சீ.முத்துசாமி நாவல்கள்

முற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத்து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால்  வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார்.  1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.

குறுநாவல்கள்

சீ.முத்துசாமியின் குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு ‘இருளுள் அலையும் குரல்கள்’. சம்பவச் சிதறலாக கதைகளை எழுதும் முறையைதான் அவர் இதில் உள்ள ‘அகதிகள்’, ‘விளிம்பு’ ஆகிய குறுநாவல்களிலும் கடைப்பிடிக்கிறார். அவரது சிறுகதை வாசகன், குறுநாவல்களையும் அணுகும்போது வாழ்வில் அவரது ஆதாரமான கேள்வி என்னவென்ற ஒரு பிடி கிடைக்கவே செய்யும்.

குடும்பம் எனும் அமைப்பு, பெண்ணின் ஆளுமையால் உறுதி குலையாமல் நிற்கிறது என்ற அடிப்படை நம்பிக்கையும் அந்த இறுக்கம் தளரும்போது குடும்பமும் சிதறும் எனும் அச்சமும் சீ.முத்துசாமியின் சிறுகதைகளைப் போலவே குறுநாவலிலும் கவிந்திருப்பதைக் காண முடிகிறது.  கணவனின் கால் துண்டிக்கப்பட்டதும் குடும்ப பாரத்தை தாங்கும் பாப்பம்மாள், கணவனை இழந்தபின் வரும் காதல் விண்ணப்பத்திற்கும் காமசேஷ்டைகளுக்கும் நடுவில் இரண்டு பிள்ளைகளுடன் வைராக்கியமாக வாழும் லட்சுமி, குடும்பக்கட்டுப்பாட்டுக்குப் பின் பிறந்த குழந்தையால் மனம் வெறுத்து தன்னை விட்டுச்சென்ற கணவனை மறந்து, வாழ்ந்து தீரவேண்டிய வேட்கையில் ராஜமாணிக்கத்துடன் இணையும் மாரியாயி என சீ.முத்துசாமி தன் நாவல்களில் வரும் பெண்களிடம் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி அதில் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள் என அச்சத்துடன் கவனிக்கிறார். அந்த அச்சமே மறுபடி மறுபடி அவரை எழுதத் தூண்டுகிறது. அவர்கள் வேறொன்றைச் செய்துவிட மாட்டார்களா என ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாறுகிறார்.

‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவலில் வரும் சிவகாமியும் குடும்பத்தை மீறிச் செல்பவள்தான். மனம் முழுவதும் காதல் நிரம்பியவள். கடந்த காலங்களில் தனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன ஈர்ப்புகளை அவ்வப்போது நினைத்துக்கொள்கிறாள். ஒரு சமயம் வீட்டாரின் விருப்பத்திற்கு மாறாக, அவள் காதலித்தவனோடு ஓடிப்போகிறாள். கல்யாணமான ஒரே ஆண்டில் அவன் புற்றுநோய் கண்டு இறக்கிறான். மீண்டும் குடும்பத்தில் வந்து இணைபவளைச் சுற்றி பல்வேறு பிரச்சனைகள் சூழ்கின்றன. அப்பா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவள் அம்மாவுக்கு மனநலமில்லை. அண்ணன் வாழ்வில் பிடிப்பில்லாமல் புத்தக விநியோகிப்பாளானாக வேலை செய்கிறான். தம்பிகளில் ஒருவன் போதைப் பழக்கத்தால் விபத்தில் சிக்க, மற்றுமொருவன் ஆற்றில் குளிக்கையில் அடித்துச் செல்லப்படுகிறான். இவர்கள் எல்லாரும் இணைந்து உருவாக்கும் இருளுக்குள்ளும் அவளுக்கு வேறு ஒருவன் மேல் காதல் வருகிறது. அவன் தொடுதலுக்கு இணங்கும் முன் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா எனக்கேட்கிறாள். அவனது கேலியான பதில் அவளைக் குறுக வைக்கிறது.

அசோகமித்திரனின் ‘விமோசனம்’ சிறுகதையில் வரும் சரஸ்வதியைப் பார்த்து ஒரு கணம் அஞ்சும் கணவனின் மனநிலையில் இருந்துதான் முத்துசாமியின் அனைத்து புனைவுகளும் உருவாகிறதோ எனத் தோன்றுகிறது. அது ஒரு அச்சமாக மட்டுமல்லாமல் தேர்ந்த கலையாக மாறுவது ‘மண்புழுக்களில்தான்’.

மண்புழுக்கள்

‘மண்புழுக்கள்’ சீ.முத்துசாமியின் முதல் நாவல். நாவல் முழுக்க ஆசிரியர் தோட்ட மக்களின் மொழியிலேயே கதையைச் சொல்லி செல்கிறார். ஓர் எளிய மனிதனின் கண்ணில் நிலம் என்னவாக இருக்குமோ, வாழ்வு என்னவாக இருக்குமோ, அதில் ஊடாடிச்செல்லும் முரண்கள் என்ன பாதிப்புகளைக் கொடுக்குமோ அதாக மட்டுமே ஒரு சாட்சியாக நின்று ‘கித்தா காட்டு மொழியில்’ பதிவு செய்துள்ளார்.

