ஜோன்சன் விக்டருக்கு எதிர்வினை

துறைசார்ந்த அறிவார்ந்த்தோர் தமக்கென்று ஒரு சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறைசார்ந்த படைப்பை மதிப்பீடு செய்வது வழக்கம்.  சங்க காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது.  புலவர்களின் படைப்பை விமர்சித்து கழகத்து தலைமை புலவர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றார்கள்.  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையும் இப்படி உருவானதுதான்.

இசுலாமிய மார்க்கத்திலும் இவ்வழக்கம் உண்டு. அறிமுகத்திற்கு வரும் ஒரு புதுமையைப் பற்றி ஆய்ந்து அதனை மார்க்கத்திற்கு ஏற்றதா முரணானதா என்பதை கூறுவதற்கு அறிவார்ந்த ஆட்கள் இருந்தனர், இருக்கின்றனர். கணித தெரியங்கள், சான்றுகள்,  கண்டுபிடிப்புகள்  கணித இலக்கிய உலகம்   அங்கீகரிக்காதவரை வெறும் அனுமானங்கள்தான். அது கணித கிறுக்கன்களின் வெற்றுக் கிறுக்கல்களாகவே பார்க்கப்படும்.  தாறுமாறாக ஓடிவிடாமல் இருக்கவே குதிரைக்கு கடிவாளம். சில எழுத்துக் குதிரைகள் கண்டமேனிக்கு ஓடும்.   விமர்சனங்கள் ஓட்டத்தை மட்டுப்படுத்தும்.  வாசிப்பவருக்கு பிடித்தது எல்லாம் எல்லோருக்குமாகிவிடாது.  அவரவரின் தனிப்பட்ட அளவுகோல்  எல்லோருக்கும் பொருந்தாது.                   

காமமும் இலக்கியமும்           

காம உணர்வும் அசிங்க உணர்வும் இயற்கைதான்.  காமத்தை அழகியலாக சொன்னால் சுவைக்கலாம். அதையே பச்சையாக கொச்சையாக சொன்னால்  இரசிக்க அதற்கேற்ற நாகரீகமுடைய மக்கள் வேண்டும். அது எல்லோருக்குமானதாகாது.  *எனக்கு பீ வருகிற மாதிரி இருக்குடா மச்சி* என்று பேச்சுவாக்கில் நண்பன்கிட்ட சொல்லலாம். அப்படி சொன்னால் உலகம் அழிந்துவிடாது என்று எல்லோருக்கும் தெரியும். நாசுக்கு அறிந்த பாமர மக்கள்கூட *வெளிக்கு வருது* என்கின்றார்கள் அழகியலோடு.   உயர்ந்த இலக்கியத்திற்கு இலக்கும் அழகியலும் அணிகலன்கள்.  மகள்கள்      தந்தைக்கு போதையூட்டி புணர்ந்த கதை விவிலியத்தில் உண்டு. ஆனால் அதை விவிலியம் சொன்ன விதத்தில் அழகியலுண்டு. வாசிப்பவருக்கு குமட்டல் வராத வார்த்தையாடல்கள். ஆண் கடவுளர்களான சிவனும் விஷ்ணுவும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பெண்ணாக மாறியப்பிறகு புணர்கின்றார்கள்.  இது இந்து மத புராண நூல்.  பக்தி இலக்கியம். உயர்ந்த  இலக்கியங்கள் நல்ல நோக்கத்தை விளைபயனாக தரவே எழுதப்படுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்ட நல்ல கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வாழத்தான் அதை வாசிப்பவருக்கு தரப்பட்டிருக்கின்றது. விவிலியம் படித்தவர் அதில்வரும் ஆபாசங்களை மட்டும் தழுவிக்கொண்டு ஒருவர் வாழ்ந்தால் சரிவருமா? எனவே காம யதார்த்தை அப்படியே சொல்வதற்கும்    இலக்கியத்தில்  காமத்தை   அழகியல் உணர்வோடு சொல்வதும் ஒன்றாகுமா? குறை சொல்லும் எல்லா விமர்சனங்களும்  புரியாமையினால் எழுதப்படுவதல்ல. எதிர்ப்பார்ப்புகள் நிறையாமையினால் எழுந்த  விமர்சனங்களும் உண்டு. எழுதுபவர்கள் தங்களை அறிவார்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டும் தாங்கள் வரைந்ததே ஓவியம் என்று அடம்பிடிப்பதும் உண்டு.  விமர்சிக்கப்படுகின்ற  நவீன் அவர்கள் சக எழுத்தாளரான மு. கருணாகரனின் கவிதை படைப்புகள் முற்றுப் பெறாத வார்த்தை குவியல்களாக இருப்பதாக விமர்சிக்கின்றார். அது எப்படி? நவீன கவிதைகளின் வடிவம் எந்த சட்டகத்திற்குள்,  கட்டுக்குள்  இருக்க வேண்டும் எதை வைத்து நவீன்  முடிவு செய்கிறார்? நாடறிந்த ந.பச்சைபாலனையும் நவீன் விமர்சிக்காமல் இல்லை. கருணாகரனும் சும்மா இல்லை. தன் படைப்பை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்பதுபோலவே விடாமல் எழுதிக்கொண்டிருக்கின்றார்.                                     

ஆகவே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்லது படைப்புகள். விமர்சிப்பவர்கள் கருத்து ஏற்புடையதில்லை என்பதனால் அவர்கள் கருத்துக்குருடர்கள் ஆகிவிடுவதில்லை. எத்தனை முறை சொன்னாலும் காதில் விழாத செவிடர்களாக விமர்சிக்கப்படுகிறவர்கள் இருக்கின்றார்களே என்செய்வது.

பெயர் சொல்ல விரும்பாதவரின் கடிதம்

(Visited 84 times, 1 visits today)