பேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி)

அதிகாலை ஆதவன் ஒளிப்பட்டு சட்டென மறைந்திடும் வெண்பனிபோல் சில நாவல்கள் வாசித்த மாத்திரத்தில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தா வண்ணம் வாசிப்பவர் அகம் விட்டு மறைந்து விடுவது உண்டு. சிற்சில படைப்புகள் மட்டுமே அகத்தினை அணுகி காலவோட்டத்தின் மாறுதலால் அல்லது கால மாற்றத்தால் நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் / மற(றை)க்கடிக்கப்பட்டிருக்கும் கடந்தகால நினைவலைகளினை அகக்கண் முன்னே காட்சிபடுத்துவது மட்டுமல்லாது நிசப்தமானதொரு தாக்கத்திற்குள் அமிழ்த்தி செல்லும். அத்தகைய தாக்கமானது மீட்டெடுக்க இயலாத கால பெருவெளி சமுத்திரத்தில் வெறும் ஞாபக சின்னங்களாக மட்டுமே நிலைத்திருக்கும். ஆழ்கடலின் உள்ளே அமிழ்ந்திருந்த நீர்குமிழி மேலெழும்புவது போல் பேய்ச்சி நாவல் நினைவடுக்குகளிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருந்த எனது கம்பத்து வாழ்வனுபவத்தினை தூசு தட்டி எழுப்பியது என்றே கூறலாம்.

நாவலை வாசிக்க தொடங்கிய போது கருப்பு நிற துணியல் சுற்றப்பட்ட பேச்சியின் உருவகத்தை வாசிக்கையில் தொப்பென்று ஒன்று என் காலடியில் மேற்சொன்ன கருமை நிறத்தில் விழுந்தது. எட்டி அதனை பார்த்த வேகத்தில் அறையை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அது கரப்பான் பூச்சி. இதுவரை வாசித்தது போதும் என்றெண்ணி அன்றைய இரவு நாவலை மூடி வைத்துவிட்டேன். இரு நாட்கள் கழித்தே நாவலை மறுபடியும் வாசிக்க கையிலெடுத்தேன்.

எங்கிருந்து ஒன்று தொடங்கப்படுகிறதோ அதற்கான முடிவும் அதனுள்ளேயே அடக்கம். அதுபோலவே பெண்ணானவள் ஆக்கம், அழிவு இரண்டினையும் தன் அகத்தே கொண்டுள்ளாள். இவ்விரண்டிற்குமான இடைவெளியில் அவள் காப்பவளாகவும் பரிணாமம் கொண்டுழல்கிறாள். தான் சுமந்து பெற்ற ஐந்து குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல பதினாறாம் நாள் மரணிப்பதும் (மனதால் படும் துயர்), பால் கட்டிய மார்தனில் கொதிப்பு குறையாதிருக்கும் தைலத்தினை தடவுகையிலும் (உடல் படும் துயர்), இவ்விரண்டின் தாளா துயர்தனில் இருந்து மீண்டெழுவது பின் தாய்மை அடைவது என காத்தாயி இவ்விடம் படைப்பவளாக தன்னை காட்சிப்படுத்தி கொள்கிறாள்.

உலக உயிர்கள் அனைத்தும் பற்றுதல் என்ற ஒன்றை கொண்டே படர்ந்து விரிந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணப்படுகிறது. பற்றானது அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமானதாக வாழ்ந்திட ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. இளம் வயதில் ஏமாற்றி கர்ப்பமாக்கப்பட்டு ஈவிரக்கமின்றி துரத்தப்பட்ட ஓலம்மாவின் பிடிப்பற்ற வாழ்வானது உயிர்த்தெழ அத்தோட்டத்து மண்ணும் மக்களும் காரணியாக இருக்கின்றனர். அவளுக்கான பற்று அத்தோட்டத்து மண்ணும் மக்களுமே ஆகின்றனர். தன் தோட்டத்து மக்களுக்கு எதுவாகினும் முன் நின்று காப்பவளாகவே இருக்கிறாள் ஓலம்மா. நிராதரவு அற்ற தன் வாழ்வின் அனைத்துமாக உடன் இருந்து பயணப்பட்ட தோட்டத்து மக்களின் மீது அவள் கொண்ட பற்றானது, பிறிதொரு காலம் அவர்களின் ஆற்றொணத்துயருக்கு காரணமானவர்களை (சின்னி மற்றும் கணவர்) அழித்திடவும் செய்தது.

ஓலம்மா தாய் தந்தையரோடு கப்பல் ஏறிய போது கடல் மீதிருந்த பார்வையும், கடல் பயணம் கொடுத்திருந்த அனுபவத்தால் மலாயா மண்ணில் கால் வைத்தபின் கடல் மீதான பார்வையும் வெவ்வேறானது. ஆரம்பத்தில் கொண்டாட்டமாக தெரிந்த கடல் பயணமானது, தன் அப்பாவை பறிகொடுத்ததை நினைவு படுத்துகையில் படபடப்பையும் வெறுப்பையுமே கொடுத்தது.

