பேய்ச்சி: தொன்மத்திலிருந்து தொடரும் பேயன்னை (பாரதி)

கடந்த வருடம் டிசம்பர் திகதி 20-22 -இல் நடந்ததெறிய நவீன முகாமில் கலந்து கொண்டேன். அதுதான் என்னுடைய முதல் பங்கேற்பு. அம்முகாம் நவீன இலக்கியத்தையும் எழுத்து அறிவையும் சார்ந்தே இருந்தது. அம்முகாமில்தான், பேய்ச்சி நாவல் வெளியீடுச் செய்யப்பட்டு, அருண்மொழி நங்கை அவருடைய அனுபவத்தோடும் உலக இலக்கிய அறிவோடும் அந்நாவலைப் பற்றி உரை ஆற்றினர். நாவலைப் படிக்க அவருடைய உரையும் புத்தகத்தின் முன் அட்டையும் என்னை மிகவும் ஈர்த்தது.  முன் அட்டையில் இருக்கும் செம்பனை இலையின் மறைமுக வரைப்படமும் தீப்பந்தம் ஒரு பெண் முக அமைப்புபோல் குங்குமம் இட்டு இருப்பதும் இப்புத்தகத்தைப் படிக்க ஊக்குவித்தது. முன் அட்டையில், நாவலின் தலைப்பில் பேய்ச்சி என்று அச்சடிக்கப்பட்டு உள்ளதில் ‘ய்’ மட்டும் சிவப்பு நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்ற வினாவுக்குக் நாவலைப் படித்து முடித்தவுடன் விடைக் கிடைத்தது.

21-ஆம் நூற்றாண்டின் மானிடப் பிறவியில், தோட்டத்து மக்களின் வாழ்வியலையும் நெறிகளையும் புரிந்து கொள்ள தவறியவரிகளில் நானும் ஒருத்தி.  என் வீட்டில் இரு தோட்டத்து மக்களோடு வாழ்ந்தாலும் நகர வாழ்க்கையே நாகரீக அடைந்த வாழ்க்கை என நினைத்திருந்தேன். ஆனால், இந்நகர வளர்ச்சிக்கும் என்னைப் போன்ற நகர மனிதர்களுக்குப் பின்னாலும் ஒரு தோட்ட மக்களின் வரலாறு வேரூன்றியுள்ளது என நாவலாசியர் குமரன் வழி உணர்த்தியுள்ளார். என் பெற்றோர் கேட்கும் போதெல்லாம் அவர்களைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு செல்ல மாட்டேன். குறைந்தது 5 வருடத்திற்கு ஒரு முறை எனத் தாமதமாகக் கூட்டிச் செல்வேன். அத்தோட்ட வாழ்க்கை அவர்களின் உயிரோடு உடலோடும் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கை என ஒலம்மா கதாபாத்திரம் வழி எழுத்தாளர் உணர்த்தியுள்ளார்.   என்னுடைய பெற்றோரின் தோட்டத்துக்குச் செல்லும் போது ஒரு பயத்தோடும் படபடப்போதும் தான் செல்வேன். தீடிரென்று ஏதெனும் அசம்பாவிதம் நடந்தால் எப்படி சமாளிப்பேன் என மூளையில் ஓடிக் கொண்டே இருக்கும். அதன் விளைவு காலில் வெண்ணீர் கொட்டியது போல ஒவ்வொரு இடத்தின் அழகையும் மாறுதலையும் மனதளவில் ரசிக்கவிடாமல், சூரியன் மறைவதற்குள் திரும்பவும் அழைத்து வருவேன். முன்பு உலு பெர்ணாம் ஆற்றின் முதலைகள் அத்தோட்டத்து மக்களை இறையாக்கியுள்ளது. அதனால், ஆற்றின் அழகை ரசிப்பதை விட அதை பயக் கண்ணோத்துடன் அணுகினேன். ஆனால் என் அப்பாவுக்கு அவ்வாறு ஒரு விளையாட்டு மைதானம் எனப் புரிய வைத்தது. இந்நாவல் படித்ததின் வழி, என் தோட்டத்தின் இயற்க்கை அழகை அத்தோட்டத்து மக்களின் கண்ணோட்டதோடு காண நினைக்கிறேன்.  அதை, பேய்ச்சி நாவல் வழி நாவலாசிரியர் எனக்கு கற்று கொடுத்த பாடம்.

