சிறுகதை: டிராகன்
இதுவரை நவீன், கழுகு, உச்சை, சியர்ஸ், ராசன், பூனியான் சிறுகதைகளை எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் ஒன்னொடு ஒன்று கலக்காதப் பாதரசம் போன்றது. யாதார்த்தம் நிறைந்த கதைக்களம். அதே சமயம் புதிர் அவிழா மர்ம முடிச்சுகள் சிக்கிக்கொண்டு இருக்கும் அது வாசகனின் வாசிப்புத்தன்மையையும் விரிவடையச்செய்து கொண்டே இருந்தது. நக்கல், நையாண்டி, பகடி வசனம், கருத்துத்தளவிவாதம், விலங்குகளின் சராசரி குணத்தைத் தவிர்த்து நுட்பமான செயல்பாங்கு, மானிட அனுபவமும், மானிட சிந்தனையும் ஒன்று திரண்ட சுவையுடன் நவீன இலக்கிய இலட்சணத்துடன் விளங்கின. இவைகள் ஒன்றை ஒன்றோடு கலப்பது சாத்தியமில்லை.
இவ்வரிசையில் டிராகன் சிறுகதை முற்றிலும் மாறுப்பட்ட ஒரு கதைகளம். உணர்வை உள்ளறுத்து நம்மை கதையில் அணுகவைத்துள்ளது. இக்கதையில், அங்கதம் தீட்டல்களைத் தெளிக்காமல், முற்றிலும் தவிர்ந்துள்ளார், அவரின் சித்து வேலையையும், தில்லாலங்கடி சோலியையும் ஓரங்கட்டி வைத்து விட்டார். இளம்பிள்ளை வாதம் நோயால் அவதியுறும் இளங்கோ எனும் சிறுவனின் மனக்கொந்தளிப்பையும், பசியில் வறண்ட வலியையும், சூழலில் ஏற்படும் சில மரபுப்மீறல்களையும் தன் படைப்பூக்கத்தில் இக்கதையைத் தன்னிச்சையாக தனித்துக் காட்டியுள்ளார்.
இளங்கோவின் அப்பா, அவனுக்கு அளிக்கும் ஊக்கம் வெறும் வாய் சொல்லில் உதிர்ந்துவரும் சொல்லாக இல்லாமல், செயலில் அவனின் இயலாமையை முடிந்தவரை சீர் அமைத்துள்ளார். அவனுக்காக ஒரு மர வண்டியைத் தயாரித்துத்தந்தது, அவனில் பயம் நீங்கி அவ்வண்டியில் அமரவைப்பதும், பிறகு மனோபலம் தர அவரே அவ்வண்டியில் அமர்ந்து அச்சத்தை நீங்குவது ஒரு தந்தையில் வழிகாட்டலைப் புறவயமாக நன்றாக காட்சியகப் படுத்தியுள்ளார். இளம்பிள்ளைவாதம் (polio) இயாலாமை எனும் குறையை இருட்டில் தள்ளாமல் அவனை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அன்பையும் குறைவின்றி தருகிறார். மொழி ஒரு படைப்பாளியில் கட்டுக்குள் அடைக்காமல் அவனை மீறிச் சென்று ஒரு காவியம் படைக்கும். இக்கதையிலும் இவை இனிதே நடந்துள்ளது. தந்தையின் பாசத்தை உணர்வில் ஊடுருவி உள்ளத்தில் உறையவைக்கும் ஓர் உன்னத அன்பாக இக்கதைச் சித்தரிக்கப்படுகிறது.
ஒரு புனைவுலகத்தைக் கண் முன் காட்ட வேண்டும், அப்பொழுது தான் ஒரு வாசகன் அதில் உள்ளே புக முடியும். நவீன் சார், எப்பொழுதும் நீண்ட சொல்லாடலைக் கொண்டு வர்ணிக்கும் பாணி அவரிடம் இல்லை என்பது என்னுடைய கணிப்பு. சுருங்கச்சொல்லி காட்சியகத்தை விரிவாக்கவும் தெளிவாகவும் கூறுவதுதான் அவரின் தனி இலக்கிய அழகியல். இக்கதையிலும் அவர் அவ்வாறே செயல்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, அவன் கால்கள் எப்பொழுதும் ஒரு வாலைப்போல காட்சியளிக்கும். இளங்கோவின் அப்பா அவனின் அந்தரங்க உலகை விஸ்தாரமாக்கினார். இருட்டில் அவள் பாதியாகத் தெரிந்தாள், வர்ணனையைச் சுருக்கி காட்சியை உயிரோட்டமாகவும் கவித்துவமாகவும் காட்டியுள்ளார். இளங்கோவின் அப்பா அவன் உள, உடல் அளவிலும் முடங்கி கிடந்த வாழ்க்கையை மீட்டெடுக்கிறார்.
