ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 4

விட்ட மழை தொடர்ந்தது. சாலையைப் பார்க்கச் சிரமமாக இருந்தது. தொலைவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிவது தெரிந்ததும் மகிழுந்தின் வேகத்தைக் குறைத்தேன். குறைக்க சிரமமாக இருந்தது . மழையில் வழவழப்பில் சக்கரங்கள் இழுத்துக்கொண்டுச் சென்று பின் மெதுவானது. முன்னே ஒரு ‘வியோஸ்’ ரக வண்டி பக்கத்து தடுப்பில் இடித்து நடுரோட்டில் தடுமாறி நின்று கொண்டிருந்தது. உதவ வழியில்லை. வேகத்தைச் சட்டென குறைப்பது ஆபத்து. பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இடிக்க நேரலாம். மகிழுந்தை தொடர்ந்து விட்டேன். பாலா வண்டியை நிறுத்துவது சிரமம்தானே என்றார் பரிதாபத்தோடு. சிவா ‘யார் சொன்னா முடியாதுன்னு…முடியும். அதுக்கு நவீன் ஜேம்ஸ் போண்டாக இருக்க வேண்டும் ‘ என்றார். நான் கண்களைக் கூர்மையாக்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். முன்பு பிரேக் பிடிக்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் நடந்திருக்கும் அசம்பாவிதம் எனக்கு மட்டும்தானே தெரியும். வண்டியின் வேகமும் குறைந்திருந்தது.

சிவா அண்மையில் அவர் பார்த்த ‘நடுநிசி நாய்கள்’ தொடர்பாகப் பேசத்தொடங்கினார். கதை சுவாரசியமாக இருந்ததால் அன்று இரவே படம் பார்ப்பதென முடிவெடுத்தோம். அன்று இரவு பாலாவின் உறவினர் வீட்டில் தங்க முடிவெடுத்திருந்ததால் தன் உறவினருக்கு அழைத்து ஜொகூரில் எந்த திரையரங்கில் அப்படம் ஓடுகிறதென உறுதி செய்து கொண்டார். ‘அந்தக் கொடுமையைத் திரும்பவும் பார்க்கனுமா?’ என சிவா நொந்துக்கொண்டார்.

பாலாவின் உறவினர் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பது. படுக்கையறையில் நானும் சிவாவும் உறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள உணவுகளை உண்டு பார்க்கும் ஆர்வம் இருந்ததால் உறவினர் வீட்டில் சமைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தோம். சிவாவுக்கு ஜொகூர் நல்ல அறிமுகம். 2 ஆண்டுகள் அங்குதான் பணிபுரிந்தார். திரையரங்கை அடைந்ததும் ஓர் உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சீனர்கள் உணவகம். நானும் சிவாவும் பொரித்த கோழி இறக்கைகளை வாங்கிக் கொண்டோம்.  பாலா சைவம். சைவமாகக் கொய்த்தியோ வாங்கி கொண்டார்.

திறந்த வெளியில் மீண்டும் பேச்சு தொடர்ந்தது. இம்முறை பேய்க்கதைகள். பாலமுருகன் சுவாரசியமாகப் பேய்க்கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாம் அவர் கேள்வி பட்டது. பேய் என்பது என்ன? அவை இவ்வுலகில் வாழும் ஒரு ஜீவராசியா ? என எங்களுக்குச் சொற்பமாகத் தெரிந்ததைப் பேசிக்கொண்டோம். சிவாவுக்கு தனது ஆரம்ப காலத்தில் ஆன்மிகம் தொடர்பான தேடல் இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சில கருத்துகளை முன்வைத்தார். எனக்கும் அவ்வாறான தேடல் இருந்தது. (http://vallinam.com.my/navin/?p=387) பாலாவுக்கும் அத்தகைய தேடல் உண்டு. அது இன்னும் தீவிரமானது.

Balamurugan Kesavan

பாலமுருகன் தனது இளமை காலத்தில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில்  இருந்திருக்கிறார். மொட்டையடித்து குடுமி வைத்து வீடு வீடாகச் சென்று பணம் வசூல் செய்வது வரை  அவரது தீவிரம் இருந்திருக்கிறது. அவர்கள் செயல்பாட்டில் நம்பிக்கை இழந்த போது அதிலிருந்து வெளியேறினார். அதன் பின் கிருத்துவ மதத்தில் இணைந்து இரண்டு வருடம் தீவிரமாகச் செயல்பட்டார். பைபிள் வாசிப்பது முதல் தேவனின் பாடல்கள் பாடுவது வரை. பின்னர் அதிலிருந்தும் வெளியேறிவிட்டார். இப்போது மத நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.

