அறத்தின் குரல் அதிராது – ஆசிர் லாவண்யா

இலக்கியப்பணியை முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இந்தக் கட்டுரையை எழுத நான் ஏறக்குறைய ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன். எனது பல பணிகளுக்கு மத்தியில் அவதூறுகளுக்கு எதிரான அறத்தைப் பேச ஒரு காரணம் உண்டு. பேய்ச்சி நாவல் குறித்து தொடங்கிய அவதூறுகள் இப்போது படிப்படியாக வளர்ந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒரு வாசகியாக அந்த பொய்மையில் கட்டுண்ட எளிய மனிதர்களை நோக்கி உண்மையைச் சொல்வதை என் கடமையாக நினைக்கிறேன். எனவே தயவு செய்து இதனை தங்கள் வலைத்தளத்தில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

– ஆசிர் லாவண்யா.

சமூகத்தை வழிநடத்திச் செல்பவர்கள் மிகச்சிலரே. அந்த மிகச்சிலருக்கு அடிப்படையான தேவை பொறுமை. அதுவும் தமிழ்ச்சமூகம் உணர்ச்சிவயப்பட்டது. யாரும் எப்படியும் எதுவும் பேசி மக்களின் சக்தியை விரையப்படுத்த முடியும். அந்த நபர்களிடம் மாட்டிக்கொண்டு தெளிவற்று இருக்கும் சமூகத்தை பொறுமையாக அணுக வேண்டியது அதன் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையும்தான். அப்படி நீங்கள் பொறுமையாகப் பேசும்போது சமூகம் உங்களை அவமதிக்கும். அதனால் என்ன? நாம் அவர்களுக்காகப் பேசுகிறோம் என்றே அறியாமல் நமக்கு எதிராக கம்பு சுழற்றும். அவர்கள் தாங்கள் செய்வது பிழையென்றும் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்றும் அறியாமல் செயல்படுவார்கள். எனவே மறுபடி மறுபடி அவர்களை நோக்கி ஆழ்மனதிலிருந்து அசலான உண்மைகளைப் பொறுமையாகப் பேச வேண்டியுள்ளது. மீண்டும் மீண்டும் ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.

வல்லினம், எழுத்தாளர் ம.நவீன், எழுத்தாளர் அ.பாண்டியன், டாக்டர் மா.சண்முகசிவா, வல்லினம் வாசகர்கள்/ படைப்பாளிகள் எனத் தொடர்ச்சியாக பலவற்றின் மீது மதியழகன் அவர்கள் அவதூறு பரப்பிக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. மதியழகன் அவர்களுக்கு முன் இந்த அவதூறு செய்யும் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருப்பார். நாளை அவரில்லாதபோதும் வேறு ஒருவர் இதே அவதூறு பணியைச் செய்துக்கொண்டிருப்பார். எனவே அவர் இதில் ஒரு காலத்தின் கருவி. ஆனால் உணர்ச்சியவசப்பட்ட சிலர் எந்தவித உண்மைகளையும் தேடாமல் (இந்த இணைய காலத்திலும்) மதியழகன் ஏற்படுத்தும் போலியான மாயபிம்பத்தை நம்பி ஏதோ சமுதாயப் போராட்டத்திற்குத் துணை போவதுபோல அவருடன் சேர்ந்து கோஷமிடுவதுதான் வருத்தமானது. தன் எழுத்தின் வழி தன்னை நிறுவிக்கொள்ள முடியாத மதிய்ழகன் சர்ச்சை மூலம் அடையாளம் தேடும் உத்தி இது. நடக்கும் சூழலையும் அதை ஒட்டிய பிற தகவல்களையும் பின்சென்று ஆய்வு செய்த காரணத்தினால் சில உண்மைகளை அறிந்து தெளிவுபெற்றவள் எனும் முறையில் எளிய வாசகர்களின் பார்வைக்கு இதுவரை கண்ணில் படாத, கருத்தில் நிலைக்காத சில விடயங்களை மட்டும் துல்லிய ஆதாரங்கள் அடிப்படையில் முன்வைக்க விரும்புகிறேன்.

ஏற்கனவே மதியழகன் அவர்கள் ‘பேய்ச்சி’ நாவல் குறித்து முன்வைத்த அவதூறுகளை அறிவார்ந்த இலக்கிய வாசகர்களால் முறியடிக்கப்பட்டுவிட்டது. எனவே மதியழகன் அவர்கள் தனது பலவீனமான தரப்பை நிறுவிக்கொள்ள சில புதிய உக்திகளை கையாண்டபடி இருக்கிறார். அந்த உக்திகள் வழி தனது சரிவை சரிகட்ட நினைக்கிறார். இணையத்தில் மிக எளிதாகத் தேடினாலே கிடைக்கும் தகவல்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் அவர் எந்தத் துணிச்சலில் இவ்வாறு மோசமான அவதூறு பரப்பி வருகிறார் எனத் தெரியுமா? ஆம்… லைக் மட்டுமே இடும் உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் எந்த உண்மையையும் தேடிச்செல்லாது என்ற மக்கள் மீதுள்ள இழக்காரத்தினால்தான்.

