கடற்கரையில் குப்பை பொறுக்குவோர்… (அ.பாண்டியன்)

நவீன்,
பேய்ச்சி நாவலைப் பற்றிய மதியழகனின் விமர்சனம் அந்நாவலை முற்றிலும் புறக்கணிக்கிறது என்றாலும் அதை உங்கள் அகப்பக்கத்தில் நீங்கள் பதிவேற்றியிருப்பதை வரவேற்கிறேன். விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்பது ஆரோக்கியமானது என்பதால் மட்டும் இது வரவேற்கத்தக்கது அல்ல.

மதியழகன் பேய்ச்சி நாவல் மீது வைக்கும் பார்வையை அவர் முகநூலில் எழுதியதால் அது நிரந்தரமாக அங்கே நிற்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது எப்போதும் வாசிக்ககூடிய தளத்தில் இருப்பதுதான் சரி. அதன்வழி, மதியழகனே கூட பின்நாளில் அதை வாசித்து தன் போதாமைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

மதியழகனின் விமர்சனம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது, பேய்ச்சி நாவலை வாசித்த அனுபவம், இரண்டு, நவீன் மீதான தனிமனித தாக்குதல்கள், மூன்றாவது இலக்கியப் படைப்பு குறித்த அவரது புரிதல்களும் அவர்சொல்லும் வரையரைகளும்.

நாவல் வாசிப்பின் வழி அவர் பெற்ற மனப்பதிவுகளில் தலையிடுதல் முறையில்லை. வாசகராக அவை அவரது சுதந்திரத்துக்கு உட்பட்டது. ஆனால், அவரின் பார்வையில் உள்ள குறை நிறைகளை பேய்ச்சி நாவலை வாசித்து அதன் கலை அமைதி குறித்து எழுதும் இன்னொரு வாசகரின் விமர்சனத்தோடு ஒப்பிடும் போதுதான் தெளிவுறும். அடுத்து தனிமனித தாக்குதல்களுக்குள் நாம் போகத் தேவையில்லை. தனிமனித தாக்குதல் என்னும் இழிவை தனது எழுத்தின் ஆன்மாவாக நினைப்பவர் மதியழகன் என்பதால் அதுபற்றி பேச ஒன்றும் இல்லை.

அகவே இக்கட்டுரையின் நோக்கம் அவர் பேய்ச்சி விமர்சனத்தின் வழி முன்வைக்கும் இலக்கியப்படைப்புகள் மீதான புரிதல்கள் தொடர்புடையது மட்டுமே. மதியழகனின் கருத்துகள் எப்போதும் பார்க்ககூடியதாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு முக்கிய காரணம், நாவல் பற்றிய அந்த விமர்சனத்தின் ஊடே அவர் கொட்டி வைத்திருக்கும் அவரது இலக்கியம் குறித்த- நாவல்களின் உள்ளடக்கம் குறித்த-எழுத்தாளர்களின் வரம்புகள் குறித்த- இலக்கியம் வாசிக்கும் சமூகம் குறித்த கருத்துகளில் உள்ள பிற்போக்குதனத்தால்தான். அந்த பிற்போக்கு தனங்களை இளம் படைப்பாளிகள் தவறியும் பின்பற்றாமல் இருக்க இருக்க இது போன்ற விளக்கங்கள் உதவும்.