குறிப்பிட்ட ஒரு வயதில் எல்லோருக்கும் இருக்கும் ஆன்மிகத் தேடல் நான் அறிந்து கலைத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. கலையின் உக்கிரம் வளர வளர அமைப்புகளும் மதமும் சுதந்திரத்திற்கான முதல் வேலி என உணரும் போது அதன் கட்டுகளிலிருந்து வெளிப்படத் தொடங்குகிறான். அந்தத் தேடலின் இறுதியில்தான் எழுத்தும் இலக்கியமும் அவர்களுக்குச் சாத்தியப்படுவதாக நம்புகிறேன். இவ்வாறு ஒவ்வொருவரும் வெவ்வேறான தேடலில் இலக்கியத்தையும் கலையையும் வந்து அடைந்திருக்கும் தடங்கள் நிறையவே குவிந்து கிடக்கின்றன.

திரைப்படம் தொடங்கி கொஞ்ச நேரத்தில் இரு இளைஞர்கள் கடுப்பில் சத்தமிட்டபடி திரையரங்கிலிருந்து வெளியேறினர். ‘செ… அம்மாவெல்லாம் போயி…செ’ என அவர்கள் சத்தமிட்டது காதில் கேட்டது. தமிழ்ச்சமூகத்தில் ‘அம்மா’ எனும் கட்டமைப்பினை லேசாக அசைத்துப்பார்க்கிறது படம். படத்தின் நோக்கம் அதுவல்ல. இதற்கு முன்பு தமிழில் வந்த மூடுபனி , கண்களால் கைது செய், 7ஜி ரெய்ன்போ காலணி, குடைக்குள் மழை, காதலில் விழுந்தேன் போன்ற மனப்பிறழ்வின் அமானுஷ்யங்களைச் சொல்லிச்செல்கிறார் இயக்குநர். படத்தின் நிசப்தமும் காட்சியமைப்பும் திகிலைக் கொடுத்தது. படம் முடிந்தவுடன் சிவா ‘முதல் முறையைவிட இரண்டாவது முறை பார்க்கும் போது படம் கவர்கிறது’ என்றார். நான் ஒன்றும் கூறவில்லை. ஓர் இயக்குநரையும் ஒரு விமர்சகரையும் வைத்துக்கொண்டு என்ன கருத்து சொல்வது?  பாலா மீண்டும் திகில் உலகக் கதைகளைச் சொல்லத்தொடங்கினார்.

வீட்டிற்குத் திரும்பும்போது அதிகாலை மணி 2.30. உறக்கம் வரவில்லை. கொஞ்சநேரம் மூவருமே கணினியில் புகுந்தோம். பின்னர் படுக்கச் சென்றபோது உடனே உறக்கம் வந்தது. அன்றிரவு வந்த சில அமானுஷ்ய கனவுகளைப் பற்றிய விவரணையோடுதான் மறுநாள் அதிகாலைப் பொழுது எனக்கும் பாலாவுக்கும் விடிந்தது.

… தொடரும்

(Visited 107 times, 1 visits today)

One thought on “ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 4

  1. நவீன்….உங்களோடு பயணிப்பது பொன்று இருக்கின்றது வர்ணனை. என்ன… அப்ப‌டியே வந்திருத்தால் கொஞ்ச நேரம் பாலமுருகன் கட்சியில் இணைந்திருப்பேன். சைவ கொய்தியாவைச் சொல்ல வந்தேன்.அந்தத் ‘தேடலின்’ பிரதிபலிப்பாகக்கூட இருக்கலாம்!

    கடைசிக்கு முந்திய பத்தியில், கடைசிக்கு முந்திய வாக்கியக்கேள்வி… சிவாவையும் பாலாவையும்…சொல்லாமல் சொன்கின்ற யுக்தியை வெகுவாக இரசித்தேன். தொடருங்கள்…..”நானே…வருவேன்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *