பேய்ச்சி: பேரன்பின் பெருமூச்சு

பொதுவாக ம.நவீன் படைப்பு, நேர்காணல், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், எதிர்வினைக்கட்டுரைகள் மிக அருமையாக இருக்கும். உண்மைக்குத் துணையாக பல சாட்சிகள் மேற்கோள் குறிப்புகள் படர்ந்து விரிந்து நிறைந்து, சீராக வியாபித்து வியப்பைக் கூட்டும்.

பேய்ச்சி வெளியான பொழுது, என்னால் கதையினை கிரகித்துக் கொள்ள இயலுமா? புரிந்து கொள்ள நேரம் எடுக்குமா? என பல கேள்விகள் என்னுள் எழுந்தன. காரணம் போயாக் தொகுப்பை நான் பல முறைப்படித்து அதில் உள் புதைந்திருக்கும் ஒளியைத் தெளிவாகக் காணத் தாமதமானது. ஆனால், என் வாசிப்புத் தன்மை பலமாக போயாக் உதவியது.

பேய்ச்சி நாவல் விமர்சனத்தை அருண்மொழி அக்கா மேடையிலும் தனிப்பட்ட முறையிலும் பேசியபோது அவர்கள் விழிகள் புன்னகைத்து, முகம் பூரித்து, பூரண நிலவாக ஜொலித்தன. கதையினை எந்த முறையிலும் மிகைப்படுத்தாத ஒரு விமர்சனம். நாவலில் நிலைத்து நின்ற கோவில், பல மூலிகைகளில் பராமரிப்பு விதம், ஓலம்மாவின் ஓங்காரமான ஆக்கோஷம், அப்போயின் சேட்டைகள், கருப்பனின் கனிவான அன்பு அப்படியே மலேசியாவில் வாழும் ஒருவராக விமர்ச்சித்தார் அக்கா.

எனக்கும் ஒரு தெம்பு வந்தது. கதையினைப் படிக்க உற்சாகம் வளர்ந்தது. ஒவ்வொரு பக்கத்தையும் கவனத்துடன் படித்தேன். காத்தாயின் அன்பு என்னை மிகவும் பாதித்தது. அவள் நிலை என்ன? என்பதனையை அறிய தொடர்ந்துப் படித்தேன். காத்தாயின் நிலையை நினைத்து நிலைகுலைந்த எனக்கு ஓலம்மா முன் வந்து நின்றார். சாதாரணமாக தெரிந்த ஓலம்மாவின் வாழ்வை படிக்கப் படிக்க என் பாட்டி தாந்தம்மா நினைவிற்கு வந்தார்.

அவர் என் தாத்தாவுடன் மலேசியாவிற்கு வந்தவர். சிதம்பரக் கப்பலில் ஏழு நாள் பயணம். கதையின் வரும் கப்பல் பயணத்தை என் அப்பாவிடம் வினவினேன். என் அப்பா கப்பலில் காட்சியை என் முன்னால் நாவலில் உள்ளது போல விளக்கினார். என் அப்பாவும் பல முறை கப்பலில் பயணம் செய்தவர். 1953, 1967 – 1971 – என நாவலில் வரும் காட்சியை என் அப்பா வலுப்படுத்தினார்.

மெல்ல மெல்ல ஓலம்மாவை என் பாட்டியைப் போல பார்க்கத் தொடங்கினேன். ஐந்து வயதுச் சிறுமியாக மாறி, நான் நம் ஹெங் தோட்டத்திற்குப் பயணித்தேன். தாந்தம்மா பாட்டி என் கரங்களைப் பற்றினார். அதே சிறுப்பூக்கள் நிறைந்த சட்டை அமுக்குப் போத்தான். மேலே வெள்ளைத் துண்டு. என் தம்பி பிறந்த உடன் அவனுக்கு சாந்துப் பொட்டை ஜவ்வரிசியில் செய்துத் தருவார். என் வீட்டின் படிக்கட்டின் ஓரத்தில் குப்பை மேனி செழிப்பாக வளர்ந்து இருக்கும். அம்மா எடுத்து மூலிகையை அரைக்க முற்படுவார்.

