பேய்ச்சியின் திருவிளையாடல்- புனிதவதி

எழுத்தாளர் ம.நவீன் வலைப்பக்கத்தில் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தேன். அது இலக்கிய விமர்சனம் இல்லை. முன்பு எங்கள் தோட்டத்தில் இரு கிழவர்கள் செய்தித்தாளைப் படித்துவிட்டு இரவில் சாராய போதையில் நாட்டு நடப்பு பற்றி காரசாரமாகப் உளறிக்கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அதுதான் அந்தக் கட்டுரை. இது எதிர்ப்பார்த்த ஓன்றுதான். ம.நவீனுக்கு இவ்வகை உளறலைப் பார்த்து பார்த்துச் சலித்துப்போய் இருக்கும். எனக்குதான் புதிது.

மதியழகன் போகிற போக்கில் வல்லினத்தில் எல்லாக் கட்டுரையும் ஓரே மாதிரியான தட்டையாக இருக்கும் எனக் கூறியுள்ளார். வல்லினத்தை இடம் பெற்ற படைப்பினை நான் 2016 முதல் படித்துக் கொண்டு வருகிறேன். தட்டை எனும் சொல் நான் அதிகம் வல்லினத்தில் தான் வாசித்ததுண்டு. காத்திரம், காறார், படிமம், மெனக்கெடுதல், அபோத்தம், மொண்ணை இவைகள் யாவையும் நான் வல்லினத்தில் கண்ட சொற்கள். வித்தையைக் குருவிடம் கற்றுக் கொண்டு அவரிடமே மதியகழன் உபயோகித்துப்பார்க்கிறார். எனக்கென்னவோ வல்லினத்தின் கட்டுரை ஒரே மாதிரி இருக்கும் என்பதை தரமாக இருக்கும் என அவர் கூறுவதாகப் புரிந்துகொள்கிறேன். தட்டையாக இருக்கும் என்பதை மதியழகன் கூறும்போது நாம் பாராட்டாக நினைக்கவேண்டும். அவருக்குத் தரமாக இருப்பதெல்லாம் என் பார்வைக்கு குப்பையாக இருக்கும்போது அவர் எதையாவது பாராட்டினால்தான் அது அருவருப்பு.

நவீனுடைய பல எதிர்வினை கட்டுரைகள் பொய்யைத் தோலுத்துக்காட்டும். பல ஆதாரங்களை முன் வைத்துப் பேசும். ஆனால் மரியாதைக் குறையாது. விமர்சிக்கப்படுபவர் தவறுகளை முன் வைப்பார். அவர்களை சுயமரியாதைக் குறைவாகப் பேசியது கிடையாது. அறிவுத் திருடனைக்கூட வயதிற்கு மரியாதைக் கொடுத்து அறிவுத்திருடர் என்றது அவர் வளைத்தளத்திலேயே கட்டுரையாக உள்ளது.

மதியழகனுக்குக் காழ்ப்புணர்ச்சியில் சொற்கள் வெளிவருவதை அனைவரும் அறியக்கூடியதே. இலக்கியச் சூழலை அறியாத பலரும் அவர் கட்டுரையை வாசித்து அந்தக் காழ்ப்பைப் புரிந்துகொண்டனர்.

இக்கதையினை படித்தவற்களுக்கு இதன் நுணுக்கமான சித்தரிப்பு பிரமிக்க வைக்கும். எடுத்துகாட்டாக, நாய்கள் குரைக்கும் விதம். அது நம்மைத் தாக்குமா அல்லது தாக்காதா என்பதனை துள்ளியமாக விவரித்திருப்பார் நவீன். நாயைப் பற்றி சொல்லுதல் என்பது வேறு ஆனால் ஒரு புனைவில் நாயில் பல்வேறு குணாதிசியங்களை எடுத்து வருதல் வேறு. ஆராய்ச்சியாளர்கள் DION FOSSEY and Steve Irwin போல நவீன் நாயின் பல்வேறு பரிணாமங்களையும் நாவலில் காட்டியிருப்பார். அதுபோல பிராணிகள் காட்டின் பூகோளத்தன்மையை மாற்றக்கூடியது என்பதை நவீன் கதையோட்டத்தில் கூறியிருப்பார். இதுபோன்ற குறிப்புகள்தான் நாவலை நெருங்கிச்செல்ல துணை புரிகின்றன. காரணம் அந்த நிலத்தை நமது அருகாமைக்குக் கொண்டு வந்து காட்டுகின்றன.