பொய்க்கூற்று 1:

/ஜெயமோகன், ரெ.கார்த்திகேசுவை சகட்டு மேனிக்குத் திட்டுகிறார். மலேசிய எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால், ரெ.கார்த்திகேசுவுக்குக் காலுக்கு அடியில்தான் இடம் கொடுக்க முடியும். மண்ணுக்கு அடியில்தான் இடம்கொடுக்க முடியும். அவர் ஒரு எழுத்தாளரே இல்லை என்று பேசிவிட்டு, இறுதியில் நவீனே மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கிய ஆளுமை என்று நவீனை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிறார்./ (9.2.2020)

விளக்கம்:

இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=tYo41uNBjFg&t=1865s சரியாக 30.35 ஆவது நிமிடத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்  மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு குறித்து பேசுகிறார். அதற்கு முன் இலக்கிய விமர்சனத்தில் தர வரிசை எனும் அடிப்படையில் பட்டியல்கள் ஏன் உருவாக வேண்டும் என நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். ரெ.கார்த்திகேசு அவர்களின் படைப்பிலக்கியம் குறித்து குறிப்பிடும்போது அவர் தமிழக எழுத்தாளர் கு.ராஜவேலு அவர்களுக்கு ஒப்பானவர் என்கிறார். கு.ராஜவேலுவுக்கு இலக்கிய வரிசையில் மண்ணுக்கு அடியில் எட்டு அடி ஆழத்தில் இடமுண்டு என்றும் அந்த இடமே ரெ.கார்த்திகேசுவுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.

இதன் அர்த்தம் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவுக்கு மண்ணுக்கு அடியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதல்ல. மேலிருந்து கீழாக விமர்சகனின் தரவரிசை அடிப்படையில் ரெ.கார்த்திகேசுவின் புனைவுக்கு மிக அடியில் இருண்ட இடத்தில் மட்டுமே இடமுண்டு. அதன் தரம் அவ்வளவே என்பது பொருள். உண்மையில் மதியழகன் அவர்களுக்கு ரெ.கார்த்திகேசுவின் படைப்புகள் மீது பற்றுதல் இருந்தால் அது ஏன் உயர்வானது என விமர்சனக் கட்டுரை எழுதி வாதிடலாம். ஆனால் அவர் ரெ.கார்த்திகேசுவிற்கு காலுக்கு அடியில்தான் இடம் என ஜெயமோகன் பலித்துவிட்டதாக தொடர்ந்து கூறுகிறார். ஆனால் அப்படி ஒருவரியும் உரையில் இடம்பெறவில்லை. ஆனால் மண்ணுக்கு அடியில் என்பதை காலுக்கு அடியில் என மாற்றிச் சொல்வதன் மூலமே மக்களின் உணர்ச்சியை மதியழகன் அவர்களால் இலகுவாகத் தூண்ட முடியும். இப்படித்தான் மதியழகன் அவர்கள் சொல்லாத ஒரு சொல்லை இணைத்து பேனை பெருச்சாளியாக்குகிறார். அதேபோல ஜெயமோகன் அவர்கள் உரையாற்றியது எழுத்தாளர் ம.நவீன் 2018இல் தொகுத்த நேர்காணல்கள் (மீண்டு நிலைத்த நிழல்கள்) வெளியீட்டில் ஆற்றிய உரை. ம.நவீன் அவர்களின் ஆவணப்பட பணி, நேர்காணல் பணியை ஜெயமோகன் இந்த நிகழ்ச்சியில் பாராட்டுகிறாரே தவிர அவரது எழுத்துத்துறை சார்ந்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்க்கூற்று 2 :

/அவர்களுக்கு பேய்ச்சி நாவல் காப்பியம். எனக்கு அந்த நாவல் குப்பை. அவர்களுக்கு பிடித்த ஒரு நாவல் எனக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று இவர்கள் என்னை நிர்பந்தம் செய்வது எப்பேர்பட்ட மோசமான மனநிலை./ (4.2.2020)

விளக்கம்:

இந்த சர்ச்சையில் பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் http://vallinam.com.my/navin/ எனும் தளத்தில்தான் உள்ளன. எதற்கும் நேரம் எடுத்து  அனைத்துக் கட்டுரையையும் வாசித்தேன். அதில் மதியழகன் அவர்கள் சொல்லியுள்ள கூற்று எங்கும் காணப்படவில்லை. யாருமே பேய்ச்சி நாவலை விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறவில்லை. மதியழகன் அவர்களின் பார்வையில் அந்த நாவல் குப்பையாக இருந்தால் அதையும் இலக்கிய வாசகர்கள் மறுக்கவுமில்லை. ஆனால் அவர் இலக்கிய விமர்சனமாகச் சொல்லிக்கொள்ளும் மூன்று விசயங்களுக்கு மட்டுமே எதிர்வினை எழுதப்பட்டது. முதலாவது, நாவலில் வரும் நேர்க்கூற்று (direct speech) வாக்கியத்தில் உள்ள கொச்சையான மொழி. இரண்டாவது, நாவலில் சாதி துவேசம் என்ற குற்றச்சாட்டு. மூன்றாவது எழுத்தாளரின் தொழிலோடு புனைவை சம்பந்தப்படுத்தியது. இந்த மூன்றும் பேய்ச்சி நாவலுக்கானது மட்டுமல்ல. பொதுவாக எழுதப்பட்ட அனைத்து புனைவுகளுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடியதே. அவ்வகையில் இந்த மூன்றும் இலக்கியத்திற்கு ஒவ்வாது என்பதே வாதமாக எழுந்தது. அதாவது இது பேய்ச்சி நாவல் குறித்த வாதம் அல்ல; ஒட்டுமொத்த இலக்கிய ரசனை குறித்த வாதம்.