“சாந்தா! இது பிள்ளைக்கு ஒத்துவாராது, அது அவ மண்ணில்லை. பிறந்த மண்ணுல அவள எடுக்கனும், அப்போ தான் அவ மவுசு தெரியும்” என்பார். அதுபோல, காட்டிற்கு என்னையும் குமரன் அண்ணையும் (இரண்டாவது அண்ணனின் பெயரும் குமரன் தான்) ஜிம்மியையும் அழைத்துச் செய்வார். காலில் வேப்பெண்ணையைத் தேய்த்து விடுவார். அட்டையை அண்டவிடாமல் தடுக்க.

குப்பை மேனியைப் பார்த்துவிட்டால், “அட நீ இங்கேதான் இருக்கிறியா, உன்னோட பிள்ளைங்க அங்கே இருங்காங்கா” என்று கூறிக்கொண்டே பாட்டி மூலிகையைப் பறிப்பார். மூலிகையைக் கிள்ளவும் மாட்டார், கொய்வதும் இல்லை. பாம்பு விரலாலும் ஆள்காட்டி விரலாலும் சிறிது இலையில் காம்பில் மென்மையாக வைப்பார். அவை பாட்டியில் உள்ளங்கையில் வந்து விழும். நானும் அண்ணனும் மூலிகையைப் பறிக்க பிடிவாதம் பிடிப்போம். மூலிகைக் கருகிவிடும் எனக் கூறி, எங்களிடம் அவர் பாட்டிக் கூறியக் கதையினைக் கூறுவார்.

மூலிகை என்பது ஓர் அழகிய பெண் என்பார். அதனை மென்மையாக் கையாளவேண்டும் என் கண்டிப்பாகக் கூறுவார். ஒரு முறை ஓர் பெண் அவளுடைய கணவன் பட்டாளத்தில் சேவைக்குப் புறப்பட்டான். கயவன் ஒருவனால் களங்கப்பட்டு, கத்திப்பட்டு கருங்கல்லால் தலை உடைந்து அங்கே சமாதியானாள் என்றும் கணவன் அவளைத் தேடி வரும் போது காட்டில் ஒரு கொடியில் கால் மாட்டிக் கொள்ளும் . அவன் அதனை நீங்கும்போது , முலிகையான மனைவின் ஆன்மா பாட்டிப் பாடுமாம் . அப்பாடலைப் பாடிக் காட்டுவார்.

தொடாதே தொடாதே என் கணவா
என்னைத் தொட்டுப் பறிக்காதே என் கணவா
கத்திப்பட்டது என் மேலே களங்கப்பட்டடது என் மேலே


பாட்டியில் குரலில் பயங்கரமாக ஒலிக்கும். கண்களில் நீர் வடியும். இப்பாடலை நானும் என் அண்ணாவும் மரவள்ளி கிழங்கு இலையைக் குடைப்போல வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டுப்பாடி வருவோம். ஜிம்மியும் குரைத்துக்கொண்டே வரும்.

என் அனுபவத்தைச் சொல்லக் காரணம் இதுபோன்ற அப்பட்டமான வாழ்வியலில் உரைந்த காட்சிகள் இந்த நாவலில் இடம்பிடித்து நெருக்கமாக்குவதால்தான். ஒரு காலக்கட்டத்து வாழ்க்கை அப்படியே அசலாக பதிவு செய்யப்பட்டுள்ள நாவல் இது. கதையில் காட்சிகள் என் வாழ்வில் சங்கமமிட்ட தருணங்கள் ஓலம்மா வழி உயிரோட்டம் மிக்க ஓவியமானது. ஒவ்வொரு முறையும் கதையினை வாசித்து அப்படியே உறங்கிவிடுவேன். பேய்ச்சி என் முகத்தைப் போர்வையாக்கி விடும் கண்கள் மட்டும் திறந்து இருக்கும். என் உயிர்வளி பேய்ச்சியை மெல்ல மேலே எழச்செய்யும். என் கண்கள் அறையில் சுவரில் காட்சியை ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும்.