சற்று கூர்ந்து நோக்கினால், இக்கருத்துகள் மலேசிய இலக்கிய சூழலில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் கருத்தாக இருப்பதையும் கவனிக்கலாம். தங்கள் மனம் போன போக்கில் ஒழுக்கவாதங்களையும் நன்னெறி கருத்துகளையும் இலக்கியத்துக்குள் திணிக்க முயலும் தரப்பினரின் கருத்தும் மதியழகனின் கருத்தோடு ஒத்து இருப்பதை அறியலாம். ஆகவே இலக்கிய படைப்புகளின் உள்ளடக்கமும் கலைவெளிப்பாடும் தங்கள் அறிவுக்கும் அனுபவத்துக்கும் உட்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் (அப்படி எதிர்ப்பார்த்து அது கிடைக்காத போது பிழையான மதிப்பீடுகளை முன்வைக்கும்) தரப்புக்கும் இவ்விளக்கம் அவசியமானது என்றே நினைக்கிறேன். ஆகவே இப்பதிவு எவ்வகையிலும் மதியழகனுக்கானது அல்ல. அவருக்கு இந்த விளக்கம் தேவைப்படாது என்று நன்கறிவேன்.

மலேசியாவில், முக்கியமாக தமிழ்ச்சூழலில், நூல் வாசிப்பு என்பது வயது வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என்கிற நம்பிக்கை உள்ளது. அதாவது, ஒரு நூல் என்பது பாலர்பள்ளி மாணவர் முதல் அறுபது வயது பேராசிரியர் வரை தங்கு தடை இன்றி, எந்த சொற்களாலும் இடறா வகையில் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்ற அபத்தமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என வயது வேறுபாடுகளுக்கேற்ற அனுபவங்களும் வாழ்க்கை பார்வையையும் அதற்கேற்ற மொழியோடும் காத்திரத்தோடும் பதிவு செய்வதே இலக்கியம். மாறாக எல்லாருக்குமான ஒரு பொதுதன்மை கொண்ட நூல் என்று எதுவும் இருக்க முடியாது. இலக்கியம் மட்டும்மிற்றி பிற அறிவுதுறைகள் அனைத்துக்கும் இது பொதுவானதுதான்.

நாம் போற்றும் மரபு இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களும் காட்சிகளும் எல்லா வயதினருக்குமானது அல்ல. கம்பராமாயணத்தின் பாடல்கள் முதல் திருக்குறள் வரை மாணவருக்கு ஏற்றவை எவை என்று அறிஞர்களே முடிவு செய்துதான் பாடநூலில் இணைக்கிறார்கள். மாணவர்கள் வாசிப்புக்கு பொருந்தாதவை பல உள்ளன. அவர்களின் நோக்கம் மரபு இலக்கியம் குறித்த அறிமுகத்தை மாணவர்களுக்கு கொடுப்பது மட்டுமே. அந்த அறிமுகத்தின் வழி உள்சென்று முழுமையாக மரபிலக்கியங்களை ஆழ்ந்து கற்போர் அதன் விரிந்த சொல்லாட்சிகளையும் வாழ்வியல் காட்சிகளையும் கண்டடைய முடியும். கம்பராமாயணத்தில் அதிகமாக காம சித்தரிப்புகள் உள்ளதாக ஒரு தரப்பு முன்பு புகார் வைத்ததை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம். ஆனால் கம்பராமாயணத்தில் காணப்படும் காம சித்தரிப்புகள் கவித்துவத்தின் உச்சத்தில் எழுதப்பட்டவை என்பதே அறிஞர்தம் கருத்து.

ஆகவே ஒரு இலக்கிய நூலை மாணர்வர்களின் வாசிப்புக்கு பரிந்துரைக்க முடியாமல் போவது மிகவும் இயல்பானதுதான். இது எவ்வகையிலும் அந்த நூலைப் பற்றிய மதிப்பீடாகாது. ஒரு நூல் மாணவர்களும் படிக்கத்தக்கதாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே அது சிறந்த நூல் என்றும் சொல்ல முடியாதல்லவா? படைப்பின் இலக்கிய தரத்தை மதிப்பிடும் அளவுகோள் மாணவர் வாசிப்புக்கு ஏற்றதா என்பதல்ல.

