வெளியில் மழை இருட்டிக்கொண்டிருந்தது. பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிவாவும் பாலாவும் சினிமா தொடர்பாகப் பேசத்தொடங்கியிருந்தனர். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அவர்கள் பேச்சில் கலந்துகொள்ளும் அளவுக்கு சினிமா தொடர்பான பரிட்சயம் இல்லை. அவை பெரும்பாலும் ஜப்பான், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய திரைப்படங்கள் பற்றியவை.
சிவாவின் லட்சியம் திரைப்பட இயக்குநராவதுதான். அதற்கான எல்லா தகுதிகளையும் தன்னிடம் தயார்ப்படுத்தி இருந்தார். ஒன்றிரண்டு மலேசிய படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அனுபவங்களின் மூலம் கற்பதற்கான சாத்தியங்கள் மலேசியாவில் அதிகம் இல்லாத சூழலில் தமிழகத்தில் யாராவது ஓர் இயக்குநரின் கீழ் பணியாற்ற எண்ணம் கொண்டிருக்கிறார். சில வாய்ப்புகள் வந்தும் கை நழுவியபடியே உள்ளன.
சிவா பெரியண்ணன்
எனக்கு சினிமா தெரியாவிட்டாலும் சினிமாவின் சக்தி தெரியும். இன்றைய மலேசியத் தமிழர்களின் வாழ்வை அதன் அரசியல் தன்மையோடு முழு வீச்சுடன் வெளிப்படுத்தும் சக்தி சினிமாவுக்கு உள்ளதென கருதுகிறேன். பணமும் புகழும் மட்டும் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொள்ளாமல் ஒருவன் இந்நாட்டில் தன் இனத்துக்கான குரலாக எவ்வகை கலைப்படைப்பிற்கான சாத்தியங்களை உருவாக்கினாலும் அவற்றுக்கெள்ளால் இயன்றவரை துணை நிர்ப்பதே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது. வல்லினத்தின் நோக்கமும் அதுவாகவே உள்ளது. இந்தச் சமூக, அரசியல் பார்வை சிவாவிடம் உள்ளது. அவர் போன்றவர்கள் இயக்குநராக உருவாவதால் மலேசியாவில் சினிமாவுக்கான மாற்றுமுயற்சிகள் உருவாகும் என நம்புகிறேன்.
சினிமா மட்டும் அல்ல . ஓவியம், இலக்கியம், மேடை நாடகம், நிழல்படம், இதழியல், இசை என பல்வேறு துறைகளிலும் மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்கள் இயங்கத்தொடங்கும் ஒரு காலக்கட்டத்தில்தான் தீவிரமான சமூக மற்றும் அரசியல் சிந்தனை பதற்றத்துடன் அதன் அதிர்வுடன் படரும் சாத்தியங்கள் உள்ளன. இவையே விவாதங்களையும் விவாதங்கள் வழி விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
பாலா சில சினிமா தொடர்பான கதைகளைக் கூறுவது சுவாரசியமாக இருந்தது. ‘டெக்னிக்’ மட்டும் அல்லாமல் அவரால் சினிமாவில் புதைந்துள்ள அரசியலையும் கவனிக்க முடிகிறது. மலேசியாவில் சினிமா பற்றி அதிகம் எழுதுவது பாலமுருகன்தான். எனக்கு அவரது ஆரம்பகால எழுத்துகள் மேல் அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை. யமுனா ராஜேந்திரனை ஞாபகப் படுத்துவது போல இருக்கும். எளிதாகச் சொல்ல வேண்டிய ஒன்றை சுற்றி வளைத்து நீண்ட வாக்கியங்களில் சொல்லி முடித்திருப்பார். அவரைச் சொல்லியும் தவறில்லை. புளோக் உண்டாக்கிய பாதிப்புகளில் இதுவும் ஒன்று. பிரசுரிப்பதற்கான கட்டற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் தரம் குறித்த கேள்வி இல்லாமல் பொதுப்பார்வைக்கு வந்துவிடுகிறது.
வல்லினத்தில் மீண்டும் பாலா எழுதத்தொடங்கியதும் அவர் மொழியில் உண்டாகும் மாற்றத்தை என்னால் நன்கு உணரமுடிகிறது. இதழுக்கு எனும்போது எல்லோருக்குமே கூடுதலான அக்கறை கைக்கூடிவிடுகிறது. கருத்து வேறுபாடுகளால் நாங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்த ஓராண்டுகளைப்பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வோம். சில விவாதங்கள் சிரிப்பை வரவழைக்கும். சில தவறுகளை திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பினைக் கொடுக்கும். மீண்டும் அவர் எழுதத் தொடங்கியதில் வல்லினத்தின் பலம் கூடியுள்ளது.
பாலா , சிவாவை ‘அண்ணன்’ என்றே அழைத்துக்கொண்டிருந்தார். ஒரு சமயம் சிவாவின் வயது 30 எனத்தெரிந்ததும் நொந்துகொண்டார். ‘தெரிந்திருந்தால் பேர் சொல்லியே அழைத்திருpபேன்’ என்றார். அவரைவிட சிவா 2 வயது பெரியவர் என்பதால் அவர் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி கேட்டார். சிவா, தான் எதிர்ப்பார்ப்பது போன்ற பெண்ணை அடையாளம் காண முடியவில்லை என்றார். பாலாவுக்கு இது ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். சிவா தான் தேடும் பெண் குறித்து கூறினார்.
“முதலில் நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை…இணைந்து வாழ்வதானால் சரி (living together). இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்தப் பெண் என் எல்லா குறைகளுடனும் என்னை ஏற்க வேண்டும். மலேசிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.” சிவா கூறி முடித்ததும் வெளியில் மழைப் பிடித்துக்கொண்டது. வைப்பரை முடுக்கினேன்.
… தொடரும்
“வைப்பரை முடுக்கினேன்” ஏதோ மர்மக் கதையின் அடுத்த பகுதிக்கு முன்பான ஒரு திடீர் நிறுத்தல் போல இருக்கிறது. பயணத்தை மீள்பார்வை செய்கிறேன். அற்புதமான கார் பயணம். நகைச்சுவைகள் நிரம்பி வழிந்த பொழுது. அடுத்தது, சஞ்சய் பற்றி பேசியது, விபத்து, மலேசியாவின் சாலை அரசியல், இரவு சினிமா என நீள்வதைப் படிக்க ஆவலாக உள்ளது. தொடருங்கள்.
அடடே….சிவா மனசுல (இன்னும்) சக்தி இல்லையா?
என்ன நடக்குது இங்கே? உங்க அலப்பறையைப் படிச்சு பார்த்தால் லைட்டா பொறாமையா இருக்குல(ஒரு ல போட்டு மலேசியத் தமிழ் நாங்களும் பேசுவோமில்ல!