சீ.முத்துசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபிரேசர் மலையை நோக்கி நண்பர்களுடன் புறப்பட்டேன். மார்ச் மாதம் அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தபோதும் நான் இதே நண்பர்களுடன்தான் தைப்பிங் நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதி தொலைக்காட்சியில் விடுமுறையை அறிவித்தபோதே உருப்படியாக ஏதாவது எழுதவேண்டும் எனத் திட்டம் இருந்தது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் எழுதலாம் எனத் தொடங்கினேன். பத்து மலேசிய எழுத்தாளர்கள்; அவர்களது மொத்த நாவல்கள் எனும் அடிப்படையில் வாசிப்பையும் எழுத்தையும் திட்டமிட்டுக்கொண்டேன். ஜூலை 3 எழுதிய இறுதிக் கட்டுரையுடன் பத்து எழுத்தாளர்களின் 27 மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தேன்.
இலக்கிய வாசிப்பு எனத் தொடங்கும்போதே எனக்கு வழிகாட்டியாக இருந்தது ஜெயமோகன் எழுதிய ‘இலக்கிய முன்னோடிகள்’ வரிசை நூல்கள்தான். அப்படியான நூல்கள் உள்ளன என்று கூட எனக்கு அப்போது தெரியாது. என்னிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த தமிழினி வசந்தகுமார் அந்த ஏழு நூல்களையும் நான் அவசியம் வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரைந்தார். நான் அவற்றை ஒரு பாட நூல் போலவே நுணுகி வாசித்தேன். இன்றும் அவற்றைப் புரட்டிபார்க்கும்போது அப்புத்தகத்தில் நான் எழுதி வைத்துள்ள குறிப்புகள் எந்தக் கல்லூரி நூல்களை விடவும் நான் தீவிரமாக அணுகியுள்ளதற்கு சான்றுகளாக உள்ளன. அவ்வயதில் ஜெயமோகன் எழுதியுள்ளவற்றுடன் உடன்பட்டும் முரண்பட்டும் அடுத்தடுத்து என் தேடுதல்களைத் தொடங்கியிருந்தேன். இன்றும் நான் மலேசியாவில் யாராவது நல்ல எழுத்தாளர்களாக உருவாகி வருவார்கள் என நம்பினால் பரிசளிக்கும் நூல் அதுவாகவே உள்ளது. இளம் எழுத்தாளர் அர்வின் குமாரை முதன் முறையாகச் சந்தித்தபோதும் புதிய பதிப்பில் வந்த அந்த நூலைதான் பரிசாகக் கொடுத்தேன்.
மலேசியாவில் அதுபோல முன்னோடிகள் உள்ளனரா? அப்படியானால் அவர்கள் ஏன், எவ்வகையில் முன்னோடிகள் என குறைந்தபட்ச உரையாடலையாவது தொடங்கும் எண்ணம் இருந்தாலும் அதற்கு கடும் உழைப்பும் போதுமான அறிவும் தேவையாக இருந்தது. எனவே ஊரடங்கு தொடங்கியவுடன் நூலகத்தை நெறிபடுத்தி சிலவாரங்கள் பல இலக்கிய விமர்சன நூல்களை மறுவாசிப்பு செய்தேன். ஏப்ரல் 4, முதல் கட்டுரையைப் பதிவேற்றம் செய்தேன்.
ஒரு துறையில் எது மிகப்பெரிய சாதனையாக உள்ளதோ அதை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவதுதான் அத்துறையை நேசிப்பதற்கான சான்று. அதில் தோல்விகூட சொல்லிக்கொள்ளத்தக்க அடையாளம்தான். அதனால் அதுவும் மகத்தானதுதான். 1993இல் ஜெயமோகன் எழுதிய அந்நூல்களில் படைப்பாளுமைகள் குறித்த கட்டுரைகளும் அப்படைப்பாளிகளின் ஒட்டுமொத்த படைப்பு குறித்த மிக விரிவான அறிமுகத்தையும் தாங்கியவை. அதற்குள்ளேயே அவர் செய்துகொள்ளும் விவாதங்களையும் முன்வைக்கும் மாற்றுகருத்துகளையும் இப்போது வாசித்தாலும் புதிய திறப்புகளைக் கொடுக்கக் கூடியவை. அவற்றை முன் மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தப் பத்து கட்டுரைகளும் நாவல்களை மட்டுமே மையமிட்டவை. வரும் வாரம் பள்ளிக்கூடம் தொடங்கவுள்ள சூழலில், இவ்வளவுதான் இப்போதைக்குச் சாத்தியப்பட்டது. இவற்றை எழுத மனரீதியான உந்துதலைக் கொடுத்தவர் ஜெயமோகன்.