ஒரு புனைவுக்கு அதன் தலைப்பு இவ்வளவு பலம் கொடுக்குமா என நாவலை முதன் முறையாக வாசித்தபோது தோன்றியதுபோலவே மறுவாசிப்பிலும் தோன்றியது. ஒரு தோட்டத்தில் வாழும் மக்களின் கதை இது. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் எனத் தனித்தனி பிரிவு இல்லை. மையக் கதை என எதுவும் இல்லை. விவரிக்கப்படும் பாத்திரங்களெல்லாம் நாவல் முழுவதும் வருவதுமில்லை. ஆட்டுக்காரச் சின்னக் கருப்பன், வெற்றிலை பயிரிடும் சாலபலத்தார், புட்டுக்கார கிழவன், கசியடி முனியப்பன், ரத்தினம் டிரைவர், பாம்பு பாலா, அம்மா வூட்டுக் குஞ்சான், வேட்டைக்காரர், பொன்னுசாமித் தண்டல், புடுக்கு மணியம், தொப்பை தொரைசாமி வாத்தியார், ரொட்டி வங்காளி, மசிரு மிட்டாய் இருளப்பன் என ஏராளமானோர் நாவலுக்குள் உலாவித் திரிந்தாலும் அவரவர்களுக்கென தனித்த பாதைகள் இல்லை. அம்மண்ணின் நிலையே மக்களின் நிலை. வரலாற்றின் திடுக்கிடல்களே அவர்களின் திசைகளைத் தீர்மானிக்கின்றன. காரணம் அவர்கள் மண்புழுக்கள். மண்ணுக்குள் உழல்பவர்கள். ஒருவரைப்போலவே மற்றவரும். அவர்களால்தான் நிலம் வளமாகிறது. ஆனாலும் டன்லப் துரைக்கோ மனேஜர் மேனனுக்கோ பெரிய கிராணி சுப்பையாவுக்கோ இவர்கள் அருவருப்பான புழுக்கள்.

நாவலில் குறிப்பிட்ட தோட்டத்தின் பெயரை முத்துசாமி சுட்டவில்லை. நாவலில் வரும் யாரோ சில மனிதர்கள்போல அதுவும் ஏதோ ஒரு தோட்டம். முத்துசாமியின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் வாழும் மக்களின் கதையைச் சொல்வதல்ல. ஒரு சிதறிய வாழ்வை சிதறிய மொழியால் சொல்ல முயல்கிறார். ஆட்டுக்கார சின்னகருப்பன் எனும் பாத்திரத்தை ஒரு புள்ளியாக கொஞ்சம் அழுத்தி வைத்து, அங்கிருந்து நாலா திசைகளிலும் கோடுகளை இழுக்கிறார் சீ.முத்துசாமி. எல்லாக் கதைகளிலும் கிளைக் கதைகள் உண்டு, ஒவ்வொரு காட்சியிலும் உட்காட்சி உண்டு, கதைகள்தோறும் பின்னோட்டமும் உண்டு. மண்புழுக்கள் அடியில் உருவாக்கி வைத்திருக்கும் ரகசிய சுரங்கள்போல முத்துசாமி எல்லா வாழ்விலும் நுழைந்து நுழைந்து மீள்கிறார். கோடுகள் முடியும் இடங்களில் மேலும் புதிய புள்ளிகள் தோன்றி இன்னும் ஏராளமான கோடுகளை உருவாக்குகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று முறுக்கிப் பிணைந்து, இணைந்தபின் முத்துசாமி எல்லா புள்ளிகளையும் அழித்து அசாதாரண ஓவியம் ஒன்றை வாசகனுக்குக் காட்டுகிறார்.

சீதோஷண வர்ணனை, இட வர்ணனை, உணர்வுகளின் வர்ணனை என சீ.முத்துசாமி தோட்டத்து மண்ணின் முழுமையை மண்புழுக்களில் அபாரமாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த நாவலின் பிரதானமான பலமே இந்த வர்ணனைகள் மூலம் வாசகன் மனதுக்குள் காட்டை உருவாக்குவதுதான். காலை குளிரில் டிராக்டர் இஞ்சினின் உஷ்ணம் ரத்தனம் டிரைவருக்கு எவ்வாறான கதகதப்பைக் கொடுக்கிறதென்றும், தோட்டத்து திருமணத்தில் கிராமபோன் தட்டில் புதைந்துகிடக்கும் இசையை வெளிக்கொணரும் சாகசம் குறித்தும், மழையில் நனைந்த மரத்தில் கோட்டுக்குள் சிக்காத கித்தா பாலின் நழுவலையும், கயிற்றுக் கட்டிலில் மூட்டைப்பூச்சிகளைச் சமாளிக்கும் விதத்தையும், வெய்யிலில் எரியும் குச்சிக்காட்டின் அடங்கா கொதிப்பையும் வண்ணம் தீட்டி வண்ணம் தீட்டி அபாரமான ஓவியமாக்குகிறார்.

பெண்களின் உளவியல்மேல், தங்கள் கட்டிலிருந்து விடுபட்டு தீவிரம்கொள்ளும் அவர்களின் பிறழ்வுணர்ச்சியின் மேல் சீ.முத்துசாமிக்கு உள்ள பதற்றம் அவரது சிறுகதைகள்,  குறுநாவல்கள்போல இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. கணவன் – மனைவிக்கிடையிலான (ஆண் – பெண்) ஊடாட்டங்களும் அதனுள் இருக்கும் வன்மமும்; வன்மத்துக்கு வழங்கப்படும் புதிய தோற்றமுமே அவர் புனைவை சிக்கலாக மாற்றும் ஆதாரமான அம்சம். பெண் அடங்கிப்போவதாக பாவனை காட்டும் வரை ஆண்கள் அனுபவிக்கும் சௌகரியங்களையும் அது இரக்கமின்றி கிழிக்கப்படும் தருணங்களையும் முத்துசாமி தன் புனைவுகளில் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். ‘மண்புழுக்கள்’ நாவலிலும் அப்படியான பெண்கள் வருகின்றனர்.