இலக்கிய வாசிப்பாளர்கள் அனைவருக்குமே இந்தக் கூற்று இலக்கிய விமர்சனத்துடன் தொடர்புடைவை அல்ல எனப் புரிந்துகொண்டதால் அதை ஆதாரங்களுடன் மறுத்தனர். மேலும் பலர் பேய்ச்சி தங்களுக்கு ஏன் பிடித்தது என்றும் கட்டுரைகள் எழுதினர். ஏன் பிடிக்கவில்லை என மதியழகன் அவர்கள் எழுதும்போது ஏன் பிடித்தது என இலக்கிய வாசகர்கள் எழுதுவதில் என்ன சிக்கல் உள்ளது? இதில் எங்குமே மதியழகனுக்குப் பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் நடக்கவே இல்லை. மதியழகனுக்கு நாவல் பிடித்தே ஆகவேண்டும் என எங்காவது எழுதப்பட்டிருந்தால் அதை அவர் தாராளமாகச் சான்றுகளுடன் நிரூபிக்கலாம். அப்படி முடியாத பட்சத்தில் மன உளைச்சல் பெருகி தனது வழக்கப்படி மீம்ஸுகள் மூலம் கேலி செய்துக்கொண்டிருக்கலாம். அதுதான் பலவீனமான படைப்பாளிகளின் பரிதாபச் செயல். அறிவார்த்தமான எந்த விவாதங்களுக்கும் பதில் கொடுக்காமல் கேலி கிண்டல் செய்வதன் மூலமே மதியழகன் அவர்களால் தனது தரம் என்ன என்று இலக்கியச் சூழலில் காட்ட முடிகிறது.

பொய்க்கூற்று 3 :

/நவீனும் பாண்டியனும் பெரிய பொய்காரர்கள். அவர்களிடம் எந்த உண்மையும் நேர்மையும் இல்லை என்று நான் ஆதாரத்தோடு பலமுறை நிருபித்துள்ளேன். ‘வல்லினம் 100’ நூலுக்கு NLFCS இருபதாயிரம் வெள்ளி கொடுத்ததாக பொய்யான செய்தியை வல்லினத்தில் எழுதினார்கள். இந்த பொய் செய்தி குறித்து நான் எழுதியதும், உண்மையை ஒத்துக் கொண்டார்கள்./ (2.2.2020)

விளக்கம்:

மதியழகன் அவர்கள் குறிப்பிட்ட அந்தச் செய்தியை தரவுகளின் வழி ஆராய்ந்தேன். நவம்பர் 2018 வல்லினம் தன் பத்து நூல்களை எப்படி வெளியிட்டது என்ற கட்டுரை ஒன்று உள்ளது. http://vallinam.com.my/version2/?p=5837 அதில் இது குறித்த தெளிவான விளக்கம் உள்ளது. அதில் கூறியுள்ளதாவது /கடந்தாண்டு வெளியிடப்பட்ட ‘வல்லினம் 100’ இலக்கியக் களஞ்சியத்தைப் பார்த்து அதன் தரத்தையும் அதற்கான உழைப்பையும் பாராட்டி,  தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் வழங்கிய 20,000 வெள்ளி நிதியுதவி கலை இலக்கிய விழா ஏற்பாட்டுக்குப் பேருதவியாக அமைந்தது./ இந்த வாக்கியத்தில் மிகத்தெளிவாகவே 2017இல் வெளியிடப்பட்ட வல்லினம் 100 (கட்டுரை எழுதப்பட்டது 2018 என்றால் கடந்த ஆண்டு என்பது 2017 )  களஞ்சியத்தைப் பார்த்து 2018இல் நடந்த கலை இலக்கிய விழாவில் வெளியிடப்பட்ட 10 நூல்களுக்கு மட்டுமே 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது எனப்புரிகிறது. இந்தப் பணத்துக்கும் வல்லினம் 100 களஞ்சியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மை நிலவரத்தை வல்லினமே தெளிவாகச் சொன்ன பிறகு மதியழகன் அவர் தானே கண்டுப்பிடித்ததாகச் சொல்வது எதை? அதையும் ஆராய்ந்தேன்.

இது தொடர்பாக ம.நவீன் அவர்களை அணுகியபோது 10 நூல்களுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2018இல் வழங்கிய நன்கொடைக்கான கடிதத்தை புலனம் வழி அனுப்பிவைத்தார். எனவே எல்லா சான்றுகளுடன் வெளிப்படையாக(transparent) இயங்கும் அவர்கள் எதையும் மறைக்கவில்லை. பண மோசடி செய்பவர்கள் நன்கொடை விவரங்களை தங்கள் தளத்தில் பதிவிட வேண்டிய அவசியமும் என்ன? மதியழகன் அவர்கள் பதிவில் உள்ள ‘கடந்த ஆண்டு’ என்ற வார்த்தையை வாசிக்காமல் ‘வல்லினம் 100’ களஞ்சியத்துக்காக 20,000 ரிங்கிட் கிடைத்தது என அவரே தவறாகப் புரிந்துகொண்டு, தனது சிறுகதை அந்தக் களஞ்சியத்தில் வெளிவந்ததால் அத்தொகையில் ராயல்டி வேண்டும் என அவதூறுகள் கிழப்ப, வல்லினம் குழுவினர் அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். http://vallinam.com.my/version2/?p=6234 இப்போது அதை அனைவரும் மறந்திருப்பார்கள் என, அவர் ஏதோ கண்டுப்பிடித்ததாகவும் வல்லினம் ஒப்புக்கொண்டதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார். உண்மையில் அவர் கண்டுப்பிடித்தது ‘கடந்தாண்டு’ என அவர் ஒழுங்காக படிக்காத வார்த்தையைத்தான். தனது பலவீனத்தை தானே கண்டுப்பிடித்து அதை மற்றவர்கள் பலவீனமென சப்பைக்கட்டுகிறார்.

பொய்க்கூற்று 4:

 /நான் அகி மியூசிக் நிறுவனத்தில் பணத்தை கொள்ளை அடித்து விட்டதாக நவீனின் முகநூலில் எழுதினான். நான் பூச்சோங்கில் ஒரு பெண்ணை கிண்டல் செய்து அடிவாங்கியதாக தன் முகநூல் பக்கத்தில் எழுதினான்./ என மதியழகன் பதிவு செய்துள்ளார். (2.2.2020)

விளக்கம்:

இதைப் படிப்பவர்கள் முகநூலில் எழுத்தாளர் நவீன் இந்த அவதூறை செய்ததாகக் கருதலாம். முழு உண்மை என்பதும் திரிக்கப்பட்ட உண்மை என்பதும் வெவ்வேறு என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். இதை நானே அராய்ந்து அறிந்தேன். இந்த இரு பதிவுகளுமே எழுத்தாளர் நவீன் அவர்கள் இட்ட பதிவின் கீழ் பிறர் இட்ட எதிர்வினைகள். அவர்கள் எழுத்தாளர் நவீன் அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் என மதியழகன் அவர்களே தன் முகநூலில் பதிவிட்டு உள்ளார். அது அவர் ஊகமாகவோ உண்மையாகவோ இருக்கலாம். அதை ஆராய்வது என் நோக்கமல்ல. ஆனால் மிக எளிதாக முந்தைய பதிவில் அவை ‘நவீனுக்குத் தெரிந்தவர்கள் இட்ட பதிவு’ எனக்கூறிவிட்டு இப்போது நவீன் இட்ட பதிவு என எழுதுவது எவ்வகை நியாயம். நம்முடைய பலவீனம் மறதி. மதியழகன் அவரே கடந்த ஆண்டு ஒன்று சொல்லி இந்த ஆண்டு மற்றுமொன்றை திரித்துச் சொன்னால் நாம் அதை உண்மையென நம்புவோம். ஆராயமாட்டோம். பின்னர் இந்த பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு உண்மை போல காட்டப்படும். மதியழகன் அவர்களை எண்ணி சில சமயம் வருத்தம் வருகிறது. இதுபோன்ற உளரல்களை bipolar disorder உள்ளவர்களால்தான் திட்டமிட்டுச் செய்ய முடியும். இது உச்சமாக வெளிப்படும் காலக்கட்டத்தில் அவருக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம்தான்.

பொய்க்கூற்று 5 :

 /நவீன் தான் எழுதிய வண்டி சிறுகதையை தலித் சிறுகதை என்று கூறியபோது, இதை நான் கடுமையாக எதிர்த்தேன். வண்டி எதன் அடிப்படையில் தலித் சிறுகதை ஆகிறது? மலேசியாவில் தலித் சிறுகதை என்கிற ஒன்றை நவீன் நிருவ முயல்கிறானா? என்கிற கேள்வியை முன் வைத்தேன். இதற்கு இன்று வரை வல்லினத்திடமிருந்து பதிலே இல்லை./ (2.2.2020)

விளக்கம்:

