‘பேய்ச்சி’ நாவல் குறித்த மதியழகன் கருத்தை நான் என் வளைத்தளத்தில் பதிவேற்றியபோது நண்பர்கள் மத்தியில் இருந்த ஒரே கேள்வி, ஏன் அதை நான் பதிவேற்ற வேண்டும் என்பதே. அதில் அடங்கியுள்ளது வன்மமும் அவதூறும் மட்டுமே என்பதனை வாசித்த பலரும் உணர்ந்திருந்தனர். அப்படி இருக்க, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது நண்பர்களின் குழப்பமாக இருந்தது. ஆனால், அடிப்படையில் நான் ஒன்றை சோதிக்க விரும்பினேன். அதனை சில நண்பர்களிடமும் கூறியிருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை மற்றும் எனது கவிதையை ஒட்டி இவ்வாறான சர்ச்சைகள் எழுந்தன. என்னளவில் படைப்பில் உள்ள கலை குறைப்பாடுகள் சார்ந்த விமர்சனங்களுக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுப்பவன். அதன்வழி மட்டுமே ஒரு படைப்பாளி தன்னை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் மேம்போக்கான வாசகர்கள், தங்கள் மனநிலையில் உருவகித்து வைத்துள்ள ஒரு படைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அவ்வாறே அது அமைய வேண்டும் என வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இங்கு கோஷங்கள் அதிகம். இன்னும் சிலர் சர்ச்சைகளை உருவாக்கவென ஏற்படுத்தும் திரிந்த கருத்துகளுக்கும் கூட்டம் சேர்வதுண்டு. ஆனால் இதனால் குழப்பம் அடைவது கலை இலக்கியச் சூழலில் புழங்காத எளிய மக்கள்தான்.
பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அடிப்படையில் அது பலவீனமான நாவல்தான். ஆனால் அதன் கலைக்குறைபாடுகள் குறித்து விவாதம் நடத்த தேர்ந்த வாசகனால் மட்டுமே முடியும். மற்றபடி குறிப்பிட்ட சாதியினரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சையில் முற்றிலும் வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கூட நாவலை எதிர்த்தார்கள். அவர்களுக்குக் கலை இலக்கியங்களின் அடிப்படைத்தன்மை புரியாது. இந்த அறியாமையை அவதூறு பரப்புபவர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். எளிய மக்களின் கொந்தளிப்பை கலைஞர்களுக்கு எதிராகத் திருப்பிவிட முனைகிறார்கள். ஆனால் கலைஞன் அவர்களுக்காகவும் சேர்த்தே இயங்குகிறான்; அதுவே அவன் பணி.
ஏறக்குறைய மலேசியாவில் அப்போது நிகழ்ந்ததும் அதுதான். ஆனால் அந்த எதிர்வினைகளுக்கு நான் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். எப்போதுமே இதுபோன்ற பதில்கள் சர்ச்சையை உருவாக்குபவர்களுக்கானவையல்ல. காரணம், சர்ச்சையை உருவாக்குபவர்களுக்கு முன்முடிவுகள் உண்டு. அந்த முன்முடிவுகளை சில நாட்களில் தங்கள் ஆளுமையில் ஒன்றாக அமைத்துக்கொள்கின்றனர். எனவே அம்முடிவை மாற்றுவது தன்னையே சிதைத்துக்கொள்வதற்குச் சமம் எனக் கருதுகின்றனர். ஆனால், படைப்பாளி குழம்பியுள்ள சமூகத்திடம் உரையாட வேண்டும்; தெளிவுப்படுத்த வேண்டும். மக்களிடம் கடைசியாக வந்து சேர்ந்திருப்பது ஒரு படைப்பிலக்கியத்தின் ஒரு துண்டு செய்தி மட்டுமே. பல்வேறு நிலையில் ஒடுக்கப்படும் மலேசியத் தமிழர்களுக்கு அவ்வாறான சிறிய திடுக்கிடல்கூட கோபத்தையும் அச்சத்தையும் வரவழைக்கும். எனவே படைப்பாளி, அப்பொறுப்பை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.
நான் கடுமையாக வசைப்பாடப்பட்ட எல்லா காலங்களிலும் இந்த உரையாடலை நிகழ்த்தியிருக்கிறேன். இண்டர்லோக் விவகாரத்தில் ‘பறையன்’ என்ற சொல்தான் அடிப்படையில் இங்குள்ள மேட்டுக்குடி மனோவாத்தில் உள்ளவர்களுக்கு அசூசை உணர்வைத் தருகிறது என்று நான் பேசியபோதும், எழுத்தாளர் சங்கம் ராயல்டி விசயத்தில் செய்த ஏமாற்றுத்தனத்தின் போதும், மணிமன்ற பொங்கல் விவகாரத்தின் போதும், ஒரு சிறுகதை சமயத்தை அவதூறு செய்துவிட்டது என நாளிதழ்களில் செய்திகள் வெளியான போதும் நான் என் நிலைப்பாட்டில் சந்தேகம் கொண்டவர்களிடம் தெளிவுபடுத்தியதில் பின்வாங்கியதில்லை. காரணம் அவை விவாதத்திற்கென்றே முன்வைக்கப்பட்ட கருத்துகள். அதனால் கருத்தைக் கூறிவிட்டு கள்ள மௌனம் சாதிப்பது தவறு.
அதே சமயத்தில் என்னுடய புனைவிலக்கியம் எவ்வளவு கீழாக விமர்சனம் செய்யப்பட்டபோதும் நான் அதற்கு பதில் கூறியதும் இல்லை. இதை நான் ஷோபா சக்தியிடம் கற்றுக்கொண்டேன். அவர் ஜெயகாந்தனிடம் கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார். எதிர்விமர்சகரிடம் தன் புனைவு எதையெல்லாம் கூறுகிறது என எழுத்தாளன் எப்போது விளக்கத் தொடங்குகிறானோ அப்போதே அவன் தோற்றவனாகிறான். அவ்வாறு விளக்க முற்பட்டால் அவன் அந்தப் புனைவை எழுதியிருக்கவே வேண்டாம். எழுதி முடிந்தபிறகு அவன் அடுத்த செயல்பாட்டை நோக்கி நகர்ந்துவிட வேண்டும். அவ்வகையில் ‘பேய்ச்சி’ நாவலை குப்பை என்ற மதியழகன் கருத்துக்கு பதில் சொல்ல எனக்கு அவசியம் ஏற்படவில்லை. அதேபோல தமிழில் எழுதப்பட்ட முதன்மையான தலித் சிறுகதையென வண்டியை சு.வேணுகோபால் அவர்கள் கூறியதை மறுத்து அதுவும் ஒரு குப்பை சிறுகதை என மதியழகன் கூறியதற்கும் இன்றுவரை நான் மறுப்பு சொல்லவில்லை. என் வேலை என் படைப்புகளைத் தற்காத்து அரண் அமைப்பதல்ல. எந்த நல்ல கலைஞனும் அதை ஒருபோதும் செய்ய மாட்டான். அதையெல்லாம் தாண்டி, மதியழகன் போன்ற இலக்கியப் புரிதல் அற்றவர்களின் கருத்துகளைப் பொருட்டாக நினைத்து பதில் கூறுவதே இலக்கியத்திற்குச் செய்யும் தீங்கு அல்லவா.
ஆனால், மதியழகன் கருத்துகளில் நாவலை விட்டு வெளியேறிய பல வசைகள் இருந்தன. தவறான புரிதல்கள் இருந்தன. மிக எளிதாக நான் அந்தப் பதிவை பிரித்து அவரது அறியாமையை உணர்த்திவிட முடியும். ஏற்கனவே இருமுறை செய்தாகிவிட்டது. இருமுறை அவமானப்பட்டும் விட்டார். ஆனால் “அடி நான்தான் அதிகம் வாங்கினேன். அதனால் கப்பு எனக்குத்தான்” என வடிவேலு ரத்தக்காயத்துடன் கப்பைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல அடுத்த சில நாட்களில் அவர் வல்லினத்தை அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டிருப்பார். இது ஒரு வினோத நோய் என காலம் தாழ்த்தியே தெரிந்தது. எனவே இம்முறை நான் அதைச் செய்ய விரும்பவில்லை. என் சார்பாக வல்லினம் நண்பர்கள் அந்த நாவலின் நுட்பம் குறித்து பேசுவதையும் விரும்பவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக வல்லினம் மூலம் உருவாகி வந்த வாசகர்கள், எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. நான் அதை அறிய நினைத்தேன். காரணம் கடந்த 50 ஆண்டுகளாக விமர்சனங்கள் அற்ற, படைப்புக்கு எதிரான குரல் வரும்போது அதற்கான எதிர்வினைகளையும் சொல்லாமல் இருக்கும் வாசகர் பரப்பு மலேசியாவுடையது. அவ்வாறான மௌனம் காத்து தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாகக் கருத்துகளைச் சொல்லும் தன்மைதான் இன்னமும் உள்ளதா என அறிய ஆவலாக இருந்தது. ஆனால் நடந்தது வேறு.