முனியனின் மனைவிக்கு  (அவளுக்குப் பெயர் இல்லை) பாகவதர் சினிமாவின் மீதும் அவர் ஏறிச்செல்லும் குதிரை மீதும் ஆசை. தனது அத்தனை துன்பங்களில் இருந்தும் பாகவதர் மூலமாகவே அவள் விடுதலை தேடுகிறாள். அதைப் பொறுக்காத முனியன், பாகவதரிடம் என்னதான் உள்ளதெனக் கடிய, குடித்துவிட்டு மேலே வந்து விழும் முனியனுடன் விருப்பமின்றி உறவு நிகழும்போதெல்லாம் பாகவதரைத்தான் நினைத்துக்கொள்வதாக மனதுக்குள் கர்வத்தோடு சொல்லிக்கொள்கிறாள்.

ஓர் அடிமைபோல கணவனுக்கு பயந்து வாழ்பவள் கசியடி முனியப்பனின் அம்மா. நோய் உடம்புக்காரியான அவள் தன் கணவனுக்கு மேட்டுக்குச்சி பொன்னம்மாவுடன் தொடர்பு உண்டு எனத் தெரிந்தபோது தள்ளாடி அவள் வீடு வரை சென்று மொத்த சக்தியையும் திரட்டி, அவளைக் கீழே தள்ளி மிதித்து ஆங்காரமாகிறாள். சிறுவனாக இருந்த கசியடி முனியப்பன் அது தனது தாய்தானா என வியக்கும் வகையில் உக்கிரம் கொள்கிறாள்.

தன் மகளின் மரணத்துக்கு ஆட்டுக்காரன்தான் காரணமென ஆட்டுக்காரனின் மனைவி கொதிப்படைந்த நிலையில் அவள் கொட்டும் ஆங்காரச் சொற்களால் ஆட்டுக்காரன் மனம் உடைகிறான். கால் இழந்த தன் கணவனால் பொருளாதார ரீதியிலும் பயனில்லை எனும்போது அவன் நெருங்கி வருவதைக் கண்டித்து ‘காலில்லாதவனுக்கு சுகம் வேண்டுமா?’ என நான்கு வீடுகளுக்கு கேட்க கத்தி அவமானப்படுத்துகிறாள். இறுதியில் இன்னொருவனுக்கு வைப்பாட்டியாகவும் ஆகிறாள்.

முனியனின் மனைவி, முனியப்பனின் அம்மா, ஆட்டுக்காரனின் மனைவி என நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் முத்துசாமி காட்டிச்செல்வது பித்தேறிய பெண்களைத்தான். தன் காலில் கட்டப்பட்ட மிகச்சிறிய சங்கிலியால் நகரமுடியவில்லை என யானை தன் பாகனிடம் செய்துகாட்டும் பாவனையாகவே அவர் பெண்களின் மௌனத்தையும் கண்ணீரையும் பணிவையும் அனுமானிக்கிறார். அதுபோல எல்லா ஆண்களும் பெண் தன் அளவுக்கோ தன்னைவிடவோ ஆளுமைமிக்கவள் என அறிந்து வைத்துள்ளதையும் அதை வெளிக்காட்டாமல் இருவரும் நடத்தும் நாடகத்தையும் இந்த நாவலிலும் மையச்சரடாக ஊர்ந்து செல்லவிட்டுள்ளார்.

ஆட்டுக்காரனைச் சுற்றியே நாவல் புனையப்பட்டுள்ளது. அவனைச் சார்ந்த பிற மனிதர்களை பற்றிய துண்டுதுண்டான காட்சிகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உருவாகின்றன. பின்னர் அவை ஒன்றோடு ஒன்று இணைகின்றன. மாரியம்மன் கோயிலில் மவுன சாமியாராக இருக்கும் ஒருவரை ஆட்டுக்காரர் தன் வீட்டுக்கு அழைத்து வந்து  பராமரிக்க, அவர் மாடுகளுடன் இணக்கமாகி; அவற்றுக்குப் பிரசவம் பார்த்து மாட்டுக்காரர் ஆகிறார். தோட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள தனது ஊர் வாத்தியாரைச் சென்றுகண்டு அவர் வழி தனது அப்பாவின் நினைவுகளையும் பெரியம்மாவின் நினைவுகளையும் மீட்கிறார் ஆட்டுக்காரர். சாலபலத்தார் ஆட்டுக்காரனுடன் கடைசி வரை  நட்புடன்  வரும் பாத்திரம். வெற்றிலைத் தோட்டம் வைத்திருப்பதனாலேயே கைராசிக்காரர் என பெயர் பெறுகிறார். புட்டுக்காரன் அனைவராலும் தாத்தா என அழைக்கப்படுகிறார். தாத்தா என்பதாலேயே ஜப்பானியர் காலக் கதைகளைச் சொல்பவராக உள்ளார். ஆட்டுக்காரனுக்கு ஆலோசனைகள் சொல்பவராக இருக்கிறார்.

பெரும்பாலும் மலேசிய நாவல்களில் தவறவிடப்படும் குழந்தைகள் உலகம், ஆழம் இல்லாமல் இந்த நாவலிலும் பதிவாகியுள்ளது. கல்யாணப் பந்தல் போட்டால் சிறுவர்கள் குரங்குக்காய்களை பிறர் மீது தேய்த்து அரிப்பை ஏற்படுத்தும் விளையாட்டை விளையாடுபவர்களாகவும், மற்ற நேரங்களில் சில்லிப் பந்து விளையாடுபவர்களாகவும் காட்சிப் பின்னணிகளில் வந்து செல்கின்றனர். எதிர்மறை அனுபவங்களால் மனச்சிக்கலுடைய சிறுவனாகக் கசியடி முனியப்பனின் கடந்தகாலம் மட்டும் அழுத்தமாக வந்து செல்கிறது. ஒருவகையில் சிறுவர்களை விடவும் விலங்குகளுக்கு அதிகமான இடத்தை நாவலில் கொடுத்துள்ளார் சீ.முத்துசாமி. சாமி கெடா ஒன்று மற்ற ஆடுகளைப் போலல்லாமல் தோட்ட மக்களுடன் மக்களாக அனைத்து செல்வாக்குகளுடனும் உலா வருகிறது. ஜின் பன்றி காட்டில் மிரட்டுகிறது. வெய்யிலில் தட்டான்களும் இரவில் கோட்டான்களும் அலைந்து திரிகின்றன. ஆற்றில் விரால், மயிரை, கெண்டையென துள்ளுகின்றன.

ரப்பர் மரத்து விதைகள் போல ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கும் சம்பவங்களுக்குள் கதை ஒன்றையும் முத்துசாமி வைத்துள்ளார். கித்தாக் காட்டில் ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மகள் சின்னப்புள்ளையைக் கசியடி முனியப்பன் பால்மரக்காட்டில் பாலியல் கொடுமைக்குப் பிறகு கொலை செய்துவிடுகிறான். போலிசாரால் கைது செய்யப்படும் அவனது நியாயம் வேறொரு கோணத்தில் சொல்லப்படுகிறது. தாயாருக்கு நிகழும் வன்முறையைப் பார்த்து மரத்துப்போன மனதுடன் வளரும் அவனது சேஷ்டைகளைக் கண்டிக்கும் சின்னக்கருப்பனைப் பழிவாங்க நடக்கும் கொலை அது. போலிசில் இருந்து தப்பிக்கும் கசியடி முனியப்பன் கம்யூனிஸ்டு குழுவில் இணைந்து தனது சேஷ்டைகளுக்குத் தண்டனையாக விரையில் உதைத்த டன்லப் துரையை அதேபோல மிதித்து துப்பாக்கியால் சுட்டு பழிவாங்குகிறான்.

இந்த எளிய கதைக்குள், உக்கிரமான நிகழ்வுகள் எவ்வாறு சமூகத்தின் மனதை இயக்குகின்றன என்றும் அபத்த கணங்கள் எவ்வாறு மானுடக் கீழ்மைகளை மன்னிக்கின்றன என்றும் காட்டிச்செல்லும் விதம்தான் மண்புழுக்களை மேன்மையான படைப்பாக மாற்றுகிறது.

நாவலின் தொடக்கத்திலேயே  ராஜநாகம்போல ஒரு குழந்தை தோட்டத்தில் பிறக்க வேண்டுமென பாம்பு பாலா ஆட்டுக்காரனிடம் சொல்கிறான். அந்தப் பாம்பு மனிதனைக் கண்டு ஆங்கிலேயே துரைகளெல்லாம் நடுங்குவார்கள் என்பது அவன் கற்பனை. அதேபோல புட்டுக்காரர் எப்படியாவது செம்பொந்து பறவைக் கூட்டைத் தேடி சஞ்சீவி வேரை எடுத்துவர வேண்டுமென கசியடி முனியப்பனிடம் சொல்கிறான். இந்த எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுபோல நாவல் இறுதியில் கசியடி முனியப்பன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து துரையைச் சுட்டுக்கொல்பவனாகவும் அவனே நாகமனிதனாகவும் சஞ்சீவியைத் தேடிக் கண்டடையும் ரகசியம் தெரிந்தவனாகவும் அதனால் அவனே தோட்டத்தின் நாயகனாகவும் நம்பப்படுகிறான்.

அதற்கு முன் இதே கசியடி முனியப்பன் ஆடுகளின் விரை நரம்புகளை நசுக்கியதும், திருமண வீட்டின் முதலிரவு அறையை எட்டிப்பார்த்ததும், ஆட்டுக்காரன் மகளைக் கற்பழித்துக்கொன்றதும் ஒரே நிமிடத்தில் தோட்ட மக்களால் மறக்கப்பட்டு மன்னிக்கப்படுகிறது. ஆட்டுக்காரனின் துன்பமெல்லாம் ஒரு திடுக்கிடும் சம்பவத்தால் மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிக்கப்படுகிறது. தன் தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்த்துகொள்ள கசியடி முனியப்பன் செய்யும் கொலைக்கு புரட்சி சாயம் பூசப்படுகிறது. ஆட்டுக்காரன்  மனைவியின் இழப்பைப் பார்த்து அழுதவர்கள் தங்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு கசியடி முனியப்பனுக்காக கிடாய் வெட்டி சாமி கூம்பிட வேண்டுமென உற்சாகமாகப் பேசிக்கொள்கின்றனர். பலகாலமாக உழைத்து முன்னேறி, மகளை இழந்து, விஷமேறிய ஆணியால் காலை இழந்து, குடும்பத்தில் மரியாதை இழந்த ஆட்டுக்காரனின் தற்கொலை, ஒரு காய்ந்த இலை சத்தமில்லாமல் உதிர்வதுபோல காற்றின் இழுப்புக்கெல்லாம் அலைந்து அலைந்து அடங்குகிறது.