ஜெயமோகன் இலக்கியத்திற்கான குரு என நான் முழுமையாக அறிந்துகொண்டது பேய்ச்சி நாவல் எழுதி முடித்தபோதுதான். அந்தப் பதினெட்டு நாட்களும் நான் என்னவாக இருந்தேன் என்பதை நான் மட்டுமே அந்தரங்கமாக அறிவேன். அப்படியானால் விஷ்ணுபுரம், காடு, கொற்றவை எனத் தொடங்கி வெண்முரசு வரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த மனிதர் யார்? என்ற கேள்வியே எனக்கு அடிப்படையாகத் தோன்றியது. அவரது எந்த வாசகரும் அறியாத ஒரு ஜெயமோகனை நான் அறிந்துகொண்டதாக அப்போது எனக்குத் தோன்றியது. பின்னர் இப்படித்தான் எல்லாருமே உணரக்கூடும் என உணர்ந்தேன். பேய்ச்சி நாவலை பதிப்பகத்தில் பெற்றுக்கொண்ட அன்றே ஜெயமோகனிடம்தான் முதலில் கொடுக்க விரும்பினேன். அறையின் கதவைத் திறந்தபோது வேட்டி கோடு போட்ட சட்டையுடன் ஜெயமோகன் அமர்ந்திருந்தார். வாசலில் இருந்து அவர் மேசை வரை செல்லும் ஒவ்வொரு அடியும் நடுங்கியது. அந்த அறையில் கணினி முன் அமர்ந்துள்ள இவர் யார்? இவருடன் பேச நான் தகுதியானவனா? எனக்குழம்பிக்கொண்டே சென்றேன். புத்தகத்தைக் கையில் கொடுத்து கால்களில் பணிந்து ஆசி வாங்கினேன். என்னைப் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே உணரமுடியவில்லை. அது ஆசி மட்டுமா என்றுகூட பல முறை எனக்குள் கேட்டுக்கொண்டேன். இல்லை! அது மாபெரும் ஆற்றலின் முன் பணிவது. நான் உன் முன் ஒன்றுமே இல்லை என்பது. நான் என்பதை முற்றும் முழுதாக உடைத்துக்கொள்வது.
பேய்ச்சியை எழுதி முடித்த பிறகு மனரீதியாக எனக்குள் ஏற்பட்டுள்ள மாற்றம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகவே எனக்குக் காலில் விழுந்து ஆசி வாங்கும் பழக்கமில்லை. கடைசியாக காலில் விழுந்தது பத்து வருடங்களுக்கு முன் என் திருமணத்தில். அதுவும் ஒரு சடங்காக நடந்து முடிந்தது. எது நான் வணங்கக் கூடியது; எது அதன் வடிவம் என்பதை ஒரு நாவலை எழுதி நான் கண்டடைந்தேன். அது இலக்கியம் மட்டுமே. அதன் வடிவாக இருப்பது எதுவோ அதுவே வணங்கத்தக்கது. அதற்குள் இயங்கிக்கொண்டிருப்பது மட்டுமே அவ்விறைமையை நெருங்கிச் செல்லும் வழி.
இன்று குருபூர்ணிமா வெண்முரசு நாள் சந்திப்பு நடப்பது பற்றி ஃப்ரேசரில் இருந்து இணையத்தில் பார்த்தேன். என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. 7 வருடங்கள் விடாமல் 25000 பக்கங்கள் வரை 26 நாவல்கள் என எழுதி முடித்துள்ளார் ஜெயமோகன். இது ஒரு போட்டியல்ல. இன்னொருவரை இதைவிட அதிகமாக எழுத வைக்கும் எல்லைக்கோடும் அல்ல. எண்ணிக்கையும் வருடங்களும் கொண்டாடுவதற்கான சான்றுகள் அல்ல. ஒரு தவம் முழுமை கொண்டு நிறைவு கண்ட நாள். கம்பன் எழுதிய மொழியில், வள்ளுவன் எழுதிய மொழியில், பாரதி எழுதிய மொழியில் எனப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நாம் ஜெயமோகன் எழுதிய மொழியில் எனச் சொல்லத் தகுதி கொண்ட நாள். சிகரங்களில் மட்டுமே இருந்த ஒரு கலைஞன் தான் மேலும் தாவி ஏறிச்செல்ல இன்னும் இன்னும் சிகரங்களை தனக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு நாள்.
இந்த மகத்தான கலைஞன் உருவாக்கிய தமிழ் இலக்கியத்தில் இயங்குவது பொறுப்பு மிக்கது எனத் தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கும்போது சு.வேணுகோபால், ஈரோடு கிருஷ்ணன், அ.பாண்டியன் போன்ற நண்பர்கள் அவ்வப்போது என் தவறுகளைச் சுட்டியது அடுத்தடுத்த கட்டுரைகள் எழுத வழிகாட்டியாக இருந்தது. அடுத்த சில மாதங்கள் நூலகத்தில் காத்திருக்கும் பிற நாட்டு இலக்கியங்களை வாசிக்க வேண்டும். அது மொழி கூர்மை படவும் இலக்கிய நுண்ணுணர்வு செம்மை படவும் உதவும்.
இப்படி வாசிப்பதும் எழுதுவதுமே குருவை அடையும் வழி. காரணம் குரு என்பவர் தனது செயல்களால் மட்டுமே நிறைவு கொள்பவர் அல்ல. தான் நிகழ்த்த விரும்பும் ஒன்று எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் தன் கதிர்களைப் பாய்ச்சி மகிழ்ச்சி கொள்பவர். அதுவும் தன்னுடையதின் ஒன்றென கருதுபவர். பின்னர் தான் எனும் பிரக்ஞை வழியாக தான் என்பதையும் மறக்கச் சொல்லிக்கொடுப்பவர்.
மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரை:
செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு
ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்
எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி
துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ
இலட்சியப்பயணம்: சென்று சேராத முன்னோடி
ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் சயாம் மரண இரயில்