ஒரு பெண் பூவைப் போன்று மென்மையானவள்; கனிவானவள்; இளகிய மனம் கொண்டவள் எனப் பல பூராணக் கதைகளிலும் கவிதைகளிலும் நாவலிலும் படித்து உள்ளோம்; குறிப்புகள் உண்டு. அதே போல், மலேசியா தோட்டப்புற பெண்களின் வாழ்வியலையும் பெண்களுக்குரிய நாற்பண்புகளையும் பெண்ணியத்தையும் ரௌத்திரத்தையும் பேய்ச்சி நாவலின் கதைமாந்தர்கள் வழியாக, நாவலாசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.  படிக்காத பாமர தோட்டப் பெண்ணுள்ளும் காப்பியங்களில் தோன்றியப் பெண்களுக்கு நிகராக வீரமும் நெறியும்; மகாகவி பாரதி கனவு கண்ட புதுமை பெண்ணைப் போன்று தைரியமாகத் தப்பைத் தட்டிக் கேட்டும் வாழ்ந்துள்ளனர். என் அறிவுக்கு எட்டியவரைப் பெண்ணின் கோபத்தின் உச்சத்தை சில தெய்வ கதைகளிலும் சிலப்பதிக்காரத்திலும் நாம் காணலாம். தெய்வ சொர்ணமாக திகழும் பார்வதி, அசுரர்களைப் பழிவாங்கும் போது பயங்கரக் காளி அவதாரமாகத் தோன்றுகிறார். கணவனுக்கு நடந்த அநீதிக்காக கண்ணகி மதுரையை எரித்தாள். மதுரைக்குக் கண்ணகி என்றாள்; லுனாஸ் தோட்டத்துக்கு ஓலம்மா. கன்றுவை இழந்த தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உரியவன் என்று தன் மகனையேக் கொன்றார். மனுநீதிச் சோழனைப் போல தன் தோட்டத்தில் நடக்கும் பிரச்சனைகளைக் களைய ஒரு ஆணுக்கு நிகராகச் செயல்பட்டவள்தான் ஓலம்மா. தன் தோட்டத்து மக்களுக்கும் தனக்கும் தீங்கை விழைத்தவர்களை வதம் செய்தாள். கொலையும் செய்வாள் பத்தினி என்ற சொற்றோடருக்கு ஒப்ப மகனைக் கொன்றதற்காகவும் சின்னிக்குத் துணைப்போனதற்காகவும் தாலி கட்டிய கணவனைக் கொன்றாள். ஒலம்மா இருட்டில் தன் கணவன் வாயிலிருந்து ரத்தம் வெளிவருவதை காணும்போதும்; மணியத்தின் குரவளையைப் பிடிக்கும் போதும் சின்னியை அருவியின் ஓரம் ஒரு கனமானப் பாறையைக் கொண்டு சாக அடிக்கும் போதும் ஒரு கணம் கெட்டததை அழிக்கும் பேய்ச்சியாக உருமாறிருந்தாள்.

