பேய்ச்சி: தாய்மையும் பேய்மையும்

வாசகனுக்குக் கலை இலக்கியத்தின், வாசிப்பின் பெறுபயன் என்பது வெறும் உணர்வு கடத்தலாக இருக்கும் என்று எண்ணி; உணர்வினைக் கடத்துகின்ற எல்லா எழுத்துப் பிரதிகளும் கலை இலக்கியமே என நான் தடுமாற்றம் அடைந்ததுண்டு. ஆனால், உண்மை கலையினை வேறுபடுத்தும் நுண்ணிய கூறுகள் உள்ளன என்பது தொடர்ந்து வாசிப்பில் துலங்குகிறது.

மொழியில் செயல்படும் இலக்கியம் என்பது மொழியைத் தாண்டியும் செயல்படுகிறது. மொழியில் பொருளின் மூலமே தன்னுடைய சாத்தியத்தை வழங்கும் படைப்புகளுக்கு இடையில் அதைத் தாண்டிய தேடலின் மூலமும் தன்னைப் புரிந்து கொள்வதற்கான வெளியை வழங்கும் படைப்பே சிறந்ததாக இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். அப்படியாகப் படித்து முடித்தவுடன் ஒரு தேடல், அலைவு ஏற்படுத்தும் படைப்புதான் ம.நவீனின் பேய்ச்சி.

பேய்ச்சி நாவல் மனித மனம் அறியாத சரடுகளைத் தொட்டுச் சென்று பேசுகிறது. சிறு வயதில் பல குட்டிகளை ஈனும் நாய் பசிக்காக குட்டியே உண்ணும் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. பெருந்தாய்மையுடன் பல குட்டிகளை ஈனும் நாய் பசிக்காகவோ வேறு ஒன்றுக்காகவோ குட்டிகளை உண்ணவும் துணியுமா என்பது கேள்வியாகவே இருந்து வந்திருக்கிறது. உக்கிரம் முன்னால் ஞாயம் இல்ல என்ற ஓலம்மாவின் வரியை மனதிலோட்டிப் பார்த்தால் ஓலம்மாவுக்கான நியாயத்தின் முன்னால் எதுவுமே அறமாகக் கூடும். ஆனால், தாய்மையின் மற்றொருமுனை அத்தகைய பேய்மையுடந்தான் முடிச்சிட்டிருப்பது இந்நாவலில் தெரிகிறது. தாயும் அவளே பேயும் அவளே என ஒரு வரி இந்நாவலில் வருகிறது. இந்நாவல் நெடுக வரும் பெண் பாத்திரங்களின் தாய்மை பேய்மை என இருமைக்குமான ஊசலாட்டமாகவே இந்நாவலைப் புரிந்து கொள்கிறேன்.

வெண்முரசில் துச்சளையின் தாய்மையை விவரிக்கும் போது பேரன்னை என்பது பேரளியிலிருந்தும் பிறக்கிறது பேராணவத்திலும் பிறக்கிறது என ஜெயமோகன் கூறுகிறார். அந்த வரி இந்த நாவலின் மையப்பாத்திரமான ஓலம்மாவைப் புரிந்து கொள்வதற்கான திறப்பாக இருக்கிறது. அவளுள் எழும் அன்னை உருவகம் என்பதும் தன்னைச் சுற்றிலும் இருப்பவற்றின் மீது அன்பு கிரணங்கள் பாய்ச்சிப் பெருங்கருணையைச் செலுத்துகிறாள். பிறப்பின் அடிப்படையில் நேர்கிற இழிவு, ஏமாற்றப்பட்டுக் கர்ப்பமடைதல் ஆகியவற்றிலிருந்து மேலேழவும் அவளின் பெருங்கருணை துணைபுரிகிறது. ஓலம்மாவின் கணவன் மணியம் சின்னியுடன் உறவு கொள்வதும் அவளின் தவறை மறைக்கவும் தயாராக இருக்கும்போது தன் கணவனையே கொல்லத் துணிகிறாள். பேராணவத்தில் திரண்டெழும் தாய்மையில் தன் கணவன் இறப்பதே தீர்வாக இருக்கும் என எண்ணுகிறாள். சின்னியையும் கொன்று தான் புனைந்து கொண்டிருக்கின்ற பேரன்னை தோற்றத்தை நிலைநிறுத்திக் கொள்கிறாள்.

