ஒலிப்பேழை: கடிதம் 4

ஒலிப்பேழை

கதையில் உள்ள ஒலிப்பேழையின் படத்தைப் பார்த்தவுடன், சற்றுப் பயமாகத்தான் இருந்தது. ஒலிபேழையில் இருந்து அந்தச் சுருள் சிக்குகள் அவிழ்க்கப்பட்டு வடிவ அமைப்பை மீறிய பெரிய பெரிய வளையங்களாக சீரற்று இருந்தன. கதையின் கதைக்களம் வித்தியாசத்தின் உச்சம் என்றால், ஒலிப்பேழையின் படம் அதற்கும் மேலே ஏறி நின்று பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இஸ்மாயில் வருகை கதைநாயகனின் அலட்சியப்போக்கான பதில்கள் அனைத்தும் கதையினை நேர் ஓட்டத்தில் பயணிக்க வைத்தது. நிதானமாகப் படித்தேன் மோனா ஃபென்டி வரும் வரை. மோனா ஃபென்டி, கொலை வழக்கு அப்பொழுது நாட்டையே பதற வைத்த ஒரு பயங்கரமான கொலையாகும். மஸ்லான் சட்டமன்ற உறுப்பினரைக் கண்ட துண்டமாக கூறுப்போட்டு, புதைத்தச் செய்தி நாளிதழில் சூடு தணியாத வகையில் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்களைத் தாங்கி வந்து கொண்டிருந்தன.

மோனா ஃபென்டியின் சிரிப்பு மிகவும் பிரபலமானது. பல பார்வைகளில் அச்சிரிப்பு ஒரு சூனியக்காரியில் சிரிப்பு இப்படித்தான் இருக்கும், என முடிவுச் செய்து அச்சிரிப்பிற்கு முத்திரை செதுக்கப்பட்டது. எனக்கு அச்சிரிப்பில் ஒரு ஞானத்தேடல் இருப்பதுப்போல தோன்றும், எதோ சாதனையைச் செய்து மரணத்தை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் சிரிப்பு, முற்றும் துறந்த சிரிப்பு, குற்ற உணர்வு முகத்தில் படராமல் சிரிப்பு, புன்னகையின் கொடிகள் அவள் முகத்தில் வளர்ந்து கொண்டிருந்தன. உப்பிய கன்னத்தில் தோன்றும் சிரிப்பு மட்டுமா அழகு? வற்றியக் கன்னத்தில் மலரும் சிரிப்பு, தன்னம்பிக்கை எனும் அக ஒளியில் தோன்றினால் கண்களும் அழகிய கன்னங்களாகும். அவள் ஒவ்வொரு முறை விசாரணைக்காக வரும் போதும் அவளின் ஆடை அலங்காரம், சிகப்பு பளீர் உதட்டுச்சாயம் மிகவும் கவர்ச்சியளிக்கும். மாயக்காரியின் உதட்டுச் சாயம் கருப்பு, கரும் கத்திரிப்பூ வர்ணத்தைத் திரைப்படத்தில் பார்த்திருப்போம். மோனா ஃபென்டி அந்த உதட்டுச்சாய வர்ணம் அவளின் முகத்தின் சிரிப்பை மேலும் அகலமூட்டியது.

அப்பொழுது, பள்ளியில் எனக்குப் படித்துக் கொடுக்கும் இளம் ஆசிரியர்கள் சிகப்பு வர்ண உதட்டுச்சாயத்தைப் பயத்துடன் துறந்து, இளஞ்சிவப்பு வர்ணத்திற்கு மாறினார்கள். இரத்தச் சிவப்புச் சாயம் மோனாவிற்கு உரிய நிரந்தர அலங்காரமானது. பள்ளியிலும் சரி, என் துணைப்பாட வகுப்பிலும் சரி அவளைப்பற்றிய பல தகவல்கள் குவிந்து கொண்டே இருக்கும்.அவள் பல துர்தேவதைகளை வணங்கி வந்தாகவும், அதற்குக் காவு கொடுப்பதற்காகத்தான் இக்கொலை என்றும் கூறப்பட்டது.