அந்த விவாதத்தை நேரம் எடுத்து முழுமையாக வாசித்தேன். குறிப்பாக தலித் இலக்கியம் குறித்த கேள்விக்கு ம.நவீன் விரிவான விளக்கம் கூறியுள்ளார். http://vallinam.com.my/navin/?p=3324. மதியழகன் அவர்கள் தலித் என்பதை ஜாதியுடன் ஒப்பிட்டுள்ளார். தலித் இலக்கியம் என்பதே சாதி இலக்கியம். நவீன் அவர்கள் ஜாதி இலக்கியத்தைக் கொண்டுவருகிறார் எனச் சாடியிருப்பார். ம.நவீன் அவர்கள் அதை மறுத்து ஆய்வின் அடிப்படையில் தலித் என்பது பூர்வக்குடி, குரலற்ற மக்கள், அதிகாரம் அற்ற மக்கள், சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் எனப் பட்டியல் இட்டிருப்பார். அதேசமயம் மதியழகன் அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் பொய் என வழக்கம் போல ஆதாரம் இல்லாமல் ‘இல்லை இல்லை’ என மறுத்திருக்கிறார். ஆனால் ஆய்வுகள் அதையே காட்டுகின்றன. இந்நாட்டில் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களின் ஆய்வு நூலில் கூட ம.நவீனுடைய கருத்தே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மதியழகன் அவர்கள் இந்த ஆய்வுக்கருத்தையும் எவ்வித தேடலும் இன்றி, ஆய்வுகள் இன்றி, தரவுகள் இன்றி கேலி செய்து நிராகரிக்கக் கூடியவர். முகநூலில் தனக்கு யாரைவிடவும் தலித் இலக்கியம் பற்றி நன்றாகத் தெரியும் எனக்கூறியவர் அதுபற்றி எந்த ஆய்வின் தரவுகளையும் காட்டவில்லை. அப்படி ஏதும் ஆய்வுகள் இருப்பின் அதையும் நான் வாசித்துத் தெளிவு பெற தயாராகவே இருக்கிறேன். இப்படி மதியழகன் அவர்கள் ஒன்றைக் கேள்விக்கேட்டு அதற்கு ம.நவீன் அவர்கள் தெளிவான விளக்கம் கொடுத்தப்பிறகும் ம.நவீன் அவர்கள் பதில் கூறவில்லை என்கிறார். இதுதான் மதியழகன் உத்தி. வாசகர்களின் மறதியைப் பயன்படுத்தி பிறரை முட்டாளாகக் காட்டுவது.

பொய்கள் மட்டுமன்றி மதியழகன் தாராளமாகவே அவதூறுகளை வீசக்கூடியவர். கடந்த காலங்களில் வந்த கட்டுரைகளில் அதை பல எழுத்தாளர்கள் தெளிவாகவே நிரூபித்துள்ளனர். அவ்வாறு மதியழகன் செய்துள்ள அவதூறுகள் சில:

அவதூறு 1:

வல்லினத்திலிருந்து சிலர் பிரிந்து செல்வது அதன் வீழ்ச்சி. எனவே வல்லினம் பலவீனமான இயக்கம்.

பதில்:

நான் பல இயங்களின் செயல்பாடுகளைக் கண்டுள்ளேன். எந்த இயக்கத்தில் பிரிவுகளும் பிழவுகளும் இல்லை? எங்கு உரசல்கள் இல்லை? எங்கு மனவருத்தங்கள் இல்லை? அது மிக இயல்பானதுதானே. மதியழகன் அவர்கள் கூறிய நபர்களின் படைப்புகளை நேரம் எடுத்து வாசித்தேன். அத்தனையும் தரமானவை. வல்லினத்தில் பிரிந்தவர்களை நினைத்து வேதனைப்படும் மதியழகன் அவர்களுக்கு ஒரு சவால். வல்லினத்திலிருந்து விலகிய சு.யுவராஜன், சிவா பெரியண்ணன், பூங்குழலிவீரன், மணிமொழி, அகிலன், விஜயலட்சுமி, சரவண தீர்த்தா, தோழி, யோகி, கே.பாலமுருகன் என யாராவது ஒருவரை உங்கள் சார்பாக பேச அழையுங்கள். ‘படைப்பாளி தன் படைப்பில் உள்ள  கதாபாத்திரத்தின் வசனத்தில் கொச்சையான மொழியைப் பேசக்கூடாது என்றும் ஆசிரியர் தொழில் செய்பவர்கள் மக்களின் கொச்சையான மொழியை எழுதக்கூடாது என்றும்’ உங்கள் கருத்துக்குச் சாதகமாகக் கூற வேண்டும். கூறுவார்களா? நீங்கள் சொல்வதுபோல இவர்கள் வல்லினத்திற்கு எதிரானவர்களாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்துக்கு எதிரானவர்கள் இல்லை.  தொடர்ந்து வாசிப்பவர்கள். வரலாற்றில் அந்தப் பிழையான கருத்தைச் சொல்லிவிட்டு அவர்கள் பலிசொல்லுக்கு ஒருபோதும் ஆளாக மாட்டார்கள். எனவே உங்கள் வருத்தம் அவசியமற்றது. அவர்கள் வல்லினத்தில் இருந்து போயிருந்தாலும் உங்கள் கருத்துகளுக்கு எதிரானவர்கள். காரணம் அவர்கள் அறிவு சார்ந்தவர்கள்.

வல்லினம் பதிவு செய்யப்பட்ட இயக்கமல்ல என எழுத்தாளர் நவீன் சில இடங்களில் எழுதியுள்ளார். வல்லினம் குழு என்பதே அரூபமாக (abstract) உள்ளது. அவர்கள் முன்னெடுக்கும் சிந்தனையுடன் ஒத்துச்செல்பவர்கள் வல்லினத்தில் தொடர்ந்து எழுதுகிறார்கள்; அவர்களுடன் பயணிக்கிறார்கள். சிந்தனையோடு முரண் படுபவர்கள் விலகிக்கொள்கிறார்கள். சிந்தனை இருக்கும் இடத்தில் முரண்பாடுகள் இருக்கும். எனவே வல்லினம் குழுவில் ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பது அந்த எழுத்தாளரின் மன அமைப்பைப் பொறுத்தது. யாரும் வல்லினத்தில் பாரம் கொடுத்து பூர்த்தி செய்து அங்கத்துவம் பெறவில்லை என்பதும் பதவிகள் இருப்பதால் மட்டுமே பணிகள் செய்கிறார்கள் என்பதும் இங்கு இல்லை. இதையே இவர்களின் பலமாகவும் புதுமையாகவும் நான் கருதுகிறேன்.