அது அப்படித்தான் நிகழமுடியும். ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் பாத்திரத்தை அத்தனை அற்புதமாக வடித்துள்ளார் முத்துசாமி. அவன் தோட்டத்து மக்களில் வித்தியாசமானவன். அவன் புலன்கள் நுட்பமானவை. அனைத்திலும் தனித்த ரசனை கொண்டிருக்கிறான். நிறைந்த நிலவைக் கண்டால் பொங்கி அழவேண்டும் என விம்மும் மனம் அவனது. பனி கொட்டும் இரவுகளில் மற்றவர் கேலிகளைப் பொருட்படுத்தாமல் நடக்கிறான். கூத்துக்கொட்டாயில் காற்றோட்டமாகப் படுக்க அவன் தேர்ந்தெடுத்த இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காதவனாக இருக்கிறான். அவ்வளவு பெரிய இடத்தில், அந்த இடத்தில் மட்டும் ஒரு சுகம் இருப்பதை அறிந்த தேகம் அவனது. இவ்வளவு நுண்ணுணர்வு கொண்டவனின் மனம் தன் மனைவி தன்னை இழிவுபடுத்தி, பழிவாங்கி, இன்னொருவனுடன் சேர்ந்து வாழ்வதால் அடையக்கூடிய வெறுமை, அர்த்தமற்ற வாழ்வின் முனை, மரணத்திலேயே முடிகிறது.

மானுடத்தின் மீதிருக்கும் கசப்பின், சந்தர்ப்பங்களின் மீதிருக்கும் அவநம்பிக்கையின், பெண்களின் மீதிருக்கும் அச்சத்தின் கலாபூர்வமான வெளிப்பாடு முத்துசாமியின் புனைவுகள். அதன் முழுமையான வெளிப்பாடுதான் மண்புழுக்கள். இந்நாவல் பிரசுரமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ‘மலைக்காடு’ நாவலும் அந்த சாயலை ஒட்டியதுதான்.

மலைக்காடு

கப்பல் பயணத்திலிருந்து தொடங்குகிறது நாவல். தமிழக கிராமத்தில் இருந்து பிழைப்புக்காகப் புறப்பட்டு வரும் மாரிமுத்துவின் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கை நாவலில் பதிவாகிறது. மலாயாவின் காட்டைப் பார்த்து தாங்கள் நம்பி வந்த ஊர் இது இல்லை என அம்மக்கள் அறிகின்றனர். கடும் பயண அனுபவத்தில் மலாயா மண்ணில் இணைகின்றனர். ஆனால் இரண்டாவது அத்தியாயத்திலேயே நாவல் பல வருடங்கள் முன்னகர்ந்து விடுகிறது. உண்ணாமலை மகள் வயிற்றுப்பேரன் குட்டியப்பன் போராடும் குணத்துடன் நாவலில் அறிமுகமாகிறான். சுத்தமான தண்ணீர் மறுக்கப்பட்ட தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பங்களாவிற்குச் செல்லும் தண்ணீர் லாரியை நண்பர்களுடன் மடக்குவதிலிருந்து அவன் அறிமுகமாகிறான். பாலையா தலைமையில் நெட்டை மணியுடன் குட்டியையும் கைது செய்ய வரும் போலிசுக்கு எதிராக அத்தோட்டத்தின் முதல் எதிர்ப்பு மக்களிடமிருந்து தொடங்குகிறது. அதையெல்லாம் மீறி அவர்களுக்குத் தலைவனைப்போல இருக்கும் டிரசர் பாலையா, நெட்டை மணி, குட்டி மூவரும் கைது செய்யப்படுகின்றனர். விடுதலையானபின் பாலையா முதலில் காணாமல் போகிறார். தொடர்ந்து குட்டியின் நண்பர்கள் இருவர் காட்டில் காணாமல் போக அவர்களைத் தேட குட்டியும் அவன் நண்பன் நெட்டை மணியமும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதை பரிந்துரைப்பவர் மக்கள் கட்சித் தலைவர் இங்கிலீஸ் மணியம். குட்டி காணாமல் போன பிறகு கதை கோப்ரல் மணியத்தை மையமாக்கி நகர்கிறது. தொடக்கத்தில் அரசுக்கு ஆதரவானவராகக் காட்டப்படும் கோப்ரல் மணியம் பின்னர் கம்யூனிஸ்டாக உருமாறுகிறார். கோப்ரல் மணியம், காணாமல் போன குட்டி, நெட்டை மணியம், பாலையா என எல்லாரும் கம்யூனிஸ்டுகளாக நாவலின் இறுதியில் கண்டடையப்படுவதோடு நிறைவடைகிறது.

மண்புழுக்கள் நாவலில் அழுத்தமாக இருந்திருக்க வேண்டிய மனேஜர் மற்றும் துரைகளின் அதிகார துஷ்பிரயோகப் பகுதி மலைக்காட்டில் வலுவாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக முதல் சில அத்தியாயங்களிலேயே தமிழர்களின் எதிர்ப்பைத் தாங்கிகொள்ள முடியாத துரையின் முகமாற்றமும் அவனுக்குச் சாதகமான அத்தனை அதிகார பலமும் ஒத்திசைந்து இயங்கும் வன்முறைக் காட்சியும் தீவிரமானவை. அந்த அதிகாரம் பெரிய தண்டல் வரை எப்படி திரிந்து எளிய மக்களை வதைக்கிறது என விரிவாகவே காட்டியுள்ளார்.

