இப்பதிவு மதியழகன் நவீனுடைய நாவல் குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரைக்கானது.
முன்குறிப்பு: அது இலக்கிய விமர்சனமாக இருந்தால் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் அது இலக்கிய விமர்சனத்திலிருந்து வெளியேறி… ஒரு இலக்கியப்படைப்பு எப்படி இருக்க வேண்டும்?, என்ன தொழில் செய்பவர் எப்படி எழுத வேண்டும்? என்ற போதனைகளாக இருந்தன. அது குறித்த பதிவு மட்டுமே இது.
1. எல்லா இலக்கியப் படைப்புகளும் அனைவருக்கும் ஆனது அல்ல.
உதாரணமாக அன்றுதொட்டு ஞாயிறு பத்திரிகைகளில் நடிகைகளின் படங்கள் படு கவர்ச்சியாகவே வருகிறது.
(ஒரு முறை பேருந்து நிலையத்தில் அமர்ந்து ஒரு ஞாயிறு நாளிதழை திறந்து ஆர்வமாக ஒரு சிறுகதையை வாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு எதிரில் அமர்ந்திருந்த மலாய் குடும்பத்தினர் கடைசி பக்கத்தில் நிர்வாணத்திற்கு மிக நெருக்கமாக இருந்த சில நடிகைகளை பார்த்து… என்னை மிக கோபத்துடன் நோக்கினார்கள். அவர்களுள் ஒரு பெரியவர் “மாவ் தெங்கோக் மஜாலா லூச்சா பாலிக் ருமாஹ் தெங்ஙோக்லா போடோ” என திட்டியதை மறக்கவே மாட்டேன்).
அதேபோல சஞ்சிகைகளிலும் வருவதுண்டு. சில சமயம் சாதி விளம்பரமும் இடம்பெறும். அவை நம் பிள்ளைகளை பாதித்துவிடும் என பதறுகிறோமா? இல்லை. இத்தனைக்கும் அது இலக்கிய நூலைவிட அனைவரும் படிக்கும் இதழ்கள். எனவே நாவல் என்பது அதில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கும் நூல். குழந்தைகள் படிப்பது குழந்தைகள் நாவல். டோட்.
2. இலக்கியத்தில் கொச்சை சொற்களின் பயன்பாடு.
எனது சின்ன வயதில், எங்க கம்பத்தில் ‘நாத்த பேச்சி’ நாதன்-னு ஒருத்தர் இருந்தார். வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகளாக கொட்டும். இன்று வரை மறக்க முடியாத ஒரு கேரக்டர்.
நானொரு கதை எழுதுகிறேன். நாதனின் கதாபாத்திரத்தை அக்கதையில் வைக்கிறேன். கதையை சும்மா சொல்லிச் செல்ல வேண்டுமென்றால் “நாதன் பயங்கரமாக/கொடூரமாக/தரவட்டமாக/
தாறுமாறாக கெட்ட வார்த்தை பேசுவார்” என்று எழுதலாம். ஒவ்வொரு வாசகருக்கும் வெவ்வேறு நாதன்கள் தெரிவார்கள். அது கதையாக இருக்காது.
கதையை வாசகரின் கண்முன் காட்ட வேண்டும் என்றால் நான் நாதனாக மாற வேண்டும். நாதன் போல வாழ வேண்டும். நாதன் போல பேச வேண்டும். அப்பத்தான் நான் அறிந்த ‘நாத்த பேச்சி’ நாதனை நீங்களும் உணர முடியும். கதை வலுவாகும்.
அப்படி நான் நாதனை அப்படியே எழுதிவிட்டால் நான் ‘நெறியற்றவன்’ என சொல்பவர்களுக்கும், அக்கதையை வாசிக்கும் பிள்ளைகள் சீரழிந்து விடுவார்கள் என கருதுபவர்களுக்கும் ஒரு விளக்கம்….
நான் நாதனை நேரில் பார்த்தவன், அவரின் கெட்ட வார்த்தைகளை காது கூடாக கேட்டவன், பாதிப்படைந்தவன்…ஆனால் இதுவரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த விரும்பாதவன். நான் நாதனையும் மதிக்கின்றவன்.
என்னைப் பொறுத்த மட்டும் வாசிப்பவர்களுக்கு நான் எந்த தீங்கும் விளைக்கவில்லை … மாறாக நானறிந்த நாதனை மட்டுமே காட்டுகிறேன். நாதனை நல்லவனாக்கினால் ஒரு கதைசொல்லியாக நான் தோற்றவனாவேன்.
ஆம். ஒரு வாழ்வியலை காட்ட அதை தத் ரூபமாகக் காட்ட வேண்டியுள்ளது. உதாரணமாக: ஒரு ஸ்தபதி கோயில் கோபுரத்தில் உள்ள பாலியல் கூறு கொண்ட சிற்பத்தை வரைந்தால் / சிலை வடித்தால் அதன் உண்மைத்தன்மையை காட்ட விளைவாரா?
அல்லது அதில் எடிட் செய்வாரா? அவ்விடத்தில் மூடி மறைத்தல் அபச்சாரம் ஆகிடாதா?
3. எழுத்தும் தொழிலும்
ஒரு படைப்பை வாசிக்கையில் அவர் செய்யும் தொழிலை இணைத்து பார்ப்பதெல்லாம் சரியானதா?. எழுதும் போது எழுத்தாளன் தன் தொழிலையா சுமக்க முடியும்?
உதாரணங்கள்:
ஒரு போலிஸ்காரர் திருடனின் நியாயத்தை எழுதினால் அவர் போலிஸ் எப்படி திருடனை பற்றி இந்த கோணத்தில் எழுதலாம் என கேட்கவா முடியும்?
அல்லது ஒரு திருடன் நாவல் எழுதினால் அதில் உள்ள அறக்கருத்தை அவன் எப்படி எழுதலாம் எனக் கேட்கிறோமா?
சரி கடைசியாக ஒரு வினா:
இன்று நாம் வாசிக்கும் நாவல்கள் எல்லாம் என்ன தொழில் செய்தவர்கள் எழுதினார்கள் என கணக்குண்டா? அப்படி ஆராய்ந்து பார்த்தால் பல நாவல்கள் செல்லாமல் போய்விடுமே? இந்த கட்டளை ஆசிரியர்களுக்கு மட்டுமா? பேராசிரியர்களுக்கும் உண்டா? உண்டு என்றால் கே.எஸ்.மணியம் சிறுகதைகள் கூட தாராளமாக வன்மமும் காமமும் இணைந்துள்ளதே. அவர் பேராசிரியர்தான். தமிழகத்தில் சு.வேணுகோபால் விரிவுரையாளர்தான். அப்படியானால் மலேசியாவில் தமிழ்ப்பள்ளியில் வேலை செய்யும் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் இந்த விதிமுறையா? அதை அமைத்தவர் யார்?
மற்றவைகளை பேய்ச்சியை நான் வாசித்ததும் பேசுவோம்.
நன்றி.
‘மகிழம்பூ’ கலைசேகர்