பேய்ச்சி ஒரு வாசிப்பு – ‘மகிழம்பூ’ கலைசேகர்

வழக்கமாக நவீனின் படைப்புகள் என்றாலே வாசிக்க தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை வேறெதிலும் ஆர்வம் திரும்பாது. ஆனால் பேய்ச்சியை பல இடங்களில் நிறுத்தி எடுத்து வைக்க நேர்ந்தது. மீண்டும் வாசிப்பை தொடர சற்று கால அவகாசமும் தேவையாக இருந்தது எனக்கு.
ஒருவேளை நாவலில் இடம்பெற்ற சில காட்சியமைப்புகளின் சாயல்களை முன்னமே அவர் படைப்புகளில் வாசித்துள்ளது காரணமாக இருக்கலாம். அது ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஒரு நிலத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இருந்து அறிமுகம் செய்வதால் உண்டாகும் ‘பழகிவிட்ட’ மனநிலையாகவும் இருக்கலாம்.

நவீனின் சிறுகதைகளான கோணக்கழுத்து சேவல், நாகம், ஒலி, பேச்சி, வண்டி மற்றும் அவரின் பத்திகள் தொகுப்பு நூலில் வரும் ‘அவதாரும் ஆத்தாவும்’ ஆகியவற்றை வாசித்துள்ளவர்களுக்கு எனக்கு ஏற்பட்ட மனநிலை உருவாகியிருக்க வாய்ப்புண்டு.
காத்தாயி தவறவிட்ட ‘தாய்மை’ பாக்கியத்தில் தொடங்கும் பேய்ச்சி தாய்மையடைய ஏங்கும் மாலதியில் வந்து முடிகிறது. இடையில் முழுவதும் தாயுள்ளம் கொண்ட ஓலம்மா, சின்னி, ராமசாமி என பலரது ஆக்கிரமிப்பில் நாவல் நகர்கிறது.

தங்கள் குழந்தைகளுக்காகக் கொலை செய்யும் அவர்களின் அன்பும் உக்கிரமும் நாவலை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளது. தன் மகளாகக் கருதும் ஓலம்மாவுக்காக ராமசாமி குமரனை கொலை செய்ய துணை போகிறார் என்றால் தாய்மையுடன் ஊரை அரவணைக்கும் ஓலம்மா அதன் அழிவுக்குக் காரணமாக இருந்த மணியத்தையும் சின்னியையும் கொல்கிறாள். மரணத் தருவாயிலும் தன் குழந்தையைக் காக்கும்படி இரைஞ்சும் சின்னிதான் அதை உதாசினப்படுத்தும் ஓலம்மாவையும் ராமசாமியையும் கொல்கிறாள். கொலைகள் தாய்மையைப் பிடித்துக்கொண்டு ஒரு வட்டமாக வலம்வருகிறது இந்த நாவலில்.
‘பேய்ச்சி’ தான் தலைப்பு என்றிருக்க இந்தப் பெண் கதாப்பாத்திரங்கள் தொட்ட விமர்சனங்கள் இந்நேரம் போதிய அளவிற்கு இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதையொட்டிய வாசிப்பும் நிகழ்ந்திருக்கும். மாறாக அடியேன் கதையில் எமை வெகுவாக கவர்ந்த ‘மணியம்’ பாத்திரத்தின் வழி நாவலை அணுக விரும்புகிறேன்.

பெரும் பலசாலியாகவும், கொள்கையாளராகவும், குடி பழக்கம் கூட இல்லாத நல்லவராகவும், ஊருக்கு உதவும் வல்லவராகவும் ஒரு புறம் நடந்து கொண்டு மறுபுறத்தில் வில்லத்தனம் நிறைந்தவராக சித்தரிக்கப்படுகிறார் மணியம். இவை பெரும்பான்மை ஆண்களின் இயல்பு குணங்கள்தான். ஆயினும், இக்கதையில் அவற்றை மறைபொருளாக சொல்லியிருக்கும் யுக்தி சிறப்பு.