சில வேளையில் அம்மா என்னைப்பார்த்து கேட்பார், “ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்?” என. சில வேளையில் அதிர்ந்துப்போவார் “ஏன் அழுகிறாய் ?”என்பார். ஒரு தாய்க்கு மகளின் கண்ணைப் பார்த்துப் புரிந்து கொள்வது இயல்புதானே என்று நினைத்துக் கொள்வேன். கருப்பனில் சுட்டித்தனமும் முதிர்ச்சியும் என் ஜிம்மிக்கும் இருப்பதையும் நான் வேறு எந்த ஒரு உயிரிடமும் கண்டதே இல்லை.

ஓல்லம்மா முனியம்மாவைச் சமாதானம் செய்யும் போது, “அதான் கருப்பன் இருக்கிறானே” எனக்குக்கூறியதும் முனியம்மா கூச்சலிடுவாள். கருப்பன் உயிருக்கு ஆபத்து என எண்ணி ஓடித் தப்பித்து விடும். இதைப் படித்து என்னுள் சிரித்துக் கொண்டேன். என் தம்பி என்னிடம் கேட்டான், “அக்கா ஏன் சிரிக்கிறாய்” என்று. கண்களை மட்டுமே பார்த்து, கதையில் தெளிவு, நிஜமான வர்ணனை என்றுள் புகுந்து விழியை இதழாக்கியது.

என் தாந்தம்மா பாட்டியும் கோழி வளர்த்தார். நாட்டுக்கோழி முட்டை அரைவேக்காடு செய்து கிச்சாப் ஊற்றி என்னிடம் கொடுப்பார். மஞ்சள் கரு கிச்சாப்பில் பட்டு வெண்ணையைப்போல நாவில் உருகும். அதன் சுவையே தனி. பாட்டியிடம் ஓலம்மா போல நேர்மை அதிகமாக இருக்கும். யாருக்கும் பயப்படமாட்டார். உண்மையே பாட்டியிடம் உக்கரமாகவே உதிரும்.

ஒரு முறை அம்மா தம்பியை வெளியிலில் கிடத்தினார். சூரிய ஒளியில் வைட்டமின் டி படுவதற்காக. ஒரு பெரிய உடும்பு தம்பியைத் தாக்க வந்தது. பாட்டி உளியை வீசினார் வாலில் அதற்கு வெட்டு. படபடப்புடன் குட்டைக்காலை அழுத்தி ஓடியது. “நல்ல அடி” என்று பாட்டி கூறினார். அதுதான் பாட்டி. எப்போது எப்படி மாறுவார் எனத் தெரியாது. அதே மாலையில் மாண்டோர், அடிப்பட்ட உடுப்பை அப்பாவிடம் பேரம் பேசினார். வேட்டையாடும் போது அடிப்பட்டது என்று பொய் பேசினார். நான் உடனே “அங்கிள் பொய் பேசுகிறார், இது பாட்டி வெட்டியது” எனக் கூறியதும், மண்டோர் “வாய மூடு, உனக்கு தெரியுமா?” என கையை ஓங்க, பாட்டி உளியை கையிலே எடுத்து “அறுத்துடுவேன்” எனக் கூறும் போது அவரது பச்சை நிறப்பூனைக் கண் மிகவும் அகோரமாக காட்சியளித்தது நினைவுக்கு வந்தது. மண்டோர் மிரண்டு விட்டார். பேய்ச்சி நாவலில் வரும் ஓலம்மாவின் பாசத்திற்கும் தாந்தம்மா பாசத்திற்கும் எந்த ஒரு வித்தியாசம் தெரியவில்லை. தாந்தம்மா பாட்டி கணவனை இழந்தவர் . உன்னுடைய தாத்தா தென் ஆப்பிரிக்காவின் தங்கச்சுரங்கத்தில் வேலை செய்தவர்.

