ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 3

இடையில் ஏற்பட்டிருந்த சாலை விபத்தால் சாலை நெரிசல் ஏற்பட்டிருந்தது. கண்களுக்கு எட்டியவரை வாகனங்கள். சில சமயம் கட்டுமரங்களைச் சுமந்து செல்லும் பெரிய கனவுந்துகளைக் கடக்கும் போது மெல்லிய பயம் ஏற்படவே செய்தது. அந்த மரங்களைத் தாங்கியுள்ள சங்கிலி அறுந்து மரங்கள் மகிழுந்தின் மேல் சரிந்தால்… நாங்களாகவே கற்பனை செய்து பயந்து கொண்டோம். கூட்டத்தோடு பயப்படுவது நன்றாகத்தான் இருந்தது.

சாலை நெரிசலிலிருந்து விடுப்பட்ட போதுதான் கவனித்தோம். சாலை காலியாகத்தான் இருந்தது. விபத்து சாலை ஓரம். ஒரு கனவுந்து கவிழ்ந்திருந்தது. மலேசியர்களின் அபாரமான வேடிக்கைப் பார்க்கும் ஆர்வத்தால் ஏற்பட்ட நெரிசல் அது. எங்கள் பங்குக்கு நாங்களும் மகிழுந்தை மெதுவாக்கி விபத்தை கவனித்துவிட்டு சென்றோம். மீண்டும் மகிழுந்து வேகம் எடுத்தபோது போகும் வழியில் ‘தங்காக்’ நகரில் தேவராஜனை சந்திப்பதைக் குறித்து பாலா நினைவு படுத்தினார். தேவராஜனிடம் பாலா புதிதாக வெளியிட்டுள்ள ‘பறை’ இதழையும் நான் ‘வல்லினம்’ பதிப்பகத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் தரவேண்டி இருந்தது.

தேவராஜன் ஓர் இலக்கிய நேசன். நான் 16 வயதில் எழுதத் தொடங்கியதிலிருந்து அவர் பெயரை உள்ளூர் இதழ்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் கவிதைகள் புரியாது. ‘இருண்மையான’ கவிதைகளை எழுதுபவர் என அக்காலக் கட்டத்தில் கவனிக்கப்பட்டு வந்தார். அவர் காலக்கட்டத்தில் எழுதத் தொடங்கியவர்களில் அவரும் பச்சைபாலனும் மட்டுமே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். தேவராஜன் ‘மௌனம் இதழைத் தொடக்கியது மலேசிய கவிதை  வளர்ச்சிக்கு பல சாத்தியங்களை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் கவிதை வளர்ச்சிக்காகப் பங்களித்த சிற்றிதழ் போல நான் ‘மௌனத்தையும்’  அதன் வளர்ச்சியையும் கண்டு மகிழ்ந்தேன். அவர் கோ.புண்ணியவான் சிறப்பிதழ் வெளியிடும் வரை.

Theverajan Yessudas

ஒரு சிற்றிதழ் சமகால இலக்கியத்தை முன்னெடுக்க பயன்பட வேண்டுமே தவிர ஒருவரைத் தூக்கிப்பிடிப்பதற்குப் பயன்படக்கூடாது. ஆளுமைகள் தொடர்பான உரையாடல்… ஆளுமைகளுடன் உரையாடல் என்பதெல்லாம் வேறு. ஆனால் ஒரு சிற்றிதழ் ஒருவருக்கான சிறப்பிதழாக வருவதற்கு அவர் ஆளுமை என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இலக்கியத்தில் அவர் பங்களிப்பு என்ன? அரசியல் என்ன? நிலைபாடு என்ன என்பதெல்லாம் ஆராயவேண்டியவை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான  கருத்துகள் இருக்கலாம். தேவராஜனுக்கு கோ.புண்ணியவான் மலேசியாவில் மிகச்சிறந்த கவிஞராக இருக்கலாம். சமகால இலக்கிய சூழலில் அவரால் நிகழ்ந்த தவறுகளைக் காணாமல் தேவராஜன் கண்களை மூடிக்கொள்ளலாம். என்னால் அப்படி இருக்க முடிவதில்லை. என்னுடன் முழுமுற்றாக கருத்துகளால் வேறுபடும் ஒருவர் எழுதும் இதழில் இணைந்து எழுத எனக்கு எவ்வகையான தடையும் இல்லை. ஆனால் இலக்கியத்தில் நடக்கும் அசம்பாவிதங்களுக்குக் காரணிகளாக இருப்பவர்களை முன்னெடுக்கும் எந்த இதழிலும் நான் பங்குபெற தயாராக இல்லை.

சிற்றிதழாகத் தன்னை அமைத்துக்கொண்டப்பின் ‘மௌனம்’ தனக்கான நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கவேண்டுமென கருதுகிறேன். அது கவிதைக்கான அடுத்தடுத்தத் தாவல்களுக்கு தன்னை ஆயர்த்தப்படுத்த வேண்டுமே தவிர இவர்களுக்கெல்லாம் சக்தியை விரையமாக்கி என்ன பயன். அதிலும் கவிதை போட்டி வேறு வைத்தது எனக்கு மேலும் வருத்தமாக இருந்தது.  ‘கவிதை அச்சமயத்தின் உணர்வின் தெரிப்பு’ என கட்டுரையெல்லாம் எழுதிவிட்டு கவிதைக்கான போட்டி நடத்துவது எவ்வகையில் சாத்தியம்? தெரித்துவிழும் உணர்வில் வெற்றி தோல்வி இருக்கிறதா என்ன? புதிதாக எழுதுபவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் வேண்டுமானால் சில கவிதை புத்தகங்களை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பரிசாக வழங்கலாம். இந்த நிலையில் சை.பீர்முகம்மதுவுக்கு வேறு ‘மௌனம்’ சிறப்பிதழ் வெளியிடுவது இனி மௌனத்தில் எழுதுவதில்லை என முடிவெடுக்க வைத்தது.