ஓலம்மாவுக்கு எப்பொழுது தாய்மையும் பேய்மையும் தேவையாகிறதென்பதையும் இந்நாவலின் வழியே பார்க்க முடிகிறது. பிறிதொருவனால் நம்பி மோசமடைகின்ற போது தனக்கு ஏற்படும் நிர்க்கதி நிலையைப் போக்க தாய்மையைப் பூணுகிறாள். அந்த ஏமாற்றமும் சினமும் சுற்றியுள்ளவர்களின் மீதான அன்பினாலும் பெருந்தாய்மையிலும் சமனாகிறது. மணியம் கொடுத்த ஏமாற்றம் சினமாகத் திரண்டு உயிரைப் பறிக்கச் செய்கிறது. குமரனின் பிரிவும் நிலத்தின் இழப்பும் பேய்மை பூண்டு உயிரை வாதை செய்து கொள்ள தள்ளுகிறது. ஒருவகையில் இந்தத் தாய்மைக்கும் பேய்மைக்கும் இடையிலான ஊசலாட்டம் மானுடத்தின் உயிராற்றலாகக் கூட தோன்றுகிறது. பெண்களில் வெவ்வேறு வகையில் உறையும் அத்தனை உணர்ச்சிகளும் இவற்றின் திரிபுகளே என்று கூறலாம். நாவலின் பெண் பாத்திரங்களான காத்தாயி, ஓலம்மா, முனியம்மா, மாலதி என அனைவருமே இந்த ஊசலாட்டத்தில்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கதைமாந்தரின் வாழ்வும் பிறிதொருவருடன் பிணைந்து முயங்கி பெருஞ்சரடாக நீள்கிறது. கோப்பேரன் கைவிட்டுச் சென்ற மனைவி வேறொரு மணம் புரிந்து அவளின் கொடிவழியில் நீளும் பெண்ணே குமரனின் மனைவியாக இருக்கிறாள் என முதற்வாசிப்பில் எண்ணுகிறேன். அதைப் போன்றே ஓலம்மாவின் பேரனும் அவள் மகளின் பிறிதொரு வடிவாக நிலைகொள்கிறான். இன்று நாம் உழலும் துன்பமும் இன்பச் சரடுகளையும் தொற்றிச் சென்று மூலத்தை அறிந்தால் நாம் அறியாதத் தொன்மமும் மர்மமும் அதில் இருக்கும் என்பதாகக் கதை எளிய வாசிப்பில் புரிந்து கொள்ள முடிகிறது.

பேய்ச்சி நாவலை வாசிக்கும்போது இயல்பாகவே சிலப்பதிகாரத்தைத் தொடர்புறுத்திக் கொள்ள முடிகிறது. ஓலம்மா பேயாக மாறும் தருணங்களில் கண்ணகியும் சினம் கொண்டு மதுரையை எரித்துப் பேய்ச்சியாக அலையும் தருணங்களும் ஏதோ ஒருவகையில் தொடர்புடையவையாக இருக்கின்றன. அன்னைத் தெய்வமாகக் கண்ணகி ஆன மரபின் மீளாக்கமான ஜெயமோகனின் கொற்றவை நாவலைப் போன்றே மரபில் வழிவழியாகத் தன்னுள் பேய்மையையும் தாய்மையும் உணர்ந்த பெண்கள் நிரையின் பிரதிநிதியாகவே ஓலம்மா வருகிறாள். ஏதோ ஊகித்தறிய முடியாத வரலாற்றுக் காலத்தில் இப்படியாக உருமாறி போன அன்னைத்தெய்வமாகவே பேச்சியம்மனும் இருக்கக் கூடும்

இந்த நாவலில் மலேசிய தமிழர்களுக்கு மலேசிய மண்ணின் மீதான பிணைப்பும் விலக்கமும் கூட நன்றாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது எனலாம். ஓலம்மா போன்ற தொடக்கத் தலைமுறை புலம்பெயர் தமிழர்களிடம் மரபாக மண்ணின் மீது இருக்கின்ற அணைப்பு தொடர்வதைக் காணலாம். ராமசாமி போன்ற பாத்திரம் நிலத்தையும் இயற்கையையும் தன்னில் ஒருபகுதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறது. அதற்கடுத்த வரும் முனியம்மா போன்ற பாத்திரத்திடம் இயற்கை என்பது மெல்ல ஒழிந்து வாழ்வுக்கான பொருள் தேட்டமுமே மேலோங்கியிருக்கிறது. அதற்கடுத்து வரும் குமரனிடம் நிலம் குறித்த பிரக்ஞையும் என்பது நினைவுகளாகவே எஞ்சுகிறது. மூன்று தலைமுறை தமிழர்களிடம் நிலம் குறித்த பார்வையையும் புரிதலையும் உணர்ந்து கொள்ள நாவலின் இயற்கைச் சித்திரிப்பும் பாத்திரங்களின் மனவோட்ட விவரிப்பும் பெருந்துணை புரிந்திருக்கின்றன எனலாம். பொருளியற் சூழலால் தோட்டத்தை விட்டு அகன்றதும் இயற்கை வெறும் நினைவடுக்குகளில் எஞ்சிப்போவதைக் காண முடிகிறது. என் வாசிப்பில் மலேசியாவின் 70,80 களில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வைச் சொல்லும் மலேசிய நாவலாகவே இந்த நாவலைக் காண்கின்றேன். தோட்டங்கள் மெல்ல இரப்பர் மரம் ஒழிந்து செம்பனைக்கு மாறுவதும் தமிழர்கள் தோட்டம் விட்டு வெளியேறுவதும் கதையின் பின்னணியில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நிரையாக நடப்பட்டு இலையுதிர்காலம், இலைக்காலம் எனப் பருவ வேறுபாடுகளைக் காட்டி நிற்கும் இரப்பர் மரங்களுக்குப் பதிலாக நடப்படும் செம்பனை மரங்களும் தம் மட்டைகளால் காட்டை நிறைத்துக் காணச் செய்கின்றன. அந்த நிலத்தில் நடப்படும் புதிய பயிர் என்பது எழுந்துவரும் புதிய முறைமை, ஒழுங்குக்கான குறியீடு எனலாம். பழைய ஒழுங்குக்குள் வாழ்ந்த மனிதர்கள் மெல்ல புதிய ஒழுங்கு வரையறைக்குள் அடைபட முடியாமற் வெளியேறுகின்றனர். செம்பனை என்பது நீர் உறிஞ்சி என ராமசாமி குமரனிடம் சொல்கிறார். இந்த நாவலினை புறச்சூழல் விவரிப்பிலிருந்து அணுகும் போது செம்பனையின் நீர் உறிஞ்சித்தனம் என்பது மிகப் பெரிதாக மேலேழுந்துவரும் முதலாளித்துவத்தின் குறியீடாகவே தெரிகின்றது.

நாவல் முழுதும் இழையோடும் நுண்சித்தரிப்புகள் பெரும் அறிவுழைப்பு அனுபவத் தொகுப்புகளின் மூலமே சாத்தியப்பட்டிருக்கும். பாத்திரத்தை வாசகனோடு உலவ விட பெருஞ்சாத்தியத்தை விவரிப்பில் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. வெறுமனே ஒற்றை வரி சித்தரிப்புகளும் விவரிப்புகளும் வாசகனின் உள்ளத்தில் பாத்திரத்தை வார்த்துக் கொள்ள போதுமானதாக இல்லை. விரிவான சித்தரிப்புகளே பாத்திரத்தை உயிர்ப்பிக்க செய்கிறது. ஓலம்மாவின் கொல்லையும் பண்ணையும் நாவலின் வாசிப்பில் துலங்குவது போல நுண்ணிய உணர்வுகளும் நன்றாகவே கடத்தப்பட்டிருக்கின்றன. முனியம்மாவுக்கும் ஓலம்மாவுக்கும் இடையிலான உறவைச் சொல்லலாம். தன் பிள்ளையை அழைத்துச் செல்வதாய்ப் பயம் காட்டிக் கத்திக் கூப்பாடு போடுபவள் வீட்டுக்குத் தேவையான பொருளையும் வாங்கித் தர தயங்காமல் இல்லை. சின்னியுடனான உறவுக்குப் பின் மணியத்துக்கு நஞ்சளிக்கிறாள் ஓலம்மா. ஓலம்மா பேரன்னையாக உருக்கொண்டு அவனுக்கு நஞ்சளிப்பதும் அதையறிந்தே அவன் பருகுவதும் மிகச்சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதைப் போல ராமசாமியும் குமரனும் காட்டிற்குள் நுழையும் காட்சியும் நன்றாக அமைந்திருக்கிறது. உரையாடல் என்பதும் நம்பகமாகவும் உயிர்ப்பானதாகவும் இருக்கிறது. நவீனின் முருக்கில்லாத நேர்நடை நாவலின் உரையாடல் பகுதிக்கு வளம் சேர்த்திருக்கிறது. தோக் குருவுக்கும் ராமசாமிக்கும் இடையில் நேர்கிற உரையாடல் என்பது நாவலின் மைய இழையிலிருந்து விலகிச் சென்று வாழ்வு குறித்தான மெய்மையைப் பேசுகிறது. கோப்பேரன், ராமசாமி, ஓலம்மா, மணியம், குமரன் ஆகிய அனைவரும் அடையும் மனப்பிறழ்வின் சித்தரிப்பும் மனவோட்டமும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நாவலின் இறுதியில் ஓலம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். அந்தத் தற்கொலை என்பது அவளின் பாத்திர வார்ப்பைப் பலவீனமாக்கவில்லை. அவளின் அந்தச் செய்கை பேச்சியின் மீதான கோப வெளிப்பாடாகவே காண்கிறேன். பேச்சி மீது இறுதியில் ஏற்படும் கோபம் என்பது கணத்தில் தோன்றிய உணர்ச்சியின் வெளிப்பாடு அன்று. தொடர்ந்து, அவளில் பலசூழல்களில் வேர்விட்டுக் கொண்டிருந்தவற்றின் கொப்பளிப்புதான் அது. நம்பி கர்ப்பமடைந்தது ஏமாற்றம் கொண்டது, தாழ்த்தப்பட்டவள் என்ற பேரில் இருந்த சமூக விலக்கம், குமரனின் இயலாமை/மரணம், மணியத்தின் மீதான ஏமாற்றம், நிலம் இழப்பு, குமரனின் பிரிவு என அனைத்தும் சேர்ந்தே பேச்சியின் மீது வசவு எழவும் தன்னையே மாய்த்தும் கொள்கிறாள். குமரனின் இழப்பு, கணவனின் இழப்பு இத்தனையும் தாங்கி கொள்ள இயன்றவளால் ஏன் நிலமிழப்பும் பேரனின் பிரிவும் தாங்கி கொள்ள முடியாமல் போகிறது என்ற கேள்வி எழுகிறது. அவளின் எஞ்சிய வாழ்வுக்கான பற்றுக்கோடாக நிலமும் பேரனும் மாறி போயிருக்கிறார்கள் என்பதே அதற்கான பதிலாக இருக்கக்கூடும். நிலம் அல்லது இயற்கை என்பது தொடர்ந்து ஒரு உரையாடலை தனக்குள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடல் அல்லது இயற்கையின் அந்த நுண்கிரணங்கள் படுகின்ற தருணம் தன்னுடைய வாழ்வுக்கான பொருளை மனிதன் கண்டடைகிறான். மனிதனுடைய ஆதி செயல் என்னவாக இருக்க முடியும் என்றால் சுற்றியுள்ளவற்றைக் கவனித்தல் ஆக இருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன். தனக்கான பொருளைச் சுற்றியுள்ளவற்றிடமிருந்தே மனிதன் பெற்றிருக்கக் கூடும் அல்லது அதுவே தந்திருக்கக்கூடும். அப்படியாகத் தன்னுடைய வாழ்வுக்கான பொருளை நிலத்திலிருந்தே ஓலம்மா கண்டடைகிறாள் என்றே எண்ணுகிறேன். அதனைத் தனியாக அவளிலிருந்து பிரித்தெடுக்க இயலாது.

பேய்ச்சி நாவல் என்பது அன்னையாகிய தெய்வத்தின் கதையாகவே புரிந்துகொள்கிறேன். பேரன்னை உருவில் உறைந்த பேய்மையின் தோற்றமே ஓலம்மா. அவளில் உறைந்த பெருந்தாய்மையும் பேய்மையும் சமன் செய்யப்பட்ட கதையே பேய்ச்சி.

(Visited 213 times, 1 visits today)