நாவலில் முக்கியமான பகுதி மூலிகைகளைக் கையாளும் விதம். மிகுந்த நுட்பமாக நவீன் அதில் சில தகவல்களைக் கூறியிருப்பார். சர் ஜகதீஷ் சந்திரபோஸ் இந்திய தாவரவியல் விஞ்ஞானி, தாவரமும் உண்டு, களித்து, மகிழ்ந்து, தூங்கி தங்கள் வாழ்க்கையைக் கடக்கின்றன என LIVING THINGS AND NON LIVING THINGS எனும் புத்தகத்தில் சான்றுடன் எழுதியுள்ளார். இவ்வாறு தகவல்களாக உள்ள விசயங்கள் புனைவுக்குள் பல வண்ணங்கள் பூசப்பட்டு மிளிர்வது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு புனைவில் வாழ்வியல் எவ்வளவு முக்கியமோ அதேபோல பூகோளம் சார்ந்த விளக்கமும் அதனூடே ஒத்துவரக்கூடிய அறிவியலும் முக்கியம். உதாரணமாக, ஒரு காட்சி எந்தப் பொழுதில் நடக்கிறது என சித்தரிக்கப்படுகிறதோ அந்தப் பொழுதில் அந்தப் பறவை கத்துமா? அந்தக் காலத்தில் அந்த மலர்கள் மலருமா? நிழல் எங்கே இருக்கும்? சீதோசண நிலை என்ன என்பது முக்கியம். ‘பேய்ச்சி’ அந்தத் தகவல்களைத் துல்லியமாகக் கொண்டுள்ளது. அதுவே ஒரு வாழ்வியல் இன்பத்தைக் கொடுக்கிறது.

பேய்ச்சி பொழுதுப்போக்குக்காக வாசகனின் தேவையைப்பூர்த்திச் செய்வதற்காக எழுதியது கிடைக்காது. ஆழ்ந்து படித்தால் மட்டும்தான் உணர இயலும். பசிக்கு உணவுப்பார்த்தால் பசி தீருமா? உண்ண வேண்டும். இல்லாவிட்டால் உணவின் மணம் நாசியில் மட்டும் பயணிக்கும்; பசியைத்தீர்க்காது.

கதையில் அதிக கெட்ட வார்த்தைகள் ஆபாச வார்த்தைகள் நவீன் எழுதியிருப்பதாக ஓரு குற்றச்சாட்டு. தோட்டப்புறத்தில் இது மிக சர்வ சாதரணமான நடைபெறும். பீலி சண்டையில் கோழிமுட்டைக் களவும் போகும் போது, திரைப்படம் பார்க்கும் இடம் பறிப்போகும் போது, தீம்பாரில் இரப்பர் பால் ஊற்றும் வரிசையில், ஏன் கோவிலில் பிரசாதம் வாங்கும் போதும்கூட யாரும் ‘இனிய உளவாக’ என்று திருக்குறளைப் பின்பற்றுவதில்லை. அதுதான் வாழ்வியல். மதியழகன் இதுவரை திரைப்படமே இயக்காத திரைத்துறை கலைஞர் எனக் கேள்விப்பட்டேன். இதுவரை அவர் திரைப்படமே ஆகாத தன் திரைக்கதை அமைக்கும் திறனைக் கொண்டு திரைப்பட பட்டறையெல்லாம் நடத்துகிறாராம். அவர் கொஞ்சம் உலக திரைப்படங்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியலாம். உலகத் திரைப்பட மேதைகள் சிலாகிக்கும் city of god திரைப்படத்தைச் சொல்லலாம்.