வருத்தங்கள் மௌனத்தின் போக்கு மீதே தவிர தேவராஜனிடம் இல்லை. அவர் அன்பானவர். உற்சாகமாகச் செயல்படுபவர். மௌனத்தை சுய முயற்சியில்தான் செய்து வருகிறார். அவர் முயற்சி குறித்து வியப்பு இருந்தாலும் , எழுதுபவர்களெல்லாம் எழுத்தாளர்கள்தான் என்ற அவரின் நம்பிக்கை மீது விமர்சனம் உண்டு. எழுத்தாளன் நல்ல எழுத்துகளை எப்போது வேண்டுமானாலும் படைத்துவிட முடியும். அது அவன் வாழ்வின் எந்த கணம் வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் கூரிய அரசியல் பார்வை இல்லாத  பட்சத்தில்  அந்த எழுத்தாளனின் கடைசி வரை இந்தச் சமூகத்தின் ஆன்மாவை உணர முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

வழக்கம் போலவே தேவராஜன் அன்புடன் பேசினார். ஒரு சைவ உணவகத்தில் உண்டோம். பள்ளிக்கூட பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்களுக்கு மோதிக்கொள்வதைப் பற்றிக் கூறி வருத்தப்பட்டார். எனக்கும் வருத்தமாக இருந்தது.

‘யார் ஒருவன் ஒடுக்கப்படுகிறானோ அவன் தனக்குள் முடங்கி கிடக்கும் கோபத்தை பிறர் மீது காட்டுவான். பிறரை ஒடுக்க நினைப்பான். இதில் அவர்களை நொந்து பலன் இல்லை. நமது மாணவர்களுக்கு இடைநிலைப்பள்ளிகளில் தகுந்த வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் சக்திகள் வீணடிக்கப்படுகின்றன. அவர்கள் இறுதி வகுப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். ஒதுக்கப்படுபவர்கள் தங்களை அடையாளம் காட்ட வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அதன் வழி தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களின் திறனை கண்டடைந்து வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த கல்வித்துறை அமைக்காத வரையில் இது நடந்துகொண்டே இருக்கும்’ என்றேன். கொஞ்ச நேரம் எல்லாரும் மௌனமாக இருந்து விடைப்பெற்றோம்.

தேவராஜன் மௌனத்துக்குக் கவிதை எழுதச் சொன்னார். சட்டென பாலா “நீங்கள் வல்லினம் யாரை விமர்சிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் சிறப்பிதழ் போடுகிறீர்களே” எனக்கூறி வழக்கம் போல சிரித்தார். நான் ‘ஒரு சிற்றிதழின் போக்கு இப்படி இருக்கக்கூடாது இதை விட தீவிரமாக இருக்க வேண்டும்’ என்றேன்.

தேவராஜனுக்கு நான் சொல்லவந்தது புரிந்ததா என்று தெரியவில்லை. எல்லோருக்கும் எல்லாமும் புரியத்தான் செய்கிறது. நாம் புரிந்துகொண்டதை உணர நாமே விரும்புவதில்லை. தேவராஜன் மெல்லிய சிரிப்புடனே வழியனுப்பி வைத்தார்.

நெடுஞ்சாலையில் இறங்கும் வரை மகிழுந்து மௌனத்திலேயே இருந்தது.

… தொடரும்

(Visited 63 times, 1 visits today)

2 thoughts on “ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 3

  1. தங்காக் நகரத்திற்கு சென்றது இது இரண்டாவது முறை. ஒன்று போலவே மிகச் சாதரணமாகக் காட்சியளிக்கும் நகரம். தேவராஜனையும் மா.இராமையாவையும் தவிர எல்லோரும் அந்நியமானவர்கள். எங்கும் செய்ய முடியாததை இங்குத் தைரியமாகச் செய்யலாம், கோமாளி போல் சாலையில் தலைத்தெறிக்க ஓடினாலும், ‘என்னடா வாத்தியார் இவன்” என அடையாளம் கண்டு சொல்லும் ஒழுக்கவாதிகளின் கண்கள் இல்லாத இடம். சுதந்திரமாக சைவ உணவகத்தில் தவுசாமி சாப்பிட்டுக்கொண்டே, தேவராஜனிடம் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. இது ஒரு கோப்பைத் தேநீர் போல சார். . .

  2. The individual has always had to struggle to keep from being overwhelmed by the tribe. If you try it, you will be lonely often, and sometimes frightened. But no price is too high to pay for the privilege of owning yourself. Never Forget!- The higher we soar the smaller we appear to those who cannot fly.
    -Friedrich Nietzsche

    வானம் திறந்தே கிடக்கின்றது,நாம் நம் சிறகுகளையும் கூரிய நகங்களையும் மறக்காத பருந்துகளாய், கைகுலுக்க வரும் கோமாளிகளைக் கிழித்து விட்டு எழும்பிக்கொண்டே இருக்கும்வரை.எழுக.
    இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *