கடிதம்: கருத்துக் குருடர்கள்

ம.நவீனின் பேய்ச்சி நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், அதை விமர்சித்து புலனத்திலும் முகநூலிலும் பதிவுகள் வந்ததால் எல்லாவற்றையும் நிதானமாக வாசித்தேன். 

நான் ஓர் இலக்கியப் படைப்பாளன் அல்லன். இலக்கிய இன்பங்களைச் சுவைத்த வருடங்கள் பல கடந்து விட்டன. ஒரு காலத்தில் சிறுகதை, கவிதைகளையெல்லாம் எழுதி பத்திரிகைகளுக்குப் அனுப்பியிருக்கிறேன். ஆனால், இப்போது அந்த உலகம் எனக்கு அந்நியமாகி விட்டது. 
இருந்தாலும் நவீன் மற்றும் அவருடைய குழுவின் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. ‘பறை’ என்ற அவர்களின் சஞ்சிகை, பல நூல் பதிப்பு முயற்சிகள் இவை அவர்கள் மீது இருந்த மதிப்பை அதிகரிக்கச் செய்தது.

முன்பு இவர்கள் இதழில் வந்த ஒரு சிறுகதையும் நாட்டில் அதிக சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.  அதே போல், பேய்ச்சி கதையும் சர்ச்சையாக்கப்பட்டதால் நான் அதிர்ந்து போகவில்லை. அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை அறிய காத்துக் கொண்டிருந்தேன். 

என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர் பாண்டியனின் விளக்கத்தை http://vallinam.com.my/navin/?p=3948#more-3948 என்ற தொடுப்பில் வாசித்தேன். அது எனக்கு அதிக தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
‘ச்சீ, அறுவறுப்பு’ என்று இப்புலனக் குழுவில் அல்லது எனது முகநூல் நட்பு வட்டத்தில் விமர்சித்தவர்கள் நான் வாசித்த அளவுக்கு நாவல்களை வாசிக்கவில்லை என்றே தோன்றுகிறது. நான் இடைநிலைப் பள்ளியில் பயிலும் போதே சிவசங்கரியின் ‘அந்த 7 நாட்கள்’ என்ற தொடர்கதையை நாளிதழில் வாசிக்கத் தொடங்கினேன். இன்னும் எத்தனையோ நாவல்களில் அந்தக் களவு/கற்புக் கதைகளை வாசித்திருக்கிறேன். இத்தனைக்கும் அப்போது நான் இன்னும் அந்த உலகத்தில் சஞ்சரிக்கவில்லை.

இந்த நாவலைப் பற்றி விமர்சித்தவர்கள் ‘இண்டர்லோக்’ நாவல் பற்றியும் எழுதியிருந்தார்கள். என்னுடைய பார்வையில் அதுவும் ஓர் இலக்கியப் படைப்பே என்று எழுதினால் எத்தனைப் பேர் என்னை முறைத்துப் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. 

இக்கதையைப் பற்றிய விமர்சனங்களை வாசிக்கும் போது, பைபளை விமர்சிப்பவர்களின் நினைவு வந்தது. பைபளைக் குறைகூறும்போது மறக்காமல் எடுத்து வைக்கும் வாதம், உன்னதப்பாட்டில் காணப்படும் ‘ஆபாச’ வர்ணனைகள்தான். இந்த வசனங்களைக் காரணங்காட்டி, ஒரு புனித நூலில் இந்த ‘ஆபாசங்கள்’ இடம் பெற முடியுமா? என்று கேள்வி எழுப்புவார்கள். இந்தப் புத்தகத்தை உங்கள் மனைவி, பெண் பிள்ளைகளோடு சேர்ந்து வாசிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்புவார்கள்.


அதே போல் நவீனின் மற்றும் வல்லினத்தின் இலக்கியப் படைப்புகளை விமர்சிப்பவர்கள் கருத்துக் குருடர்களே.

ஜோன்சன் விக்டர்

(Visited 115 times, 1 visits today)