அதுபோல நாவலின் தாய்மை வடிவாக வரும் முத்தாயி கதாபாத்திரம் வலுவான வார்ப்பு. நாய்களிடத்தில் கூட வற்றாத தாய்மை உணர்வைக் காட்டும் அவளது மகன் குட்டி காணாமல் போவதும் எவ்வளவு தடுத்தும் அவனை அனுப்பி வைக்கும் கணவனையும் இங்கிலீஸ் துரையையும் அவள் சன்னதம் கொண்டு, சொற்களாலும் செயல்களாலும் அரிப்பதும், இனி தன் மகன் வரவேமாட்டான் என நம்பும் கணத்தில் மனம்பிறழ்ந்து தோட்டம் முழுவதும் திரிந்து பிதற்றும் ஒலி நாவல் முழுக்கவே அடிநாதமாக வருகிறது.

நாவலில்  கறுப்புக்குதிரை, யாரோ வரைந்துபோன கோயில் சுவர் காட்சிகள், முனியாண்டி சாமியின் பிரசன்னம், ராஜநாகத்தின் சீற்றம் என பல காட்சிகளை முத்துசாமி கவித்துவமாகச் சித்தரித்துள்ளார். ஒரு தேர்ந்த எழுத்தாளனிடம் இருக்கும் மொழியும், சித்தரிப்பின் நுட்பமும் முத்துசாமியிடம் இயல்பாகப் பொருந்தி இருப்பதால் அவை வாசிப்பினூடாக காட்சியாக மாறி அசாதாரண அனுபவத்தைக் கொடுக்கின்றன.

மிக முக்கியமான படைப்பாக உருவாகியிருக்க வேண்டிய  இந்நாவல் பலவீனமடைய நான்கு முக்கிய விடயங்கள் காரணமாக உள்ளன.

முதலாவது நாவலுக்குள் உள்ள கட்டுரைத்தன்மை. முத்துசாமியின் புனைவு மொழி தானியங்கி முறையில் உருவாவது. பல சமயங்களில் கட்டற்று விரிந்து கவித்துவமான அனுபவங்களை வழங்குவது. மலைக்காடு நாவலில் முத்துசாமி வரலாற்றுத் தருணங்களை எழுத முயலுகையில் அவை செய்திகளாக மட்டுமே பதிவாகியுள்ளன. மலைக்காடு ஒரு சமூக நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புக்கிட் செம்பிலான் தோட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர்; அவர்களின் சிக்கல்களுக்கிடையில் காலம் எவ்வாறு நகர்ந்தது எனச் சொல்லும் நாவல். இதுபோன்ற நாவலுக்குள் வரலாறு என்பது அதன் தேவையைப் பொறுத்தே தன்னிச்சையாக இணையக்கூடியது. ஆனால் தொண்டர் படை உருவாக்கம், கிள்ளான் கலகம், கம்யூனிஸ்ட் கிளர்ச்சி, தொழிற்சங்கப் போராட்டம், எஸ்.ஏ.கணபதியின் வாழ்க்கை என பல பகுதிகள் நாவலில் நிகழாமல் செய்தியாகவே தங்கி விடுகின்றன. நாவலுக்குள் வரலாற்றை அணிகலனாக இணைக்க வேண்டும் என்று மெனக்கெடுவதே இயல்பாக அவருக்குக் கூடிவரக்கூடிய புனைவு மொழியை விலக்கி வைக்கிறது. இதனோடு ஒட்டியே நாவலின் முதல் அத்தியாயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. மாரிமுத்துவின் கப்பல் பயணத்தை விலாவரியாகச் சொல்லித் தொடங்கும் இப்பகுதி முடிந்த அடுத்த அத்தியாத்தில் நான்காவது தலைமுறை வாழ்க்கைக்கு தாவுகிறது கதை. கூலிகளாகக் கப்பல் பயணம் மேற்கொண்டு வந்த வரலாற்றைச் சொல்வதன்றி அந்த அத்தியாயம் வேறொரு பணியையும் செய்யவில்லை. நாவல் முழுவதும் முத்துசாமி பின்னோக்கு உத்தி மூலம் பல்வேறு பாத்திரங்களை அறிமுகம் செய்வதுபோல மாரிமுத்துவையும் உண்ணாமுலையையும் செய்திருக்க முடியும். ஒரு படைப்பாளியால் ஒரு காட்சியை சிறப்பாக சொல்ல முடிவதாலேயே அதை இணைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது அந்த நாவலுக்கு தேவையா என்பதே ஆதாரமான கேள்வி.

இரண்டாவதாக நாவலைக் காட்சிப்படுத்தும் தன்மை. ஓர் எழுத்தாளன் கையில் எடுக்க வேண்டிய சவாலை முத்துசாமி பல இடங்களில் நழுவ விடுகிறார் என்றே இந்த நாவலை வாசித்தபோது தோன்றியது. அவர் காலகட்டத்து பல எழுத்தாளர்களைப்போல அவரால் தோட்டக்காட்டையும் அதில் உலாவும் மனிதர்களையும் அவர்கள் மனங்களையும் மட்டுமே துல்லியமாகக் காட்சிப்படுத்த முடிகிறது. மனதுக்குள் அவருக்கு அனுபவப்பட்ட பச்சைக்காடன்றி பிரிதொன்றை உருவாக்கிக் காண முடியவில்லை. போலிசுக்கும் தோட்ட மக்களுக்கும் நடக்கும் மோதல்கள், ஜேம்ஸ் கோனல்லி பங்களாவில் நடத்தும் குடி விருந்து, கம்யூனிஸ்டுகள் தங்கியுள்ள தற்காலிக இடம் என நாவலுக்குள் துல்லியமாகக் காட்சியாக்கப்பட்டிருக்க வேண்டிய பல இடங்கள் சில வரி தகவல்களாக மட்டுமே உள்ளன.

உதாரணமாக, நாவலின் ஒரு பகுதியில் மாரி எனும் சமையல்காரன் தண்டலின் அழைப்பின் பேரில் சின்னதுரைக்குச் சமைத்துப்போட முதன்முறையாக பங்களாவுக்குள் செல்கிறான். ஒரு தோட்டத்து சமையல்காரனுக்கு துரை பங்களாவில் இருக்கும் சமையல் பொருள்கள் மீதும் அதன் நவீனத்தன்மையின் மீதும் எவ்வகையான தடுமாற்றம் இருக்கும் என்பதுதான் எழுத்தாளன் கவனித்து  நுணுகிப்பார்க்க வேண்டிய இடம். மாரி அவன் தோட்டக்காட்டில் சமைப்பதுபோல மிக இயல்பாக சமைத்துப்போடுகிறான். காடுகளை மறுபடி மறுபடி விவரிக்கும் முத்துசாமி துரையின் பங்களாவை பிரம்மாண்ட விளக்குகளுடனும் உயரமான தூண்களுடனும் முடித்துக்கொள்கிறார். முத்துசாமியின் களம் கித்தாக் காடு மட்டும்தான். அதற்குள் இருக்கும் இருள் மட்டும்தான். அந்த இருளில் இருந்து அவரை வெளியில் இழுத்து வந்தால் கண்கள் கூச அயர்ந்து விடுகிறார்.

மூன்றாவதாக  கதாபாத்திரங்களின் மொழிக் குழப்பமும் காலக் குழப்பமும் நாவலில் பல இடங்களில் காண முடிவது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. முத்துசாமி போன்ற ஒரு தேர்ந்த படைப்பாளி செய்யக்கூடாத தவறுகள் அவை. அநேகமாக நாவல் முழுவதும் வரக்கூடிய உரையாடல்களுக்கான மொழி ஒன்றுபோலவே அமைந்துள்ளது. இதை பெரிய பலவீனமாகச் சொல்ல முடியாதுதான். ஆனால் அமீட் என்ற மலாய்க்காரன், வர்கீஸ் என்ற மலையாள துரை, ஜேம்ஸ் கோனல்லி என்ற ஆங்கில துரை என சகலரும் தோட்ட மொழியிலேயே உரையாடுவது  வாசிக்க நெருடலைக் கொடுக்கிறது. அதுபோல சிவாஜி கணேசன் வழி இங்கிலீஷ் மணியம் எனப் பெயர் வந்ததும், எம்.ஜி.ஆர் – நம்பியார் இணை குறித்தும், எம்.ஜி.ஆரின் புலிச் சண்டை குறித்தும் 1945-1950 ஆம் ஆண்டுகளுக்குள் நடக்கும் நாவலில் சொல்வது பொருந்தவில்லை.

மலைக்காடு நாவலில் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பது சஸ்பென்ஸ் தன்மை. ஒரு நாவலில் நடக்கும் திருப்பம் என்பது நாவலுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களுக்குள் நிகழ்வது. அதில் உள்ள கதாபாத்திரம் அடையக்கூடிய வியப்பே வாசகனையும் வந்து சேர்கிறது. மாறாக ஒரு செய்தியை ஒளித்து வைத்துவிட்டு, இறுதியாய் வாசகனிடம் உணர்ச்சி பொங்க சொல்வது ஜனரஞ்சக இலக்கியங்களுக்கு வேண்டுமானால் ஏற்ற பாணியாக இருக்கலாம். உதாரணமாக, காணாமல்போன குட்டி கோபலுக்கு பிறந்தவனல்ல என்ற உண்மை நாவலின் இறுதியில் அவன் மனைவி முத்தாயியால் சொல்லப்படுகிறது. ஆனால் அது தோட்டத்தில் அனைவரும் அறிந்த உண்மை. கணவனை இழந்து மகனோடு நின்ற முத்தாயியை கோபால் மனைவியாக ஏற்று வாழ்கிறார். இதைக் கடைசியில் சொல்வது வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்க மட்டுமே. மற்றபடி அதன் தேவையென ஒன்றுமே இல்லை. அதுபோல நண்பனுடன் உறவு வைத்திருந்த மனைவியையும் நண்பனையும் வெட்டிக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்தையும் நாவலின் இறுதியில்தான் குட்டியின் அப்பா கோபால் நினைத்துப் பார்க்கிறார். அதுவும் வாசகனுக்குத் திடுக்கிடலை கொடுக்க மட்டுமே வலிந்து புகுத்தப்படுவதாய் உள்ளது. அது நிகழாவிட்டால் நாவலுக்குள் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதுபோலவே நாவலின் இறுதிப் பாகத்தில் பவானியம்மாள் என்ற பெண் குட்டியைக் காதலிப்பதைச் சொல்கிறார் முத்துச்சாமி. அதுவும் அவள் காதலை சீ.முத்துசாமி இப்படிச் சொல்கிறார். ‘தான் ஒரு பறச்சி என்கிற நினைவின் தீவிரத்தில் கழிவிறக்கம் மிகுந்து, தன்னை விரும்பும் அவனைக் கடவுளாய் அண்ணாந்து பார்த்து மானசீகமாய் வணங்கி நெக்குருகினாள்’. ஓர் அடித்தட்டு சமூகத்தைச் சார்ந்த தோட்டத்துப் பெண் தன்னை ஒரு மேல் சாதி இளைஞன் காதலித்தால்  அவனைக் கடவுளாக நினைப்பாளா எனும் கேள்வி ஒருபுறம் இருக்க, அவளை நாவலின் இறுதியில் கொண்டு வந்து வைத்து சாதிய அடையாளம் கொடுப்பதெல்லாம் நாவலுக்குள் அதிர்ச்சி மதிப்பீடுகளால் அலங்காரம் செய்யும் முயற்சிகளாக மட்டுமே தோன்றுகிறது.

