நாவலின் முகப்பே அதிரும் வகையில் இருக்கையில் கதையும் இன்னும் அதிர வைக்கும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். டிசம்பர் மாதம் கலந்து கொண்ட முகாமில் அருண்மொழி நங்கை அவர்கள் பேய்ச்சி நாவலையொட்டி விமர்சனம் செய்கையில் நாவலை கண்டிபாகப் படித்தே ஆக வேண்டும் என்று என் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. நாவலை பேரார்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
காத்தாயின் கதையைப் படிக்கையில் அவளுக்கு ஏன் இத்துயரம் ஏற்பட வேண்டும்? பல முறை குழந்தை பிறந்து இறந்த துயரம் ஒரு தாயின் மனநிலையையும் சீர்குழைக்கும் என்பதைக் கோப்பேரன் அறியாமலா இருந்திருப்பார். தனக்குத் தெரிந்த வைத்தியத்தைக் கொண்டு பலரைக் காப்பற்றிய அவர் கடவுளாகப் புலப்பட்டவர் காத்தாயியை அப்படியே விட்டுச் சென்றபோது ஒரு கோழையாகவே என் கண்களுக்குப் புலப்படுகிறார். இயற்கையோடும் மூலிகையோடும் அவர் தன் வாழ்க்கையை நகர்த்திய காட்சியை நாவலாசிரியர் அழகாக வெளிகாட்டியுள்ளார்.
பலர் தன்னை பெண் என்று கேலிச் சொற்களைக் காதில் வாங்கியும் தன் தந்தையின் தொழிலையே பின்பற்றி மூலிகை கலந்த காற்றோடு வாழ்க்கையைக் கடந்தவர் இராமசாமி. ஊரால் கேலி செய்யப்பட்ட இவர்தான் ஒன்றும் அறியாத சிறுவனின் உயிரை தன் தாயின் கையாலே சூரையாட செய்கிறார். அவர் ஓலம்மாவிற்குப் பல வகையில் உறுதுணையாக வலம் வந்துள்ளார். முக்கியமாகச் சின்னியைக் கொலை செய்யும் போது ஓலம்மாவுடனே அருகில் நின்றவர். அவ்வகையில் நடக்கும் நான்கு கொலைகளுக்கும் ஒரு கருவியும் சாட்சியும் ஆகிறார்.
தைரியத்துடன் ஊர் மக்களுக்காக தைப்பூசத்திற்கு விடுமுறை கோரிய விதமும் மாதத்தில் இரு முறை திரைப்படம் ஒளிப்பரப்புவதற்காக மேற்கொண்ட விவேகமும் மணியத்தை ஒரு போராட்டவாதி என்ற எண்ணத்தைச் சில மணி துளிகளில் சுக்குநூறாக மணியத்தின் மீதுள்ள எண்ணத்தை உடைத்தெரிந்தார் நாவலாசிரியர். ஓலம்மாவின் மகனை கொல்ல இராமசாமியிடம் அழுது புலம்புவதும், சின்னி கதறலுக்கும் பயத்திற்கும் சற்றும் இரங்காமல் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதும் என அவர் கதாபாத்திரம் இரட்டைத் தன்மையானது. வெளியில் ஒருவராகவும் தனது அந்தரங்கத்தில் வேறொருவராகவும் இருக்கிறார் மணியம்.
மணியம் கோரிக்கைக்கு இணங்கி அந்தத் தோட்டத்தில் திரைப்படம் பார்க்கும் காட்சி என் சிறுவயது பருவத்தை நோக்கி எண்ண அலைகள் கடந்தோடியது. நான் வாழ்ந்த தோட்டத்தில் அன்று திரைப்படம் காண்பிக்கபடுவதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பதாகவே திடலில் முன் வரிசையில் பாயை விரித்து காத்திருக்கும் ஆர்வமும் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே கண்ணயர்ந்து தூங்கிய நினைவுகளும் அப்படியே மீண்டு வந்தது. அதே போன்று ராக்காயின் முன் ராஜநாகம் நிற்கும் காட்சியைப் படித்தபோது சிறுவயதில் பால்மரக் காட்டில் தனியாக லயத்தில் ரப்பர் பால் எடுத்து வாளியில் ஊற்றிக்கொண்டே செல்கையில் பளபளவென மின்னிய நீண்ட தடித்த கருநாகத்தைக் கண்டு அலறிக்கொண்டே தாயை நோக்கி ஓடிய என்னை சமாதானம் செய்து உப்புமூட்டை ஏறிக்கொண்டு ரப்பர் பால் எடுத்த அம்மா சென்ற நினைவு இன்று நினைக்கையில் சிரிக்க தோன்றுகிறது.