ஏறக்குறை 17 கடிதங்கள் அடுத்தடுத்து என் மின்னஞ்சலுக்கு வந்தன. ஒவ்வொன்றையும் வாசித்து, ஒரு நாளைக்கு ஒன்று என பதிவேற்றிக்கொண்டே இருந்தேன். அவற்றில் மதியழகனுக்கு ஈடாக அவரை, அவர் புனைவை வசைப்பாடிய கடிதங்கள், தனிமனித அவதூறுகள் செய்தவை, ஆழமான கருத்துகள் இன்றி எதிர்வினையாற்றியவை என சிலவற்றை பிரசுரிக்க முடியாது என தவிர்த்துவிட்டேன். எனக்கு எப்போதுமே மதியழகன் ஒரு பொருட்டல்ல. இலக்கியம் அறிந்த ஒருவருக்கும் அவர் ஒரு பொருட்டானவர் அல்ல. அவர் தொடர்ந்து அவதூறுகள் எழுதுவதே அவரது அசலான தரத்தைக் காட்டக்கூடிய சிறந்த வழிதான். எனவே அதை அவர் தொடர்ந்து செய்ய நான் வரவேற்கிறேன். ஆனால் அறிவார்த்தமான விவாதங்களை முன்வைக்கும் ஒரு தலைமுறை உருவாக வேண்டும் என்ற பேராவல் பேய்ச்சி நாவல் வழி கடந்த சில நாட்களில் நிகழ்ந்தது எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.
வரலாற்றை முன்வைத்தும், இலக்கிய நுட்பங்களை கோடிட்டும், சங்க இலக்கியத்தை முன் மாதிரியாகக் கொண்டும், நாவலில் உட்புதைந்துள்ள நுணுக்கங்களை ஒட்டிப் பேசியும் பல இளம் வாசகர்களும் படைப்பாளிகளும் எதிர்வினையாற்ற முன்வந்தது, இந்நாட்டில் ஆரோக்கியமான இலக்கியச் சூழல் உருவாகி வருவதற்கான சான்று. பல மூத்தப் படைப்பாளிகள் இவர்களெல்லாம் யார் என ஆச்சரியப்பட்டனர். அவர்களது அறிவார்த்தமான விவாதமுறை குறித்து எனக்கு புலனம் மூலம் ஆச்சரியச் சொற்கள் வந்துகொண்டே இருந்தது. இந்நிலை கடந்த காலங்களில் இல்லை அல்லது மிகக்குறைவு. அதற்கு சமூக மரியாதையைத் தக்க வைக்க நினைப்பது காரணமாக இருக்கலாம். இங்கு விமர்சனம் செய்பவர்களும் எதிர்வினை ஆற்றுபவர்களும் கடைசியில் தனிமனித அவதூறுக்கு உள்ளாவது வாடிக்கை. ஆனால் இம்முறை அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் பெண் வாசகர்கள் பலரும் பேச முன் வந்தது ஆச்சரியம். (இதற்கிடையில் ‘இதுதான் என் கருத்தும்’ என ரகசியமாக புலனத்தில் பேசும் சிலரும் இருக்கவே செய்தனர். பாவம்தான் அவர்கள் நிலை.)
என்னளவில் மதியழகன் பேய்ச்சி நாவலுக்கான ஒரு கருவியாகப் பயன்பட்டதாகவே எண்ணுகிறேன். அவர் தன்னை அறியாமல் பல நன்மைகளைச் செய்கிறார்.
முதலில் அவர் முகநூலில் அவதூறு கட்டுரை எழுதினார். அதன் பின்னர் நான் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தியதாக புலனம் வழி என் படத்தையும் இணைத்து அவதூறுகளைப் பரப்பினார். அதை ஒட்டி இரண்டு நாட்களாக (30,31 ஜனவரி) தொடர்ந்து பலரையும் நேரில் சந்தித்தும் தொலைபேசி வழி விளக்கமும் கொடுத்தும் வந்தேன். இதுபோன்ற சர்ச்சைகள் உருவாகும்போது நான் ஓடி ஒளிவதில்லை. முதலில் சமூக ஊடகம் வழி பரப்பட்டும் செய்தியை அறிந்து அழைப்பவர் நம் எதிரியல்ல. எதிர் கருத்தைக் கொண்டவர். ஒருவகையில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். அதனால்தான் அவர்கள் வேலை மெனக்கெட்டு அழைக்கிறார். நேரில் சந்திக்க விரும்புகிறார். எழுத்தாளனுக்கு அவர்களிடம் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அப்படிச் சந்தித்த பலரும் தங்கள் குழுவில் பகிர்ந்துகொள்ள நாவலை வாங்கி சென்றனர். சிலர் பணம் அனுப்பி நூலை அனுப்பக் கூறினர். பெரும்பாலோர் நல்ல நண்பர்கள் ஆயினர். இன்று ‘பேய்ச்சி’ என்ற பெயர் பெரும்பாலோர் மனதில் நல்லதும் கெட்டதுமாக பதிந்துள்ளது. அவ்வாறு பெயர் பதிவதே முக்கியம். இனி நாவலை எங்குப்பார்த்தாலும் வாங்கி வாசிப்பர். வாசித்து முடித்தபிறகு அவர்கள் குழப்பம் தீர்ந்துவிடும். இப்போது என் கைவசம் 20க்கும் குறைவான நாவல்களே உள்ளன. குறுகிய காலத்தில் நாவல் அடுத்தப்பதிப்புக்குச் செல்லப்போவது மகிழ்ச்சி. இம்முறை கெட்டி அட்டையில் போடலாம் என நினைத்துள்ளேன்.