ஆயார் தோட்டத்தில் ஒல்லம்மா – நம் ஹெங் தோட்டத்தில் தாந்தம்மா இரு பாட்டிகளும் என்னைக் கதையில் வழி அன்பைப் பொழிந்து கொண்டிருந்தனர். கதைக்குள் கதையா அல்லது நாவலில் விமர்சனமா எனக் கேள்வி எழுந்தது. எப்படி என் வாழ்வில் நடந்தவற்றை நவீன் எழுதியுள்ளார் என ஆச்சரியம் என்னை அலைகழித்தது. சிறிது காலம் கதையினைப் படிப்பதை விட்டு விட்டேன். அவகாசம் எடுத்துக் கொண்டேன். கதையினை கதையாகப் பார்க்கவேண்டும் என்பது ஒரு வாசகனின் பொறுப்பு. சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன். கதையைக் கதையாகப் பார்த்துப் பயணம் செய்தேன். இயற்கையில் அழகைக் கலப்படம் இல்லாத எழுத்து உருவாக்கம் என்னை மீண்டும் கதைக்குள் வலம் வர செய்தது. இயற்கை எப்பொழுதும் வாசகனின் அறிவுத் திறனைச் சுத்திகரிப்பு செய்யும் போலியைப் போகவிட்டு உண்மையை மீட்டு எடுக்கும் என்பதனை கதையில் வழி நவீன் நிருபித்துக்கொண்டே இருந்தார். ஆச்சரியமாக இருந்தது .

ஓலம்மா தன் பேரனுடன் தோட்டத்தில் பயிரிடும் போது மண் புழுவின் வருகை, மரவட்டையின் அதிசயம் எல்லாமே என் வாழ்க்கையில் நிகழ்தவையே கதையில் உள்ள எல்லா உயிரினங்களும் என் இல்லத்தில் விஜயம் செய்தவையே. ஆந்த , பழத்தின்னி வெளவால் எங்களுக்குப் பேய் விலங்குகளாகும். அப்பா அறிவியல் சான்றோடு விளக்கினாலும் பாட்டி சொல்வதே எனக்கு வேதவாக்கு. தவறான போதனையாக இருக்கலாம். ஆனால் பாட்டியில் மாசில்லா அன்பு என் புரிதலைத் திருத்திக்கொண்டது.

கதையில் வரும் இராமசாமி இன்னொரு வலி மிகுந்த ஒரு கதாப்பாத்திரம். ஓலம்மா இராமசாமி உரையாடலை வாசிக்கும் போது, கண்கள் பனித்தன. குமரனைத்தானே மகனாக வளர்த்துக்கொள்வதென்றும் அதையும் ஓலம்மா நிராகரித்தப்போதும் ‘ஒரு தாயின் பாசம் உனத்தெரியாதா?’ என்ன கேட்கும் போது அவருக்குப் பதிலாக என் கண்ணில் நீர் சுரந்தது. ஓலம்மா அவரின் பிறப்பின் அமைப்பை இலகுவாக எடுத்துக்கொண்டு, நீ நீயாக இரு, எதற்கும் கவலை வேண்டாம் எனக்கூறும் போது, அன்பிற்குப் பக்குவ முதிர்ச்சி எக்காலத்திலும் ஓலம்மாவிடம் இருப்பது ஒல்லம்மாவை ஒரு படி மேல் உச்சத்தில் வைத்து அழகுப்பார்க்க வைத்தது. இவர்களிடையே இருக்கும் நட்பும் பாசம் மிகவும் உன்னத உணர்வை உள்ளிருந்து விரைந்து என் கண்களில் நீர் துளிர் விட்டது.

ஒரு படைப்பாளி தன் எழுத்தினைச் தேனில் மூழ்கி எழுதினாலும் இப்படி ரணமாகின்றதே என்று குழப்பமாக இருந்தது. இன்றும் ஓர் ஓய்வு எடுத்துக் கொண்டேன். அடுத்தக் கட்டமாக வருகிறான் குமரன் எனும் ஓர் அழகிய சிறுவன். அவனை வர்ணிக்கும் போது அவன் வாய் எப்பொதும் சிரித்தவாறு இருக்கும் எனும் வர்ணனை அக்குழந்தையை இன்னும் என்னெதிரே நெருக்கமாக உணரவைத்து. அங்கேயும் ஒல்லம்மா எனும் பேரன்பு என் முன் தோன்றியது. குமரன் எதைச் சொன்னாலும் ஓலம்மாவிற்குப் புரியும். ஒரு சம்பவத்தைப் படைப்பாளிக் காட்ட வேண்டும் சொல்லக்கூடாது எனும் இலக்கியச் சிந்தாந்தம் கதையினை இன்னும் பிரமாண்டத்தைக் கூட்டியது. புத்தி நிலையில்லாமல் இருக்கும் சிறுவனை மணியன் அடிக்கும்போது அது அவன் வாயிலிருந்து அப்பா என்று தான் வரும் யாரிடமும் சொல்லமாட்டான்.