ஒரு படைப்பாளன் காட்சியைக் காட்டவேண்டும் எழுதக்கூடாது இதுதான் நவீன இலக்கியத்தின் இன்னொரு வேதாந்தம். அந்த வாழ்வைக் காட்ட அந்த மக்களின் மொழிதான் முக்கியக் கருவி.

நவீன இலக்கிய வாசகனுக்கு இவ்வகை சந்தேகங்கள் சிந்தனையில் நிழலில் கூட விழாது. யாதார்த்தக் கலையை ஓர் எழுத்தாளன் எழுதினால் தனி மனிதனின் ஒழுக்கையும் நடத்தையும் கூறுப் போட்டுக் கூறுப் போட்டு கசாப்புக்கடையில் சதைப் பிண்டமாகத் தொங்க விடுவார்கள் அறியாமையின் அங்கவீனர்கள்.

நாவலில் எனக்குப் பிடித்தப் பகுதி குழந்தை வளர்ப்பு எப்படி இருக்க வேண்டும் ம. நவீன் இயல்பாக உரைத்திருப்பார். ஓலம்மா அப்போயை இயல்பாக வளர்ந்த்திருப்பார் , நல்லது கெட்டதை அவனே புரிந்து கொண்டு நடப்பான்.பறவையை புதைத்து விட்டு மன்னிப்புக் கேட்டு விட்டு. தாத்தா கெட்டவர் எனக் கூறிச்செல்வான். அதற்கு முன்புவரை அவன் ஒரு வேட்டைக்காரனாக வர வேண்டும் என்ற கனவையும் ஓலம்மா தடுக்கவில்லை. மரம், செடி போல மனிதனும் இயல்பாகத் தளைத்துவர வேண்டும் என ஓலம்மா விரும்புபவளாக இருப்பாள்.

இக்கதையில் தத்துவங்கள் எண்ணில் அடங்காமல் இன்னொரு காடாக செழித்து வளர்ந்து கிடைக்கிறது. நுணுகிய வாசகர்களால் மட்டும்தான் இதைச் சுவாசிக்க இயலும். கதையில் வரும் சில சொற்கள் இங்குப் பேசும் வழக்கமில்லை என குற்றச்சாட்டு இருந்தது. ஒரு சாட்சியாகத்தான் இதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

என் பாட்டிய சாலையைச் ‘சடக்கு ‘எனக்கூறுவார். வீட்டை ‘ஊட்டுல’ என்றுதான் கூறுவார். ‘ஒடப்புலே ஒரம்’ வேணும் என்பார். அவர் ‘ஒரே இசாமி’ என்றால் ஒரே தொல்லை என அர்த்தம். இப்படி இன்னும் பல சொற்கள் உள்ளன. கச்சரா என்றால் அழுக்கு எனப் பொருள். குப்பையைச் சேத்தை என்பார்,

நான் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தபோது அவர் அருவியோரமாக நின்று ஒரு வாளியில் நீர் அள்ளிப்பிடித்து குளிப்பதாகக் காட்சித் தோன்றியது. பக்கத்திலேயே கருணாகரன் அவர் குளித்து ஒழுகும் நீரில் புரண்டுக்கொண்டிருந்தார். இருவருக்கும் அருவியில் குளிக்கும் அனுபவம் வாய்க்கப்போவதே இல்லை.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது இப்படி நினைத்துக்கொள்கிறேன். என் வேலைகளுக்கு நடுவில் இதை எழுத என்னக் காரணம்? உண்மையில் ஒரு நல்ல படைப்பு தன்னை ஏதோ ஒரு வழியில் வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது. அதுதான் இயற்கை. மதியழகனை உளற வைத்து அதன் வழி என்னைப் போன்ற பலரையும் மறுமறுபடி பேய்ச்சி நாவல் குறித்து பேச வைத்துள்ளது. அதன் மூலம் பேய்ச்சி மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்துகிறாள். அதற்கு ஒரு கருவியாகச் செயல்பட்ட மதியழகனுக்கு நன்றி சொல்வோம்.

.

(Visited 210 times, 1 visits today)