்போது காகம் அவன்மேல் மலம் கழிக்கிறது. கொஞ்ச நேரத்தில் மழை பெய்கிறது. சிறுவன் காகம் மலம் கழித்தால் மழை பொழியும் எனப் புரிந்துகொள்கிறான். சாட்சாத் இதுதான் மதியழகன். அவருக்கு எதுகுறித்தும் தேடல் இல்லை. வாசிப்பவரை அச்சமடைய வைக்க சில வார்த்தைகளைப் பொறுக்கி எடுக்கிறார். பின்னர் தனக்கு தெரிந்த அவதூறுகளுக்கு வலு சேர்க்க அதனை உள் நுழைக்கிறார்.

ஆமாம். ஓரினக்காதல் பற்றிய சிந்தனைக்குப் பேய்ச்சி நாவலில் துளிக்கூட இடமில்லையே. அப்படி ஒரு சிந்தனையே உருவாகவில்லையே. அப்படியிருக்கு அதைப் பற்றிப் பேசவதற்கான காரணம் என்ன? இது உண்மையில் மதியழகன் நாவலைப் படித்தாரா என்ற கேள்வியைத் தூண்டுகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் நினைக்கும் அதீத கற்பனை அவருக்கு. இதை வாசித்து நம்பியவர்கள் எத்தனைப் பேரோ? இதில் கருணாகரனை அதை வாசிக்க அவசியமில்லை எனச் சொல்வதெல்லாம் அவர் புத்திக்கூர்மையை வியக்க வைக்கும் வாசகங்கள்.

அதே போல், வாழ்க்கையின் எல்லா நிர்பந்தங்களையும் துணிவோடு எதிர்க்கொள்ளும் துணிச்சலான ஓலம்மா கதையின் இறுதியில் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பதெல்லாம் முரண் எனவும், திடீரென அவள் எப்படி கோழையாகப் போனாள் என்பது மதியழகனின் கேள்வி. உண்மையில் கதையை ஆழ்ந்து வாசித்தவனுக்குத் தெரியும் ஓலம்மா கழுத்தறுத்துக் கொண்டு இறக்கும் தருணத்தின் வீரியம் எதுவென. அது தாய்மையின் இயலாமையிலிருந்து புறப்படும் உச்சநிலை வதம். ஒரு சன்னத நிலை. கண்ணகி முலையை அறுத்து எரிந்தாலே அதுபோல.

கீழ்காண்பது மதியழகன் வரிகள்:

‘இறுதியாக நவீன் போலவே கீழ்மையான புத்தி உள்ளவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், சமூதாய அக்கறை இல்லாதவர்கள் இந்த நாவலை வாசிக்கலாம். ஆகா ஓகோ என்று புகழலாம். சமூகத்தின் மீது அக்கறை இருப்பவர்களும், இளையோர்கள் மீது கவனம் இருப்பவர்களும் இந்த நாவலை குப்பையில் வீசிவிடுவார்கள்.’

இவ்வாறான வரிகளுக்குப் பின் இதை அவர் விமர்சனம் என்கிறார். கொஞ்சமும் இலக்கிய புரிதல் இல்லாதவர்கள் எழுத்தாளர் நவீன் எழுதுவதுபோல இதுவும் விமர்சனம்தான் என்கின்றனர். ஒரு விமர்சனத்துக்கும் தனிமனித சாடலுக்கும் இங்கு பேதம் தெரியவில்லை என்பதுதான் வருத்தம்.

இந்நாவலை வாசிப்பதும் வாசிக்காததும் அவரவர் சுய உரிமை. அப்படி சுய உரிமையின் அடிப்படையில் வாசிப்பவர்களின் ஒழுக்கம் பற்றியெல்லாம் பேசக்கூடிய உரிமை மதியழகன் அவருக்கு இல்லை. ஒரு வேளை ஒரு மகத்தான படைப்பளியாக அந்த உரிமை தனக்கு உள்ளதாக அவர் கற்பனை செய்திருக்கவும்கூடும். உண்மையில் அவர் தன்னைப் பற்றி உருவாக்கிக்கொள்ளும் கற்பனைகள்தான் எவ்வளவு சுவாரசியமானவை.

வரிசையாக எண்களை இட்டு நாவல் குறித்து எழுதியும் நாவலுக்குள் உள்ள அரூபமான எதையுமே கண்டடையாதது ஒரு வாசகனின் தோல்வி அவரது எனும்போது அந்த தோல்வியை அப்படியே அதே படைப்பாளியின் முதுகில் ஏற்றி சுமையாக்கி அழகுபார்ப்பது எத்தனை அபத்தமானது. என்னதான் சானக்கியத்தனமாக ஒரு படைப்பை நீருக்குள் அமுத்தி மூழ்கடிக்க நினைத்தாலும் அது தன்னைத் தானே காட்டிக்கொள்ளும். அதற்கு எந்த புகழாரமும் தேவையில்லை. இலக்கியத்துக்கும் இயற்கைக்குமான பந்தம் மிக பக்கம். அவை ஒன்றை ஒன்று காக்கக்கூடியவை.

(Visited 236 times, 1 visits today)