மணியம் அச்சிறுவனை கொல்ல கூறும்போது மணியத்தின் மீதிருந்த மரியாதை எல்லாம் வேரோடு அழிந்து விட்டது. இது கதையில் சிறிது சரிக்கல் எனலாம். பிற பிணங்களையும் மரணங்களையும் கண்டு பயப்படும் அவர் அன்பு மனைவின் குழந்தையைக் கொல்ல மனம் வந்ததை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் நியாயத்தையும் இராமசாமியில் பலவீனத்தையும் ஓர் ஆயுதமாக்கிக் குமரனைக் கொன்றது மனம் ‘பக்’ என்றது.

சின்னியில் கோரமான கொலை நேரில் அந்த இருட்டில் நடப்பதுபோல இருந்தது. அதைவிட பயங்கரம் ஒலம்மாவின் உக்கிரத் தாண்டவம் இராமசாமியின் தடுமாற்ற நிலையை இருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. அவ்வேளை நாய்களில் ஊளையிடும் ஓசை என் செவியைத் துளைத்தது. நாவலில் வரும் காட்சியை நாய்கள் எப்படி அறியும் எனத் தோன்றியதும், புத்தகத்தை நடுக்கத்துடன் மூடினேன். சின்னி பக்கம் நியாயம் இருந்தால் அவள் மேல் சற்று இரக்கமும் உண்டானது. அதே வேகத்தில் மணியமும் கொல்லப்பட்டு மரணப்படுக்கையில் மன்றாடும் போது, இரு கண்கள் மட்டும் அந்தரத்தில் பார்த்துக் கொண்டிருந்தது என்று படித்ததும் என் அறை சுவர் திரைக்கு அன்று விடுப்பு.

ஓலம்மாவின் இறுதிப்பயணத்தில் அவள் கையாள் அவளின் பிள்ளைகளைக் கொல்லுவது ஓர் தாயின் ஏமாற்றத்தின் உச்சம் என மனம் கூறினாலும், அங்சா பயந்து நிலைத் தடுமாறி தன் அம்மாவின் கையில் தஞ்சம் புகுந்து கழுத்து நெறித்துக் கொல்லும் காட்சி மிகவும் வலித்தது. இதை ஜீரணிக்க கொஞ்சம்கூட கால அவகாசம் தரவில்லை நவீன். கருப்பனை வதம் செய்யும் போது அவன் கடைசியாக அம்மா எனக் கத்தியதைப் படித்ததும் எனக்கும் முகத்தில் உள்ள எல்லா துளைகளிலும் கண்ணீர் பீறிட்டு அடிப்பதுப்போல இருந்தது.

கதையின் பலங்களில் ஒன்று, அந்தரங்க காட்சிகளை நுட்பமான மொழியில் வர்ணித்து, குளிர்ந்த சாம்பல் பூத்தப் பாதையில் மீது வாசகனை அழைத்துச் செல்வதில் இருந்தது. அதற்கான நியாயமும் அரசியலும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது. தன்னை, தன் சாதியை, தன் நிறத்தை வெறுத்த ஒரு மஞ்சள் தோல்காரியின் மீது தன்னால் செலுத்த முடியும் அதிகாரத்தை மணியம் அப்போது நினைத்துப்பார்ப்பார். காலம் முழுக்க வலியுடன் இருக்கும் மணியம் அந்த வலியை தீர்க்கும் ஒரு தருணம் அது.

கதையில் வரும் முனியம்மா சிடுசிடு என்று இருந்தாலும் அவளின் தாய்மை பாசம் கோபத்தில் இரு வகையில் தென்பட்டது. ஒன்று ஒல்லம்மாவின் மேல் வைத்திருக்கும் பாசம் மற்றென்று குமரன் மேல் வைத்திருக்கும் பாசம் இரண்டும் ஒன்று தான் என்பது ஒல்லம்மாவிற்கு மட்டும் தெரிந்த உண்மையும் கூட.