மஸ்லான் உடலைப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பும் முன், அவரின் சிதைந்த உடலை ஆறு விரல்களின் அடையாளம், தங்கப்பல்லை வைத்துக் கண்டுப்பிடித்தார் எனப் பல தகவல்கள். முற்றாக மறந்து போன, மோனா ஃபென்டி மறுபடியும் சிரித்துக் கொண்டிருந்தாள் இக்கதையில் வழி. என்னதான் சொல்ல வருகிறார் இஸ்மாயில் என உன்னிப்பாகப் படித்தேன். தர்க்கக் கத்தி வீச்சைக் கதையின் நாயகன் குறிப்பார்த்து வீசும் போது, அதே கத்தியை எடுத்து கதாநாயகன் தலைக்கு மேல் மீண்டும் கவனமாக வீசுவது போல இருந்தது இஸ்மாயில் பதில். அதில் உண்மை எனும் நிதானமும் கவித்துவமும் நிறைந்து இருந்தன.

ஒரு பொருள் தரம் குறையாமல் இருப்பதற்கு அதன் பளபளப்பை விட தூசு படிதல் அதன் தரத்தை மேலும் உயர்ந்தும் என்பதெல்லாம் புதியத் தகவல்கள். கதை நாயகன் கடிதத்தைக் கேட்கும் போது அதை எரித்து விட்டார் என இஸ்மாயில் கூறியதும், நவீன் சார் அவரின் சித்து வேலையைத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்தது. ஒருவர் இறக்கும் முன் எழுதப்பட்ட கடிதத்திற்கு அதிக மதிப்பு உண்டு. விலையின் கனமும் அதிகம் தான். 1982 ஆண்டில் அமெரிக்காவில் பத்து வயது நிரம்பிய சமந்தா ஸ்மித் என்ற சிறுமி இராஷியா தலைவருக்கு எழுதிய கடிதம் மிகவும் கொண்டாடப்பட்ட கடிதம். அவர் இறப்பதற்கு முன் எழுதப்பட்டதாகும். ஷிட்லர் காலத்தின், Fanya Barkaw யூத சிறுமி தான் இறப்பதற்கு முன் அவள் பதுங்கிய இடத்தை வரைந்த முழுமையடையாத ஓவியமும், பதற்றத்துடன் எழுதிய கடிதமும், படிப்போர் கண்களை நிச்சயம் குளமாக்கும். இவைகள் இணையத்தளத்தில் காட்சிகளாக உள்ளன.

இக்கதையில் கதாநாயகன் ஒரு கணக்குப்போட ஒவ்வொரு முறையும் இஸ்மாயில் கலை நயத்தோடு ஒவ்வொரு பொருளின் விலை கணிக்கும் திறன், அவன் தந்தையின் மீது கோபம் தாயின் மருத்துவச் செலவிற்குப் பொருள்களை விற்க அனுமதிக்காத எரிச்சல் அதிகரித்தே செல்கிறது. அதற்குத் தூபம் போடும் வகையில் இஸ்மாயிலின் நிதானமானப் பேச்சு தொடர்கிறது. கடிதத்தை இஸ்மாயில் விவரிக்கும் போதே, எனக்கு ஒரு வித திகில் மெல்ல என்னுள் ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது.

ஒரு முறை உயர் அதிகாரி எங்களுக்கு உரை நிகழ்த்திய போது ஒரு காணோளியைக் காட்டினார். அதில் சாம்பல் நிறக் கிளி 200 மேற்பட்ட ஒலியை எழுப்பும் ஆற்றல் உள்ளது எனக் கூறினார், பயிற்சியாளர் ஒலியை எழுப்பச் சொல்ல, அது உற்சாகமாக ஒலியை எழுப்பியது. அதிகாரி எங்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார், “ ஐந்தறிவு படைத்த கிளிக்கு 200 ஒலிகளின் வித்தியாசத்தைக் கூற முடிகிறது; மாணவர்களை வாசிக்க வைக்க உங்களுக்குக் கஷ்டமா?” என்று கேட்டார். சாம்பல் நிறக்கிளி, ஒலிப்பேழை சிறுகதையில் மீண்டும் விஜயம், படிக்க உற்சாகமாக இருந்தது. ஓசையில் அதிர்வைக் கேட்டு கிளி அடையும் ஆவேசம், இவையெல்லாம் எனக்கு துணைத்தகவல்களே.