மணியம் தாழ்த்தப்பட்ட தனது ஜாதிய பின்னணியில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். எங்கு ஓடினாலும் விடாமல் பிடித்துள்ள வெட்டியான் மகன் என்ற அடையாளம் அவருக்குச் சுமை. அந்தச் சுமையைக் கலட்டிப்போட காலம் முழுக்க முயல்கிறார். பெரிய மரியாதைக்கு உரியவராகவும் நல்ல அந்தஸ்துடனும் வாழ வேண்டுமெனவும் இலட்சியம் கொண்டுள்ளார். அதற்காக அவர் கையிலெடுக்கும் ஆயுதம்தான் அவராகத் தோட்டத்தில் உருவாக்கும் முற்போக்கு இயக்கம். உண்மையில் அவருக்கே அதில் பிடிப்பு இல்லை. அது பல இடங்களில் நுட்பமாகச் சுட்டப்படுகிறது. ஆனால் தான் ஒரு தலைவனாக இருக்க அந்த இயக்கம் உதவுகிறது. அவ்வியக்கம் வழி வாத்தியார் தம்மை புகழும் தருணங்களில், இளைஞர்கள் அவரை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் சூழலிலும் அவர் தன்னிறைவு அடைகிறார். இப்படி சாதிய அடையாளத்திலிருந்து மன ரீதியாக தப்ப முயலும் அவர் சின்னியை கையாள்வது கூட ஒரு சமயத்தில் காமத்தில் அல்ல; சாதிய ஒடுக்குமுறையில் என புலப்படுகிறது.
மற்றபடி அவருக்கு வேறெதிலும் பெரிய பற்றுதல் இல்லை. அப்பா மீது, சிலம்ப ஆசிரியர் மீது, மாணிக்கம் பிள்ளை மீது, ஓலம்மா மீது, சின்னி மீது, குறிப்பாக சொந்த மகள் மீது கூட எந்த ஒரு பிணைப்பும் அதிகம் இல்லாதவர் போலவும் தானிருக்கும் இடத்திலிருந்து எப்படி விடுதலையாகி, தன் அடையாளத்தில் இருந்து விடுதலையாகி, தன் தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலையாகி மேல் நோக்கி நகர்வது என்ற குறிக்கோள் உடையவராகவே தெரிகிறார். பினாங்கு பாலம் கட்டுமானப் பணி அவரது அதீத கனவாக மனதில் பதிந்துள்ளது. அவருக்கு தான் வாழும் நிலத்தின் மீதும் எந்தப் பிடிப்பும் இல்லை.

தனது ஜாதி பின்னணி, குடும்ப குறைபாடுகள் எதுவும் சமூகத்தில் கண்களுக்குத் தெரியாத வண்ணம் தனது தோற்றத்தையும் வீரத்தையும் பலமாக வெளிப்படுத்த முற்பட்டாலும் அவரையறியாமல் ஆங்காங்கே வெளிப்படும் நடுக்கங்கள்/அச்சங்கள்/அவசரங்கள் ஆகியவையே அவரின் சுய சுபாவம் எனவும் கண்டறிய முடிகிறது.

உன்னிப்பாக கவனித்தால் அவர் தீங்கு விளைவிக்கும்/ஏமாற்றும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகை குறைகளை கொண்டவராகவே இருக்கின்றனர். தவறின் நிழல் படிந்த ஒன்றின் மீது வன்மம் செலுத்துவது தவறில்லை என்பது போல நடக்கிறார் மணியம்.
ஒடுங்கிப்போன உடலும், உதறும் கைகளும் கொண்ட வெட்டியான் தொழில் செய்யும் குடிகார அப்பாவை விட்டுவிட்டு வருகிறார். அவரது அடிமை குணம் மணியத்துக்குக் கசக்கிறது.

மாணிக்கம் பிள்ளை முதலாளிக்கு கள்ள காதலியாக இருக்கும் மேனகாவுடன் ரகசிய உறவு கொள்கிறார்.
ஓலம்மா கற்பழிக்கப்பட்டதில் உருவான மூளை குறைபாடு உள்ள குமரன் வாழ தகுதியவற்றவன் என கொல்கிறார்.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று, கிராணிக்கும் மேனேஜருக்கும் உடல் வணிகமும் செய்யும் சின்னியை வண்புணர்ச்சி செய்கிறார்.

இப்படி தான் புரியும் தவறுகளுக்கு, தனக்கான ஒரு நியாயத்தை வைத்துள்ளார். சின்னியை வன்மமாகப் புணர்வது ஒரு தண்டனை போலத்தான் எனச் சொல்லும் வரிகள் அவரது தப்பித்தல் மனநிலைக்கு உதாரணம். இருப்பினும் தனது குற்றச் செயல்கள் வெளிச்சமாகும் போது அவருக்குக் கிடைக்கும் தண்டனைகளையும் தடுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் செய்த நம்பிக்கை துரோகத்தை அறிந்து சினமடையும் மாணிக்கம் பிள்ளை தன்னை தாக்கும்போதும்…ஓலம்மா தனது நடத்தையை கண்டுபிடித்துவிட்டு விஷம் கொடுத்துள்ளாள் என்று உணரும்போதும் மணியம் தன் முழு பலத்தையும் மறந்து எவ்வித எதிர்ப்புமின்றி சந்திக்கிறார்.

மணியம் நாவலின் மையப்பாத்திரம் இல்லை. ஆனால் நாவலுக்குள் பன்முக நியாயங்கள் எழ இவர் வருகையே காரணமாக உள்ளது.

இதுபோன்ற பல கதாபாத்திரங்களைக் கொண்டு நாவலாசிரியர் கதையை முன்னும் பின்னுமாய் மாறி மாறி சொல்லிச்சென்ற விதம், தகுந்த விவரிப்புடங்களான கதைநடை, காட்சிகளை வாசகன் பார்க்கும்படியான எழுத்து போன்றவற்றில் நவீன் மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளார்.


(Visited 173 times, 1 visits today)