அவதூறு 2 :

வல்லினம் குழுவினர் விமர்சனத்திற்கு எதிரானவர்களா? விமர்சனம் செய்ததால்தான் நவீன் போலிஸ் புகார் செய்தாரா?

பதில்:

மதியழகன் அவர்கள் விமர்சனத்திற்கும் போலிஸ் புகாருக்கும் நடுவில் உள்ள ஒரு சம்பவத்தைச் சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார். அவரது எந்தப் பதிவிலும் அதைக் காண முடியவில்லை. அது வாட்சப் வழி அவதூறு பரப்பல். ம.நவீன் அவர்களின் பதிவின்படி அவர் புகார் செய்தது தனது படத்துடன் தான் சாதிய துவேசம் செய்வதாக ஒரு அவதூறை உருவாக்கி அதை புலனம் வழி பரவ விட்டதின் விளைவால் எனப்புரிகிறது. அப்படி ஒருவர் குறித்து குறிப்பிட்ட செய்தியைப் பரவ விடுவது இலக்கிய விமர்சனம் அல்லவே. எனவே இவ்வாறு ஒரு தகவல் பரவுகிறது என்பதை காவல் நிலையத்தில் பதிவு செய்வது அவசியம். காரணம் அந்தத் தகவல் பெற்ற யாரின் மூலமாவது எதிர்மறையான சம்பவம் கூட நிகழலாம். எனவே இதுபோன்ற பாதுகாப்பு புகார் என்பது அடிப்படையானது; அவசியமானது. இதில் இலக்கிய விமர்சனம் எங்கிருந்து வந்தது? நாம் ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு உணவு சரியில்லை எனச் சொல்வது விமர்சனம். அதில் தவறே இல்லை. ஆனால் எலிகளை கொல்ல வைத்திருக்கும் பாசானத்தைப் புகைப்படம் எடுத்து இதைதான் உணவில் கலந்துகொடுக்கிறார்கள். கடையில் இது இருப்பதால் உணவிலும் கலந்திருக்கும் என செய்தி பரப்புவது விமர்சனம் ஆகாது அல்லவா? அதற்கு புகார் செய்வது விமர்சனத்தை முடக்குவது அல்ல.

மதியழகன் அவர்கள் தான் எதை செய்தாலும் அதை இலக்கிய விமர்சனத்திற்குள் கொண்டு வருவதுதான் வேடிக்கை.

அ. பேய்ச்சி நாவலுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தவர்களை தொலைப்பேசியில் மிரட்டுவது.

ஆ.  புலனம் வழி அவதூறுகளைப் பரப்புவது

இ. மீம்ஸ்களை உருவாக்குவது; பரவவிடுவது

ஈ. அமைச்சுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் புகார் கடிதம் எழுதுவது.

என தொடர்ச்சியாக பல தரக்குறைவான செயல்களைச் செய்துவிட்டு தன்னை பிறர் தனிமனித தாக்குதல் செய்வதாக கழிவிரக்கத்தை (sympathy)வேண்டுவதெல்லாம் உட்சபட்ச நாடகம்.

அவதூறு 3 :

 வல்லினம், எழுத்தாளர் மா.சண்முகசிவாவை கொண்டாட உருவாக்கப்பட்டதா?

பதில்:

இதற்கு வல்லினம் நடத்திய விமர்சன கூட்டம் ஒன்றில் கங்காதுரை மா.சண்முகசிவா சிறுகதைகள் குறித்து எழுதிய கட்டுரையை வாசித்தேன். இக்கட்டுரையை ஒட்டியே மதியழகன் பேசுகிறார். (http://vallinam.com.my/version2/?p=3869.)

அக்கட்டுரையின் சில வரிகள்

அ. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் முழுமையான, அசலான தோட்டப்புற வாழ்க்கையைப் பதிவு செய்யாத படைப்புகளாக அவரது படைப்புகள் இருக்கின்றன.

ஆ. அவரது எளிய மனிதர்களின் கதாபாத்திரங்களுடன் உண்டாகும் நெருக்கம் டாக்டர் சுந்தரம், திரு.திருமதி கனகரட்னம், டாக்டர் கிறிஸ்டபர், டாக்டர் ரவி, ஜூலி போன்ற கதாபாத்திரங்களிடத்தில் ஏற்படவில்லை.

இ. மா.சண்முகசிவாவின் படைப்புலகத்தில் வீரியமான பெண் கதைமாந்தர்கள் மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவும் பலவீனமான பெண் கதைமாந்தர்கள் விளிம்புநிலையைச் சார்ந்தவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.

ஈ. மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் பெரும்பான்மையான கதைகள்போல திருப்பங்களை நோக்கிச் செல்பவைதான். ஆனால், அது எல்லாக் கதைகளிலும் முழுமையாக எடுபடவில்லை.

உ. மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் வாசகனுக்குப் போதுமான ‘வாசக இடைவெளி’ இருந்தும் அவர் அந்த இடைவெளியில் மேற்கொண்டு விவரித்து வாசகனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார்.

ஊ.  ‘திரைகடலோடி’ மற்றும் ‘கிழிசல்’ கதைகளின் முடிவும் நிறுத்தப்படவேண்டிய நுட்பமான இடத்திலிருந்து நீண்டு செல்கின்றன.

எ. அவள்-நான்-அவர்கள் கதையின் துவக்கம் நன்றாக அமைந்திருந்தாலும் கதையின் மையப்பகுதியில் தொய்வடைந்து பின்னர் அது வெறும் நாளிதழ் செய்தியாக மாறிவிடுவதை உணர முடிகிறது.

ஏ. கதாபாத்திரத்தின் மூலம் ஆசிரியர் தன் கருத்தை ஏற்றி வாசகனுக்குச் சொல்லும் தகவல் அதன் கலைத்தன்மையை மந்தமாக்குகிறது.

இவை அனைத்தும் கூர்மையான விமர்சனங்கள். இன்னும் ஏராளமாக உள்ளன. இவ்வளவு விமர்சனம் வைக்கக் கூடிய கட்டுரைதான் டக்டர் சண்முகசிவாவை வல்லினம் உயர்த்திப்பிடிக்கப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார். இவ்வளவு பலவீனமான கருத்தை மறுக்க மற்றவர்கள் வரக்கூடாதாம். டாக்டர் சண்முகசிவாவே வரவேண்டுமாம். அதாவது மதியழகன் நிலவைப் பார்த்து அதில் கருப்பாக உள்ளதெல்லாம் வாழைமரத்துக் கறை என்பார். அவர் அறியாமையை யாரேனும் சுட்டிக்காட்டினால் ‘நீ ஏன் பதில் சொல்கிறாய்? நிலாவில் வடை சுடும் ஒளவையாரை வரச்சொல்’ என்பார். ஒளவையார் கடைசி வரை வராததால் “பார்த்தியா ஒளவை வந்து விளக்கம் சொல்லல. நான்தான் ஜெயிச்சேன்” எனக் கூச்சல்போடுவார். அப்பாவி மக்கள் லைக் போடுவர்.

அவதூறு 4:

7 அக்டோபர் 2018இல் நவீன் அவர்கள் சண்முகசிவாவை மிகையாகப் பாராட்டி கட்டுரை எழுதினாரா?

பதில்:

இல்லை. அந்தக் கட்டுரையைத் தேடினால் அது ‘நூல் முன்னுரை’ எனும் வகைக்கு கீழ் வருகிறது. http://vallinam.com.my/version2/?p=5695 அது கட்டுரையே அல்ல. அதாவது அந்த நூலுக்கு ம.நவீன் அவர்கள் எழுதிய முன்னுரை அது; கட்டுரை அல்ல. கட்டுரை என்பதும், விமர்சனக் கட்டுரை என்பதும், முன்னுரை, அணிந்துரை என்பதும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. எனவே நூல் முன்னுரையில் எழுத்தாளரின் நேர்மறையான முகம் அதிகம் காட்டப்படுதல் இயல்பு.

இவ்வளவு விடயங்களையும் ஆராய்ந்தபின் சில கேள்விகள் எழுந்தன. அதற்கான பதில்களையும் சான்றுகளோடு வைக்கிறேன்.

கேள்வி 1 :

மதியழகன் அவர்கள் உண்மையில் பேய்ச்சி நாவலில் உள்ள பாலியல் சொற்களால் கோபப்படுகிறாரா?

பதில் :