மோனாவின் பாட்டைக் கேட்டுள்ளேன், சாதாரணமாகவே எனக்குத் தோன்றியது. பொதுவாக நம் நாட்டு மலாய் பாடகர்கள் மேல் சுருதியில் குரல் பிசுராமல் பாடக்கூடியவர்கள். மோனாவின் குரலில் அவ்வளவு வலிமை இல்லை. ஒரு சராசரி பாடகிதான் அவள். அவளின் கடைசி ஆசை மிகவும் உண்மையாவே என்னுள் உணர்ந்தேன் அந்த அளவிற்கு அவளின் ஏக்கம் தெரிந்தது.

இஸ்மாயில், கதைச்சொல்லியிடம் பாடல் கேட்கிறதா எனக்கேட்கும் போது எனக்குக் குழப்பமாக இருந்தது, விடையைத் தேடினேன், சாம்பல் கிளியில் உக்கிரமான துடிதுடிப்பு. இஸ்மாயில் மென்மையான நர்த்தனம், மெளன ஒலியின் முக பாவனை, அதை இரசிக்கும் கிளிகளின் ஒட்டு மொத்த சஞ்சார பவணி, சற்று அமைதியாக உட்கார்ந்தேன். அலுவலக அறையில் மிகவும் நிசப்தமாக இருந்தது. யாரும் இல்லை. உடனே பயந்துகொண்டே வெளியே வந்தேன். வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன். ஒரு பக்கமாக மேகங்களை என் தலைக்கு நேராக கருத்து இருந்தன. மர்மத்தின் நிழல் வானத்தில் ஒன்று கூடியது போல இருந்தது. வீட்டிற்குக் கிளம்பினேன்.

ஜெயமோகன் சார் கட்டுரையில், தத்துவம் என்பது, ஓரு சிந்தனைத் துறையில் உள்ள தர்க்கங்களின் தொகுப்பே ஆகும் என்கிறார். அது ஓர் எல்லைக்குள் நின்று விடும், எல்லையை மீறி விவாத்திக்க இயலாது. ஆகவே, கதைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்கிறான். தரிசனம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது உள்ளுணர்வில் பயணித்து அக விழியில் பார்த்துப் பரவசம் அடைவதாகும். இக்கதையில் தரிசனம் சிந்தனை செய்தும், கற்பனைச் செய்து அவற்றை உண்ர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. தரிசனத்திற்கு அழிவே இல்லை, அதன் சாரம்சமான ஒரு பகுதி மனித மூளையில் ஓர் அம்சமாக நிற்கும். இஸ்மாயில் செய்கை, கும்பமேளாவில் ஒரு சாது ஓரமாக நின்று கொண்டு, காலில் தாளமிட்டு வாய் முணுமுணுக்கும் காட்சி நினைவிற்கு வந்தது. இக்காட்சிகள் இரண்டும் ஜீவாத்மா பரமாத்மாவைத் தொடர்புக்கொள்ள ஒரு தெய்வீக மொழியாக எனக்குத் தோன்றுகிறது.

இக்கதையில் Intertextuality எனும் நவீன இலக்கியக் கோட்பாடுகள் ஒலிப்பேழையிலும் நிரம்பி வழிகின்றன. கதைப்பின்னலில் முடிச்சுகள் இடப்பட்டு. அவை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுகின்றன. தர்க்கப்புதிர் வழி பல கேள்விகள் கேட்கப்பட்டாலும் விடைகள் புதிருக்குள்ளே பதுங்கி இருக்கும். வாசகன் கதைக்குள் தன்னிலை மறைந்து திளைத்திருக்கும்போது, சுய நினைவிற்குக் கொண்டு வருவது இப்புதிர்கள்தான். எந்த ஒரு நல்ல எழுத்தாளனும் தன் படைப்பின் மீது அபரிமிதமான அகந்தை கொள்வான். அது ஒரு கலா ரசிகனின் இயல்பே. ஆனால், ஓர் உன்னத படைப்பாளி அதோடு நின்று விடுவதில்லை, தனது கலை வடிவத்தையும் இலக்கிய ஆளுமைகளையும் மேலும் மேலும் உயரத்திற்கு இட்டுச் சென்று கலை விளிம்பில் முட்டிக்கொள்ளும் தருணத்திலும் அவன் அடையும் விரக்த்தியும் வெறுமையும் தான் அவர்களின் வாழ்க்கை.

புனிதவதி அர்ஜுனன்

(Visited 63 times, 1 visits today)