கோப்பேரன் எங்கே தனக்கு வாரிசு என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமோ என்றெண்ணி காத்தாயிடமிருந்து பிறந்து சில தினங்களேயான பச்சிளம் குழந்தையினை எடுத்து கொண்டு ஓடி வருவது என்பது கோப்பேரன் காத்தாயிக்கு செய்த பாவ செயலாகவே கருத தோன்றுகிறது. இவ்விடம் கோப்பேரன் மீது எனக்கு கோபமே வந்தது. இக்கதையை போன்றே என் பாட்டியையும் அவரின் தந்தையார் மலாயாவிற்கு பிழைப்பு தேடி வருகையில் (மகள் தாயோடு இருக்கிறேன் என்று சொல்லி விடுவாளோ என்று) இனிப்பு திண்பண்டங்களை ஆசைக்காட்டி அழைத்து வந்து விட்டதாகவும், என் பாட்டியின் தாய் மகளை பிரிந்த துயரில் தினமும் அழுது கண்ணீர் வடித்ததாகவும் வேதனையுடன் கண் கலங்க சொல்லக் கேட்டிருக்கிறேன். பாட்டி வாய் வழியாக சொல்கையில் இச்சம்பவம் அன்றைக்கு பெரிதாகப்படவில்லை. பேய்ச்சி நாவலை மனக்காட்சியோடு ஒன்றி வாசித்திடுகையில் அதன் தாக்கம் என்னை உலுக்கி விட்டது.

ஓர் அடையாளம், அதனை கொண்டு சமூகத்தில் தனக்கான ஓர் அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கப்பெறுமாயின் அதனை பெரும்பாலோர் தக்க வைத்துக் கொள்ளவே முற்படுவர். மாறாக அதுவே தனக்கான சுயமரியாதையை இழக்க செய்து, அதிகாரவர்கத்தின் ஏளன பார்வைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் பட்சத்தில், அந்த அடையாளம் என்னும் போர்வையை கழற்றி எறியவே முற்படுவர். வெட்டியான் என்கிற போர்வை தன்மேல் போர்த்தப்பட்டிருக்கும் வரை சுயமரியாதை என்பது தனக்கு ஏற்பட போவதில்லை என்று எண்ணிய மணியம் அந்த அடையாளத்தை துறக்கவே முற்படுகிறார். தந்தை செய்த வெட்டியான் தொழிலால் ஏற்பட்ட அவமானத்தில் இருந்து தன் சுயத்தை மீட்டெடுக்க ஒரு பாலமாகவே சிலம்பம் எனும் தற்காப்பு கலையில் தன் ஆர்வத்தினை செலுத்துகிறார்; சிலம்பம் கற்று தந்த குருவினால் சிறந்த மாணவர் என்ற பெயரும் எடுக்கிறார் மணியம். தோட்டத்து மக்களின் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதும், இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து இளைஞர்களை வழி நடத்தி செல்வதும் என மணியம் தான் வாழ்ந்த தோட்டத்தில் மரியாதைக்குரியவராக வலம் வருகிறார்.

அத்தோட்டத்து மக்களும், தோட்ட நிர்வாகமும் மணியத்தின் சொல்லுக்கு கட்டுப்படுவது என இவை யாவும் இறந்து, மறந்து போன எனது தாத்தாவை ஞாபகப்படுத்தியது. என் அப்பா என் தாத்தாவை பற்றி அடிக்கடி சொல்வது, மல்யுத்தம் பயின்றவர் என்றும், தனது முஷ்டியை மடக்கி சண்டைக்கு இறங்கினால் ஜாப்பான்காரனே பயப்படுவான் என்பார். ஒரு மரத்தை இரம்பத்தால் வெட்ட இரு ஆட்கள் தேவைப்படும் இடத்தில் தாத்தா ஒத்தை ஆளாக நின்று மரத்தை வெட்டி சாய்த்திடுவார் என்றும் பெருமையாக சொல்ல கேட்டிருக்கிறேன். மணியம் போராட்டம் வாயிலாக மாதம் இரு முறை திரைகட்டி இலவசமாக படம் காட்டப்படுவதான வரிகளினை வாசிக்கையில், எனது சிறு வயதில் பாட்டியோடு கைப்பிடித்து தைப்பூசத்திற்கு சென்றதும் அங்குள்ள மண்டபத்தில் அன்றிரவு உறங்கியதும், ஜமுக்காளம் (பாய்) விற்பவரிடம் பாட்டி பேரம் பேசி ஜமுக்காளம் வாங்கி இடம் பிடித்து அமர்ந்ததும் தைப்பூசத்தில் வாங்கி வைத்திருக்கும் அவல், பொரியினை கொரித்தபடியே படம் பார்த்த நினைவுகள் காட்சிகளாய் கண் முன்னே தோன்றி மறைந்தது.