பாலியல் வசை சொற்கள் என்பவை படைப்பாளியின் தனிப்பட்ட தேர்வு. அவை சில வாசகர்களுக்கு நெருடலாக இருப்பது இயல்பு. ஆபாச வசை பேசும் மனிதர்களை தினமும் நாம் வாழ்க்கையில் சந்திக்கிறோம். அவர்களின் பேச்சு நமக்கு அசூசையாக இருக்கலாம். ஆனால் சமூகம் என்பது அவர்களையும் உட்படுத்தியதே. புனைவு என்பது சமூகத்தின் நிழலாக செயல்படக்கூடியது. ஆகவே, சமூகத்தில் வழக்கத்தில் இல்லாத ஒன்றை படைப்புகள் வெளிப்படுத்துவதில்லை. படைப்பில் அந்த சொல் அல்லது காட்சியின் தேவை என்ன என்பதை படைப்பாளிதான் முடிவு செய்வான். அவை வெறும் அதிர்ச்சி மதிப்பீடாக இல்லாத பட்சத்தில் அவை படைப்புக்குள் இருப்பது ஏற்பானதே.

மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பாடநூல்களிலும் பயிற்சி நூல்களிலும் பொறுந்தா சொற்கள் இருப்பது மட்டுமே தவிற்கப்படவேண்டியது. இலக்கிய படைப்புகளில் அல்ல. அதனால் இலக்கியத்தில் பாலியல் வசை சொற்களைப் பயன்படுத்துவதால் சமூக சீர்கேடு வந்துவிடும் என்று சொல்வதெல்லாம் சமூகத்தின் பெயரால் செய்யப்படும் போலியான பாவனைகளாகும். உண்மையில், பொதுவெளியில் சக மனிதன் மீது அவதூறுகளையும் தனிமனித தாக்குதல்களையும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் செய்வதுதான் சமூக சீர்கேட்டின் மிக தெளிவான அடையாளம். அதுதான் வெறுக்கத்தக்கது. அப்படி செய்பவர்கள்தான் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டிய மனிதர்கள்.

இலக்கியவாதி எந்த எந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று வாசகர்கள் வகுப்பெடுக்கும் அவலம் மலேசிய தமிழ்சூழல்தான் நடக்கும். இதன் பொருள், ‘எனக்கு பிடித்ததை மட்டும் எழுது’ என்று எழுத்தாளனை கீழே இழுப்பதாகும். அதாவது இலக்கியவாதி மீண்டும் மீண்டும் வெகுஜன எழுத்தை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவன் மேல் சுமத்துவது. எந்த தீவிர எழுத்தாளனும் இது போன்ற அபத்த வேண்டுகோள்களுக்கு செவி சாய்க்க மாட்டான். படைப்பாளிக்குள் இருக்கும் சுயம் மட்டுமே அவன் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

அடுத்ததாக, இலக்கிய படைப்புக்கும் எழுத்தாளனின் தொழிலுக்கும் தொடர்பை ஏற்படுத்தி மதிப்பிடும் முட்டாள்தனத்தைக் குறிப்பிட வேண்டும். இது போன்ற அநாகரிகமான வேலைகளையும் மலேசிய இலக்கிய பரப்பில் மட்டுமே பார்க்க முடிகின்றது. நவீன இலக்கிய வரலாற்றை கொஞ்சமாவது வாசித்த யாரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை பொதுவெளியில் சொல்லமாட்டார்கள். படைப்புக்கு வெளியே வந்து படைப்பை ஆராய்வது போல பாவனை காட்டும் இது போன்ற வேலைகள் உண்மையில் இலக்கிய விமர்சனம் அல்ல. மாறாக வெறுமனே அவதூறுகளைச் சொல்லி எழுத்தாளனை முடக்கிப் போடும் முயற்சிகளாகும்.

