இலக்கியம் என்ற சொல்லின் பாரம்பரிய புரிதல்களில் உயர்ந்து நிற்பது இலக்குகளை உணர்த்த வேண்டும்; அவை இன்பம் செய்யவேண்டும். இந்தக் கட்டுக்குள்தான் இன்றுவரை இலக்கியம் படைப்போர் பலர் சுகமனநிலை போக்கில் அவற்றை அணுகிவருகின்றனர். இலக்கியத்தைப் போதை ஏற்றும் கருவியாகக் கொண்டு அதில் சுய இன்பம் தேடித்தேடி திளைக்கின்றனர்.
பழங்காலத்தில் எழுந்த புனைவுகளின் பொதுத்தன்மைகளை ஆராய்ந்து இதுதான் இலக்கியத்தின் வரையறை , இப்படி இயங்குதல் ஒன்றே இலக்கியம் என்பதற்கான தகுதியைப் பெறும் என்றெல்லாம் வைத்ததற்கான பின்னணியையும் நாம் சற்றுக் கவனிக்கவேண்டும்.
உலகில் சட்டங்களாகவும் விதிகளாகவும் போற்றப்படுபவை யாவுமே அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்ற ஆதிக்கச் சமுகத்தின் அச்சுகளாகத்தான் விளங்கி வருவதை நாம் உணரமுடியும். ஆதிக்கச் சமூகத்தின் அத்துமீறல்களைச் சட்டமாக்கி அவற்றை வழக்கமாகவும் விதிகளாகவும் சமூக மரபுகளாகவும் ஒழுக்கங்களாகவும் அமைக்கப்பட்ட பல செயல்பாடுகளை இன்றும் நம்மால் உணரமுடியும். அவை அந்தந்தக் காலத்தே வாழ்ந்த மனிதர்களின் பொதுபுத்திக்குள் பல ஊடகங்களின் வழியும் வாழ்க்கை சடங்கு சம்பிரதாயங்கள் எனவும் ஆழமாக விதைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவையே காலத்தால் ஒழுக்கம், பண்பாடு, நெறிகளெனப் போற்றப்பட்டன.
தமிழ் இலக்கியங்கள் தோன்றியதும் அவ்வாறே. அரசியல் அதிகாரமும் பொருளாதார வளமும் பெற்ற வர்க்கத்தினரே தங்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்தனர். அவை அகம் புறம் என இரு பெரும் பகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுப் பாடப்பட்டன. கால ஓட்டத்தில் அவையே காலப்பதிவுகள் எனவும் வரலாற்று ஆவணங்களாகவும் கொள்ளப்பட்டன. அதிலிருந்து மக்கள் இப்படி வாழ்ந்தார்கள் அப்படி வாழ்ந்தார்கள் என்று அவற்றையே ஓரினத்தின் பண்பாடு எனவும் நாகரீகம் எனவும் அடுத்து வருகின்ற தலைமுறைக்குக் கடத்தப்பட்டன.
அனைத்து நிலைகளிலும் வலுவாக அமைந்திருந்த ஆதிக்கச் சமூகத்தின் காதல், களவு, கற்பு, கொடை, நட்பு, வாழ்க்கைமுறையென பாடப்பட்டனவே தவிர அன்று வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை அழுத்தமாகப் பேசப்படவில்லை. கூத்தர், கோடியர், பாணர், பரத்தையர், தச்சன், குறவன் என ஆதிக்கமற்றச் சமூகத்தின் பதிவுகள் ஆதிக்கச் சமூக இலக்கியங்களில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை. ஆதிக்கச் சமூகத்தின் அகப் புற வாழ்க்கையின் உன்னதங்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒப்பீட்டுப் பொருளாக மட்டுமே காட்டப்பட்டனர். அவர்களின் நிலை மூடிமறைக்கப்பட்டு வாழ்க்கை என்பது என்னவோ உத்தம மனிதர்களாலே ஆனதென சித்திரிப்புகள் இருந்தன.
இத்தகைய நிலையில் வளர்ந்த சங்க இலக்கியத்தின்வழி பின் வந்தவர்களும் அத்தகைய நிலையையே பின்பற்றி தொடந்து இலக்கியங்களை அவ்வச்சில் வார்த்ததுபோல் ஆதிக்கச் சமூகம் வகுத்துக் கொடுத்த அமைப்பிலேயே படைத்து, அவற்றையே நெறியெனவும் முறையெனவும் வழக்கப்படுத்திக் கொண்டனர்.
இத்தகைய இலக்கியங்களில் ஒரு இனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் முழுமையாகப் பதிவாகவில்லை என்பதை நம்மால் அறியமுடிகிறது. அக்காலத்தே வாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களின் யாதார்த்தமான வாழ்க்கைப் பதிவுகள் இல்லை. விளிம்புநிலை மனிதர்களின் மொழி, வலி, வாழ்க்கை பிறழ்வு, அவர்களின் உள்ளம், ஆசை, அசிங்கம், முரண்கள் எதுவுமே ஆழமாகப் பதிவாகவில்லை.