தோட்டத்து மக்கள் சாராயம் குடித்ததும், அதனால் நிலவிய மரணங்களும் மணியத்தை பதறவே வைத்து விட்டது. மரணங்கள் சம்பவித்தலுக்கான காரணம் சின்னி என அறிந்ததும் கோபம் கொண்டே மணியம் சின்னியின் வீட்டை அடைகிறார். என்னதான் சாராயம் விற்பவளாக சின்னி அத்தோட்டத்தில் வலம் வந்தாலும், தோட்டத்து மக்களின் மீதும் தன் மீதும் அவளுக்கிருந்த ஏளன பார்வையே மணியத்தை தக்க சமயம் பார்த்து சின்னியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள வைத்து பழி தீர்த்து திருப்தி கொள்ள வைத்தது.

காடுகள், தோட்டம் மற்றும் கம்பத்தின் நில வர்ணனைகளும் மூலிகை செடிகளின் வகைகள், அதனை பறிக்கும் முறைகள் என நாவலாசிரியர் நான் அறியாத தகவல்களினை இயல்பாக கதையினூடே சொல்லி செல்கிறார். காடுகள் மூன்று கால கட்டங்களுக்குள்ளும் தன்னை எவ்வாறு புதுபித்து கொண்டு காட்சி அளிக்கிறது என்பதை ராமசாமி தன் தந்தை கோப்பேரனோடு மூலிகை பறிக்க செல்கையிலும், தான் இளைஞனான பின் மூலிகை தேடி காட்டில் பிரவேசித்ததும், மழை கொட்டிய நள்ளிரவு என மூன்று கால கட்டங்களின் வாயிலாக சொல்லி செல்வது என்னை கவர்ந்தது. ராமசாமி மூலிகை செடிகள் கொண்ட தோட்டம் ஒன்றினை அமைத்திருப்பதும், ஓலம்மா தன் வீட்டை சுற்றி சமையலுக்கான பயிர்களை நட்டு வைத்திருப்பது போன்ற தோட்டத்து மண்ணின் நில வர்ணனை யாவும் எனது கம்பத்து நிலப்பரப்பையும் அதில் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்த என் இளமை பருவத்தை காட்சிப்படுத்தியது.

ஒன்றை செய்துவிட்டு; செய்த செயலுக்காக (குமரனின் மரணம்) நொடி பொழுதும் வருந்தி உழல்வது கொடுமையிலும் கொடுமை. அந்த ரணத்திலிருந்து வெளிவர தோக் குருவின் வார்த்தைகள் ராமசாமிக்கு புது தெம்பை ஏற்படுத்தி இருந்தாலும் முழுமையாக அதனில் இருந்து மீள முடியவில்லை. தான் செய்த, செய்துவிட்ட செயலுக்கு சமன் செய்யவே ராமசாமி அப்போய் உடன் காட்டிற்குள் செல்கிறார். ஓலம்மாவிற்கு தான் செய்த பெரும் பாவ செயலுக்கான பிரயாச்சித்தமாக இரு குமரன்களில் ஒரு குமரனை மீட்டு கொடுத்திருக்கிறார். இங்கு ராமசாமியின் மீது எனக்கு பரிதாபமே எஞ்சி நின்றது.

தோட்டத்து பள்ளிக்கு தலைமை ஆசிரியராக அறிமுகமாகிய வாத்தியார் என்றழைக்கப்பட்ட கண்ணன் என் மனதில் பதிந்து, கண்களில் கண்ணீர் பூத்த கனத்த பாத்திரம் என்றே கூறலாம். அவரின் இறுதி தருணங்கள் மனதை கசக்கி பிழிந்துவிட்டது.

ஓலம்மா சிறுமியாக, மணியத்தின் மனைவியாக, குமரன் மற்றும் முனியம்மாவின் தாயாக, அப்போய் (பேரன்) பாட்டியாக என ஒவ்வொரு பருவ வயதிலும் பேய்ச்சியாக நாவலில் வலம் வருகையில், நாவலின் இறுதி முடிவு பேய்ச்சி யார் என்பதை சொல்லாமல் சொல்லி சென்றது அதிர்ச்சியில் என்னை கணம் உறைய வைத்து மிரள விட்டது.

நாவலின் முடிவில் பேச்சி எவ்வாறு தன்னை கை கூப்பி வணங்க வைத்தாலோ அவ்வாறே பேய்ச்சி இந்த நாவலின் வழி காலங்கடந்தும் நிலைத்து நிற்பாள்.

நிர்மலா முரசி

(Visited 109 times, 1 visits today)