கதையில் கருப்பனுக்கு ஒரு மாபெரும் பீடத்தில் மகுடம் சூட்டியது கதைக்கு இன்னொரு வரம் எனலாம். கருப்பனின் நாகரீக நடத்தையும் இடம், பொருள், ஏவல் பார்த்து தன் எஜமானின் பக்குவமாக நடத்துக் கொள்வது மிகைப்படுத்தப்படாத ஓர் உண்மையும் கூட. றைந்த டியன் ஃவேசி ( Dion Fossey விலங்கியல் சகாப்தம் கொரில்லா குரங்குகளை அழியாமல் பாதுகாத்தவர் . இவரும் சில பிராணிகள் மனிதனை விட நாகரீயம் அறிந்து நடப்பவை என கூறியுள்ளார். நவீனின் கூற்று கற்பனைக் கலப்படம் இல்லை என்பதனைத் தெளிவுப்படுத்துகிறது
கதையில் வரும் Master pieces தொக் குருவும் இராமசாமியிம் பேசும் உரையாடல். உடல் சிலிர்க்கவைத்த ஓர் உரையாடல் அது. ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வாழ்கையில் வேதாந்த சூத்திரம். ‘மனிதனின் சத்துரு அறிவுதான் நல்லதைக் கெட்டது என்று விவாதிக்கும் கெட்டதை நல்லது என்று கூறும். ஜினுக்கு நல்லது கெட்டதை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளும் தன்மையுண்டு. சாம்பல் நிறக்கொண்ட தெளிவற்றத் தன்மையே மனிதனை மங்கச்செய்கிறது’ எனும் வாழ்க்கையில் நியதியை ஒரு வரியில் முடித்திருப்பார். இது எல்லாருக்கும் பொருந்தும் போதனையும் கூட .

கதையில் உள்ள வர்ணனை வரம்பு மீறாத காட்சித் சித்திரம் குவிந்து கிடைக்கின்றன. சூரியனின் ஓளிக்கீற்றில் பல விதமான கூர் முனைகள். ஆடம்பர காரும் பொன்னிற தூசிகளும் காட்டில் அடுக்குகளில் பல விதமான பச்சை நிறந்தைக் கண்டுள்ளார், எறக்குறையே 200க்கு மேற்பட்ட பச்சை நிறங்கள். இரவில் கூட காடு கரும்ச்சை நிறத்தில் இருந்தது. உணர்விற்கு உருவம் கொடுக்கும் வர்ணனை.

வர்ணனை வரம்பு மீறிப்போனது கட்டையனின் உப்பிருந்த நீருடும்பு போட்ட துளை அதில் உதிரும் புழுக்கள், சடலத்தின் மூக்கில் இருந்து வெளியாகும் பூரான் ஆய்யோ சாமி போதும் இதுக்கு மேலே வேண்டாம் என்று எனக் கத்த வேண்டும் போல இருந்தது. அருவருப்பையும் பிண வாடையும் தாங்கமுடியவில்லை. வர்ணனையும் இவ்வளவு கோடூரமாக இருக்குமா எனக் கேட்கத் தோன்றியது .

இறுதியில் மாலதியில் வெள்ளி காப்பு இன்னோர் அதிர்ச்சி. அதைவிட பேரதிர்ச்சி நான் அப்பாவிடம் “பாட்டியின் பெட்டி எங்கே?” எனக் கேட்டது. ஆம் நான் அது என் குடும்பத்தின் கதையாகவே எண்ணத் தொடங்கிவிட்டது பின்னர்தான் புரிந்தது.

கதையில் வரும் அழகியல் வடிவியல், துறைச்சார்ந்த எழுத்து நடை ஜெயமோகன் அவர்கள் பட்டறைகளில் கூறியதுப்போல இக்கதையில் மிகவும் அகலமாகவும் ஆழமாகவும் உணரப்பட்டுள்ளன. ஒரு சிறந்த படைப்பாளி கற்பனை மூலம் ஒரு வாசகனை வாழ செய்து நிஜ வாழ்க்கையில் ஏற்படும் உணர்வையை உணரவைப்பது இக்கதையில் ஒரு மாஹா சக்தி.

பேய்ச்சி எல்லாரிடம் வாழ்வாள் நயன தீட்ஷையும் தருவாள்.

.

(Visited 347 times, 1 visits today)