அக்காலத்தில் வாழ்ந்த அரசியல் பொருளாதார ஆதிக்கமற்ற வலுவிழந்த மக்களின் வாழ்க்கை நிலை நம் பழைய இலக்கியங்களில் காணுதல் மிக-மிக அரிது. இத்தகையோர் தங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவோ பிறவற்றிற்காகவோ போராட்டங்கள் நிகழ்த்தியதாகச் சங்கப் பாடல்களில் இல்லை.
இத்தகைய நிலைதான் தமிழ் இலக்கியத்தின் வரையறைகள் அமைந்தன. அவற்றைப் பின்பற்றிதான் பிந்தி வந்த பல இலக்கியங்களும் எழுந்தன.
ஆதிக்கச் சமூகத்தின் பக்கங்களில் மறைக்கப்பட்ட, பேசப்படாதவைகளைத் துணிந்து பேச முனைந்தன நவீன இலக்கியங்கள். நவீனத்தின் பேச்சு மிகத் தீவிரத்தன்மையோடு மரபு இலக்கியங்கள் மறைத்து வைத்திருந்த இடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. இருட்டில் மறைந்திருந்த பல மனித இயல்புகள் வெளிச்சம் கண்டன.
இலக்கியத்தில் நவீனம் மீட்டெடுத்துக் காட்டிய அவலங்களைப் இலக்கிய அத்துமீறல்கள் எனவும் இலக்கிய வரையறைக்கு அடங்காதெனவும் மரபு இலக்கியத்தில் அழுந்தி அடிமைகளாக இருந்தவர்கள் குற்றம்சாட்டிப் அவற்றைப் புறக்கணித்து அவதூறுகளையும் வீசத் தொடங்கினர்.
நவீன இலக்கியத்தின் மொழி மிக அப்பட்டமாகக் கொச்சையாகக் கையாளப்படுகிறது. அது அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளது. காமநெடி வீசுகிறது. இவை வாசகர்களின் நெறி பிறழ்வுக்கு அடிப்படையாகிவிடுகின்றன என்றெல்லாம் இலக்கியத்தின் அரிச்சுவடி தெரியாமல் பிதற்றுவோர் பலர் உள்ளனர்.
புனித இலக்கியங்களாகக் கொண்டாடப்படுகின்ற சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் இவர்கள் இன்று அருவருக்கின்ற கூறுகள் இருந்துள்ளன என்பதை இவர்கள் அறிவார்களா?
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
என்ற குறுந்தொகைப் பாடலில் ‘அல்குல்’ என்பது பெண் பாலுறுப்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இச்சொல் அன்றைய புலவர்கள் வழக்கில் பெண்குறியை விளக்கும் சொல்லாக அமைந்து மிகப் பரவலாக சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஏன் இன்றும் இலக்கியச் சூழலில் அருவருக்கதக்கதாக இல்லை? நமது கல்வி கழகங்களிலும் சங்க இலக்கியப் பாடல்கள் கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறது.
இதையே நவீன இலக்கியத்தில் தற்கால வாழ்க்கைச் சூழலுக்கேற்ப ‘அல்குல்’ என்ற சொல்லுக்கு நிகரான தற்கால வழக்குச் சொல்லைப் பயன்படுத்தினால் அரைவேக்காட்டுத் தமிழ் இலக்கிய உலகம் தகாதது; அது தவறு என்று தாவிக் குதிக்கிறது. இவற்றை என்னவென்று சொல்லவது?
இந்நிலைக்கு காரணம் புனித இலக்கியம் பேசுவோரின் பொதுபுத்திக்குள் அழுக்கேறி கிடக்கும் அவலம்தான். அல்குலை புனிதமாகப் போற்றி உயர்த்திய அதே மனம் தற்கால வழக்குச் சொல்லைக் கொச்சை எனப் பேசுகின்றது.
அதுமட்டுமா? நவீன இலக்கியத்தில் காமநெடி வீசிகிறதாம். பக்தி இலக்கியத்தில் திருப்பாவைப் பாசுரங்களில் ஆண்டாள் திருமாலை நினைத்துப் பாடிய பாடல்களைப் பக்தியாகக் கண்ட மனம், என்னவோ நவீன இலக்கியத்தில் சாமானியனின் காதல் சுவையையோ காமச் செயல்பாட்டையோ இழிந்து பேசுகிறது.
இவற்றை விளங்கச் சொன்னால்கூட நம்மிடம் ஒரு கூட்டம் அறிவு செயல்படாத நிலையில் ஒரு கேள்வி கேட்கும்… அதாவது இவ்வகை இலக்கியங்களையோ அல்லது சொற்களையோ மனைவி மக்களிடம் தாராளமாகப் பயன்படுத்துவீர்களா? தேவையிருப்பின் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் இவர்களின் கொச்சை வார்த்தை என்ற புரிதல் அடிப்படையில் அல்ல.
நவீன் எழுதிய பேய்ச்சி நாவலுக்கு மதியழகனின் சாற்றிய குற்றச்சாட்டும் இத்தகையதே. பேய்ச்சி நாவல் சங்க காலமும் காப்பிய காலமும் கட்டமைத்த பெண்ணியத்தின் கட்டுடைப்பு. பேய்ச்சி நாவல் குறித்து அடுத்த பதிவில் மிக விரிவாக எழுதுகிறேன்.