தன்னுடையத் தோட்டத்தின் நிலம் விற்கப்பட்டபோது, அவள் கொண்ட அச்சம் அவளை விரக்தி அடைய வைத்தது. சிவனின் ருத்திர தாண்டவம் போல் ஓலம்மா தன் நட்டச் செடிகளையும் கால்நடைகளையும் கொல்லும் போது பேய்ச்சி அம்மானாக இல்லை, என் கற்பனையில் பேயாகவே காட்சியாளித்தாள். ஒரு வேளை, தான் உருவாக்கிய உலகத்தை அழிக்க தனக்குதான் உரிமை உள்ளது என நினைத்திருக்கலாம். அருண்மொழி நங்கை அவரது உரையில் டொராவைப் பற்றி சொல்லும் போதே மெய் சிலிர்த்தது. இக்கட்டத்தைப் படிக்கும்போது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நானும் என் வீட்டில் பைரவா என்ற நாய்க் குட்டி வளர்கிறேன். ஏன் இவ்வளவு ஆத்திரம் என என்னை நானே வினவ சில மானிடருக்கு இல்லாத நற்பண்புகளை பிராணிகளிடம் காணலாம். திருவள்ளுவர் வகுத்து கொடுத்தும் கடைப்பிடிக்கத் தவறியச் சில மதிக் கெட்ட மானிடரின் ஒழுக்கமின்மை சீர்கேடுகளை எப்படி சமூக வலைத்தளங்களில் உலாவுவருகிறதோ அதே போல்தான் பிராணிகளின் நற்செயலும் அதன் அளவில்லா பாசமும் மூகநூலிலும் அகப்பக்கதிலும் உள்ளது. அதை என் மூகநூலில் பகிறவும் செய்வேன். ஏன்னென்றால், மிருகங்ளைவிட கேவலமானக் குணாதிசியங்கள் உள்ளவர்கள் அந்த வீடியோவைப் பார்த்தும் ரசித்தும் திருந்தட்டுமே என்ற நப்பாசைதான்.  என் வீட்டின் செல்லப் பிராணியிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அதன் விளைவு கருப்பனையும் மற்ற விலங்குளையும் கொல்லும் வர்ணனையைப் படிக்கும் போது, முடியவில்லை, புத்தகத்தை முடிவைத்துவிட்டு, நாவலசிரியர் மண்டையை உடைக்க வேண்டும் போல் தோன்றியது; நன்றாக வைய வேண்டும் போல் தோன்றியது. அந்த ஆத்திரத்தில் அவரின் எண்ணையும் அழைத்தேன். ஆனால், அழைப்புக் கிடைக்கவில்லை.

நாவலாசிரியர் வாசகரை வேண்டும் என்றே துயரத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக கூடுதல் வர்ணணையா என்று யோசிக்கும் போது, படிக்காத பாமர தோட்டக்காரான அப்பாவிடமிருந்து விடைக் கிடைத்தது. என்னைப் பொறுத்தமட்டிலும் புனையப்பாடாதத் தோட்டத்து வாழ்க்கைக்கும் புனையப் பட்ட தோட்டத்து வாழ்க்கைக்கும் நடமாடும் நூல்நிலையம் அவர்.  ஏட்டுக் கல்வியை விட, அனுபவ கல்வி விலைமதிப்பு பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களைக் கொன்றது போல், கருப்பனையும் மற்ற ஆங்சாவையும் கொன்றுவிட்டார் எனக் கூறியதுதான், உடனே அப்பா, என்னைப் போல் அவரும் கருப்பாவைக் கொன்றுவிட்டாரா எனப் மறுபதில் கிடைத்தது. கதையில் அரிவாள் என்றால் என் அப்பா கையிலோ இரும்பு ராடை. அதுமட்டுமில்லாமல், ரத்த வாடை, பிணவாடை வர்ணையும் நம்மை தீக்குமூக்காடச் செய்யும், முற்றும்; மூச்சை நிறுத்தும். என்னால் மேற்கொண்டுப் படிக்க முடியாமல் நிறுத்திய இடங்களும் உண்டு. அப்போது என் அப்பாவிடம் மிகுதியான வர்ணனையா என வினவும் போது இல்லை  என அவர் அனுபவத்தை நினைவு கூர்ந்தார். கெடாவில் மாநிலத்தில் நடந்தெறியத்   தோட்டத்தின் சூழலை பேராக் தோட்டத்திதில் வாழ்ந்தவர் உண்மை  எனவும் அதை நாங்களும் அனுபவத்திறோம் எனக் கூறும் போது அந்நாவலின் மேலும் கதையின் மேலும் தனிமதிப்பு உண்டாகுகிறது. இதிலிருந்து எனக்கு கிடைத்த பதில்,  தோட்டத்தின் மக்களின் வாழ்க்கையை இந்நாவல் எந்தவொரு கூடுதல் வர்ணனையும் இல்லாமல் மிக தத்துரூமாக அவர்களின் வாழ்வியலை கண்ணாடிப் போல் பிரதிபலிக்கிறது என்பதே ஆகும்.