நாவலின் உயிர் நாடியாகவும் இறைநம்பிக்கை நிறைந்தவளாகவும் அநியாத்திற்குப் பதில் சொல்ல பேய்ச்சியாகவும் அன்பிற்குத் தாய்மையானவளும் மானாகவும் சில சமயம் புலியாகவும் பாய்ந்து வரும் ஓலம்மாவின் செய்கையை நாவலாசிரியர் காட்டிய ஒவ்வொரு காட்சியும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துள்ளது என்றே கூறலாம். அவர் வளர்ப்புப் பிராணிகளிடமும் அப்போயிடம் கொண்ட அன்பு அளப்பரியது. தன் கண் முன்னே தந்தையைப் பறிகொடுத்த அவளது இளம் வயதில் இதயம் கிழிபட்டு ரணமாகி திமிரியதை நினைக்கையில் மனதிற்குள் பாரமாக உணர்ந்தேன். இருப்பினும், ஆக்ரோசத்துடன் சின்னியைக் கொன்ற விதம் கண்களை மூடினாலும் மறக்க இயலாத சம்பவமாக உருவெடுக்கிறது. வளர்ப்புப் பிராணிகளையும் மரங்களையும் அழித்த விதம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு முருகன் பக்தை அந்தக் கொடூரமான செயலை செய்ததை நினைக்கையில் மனதை நடுநடுங்க செய்த நாவலாசிரியரை நினைக்கையில் சற்று அச்சமாகவே உள்ளது.
சின்னி ஒழுகமற்றவள். தன் ஒரு பிள்ளைக்காக பலரின் உயிரை பறித்தவள். ஆனாலும் அந்த கோர மரணங்களுக்கு தான் பொருப்பாளி அல்ல என கெஞ்சி உதவி கேட்ட மணியத்தின் செயலால் துடித்ததும், ஓலம்மாவினால் அன்றே கொல்லப்பட்டு இறந்த விதம் நாவலை படிக்கும் போது விழிகளிருந்து நீர் செட்டு செட்டாக வழிந்தோடியது.
அப்போய் இயற்கையோடு வாழ்வதும் ஒரு பறவையைத் தவறுதலாக அடித்துவிட்டு அந்த மரத்துக்கு அடியிலேயே புதைத்து மண்டியிட்டு “படுமுன்னு நெனைக்கல சாரி…” என்று அழும் காட்சி சிறுவர்களின் உளவியலை நெருங்கிச்செல்ல வைக்கிறது. அவனே வளர்ந்து குமரனாக மாலதியுடன் மீண்டும் அந்தத் தோட்டத்தில் பசுமையான நினைவுகளை மீண்டும் நினைத்து பிரம்மித்து நின்ற தருணம் அந்த உணர்வை எட்டியவர்களால் மட்டுமே உணரக்கூடியது.
ஆம்! குமரனை போன்றே இப்போதும் வாழ்ந்த தோட்டத்திற்குச் சென்றாலும் அதே நினைவலைகளுள் நிலைதிருக்கிறேன். அப்போய் குழந்தமையின் படிமம். எல்லோருக்குள்ளும் உள்ள அப்போய் குணத்தை மீட்பதாலேயே நாவலாசிரியர் ஒரு தரமான படைப்பைப் படைத்திருக்கிறார் என்று கூறலாம்.
புஷ்பவள்ளி