மகனின் கனத்தை அவர் பகிர்ந்துக் கொண்டு பரிதாபப்படாமல் கூச்சப்படும் சில அன்றாடக் கடனை அவனே செய்து கொள்ள பயிற்சியளிக்கிறார். இளங்கோவே சுயமாக நீராடுவதும், கழிவறை வசதியையும் அவனுக்கு இலகுவாக்கித் தருவதும் என செயல்ப்படுகிறார். அவனுக்காக காத்திருந்து, ‘ஐயாவால எல்லாமே முடியும்’ என்கிறார். அவன் சராசரி சிறுவனாக இல்லாமல் அறிவு முதிர்ச்சி சிறுவனாக மாறிக்கொண்டே இருக்கிறான். இச்சொல்லுக்காகத்தான் இன்றும் பல குழந்தைகள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வார்த்தையில் சக்தியை அனுபவிக்காத உள்ளங்களுக்கு இதன் வேதனை தெரியும். இளங்கோவின் அப்பா அம்மாவிடன் வெறுப்புக்காட்டுவது இளங்கோவின் நிலைமைக்கு அவள்தான் காரணம் என்று நினைப்பது. இளங்கோ, அவன் வண்டியில் உட்காரும்போது அவள் கைகளைத் தள்ளி விடுவது அவர் கோபத்திற்கு அது ஒரு சான்றாக அமைக்கிறது.
திருகாணி பொறுக்கும் தொழில், அதன் பிரமாண்டம், உபரி ஆயுதங்களின் காட்சி பிரம்பிப்பாக இருந்தது. பசிக்கும் போதுதேல்லாம் டிராகன் விஜயம் செய்யும் போது கோபம், மகிழ்ச்சி, நிம்மதி எனும் பல உணர்ச்சியில் வெளிப்பாடாக டிராகன் அசைவுகளை மிக நுட்பமாகவும் அதன் உக்கிரத்தை வெளிப்படும் போதும் ஒரு குட்டிக் கதை எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு நார்த்தீகனும் ஆன்மீகவாதிக்கும் இடையே ஒரு விவாதம் ஏற்படுகிறது. அதில் நார்த்தீகன் கேட்பான், நீ கடவுளைப் பார்த்திருக்காயா? அவர் என்ன நிறம்? எப்படி இருப்பார்? என்று பல தர்க்கங்கள் அங்குத் தோன்றும் அதற்கு அவர் கேட்பார் உனக்குப் பசி வந்தால் அந்தப் பசியை நீ காண முடியுமா? அதன் உருவ அமைப்பு எப்படி இருக்கும் என பல கேள்விகள் கேட்கப்படும் , உன் கோபத்தை நீ ஒரு தனி உருவமாக் காட்ட முடியுமா? அப்பொழுது அந்த நார்த்தீகன் வாயடைந்துப் போவான். நவீன் சார், அப்பொழுது அங்கு இருந்திருந்தால் பசி உக்கரத்தின் உச்சியில் இருக்கும்போது அது கடல் நாகமாக தோன்றிருக்கும் குடலோடு பின்னி அதன் உணர்வை வெளிப்படுத்திருக்கும் எனும் மாய யாதார்த்த அழகியலைக் கொண்டு நிச்சயமாக விளக்கிருப்பார். அப்பா இல்லாத வெறுமையிலும், பயத்திலும் கடல் நாகம் அவனுள் நெளிவைதை உணர்கின்றான்.
அப்பா இருந்த போது பசி எனும் கொடுமையை வாய் விட்டுச் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை. கோபம் கொள்ளும் போதும், கோபம் தணியும் போதும் டிராகன் தேகத்தில் உறுத்தும் உணர்வை அவன் அறிகிறான்.
இளங்கோ இருளில் தன் தாயைக் காண்பது உணர்வை உருவமாக வைத்து ஒப்பிடுவது அவன் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. தாயை வேலைக்கும் போக அனுமதியளிப்பது அவன் தாயை மன்னித்தானா? அல்லது சம்பவத்தை மறந்து விட்டானா? என தர்க்கம் செய்வது இக்கதையின் நோக்கம் அல்ல. ஓர் இக்கட்டான சூழலில் மரபின் எல்லையை மீறும்போது சராசரி மனம் நிலைப்பாடு என்ன? பண்பாட்டு அறநெறிகளிகளால் ஏற்படும் மனக்கொந்தளிப்பைக் கதை ஒரு மையக்கேள்வியை எழும்படியாக கதையை ஒருவமைக்கிறார் நவீன்.
இக்கதையை வாசித்து முடித்த உடன், என் நினைவிற்கு வந்தது. 2018ஆம் ஆண்டில் சிறுகதை பட்டறையில் சு.வேணுகோபல் சார் எழுதிய ‘சொல்ல முடிந்தது’ எனும் கதை. எங்களுக்கு வரதம்மாள் எனும் அம்மா கதாப்பாத்திரம், ரகுராம் கதாப்பாத்திரம் இருவருக்கும் இடையே நடக்கும் ஒரு மெளன யுத்தம். ரகுராம் 50 வயதில் அம்மாவின் வலி, தேவை அனைத்தும் புரிந்து கொள்கிறான். ஆனால், இளங்கோ அம்மாவைப் புரிந்துகொள்ள 14 வயது போதுமானதாக இருந்தது. “ஐயாவால எல்லாமே முடியும்” எனும் வசனம் என் காதில் ஒலித்தது.
புனிதவதி அர்ஜுனன்