ஒரு கணத்தில் என் புரிதலுக்குப் பேயாகத் தோன்றியவள், பேரனிடமும் மகளிடமும் ராமசாமியிடமும் பாசத்தோடும் பயத்தோடும் மிகவும் சாந்தமாக நடந்தும் கொள்கிறாள். மகள் கோபப்படும் போதெல்லாம் பேரன் தன்னோடு இருக்க வேண்டும் என்பதற்காக மகளிடம் விட்டுக் கொடுத்தும் அமைதியையும் காக்கிறாள். இத்தருணத்தில் பெண் இனத்துக்கே உரியத் தாய்மைக் குணம் ஒலம்மாவிடம் வெளிக் கொணரப் படுகிறது. தோட்டத்து பெண்களின் பல பரிமாணங்களையும் போராட்டங்களையும் ஒலம்மா மூலம் கண்முன் காட்டி உள்ளார். மேலும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்; கணவனே கண் கண்ட தெய்வம் என்ற சொற்றொடருக்கு ஏற்ப கோப்பேரனின் மனைவி காத்தாயி நடந்து கொண்டாள். இக்கதாப்பாத்திரதைப் படிக்கும்போது, பூராணக் கதையில் வரும், அகல்யாவும் மேனகாவும் என் நினைவலையில் எட்டிப் பார்த்தனர். கணவனுக்கு மருத்துவத்தில் உதவுவதிலும் பணிவிடையிலும் அழகில் வசீகரிப்பதிலும் பூராணக் கதையில் வரும் இருப்பெண்ணுக்கு நிகராக கத்தாயியை என்னால் பார்க்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில், 5 பிள்ளை இறந்த போதும், சோகங்களைக் கணவனுக்காக மறைத்தால் எனவே சொல்லுவேன். கணவன் தன்னை வெறுக்கும் போதும்; பிள்ளை உண்ணும் அரக்கிப் போல் பார்த்தாலும் கணவனுக்குப் பணிவிடைச் செய்ய தவறவில்லை. இரவோடு இரவாகத் தாலி கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளையும் தொலைத்த கத்தாயின் துர்ப்பாக்கிய நிலையை என்னால் கற்பனைச் செய்து பார்க்க முடியவில்லை. அப்போது, கோபமும் சோகமும் என்னோடு ஒட்டிக் கொண்டது.

அடுத்து, சின்னி ஒரு சாராய விற்கும் பெண்ணாகக் கதையில் சித்தரிக்கப்படுகிறாள். அவளைச் சுற்றி பலக் காம கண்கள் துளையிட்டாலும், அவளிடம் உள்ள பயிர்ப்புப் பண்பை மறைமுகமாக எழுத்தாளர் கையாண்ட விதம் அவளும் ஒழுக்கத்தோடு வாழ்ந்தாள் எனச் சொல்லுவேன். தன் பிள்ளைக்காகவும் வயிற்று பிழைப்புகாகவும் இத்தொழிலில் ஈடுப்பட்டாள். அவளிடம் சாராயம் குடித்து, தோட்ட மக்கள் பலர் இறந்தனர். அச்சூழலில் இருந்து தப்புவதற்காக மணியத்திடம் உதவி கோருகிறாள். இச்சூழலைப் பயன்படுத்தி தன் தேவையைப் பூர்த்திச் செய்துகொண்டான். இக்கதைமாந்தர் வழி, பெண்ணின் நாற்பண்பான அச்சம் என்பதை மிக நேர்த்தியாக வரையெடுத்துள்ளார் எழுத்தாளர். பல முறை மணியம் மற்றும் தோட்ட ஆண்கள் நெருங்க நினைக்கும் போது, சில தருணங்களில் நெருப்பாகவும் சீரும் பாம்பாகவும் சொற்களில் கடினத்தைக் காட்டியவள், எங்கே சிறைச்சாலைக்குச் சென்று விடுவோமோ, பிள்ளை அனாதை ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் அவளைப் பேயாட்டமாக ஆட்டி வைத்தது எனச் சொல்லாம்.

21ஆம் நூற்றாண்டு பெண்ணாக வரும் மாலதி மனதுக்குள்ளும் ஒரு பேய்ச்சி இருப்பாள் எனக் கோழி பலிக் கொடுக்கும் போது படிப்பவர்களால் உணர முடிகிறது. விளையாட்டுப் பெண்ணாகவும் குழந்தை போல் மென்மையாகவும் இருப்பவள், ஒரு நற்காரியத்துக்காக வதம் செய்யத் தயங்காதக் காளி சொரூபம் எடுத்ததை அவள் கூட உணர்ந்திருக்க மாட்டாள். பாரதியாரின் பெண்ணியம் வரையறையைக் கெற்ப ஒவ்வொரு காலக்கட்டத்தில் வருகின்ற பெண் கதைமாந்தர்களைப் பேய்ச்சியாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஒரு பெண்ணின் ரௌத்திரமும் தனி அழகுதான் என இந்நாவலின் வழி உணர்த்தியுள்ளார். அக்குணத்தை தெய்வத்தோடு ஒப்பீட்டும் புணைந்துள்ளார். இது, ம. நவீன் அவர்களின் முதல் நாவலாக இருக்காது என நம்ப வைக்கிறது.  

ஏன்னென்றால், வாசகரின் உணர்ச்சியைப் பத்திக்குப் பத்தி ஒரு சிலந்தி வலைப் போல கதைமாந்தரோடு பிண்ணியுள்ளார். சிலந்தி வலையில் மாட்டிக் கொண்ட பூச்சி எப்படி வெளிவர முடியமால், சிலந்திக்கு இரையாகுமோ, அது போல இந்நாவலைப் படிக்க ஆரம்பித்தால், நம் உணர்ச்சிகளும் சிலந்தி வலையில் மாட்டிக் கொண்ட பூச்சி போல் துடிக்கும்; தூண்டியும் விடப்படும்; இறுதியாக இக்கதைக்கும் இரையாகும். சில நேரங்களில் பரிதாபமாக இருக்கும்; அச்சமாக இருக்கும்; கோபம் வரும் என வாசகர் உணர்ச்சியையும் மனதையும் தூண்டிக் கொண்டே செல்கிறார். ஒரு வேளை நிறைய வாசிப்பின் பலனோ; இல்லை இயற்கையாகவே அவரின் ஆன்மா ஒரு எழுத்தாளனாகத் தோற்றுவிக்கப்பட்டதா; இல்லை பெண்களின் (பேய்ச்சி) வாழ்க்கை அனுபங்களையும் அவர்களின் போராட்டங்களையும் நன்குப் புரிந்து கொண்டதால் பெற்ற புலமையால் இந்நூல் எழுதப் பட்டதா என பல கேள்விகள் மனத்தோடு ஒடிக் கொண்டு இருக்கிறது. எது இருப்பினும் தோட்டப் புற இயல்பு வாழ்க்கையையும் பெண்ணின் பெண்ணியத்தையும் மிக நேர்த்தியாகக் கையாண்டு உள்ளார். 

நாவலாசிரியர் கூடுவிட்டு கூடு பாயும் யுக்தியைக் கையாண்டு உள்ளார். சில தருணங்களில் தமிழ் நாட்டிலும் பிறகு தோட்டத்திலும் வெவ்வேறு காலக்கட்டத்திலும் என மாறிமாறி கதையை முன்னெடுத்துச் செல்கிறார். அதனாலேயே நாவலைப் படிக்கும் வாசகர்கள் எப்பொழுதும் ஒரு விழிப்புணர்வோடு வாசிக்க வேண்டும். ஒரு நூலில் மணியை ஒவ்வொன்றாக கோர்ப்பது போல் ஒவ்வொரு அத்தியாத்தையும் படிக்கும் பொழுது அக்காலக்கட்டத்திற்கு எற்ப வாசர்களாகிய நாம் அக்கதையை நாம் கோர்க்க வேண்டும். இதனால் படிக்க ஆர்வமாகவும் சளிப்பு இல்லாமலும் எப்பொழுதும் ஒரு விழிப்போடும் வாசிக்க முடிந்தது.

தோட்டத்து பேச்சு வழக்கைக் கூட சிறிதும் மாசுபடாமல் மிக தெளிவாகக் காட்டியுள்ளார். இந்நாவலை எழுதும் முன், நாவலாசிரியர் நிச்சயமாக ஒர் ஆய்வை மேற்கொண்டிருக்க வேண்டும். அது தெள்ள தெளிவாக அவரின் தலைப்பிலும் கதைமாந்தாரிலும் எழுத்துகளிலும் உணர முடிகிறது.  தோட்டத்து மக்கள் கோபப்டும்போதும் நண்பரோடு பொய்சண்டைப் போடு போதும் கெட்ட வார்த்தைப் பேசுவது சகஜம். அதில் எனக்கு, ஒரு தனி அனுபவமும் உண்டு. என் அப்பா செபராங் பேராக் தோட்டத்தில் பிறந்தவர். பெரும்பாலும் தமிழர்களே வசித்த தோட்டத்தில், கொஞ்சம் சீன இனத்தவரும் வசித்துள்ளனர். எனக்குத் தெரிந்து என் அப்பாவுக்கு நெருங்கியச் சீன நண்பர் என யாரும் இருந்ததில்லை. எனக்குத் தவறுதாலாக ஒரு சீனரிடமிருந்து அழைப்பு வந்ததது.  சுமார் இரண்டரை மணிநேர உரையாடல்.  முதல் 15 நிமிடம் நான் அவள் இல்லை என்றேன். பிறகு சீன மொழியில்  கெட்ட வார்த்தையில் வசைப்பாட, என் அப்பாவும் அதுக்குத் தோதாக வசைப்பாடினார். அப்பொழுதுதான் எனக்கேத் தெரியும் அவருக்குச் சீன மொழியில் கூடக் கெட்ட வார்த்தைத் தெரியும் என்று. எப்படி என வினவ, தோட்டப் புற வாழ்க்கையில் இது எல்லாம் சர்வ சாதாரணமாகும்.

இந்நாவலைப் படித்துமுடித்தப் பின், துக்கமும் கோபமும் ஒரு சேர வந்ததது; பெண்கதைமாந்தர்களால் சில நொடிக்கோ; நேரத்துக்கோ தாக்கம் இருந்ததது என்றால் அது பொய். நாவலின் தாக்கம் பல வாரங்களாக இருந்தது. ஏன் இந்நாவலில் இவ்வளவு துக்கமும் சோகமும் நிறைந்துள்ளது என தோழியிடம் வினவ, அவள் அளித்தப் பதில் உலகத்தில் தலைச் சிறந்த இலக்கிய நாவலும் சோகம் நிறைந்ததே என ஒரு தலையில் இடியைப் போட்டார். என்னால் பேய்ச்சி கொடுத்த சோக இடியே தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு வேளை நானும் பெண் என்பதாலோ இவ்வாறு இனப்புரியா உணர்வு ஏற்பட்டு இருக்கலாம். ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ளவும் ஒருவருக்கு மனத் தைரியம் வேண்டும். சின்னி இறப்பையும் ஓல்லம்மா இறப்பையும் கற்பனைச் செய்து பார்த்தால் பல இரவுகள் ரணமாக இருக்கும். அருந்ததி படத்தைப் பார்த்த விளைவுகளைப் போல் இந்நாவல் படிக்கும் பொழுது உணர்ந்தேன். மாலதி கருவுற்று இருக்கிறாள் என முடிதிருந்தால் கொஞ்சம் சந்தோசப் பட்டிருப்பேன்.

ம.நவீன் அவர்கள் மலேசியா எழுத்தாளர்களாலும் நல்ல இலக்கியப் படைப்புகளை கொடுக்க முடியும் என நீருப்பித்துள்ளார்.

பாரதி

(Visited 172 times, 1 visits today)