இதை நான் கேலியாகவோ அல்லது சவாலாகவோ சொல்லவில்லை. எந்தத் துறையில் ஈடுபட்டாலும் உள்ளார்ந்த அறவுணர்வு அவசியம். எழுதும்போது எழுத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அதுபோல நம் எதிர்க்கருத்தை முன்வைக்கையில் சமாளிக்கும் தொணி இருக்கவே கூடாது. இலக்கியத்தில் எதிர்க்கருத்து என்பது பட்டிமன்ற விவாதம் அல்ல. பட்டிமன்ற விவாதம் ஒரு வெற்றிக்காகத் தலைப்பை ஒட்டி நிகழ்வது. இலக்கிய விவாதம் உள்ளார்ந்த உண்மையை அறியும் பொருட்டு நிகழ்வது. எனவே ஒருவேளை நம் கருத்தில் தவறு என்றால் அதை ஒத்துக்கொள்ளுதலே எழுத்தாளனின் அறம். அதுபோல நம் கருத்தில் அல்லது எழுத்தில் தவறு என உணராதபோது புறத்திலிருந்து எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும் கொஞ்சமும் வளைந்துகொடுக்க வேண்டியதில்லை. ஆனால் பெரும் கோபங்களுக்கும் கூச்சல்களுக்கும் மத்தியில் தொடர்ந்து சோர்ந்துபோகாமல் உரையாட வேண்டும். எப்போதுமே போலி அகங்காரம் கொண்ட ஒரு இலக்கிய வாசகனை விட உண்மையை அறிய விரும்பும் எளிய மனிதனிடம் அறத்தின் சொற்கள் எளிதில் சென்று சேரும்.
இந்த திருப்தியில் நண்பர்கள் அனுப்பும் எதிர்வினைகளுக்கு ஒரு முற்றும் வைக்கலாம் என நினைக்கிறேன். பேய்ச்சி நாவல் குறித்த புதிய வாசிப்பு அனுபவமே இப்போதைய தேவை. நண்பர்கள் அதனை எழுதலாம். அதை அறியவே இப்போது விரும்புகிறேன். மற்றபடி நான் எதிர்வினை எழுதியிருந்தால் என்ன சொல்லியிருப்பேனோ அதைவிட பலமடக்கு ஆக்கப்பூர்வமான கடிதங்கள் கிடைத்துள்ளன. அது கொண்டாட்டமானது. வல்லினம் இத்தனை ஆண்டுகளில் எம்மாதிரியான வாசகர்களை உருவாக்கியுள்ளது என்ற பலரது கேள்விக்கான சான்றுகள் அந்தக் கடிதங்கள்.
அடுத்து இந்த அவதூறு பரப்பும் நபர்கள் என்ன செய்வார்கள் என்றும் எனக்குத் தெரியும். வழக்கறிஞர் ஆலோசனைப்படி புலனம் வழி பரப்பப்படும் தகவலை ஒட்டி ஒரு காவல்நிலையை புகார் செய்தேன். மறுநாள் மதியம் அழைத்த காவல்துரை அதிகாரி மதியழகன் என்பவர் உங்கள் மீது வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறினார் என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது. நானும் அதையே எதிர்ப்பார்க்கிறேன்; விரைவாகச் செய்யச் சொல்லுங்கள் என்றேன். கடந்த ஆறு ஆண்டுகளில் பார்க்காத எதையும் புதிதாக நான் சந்தித்துவிடப்போவதில்லை. அதை நான் தனி ஒருவனாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். நான் அனைத்திற்கும் தயாராகவே இருப்பவன். ஆனால் இதனாலெல்லாம் படைப்பிலக்கியம் சார்ந்த என் கருத்துகளிலும் விமர்சனங்களிலும் எந்த சமரசமும் இருக்காது. அடுத்தடுத்த பதிப்புகளில் நாவல் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வெளிவரும்.
நடக்கும் அனைத்தையும் கண்டுணர்ந்து புதிதாக எழுந்துவரும் படைப்பாளிகள் அறிந்துகொள்ள நிறைய உண்டு. ஓரளவு அனுபவம் உள்ளவனாக அதை மட்டும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
நீங்கள் உருவாகிவரும் காலக்கட்டத்தில் முதலில் உங்களை பெரும் கூட்டம் சிந்திப்பது போலவே சிந்திக்கத் தூண்டுவார்கள். அதை தவிர்த்து நீங்கள் எழுத்தின் வழி உங்களுக்கான தனித்துவத்தை தேட நினைத்தால் முதலில் அவதூறுகள் வரும். உங்கள் புனைவுகளோடு தனிப்பட்ட வாழ்க்கையைச் சம்பந்தப்படுத்தி கேலிக்கு உள்ளாக்குவார்கள். அதையும் கடக்கும்போது வசை பாடுவார்கள். நீங்கள் புனைவு முயற்சியுடன் நிற்காமல் கருத்துகளை, விமர்சனங்களை வெளிப்படுத்த ஆரம்பிக்கும்போது மிரட்டல்கள் வரும். நீங்கள் பணி செய்யும் இடத்திற்குப் புகார்கள் வரும். உங்கள் படத்தை நாளிதழிலும் புலனத்திலும் பதிவிட்டு அசிங்கப்படுத்திவிட்டதாக நினைப்பார்கள். நீங்கள் இலக்கியத்தை ஒரு பொழுதுபோக்கு என நினைக்கும் பட்சத்தில் இவை அனைத்தும் உங்கள் ஆழ்மனதை பாதிக்கும். ஆனால் ஒட்டுமொத்த இலக்கிய வரலாறை அறியும்போது இவற்றை நீங்கள் எதிர்கொள்ளும் துணிவைப் பெறுவீர்கள். நீங்கள் தனித்துவிடப்பட்டாலும் உள் எரியும் தீ அசையாமல் அதே கம்பீரத்துடன் நிலைத்திருக்கும். உங்கள் இடம் வரலாற்றில் என்ன என்பது தெரியும்போது மட்டுமே எல்லா நிலையிலும் படைப்பிலக்கிய மனதை தக்கவைக்கும் திறன் கைக்கூடும். உங்கள் கருத்துகளும் பார்வையும் முன்பிலும் தீவிரமாகும்.
இவ்வளவு சிக்கலெல்லாம் எதற்கு என நினைப்பவர்கள் கூட்டத்தில் ஒருவராக உங்களை இணைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு மிக எளிதாக விருதுகளும் பாராட்டும் தேடிவரும். காரணம் நீங்கள் இளைஞர்கள். இளைஞர்களை வளர்த்துவிட்டதாகச் சொல்லுவதில் இங்குள்ள இலக்கியக் குழுவுக்கு நிறைய கௌரவம் உண்டு. அந்த மகிழ்ச்சி உங்களுக்குப் போதுமானதென்றால் அந்தப் பாதையிலும் பயணிக்கலாம். நதியில் இறங்கி நடக்கும்போது ஏற்படும் தடுமாற்றமெல்லாம் ஒவ்வொரு கனமும் புதிய அலைகள் தள்ளிச்செல்வதால் நிகழ்பவை. சாக்கடையிலும் நீர் உள்ளது என நடக்கலாம். தள்ளுவதற்கு அலையொன்றும் எழாது அல்லவா.
எதிர்வினைகள்
சவமாகும் பேய்ச்சி – ஆசிர் லாவண்யா
படுத்து எழுந்த பாட்டன் – த.குமரன்
கோழைத்தனத்தின் கூட்டல் – பவித்தாரா
இலக்கியமும் இலேகிய விற்பனர்களும் – கி.இளம்பூரணன்
கடற்கரையில் குப்பை பொறுக்குவோர் – அ.பாண்டியன்
கருத்துக்குருடர்கள் – ஜோன்சன் விக்டர்
பேய்ச்சியின் திருவிளையாடல் – புனிதவதி
பேய்ச்சி குறித்த விமர்சனம்
தாய்மையும் பேய்மையும் – அர்வின் குமார்
பேய்ச்சி: புனைவாய்வு – ஆதித்தன் மகாமுனி
பேரன்பின் பெருமூச்சி – புனிதவதி