  2014இல் சகோதரர் தயாஜி அவர்கள் எழுதிய ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை வல்லினத்தில் இடம்பெற்றது. இப்போதைய நிலையைவிட அப்போது இன்னும் அக்கதை தாக்குதலுக்கு உள்ளானது. தாய்மை, மதம் அனைத்தையும் கலங்கப்படுத்திவிட்டதாக நாளிதழில் வந்ததை நம்மைப் போலவே மதியழகன் அவர்களும் வாசித்ததுள்ளது அவர் பதிவின் வழி தெரிகிறது.(4.2.2020) ஆனால் மதியழகன் அவர்கள் 2016இல் நடந்த வல்லினம் சிறுகதை போட்டியில் ‘குளத்தில் முதலைகள்’ http://vallinam.com.my/version2/?p=3478  எனும் சிறுகதையை அனுப்பி  மூன்றாவது பரிசைப் பெற்றார். தொடர்ந்து 2017இல் நடைபெற்ற வல்லினம் போட்டிப்படைப்புகளுக்கும் ‘நகர்வு’ http://vallinam.com.my/version2/?p=4420  எனும் சிறுகதை அனுப்பினார். அது வெற்றிப்பெறவில்லை. 2017இல் தொடங்கப்பட்ட குறுநாவல் பதிப்புத்திட்டத்திலும் இவர் பங்கு பெற்றதை ஐயா செல்வன் காசிலிங்கம் வழி அறிந்தேன். அவரது ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவலை வாசித்து முகநூலில் ‘சாட்’ வழி உரையாடியபோது மதியழகன் குறுநாவல் அனுப்பி அது தேர்வு பெறாததை என்னிடம் கூறினார். அப்படியானால், 2017க்கு முன்பு மதியழகன் அவர்களின் பார்வையில் வல்லினம் பலவீனமாக இல்லையா? அப்போது ஆபாசமான கதைகளை வெளியிட்டதாக சர்ச்சைகள் வல்லினம் மீது இருந்தாலும், அது நடத்தும் போட்டிகளில் பங்கெடுத்து ஜெயிப்பது கௌரவமாக இருந்ததா? சகோ தயாஜி சிறுகதைக்கு அவர் ஏன் கண்டனம் தெரிவித்து அப்போதே வல்லினத்தில் இருந்து ஒதுங்கவில்லை? அந்தக் கதைக்கு முன்பும் பின்பும் பாலியல் சார்ந்த பல்வேறு படைப்புகள் வல்லினத்தில் வந்துள்ளன. ஏன் 2017வரை அவர் எதையும் எதிர்க்கவில்லை? ஏன் வல்லினம் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்? நான் ஆராய்ந்தபோது மிகச்சரியாக 2017 நாவல் முடிவு தெரிவிக்கப்பட்ட பின்புதான் மதியழகன் அவர்கள் வல்லினத்தைச் சாடத்தொடங்குகிறார். அப்படியென்றால் இது தோல்வியினால் ஏற்பட்ட அவமானத்தின் கொந்தளிப்பு. அந்த அவமானத்தையெல்லாம் சகித்துக்கொண்டு முகநூலிலும் விமர்சனக் கட்டுரைகளிலும் மீம்ஸுகளிலும் சிரிக்க முயல்வதை நாம் பாராட்ட வேண்டும்.

கேள்வி 2:

/நான் எந்த கோவிலில் வேண்டுமானாலும் சூடம் அணைத்து சத்தியம் செய்வேன். அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் புதிதாக பூத்த இந்த மலர்கள் யாருமே நவீனோடும் வல்லினத்தோடும் தொடர்ப்பில் இருக்க மாட்டார்கள். எத்துனை ஆயிரம் வெள்ளி வேண்டுமானாலும் பந்தயம் வைத்துக் கொள்ளலாம்./ எனச்சவால் விட்டுள்ளார்.

பதில்:

இது உங்கள் தனிப்பட்ட விசயம் என்றாலும் இதுபோன்ற சவால் விடும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே வல்லினம் சிறுகதை போட்டியில் வென்ற 1000 ரிங்கிட்டை மாதம் நூறு ரிங்கிட்டாக கொடுப்பதாக சபதம் எடுத்திருந்தீர்கள் (26.10.2018). அதைச் செலுத்திவிட்டீர்களா? உங்கள் சபதம் உங்கள் நினைவுக்காக:

1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய //குளத்தில் முதலைகள்// என்கிற சிறுகதைக்கு வல்லினம் எனக்கு மூன்றாவது பரிசு கொடுத்தார்கள். நான் அந்த பரிசை திருப்பி கொடுக்க முடிவு எடுத்துள்ளேன். எனக்கு கொஞ்சம் ரோசம் இருக்கிறது. கூடவே கௌரவமும் இருக்கிறது.

2. நேர்மையற்ற/ அயோக்கியதனம் கொண்ட வல்லினம் கொடுத்த பரிசு என்னிடம் இருக்கும் வரை அது எனக்கு ஒரு அவமான சின்னமாகவே இருந்து கொண்டு இருக்கும். என் வாழ்நாள் முழுக்க அது என்னை கேவலப்படுத்தும் அடையாளமாக இருக்கும். ஆகவே வல்லினம் எனக்கு கொடுத்த அந்த பரிசை திருப்பி கொடுப்பதாக அறிவிக்கிறேன்.

1000 ரிங்கிட்டையே செலுத்த முடியாத தாங்கள் எத்தனை ஆயிரம் ரிங்கிட் வேண்டுமானாலும் என சபதம் இடுவதெல்லாம் தேவையா? தோற்றால் நீங்கள் கொடுக்கப்போவதில்லை. வாக்குறுதியைக் காப்பாற்ற கொஞ்சம் சுயகௌரவம் அவசியம் அல்லவா? எனவே இனி இதுபோன்ற சபதமெல்லாம் செய்ய வேண்டாம் சார்.

நான் இங்கு முன்வைத்துள்ள ஒவ்வொன்றும் ஆதாரத்தின் அடிப்படையானவை. எப்போது பொய் அவ்வளவு சத்தமாக ஒலிக்கிறதோ உண்மை எங்கிருந்தாவது தன் குரலையும் பதிவு செய்ய வேண்டும். அதை சம்பந்தப்பட்டவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதல்ல. அற உணர்வு உள்ள ஒவ்வொருவரும் செய்யலாம். அதற்கு எதிராக நின்று குரல் கொடுப்பவர்களை காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

(Visited 355 times, 1 visits today)