நாம் இப்போது வாசிக்கும் சிறந்த படைப்புகளை எழுதியவர்கள் என்ன தொழில் செய்தார்கள் என்ற பட்டியல் வைத்திருக்கிறோமா? அவர்களின் படைப்புகள் அவர்களின் தொழிலோடு பொறுந்தி வருகின்றதா என்று ஆராய்ந்த பிறகுதான் அவற்றை மதிப்பிடுகிறோமா? என்ன தொழில் செய்பவர் எவ்வாறான படைப்புகளை எழுதலாம் என்ற கட்டுப்பாடுகளைக் கொண்டதா படைப்புலகம்? உறவுகளில் ஏற்படும் பாலியல் சிக்கல்களை மிக நுட்பமாக எழுதி கடும் விமர்சனங்களை சந்தித்த தி ஜானகிராமன் ஓர் ஆசிரியர். பாலியல் விளிம்புநிலை மக்களின் வாழ்வை காந்திரமாக எழுதிய எழுத்தாளர் ஜி.நாகராஜன் ஒரு கணித விரிவுரையாளர். கோவேறு கழுதைகள் முதல் செல்லா நோட்டு வரை, அடித்தட்டு மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே எழுதி புனைவிலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கும் எழுத்தாளர் இமையம் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர். நுண்வெளி கிரணங்கள் போன்ற நுட்பமான படைப்புகளை எழுதியிருக்கும் சு. வேணுகோபால் ஒரு கல்லூரி பேராசிரியர். பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குள்ளான கவிஞர் சுகிர்தராணி ஓர் ஆசிரியர். அண்மையில் மலேசியா வந்தபோது எந்த சங்கடமும் இல்லாமல் பெண் படைப்பாளிகள் கூடினர். நம் நாட்டில் எம்.ஏ.இளஞ்செல்வன் பாலியல் சார்ந்த கதைகள் எழுதியவர்தான். அவரும் தலைமை ஆசிரியராகவே பணியாற்றினார். அதேபோல இன்னும் இப்படி பலநூறு உதாரணங்களை தமிழுக்கு வெளியிலும் காட்ட முடியும். அவர்கள் எழுதிய படைப்புகள் எவ்வகையில் அவர்களின் ஆசிரியப்பணியோடு ஒத்து போகின்றது என்று மதிப்பிடும் மடத்தனத்தை யாராவது செய்வார்களா? ஆனால் மலேசியாவில் ஒரு ஆசிரியர் எப்படி எழுத வேண்டும், ஒரு மருத்துவர் எப்படி எழுத வேண்டும், ஒரு வியாபாரி எப்படி எழுத வேண்டும் என்று தரம்பிரித்து சட்டதிட்டம் போடும் அபத்தத்தையும் இலக்கிய உரையாடல் என்று நாம் நம்புவோம்.

இலக்கிய விமர்சனம் என்பது படைப்புக்குள் இருக்கும் நுட்பங்களையும் போதாமைகளையும் வெளிப்படுத்தி விவாதப் பொருளாக்கும் கலையாகும். கதை சுருக்கத்தை மட்டும் சுட்டிக் காட்டுவது விமர்சனம் அல்ல. கடலை மேல் மட்டத்தில் கண்டு அதன் அலைகளைப் பற்றியும் அதில் மிதக்கும் படகுகள் பற்றியும், கரை ஒதுங்கும் குப்பைகள் பற்றிமட்டுமே பேசுவது இலக்கிய உரையாடல் அல்ல. கடலுக்குள் நம் கண்களால் பார்க்க முடியாத துடிப்பான உலகம் ஒன்று எந்நேரமும் இயங்கிக் கொண்டிருப்பதையும் அறிந்து அது குறித்தும் பேசும் மேன்மையான் நிலையே இலக்கிய உரையாடல். அதுவே படைப்புலகில் இன்றைய தேவை. அப்படிப்பட்ட மேன்மைக்கு நகர்த்திச் செல்லும் விமர்சனங்களே தகுதியானவை.

தொடர்புடைய பதிவுகள்

இலக்கியமும் இலேகிய விற்பனர்களும் – இளம்பூரணன்
ச்சும்மா கிழி – கலைசேகர்

(Visited 368 times, 1 visits today)