மண்புழுக்கள் நாவலில் சீ.முத்துசாமி கையாண்ட சிதறிய காட்சியமைப்பு மலைக்காடு நாவலில் கைக்கொடுக்கவில்லை. காரணம் மண்புழுக்கள் நாவலின் தன்மையே சிதறடிக்கப்பட்ட மக்களின் கதையைப் பேசுவதுதான். அந்தச் சிதறிய மனிதர்களுக்குள் இருக்கும் அபத்தம் தர்க்கமின்றி கொண்டாடப்படுவதை அம்மொழி உச்சமான மனநிலைக்குக் கொண்டு சென்றது. மலைக்காடு, காணாமல்போன மூவர் கம்யூனிஸ்ட் ஆவதும் அவர்களைத் தேடிச்செல்லும் போலிஸ்காரரும் கம்யூனிஸ்ட் ஆதரவாளனாக ஆவதுமே கதை. இவர்கள் மூவரும் இப்படி மாற எவ்வித அழுத்தமான காரணங்களும் பின்புலமாக இல்லை. தொண்டர் படையில் இருந்ததாலும் மலாயா கணபதி அபிமானி என்பதாலும் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆனார் என்பது ஏற்கமுடியாத காரணங்கள். உண்மையில் இந்த நாவலில் அப்படிப் பல சம்பவங்கள் அழுத்தம் இன்றியும் அவசியம் இன்றியும் நிகழ்கின்றன.

துரை குடிபோதையில் கேட்டான் என்பதற்காக ஒரு தண்டல் தன் மனைவியை அவனுடன் உறவுக்கொள்ள அனுப்பி வைக்க முயல்வானா? ஒரு வேட்டைக்காரன் புலி காட்டுப்பன்றியை வேட்டையாடுவதைக் கண்டு வேட்டைத் தொழிலையே விடுவானா? காட்டினுள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் காண படபடத்துச் செல்லும் ஒருவன் அதன் அழகையும் வர்ணித்துக்கொண்டு செல்வானா? இப்படி நாவலை வாசித்து முடிக்கும் வரை எண்ணற்ற கேள்விகள் எழுந்தபடியே இருந்தன. புனைவில் எதுவும் நடக்கலாம். அதற்கான நியாயங்கள், அதை நம்ப வைப்பதற்கான தருணங்கள் புனைவுக்குள் உருவாகியுள்ளதா என்பதுதான் கேள்வி.

சீ.முத்துசாமியின் சிறுகதைகள் தொடங்கி இறுதியாக வந்த மலைக்காடு நாவல் வரை வாசித்தபோது அவற்றில் பெரும்பாலும் புழங்குவது ஒரே விதமான கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்கு இருப்பது ஒரே வகையான சிக்கல்கள்தான். மண்புழுக்களில் மகள் காணாமல் போவதுபோல மலைக்காட்டில் மகன் காணாமல் போகிறான். மண்புழுக்களில் முனியப்பன் கம்யூனிஸ்ட் ஆவதுபோல மலைக்காட்டில் குட்டி கம்யூனிஸ்ட் ஆகிறான். மண்புழுக்களில் சின்னப்புள்ளையின் அம்மாவும் மலைக்காட்டில் குட்டியின் அம்மாவும் உக்கிரம் அடைந்து கணவனை சகட்டு மேனிக்குத் திட்டுகின்றனர். அதேபோல அவரது சிறுகதை, குறுநாவல்கள் என தொடங்கி நாவல்கள் வரை வரக்கூடிய பல ஆண்களுக்கு ஏதோ ஒரு காரணத்தில் கால்கள் இல்லாமல் போகின்றன. கால்கள் இல்லாதவர்கள் கையாளாதவர்கள் ஆகிறார்கள். கையாளாத ஆண்களின் மனைவிகள் அவர்களை வஞ்சிக்கிறார்கள். சொற்களால் எரிக்கிறார்கள்.

பெரும்பாலும் அவர் புனைவுகளில் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்கள் எல்லா கதைகளிலும் ஒன்றையே செய்கின்றன. 1970இல் எழுதப்பட்ட ‘இரைகள்’ சிறுகதை தொடங்கி 2018இல் வெளிவந்த ‘மலைக்காடு’ வரை லட்சுமி எனும் கதாபாத்திரம் கிருஷ்ணனிடம் சோரம் போகாத நாள் இல்லை. ஒரு படைப்பாளியாக சீ.முத்துசாமி கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏறக்குறைய ஒரேவிதமான கேள்வியை மாறாத பின்புலத்தில் வைத்து கேட்டுக்கொண்டே இருக்கிறார். அதில் அவருக்கு சங்கடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் படைப்பாளி எழுத்தின் வழியாகத்தான் தன்னை அறிய முயல்கிறான். எழுத்தென்பதே தனக்குள் உள்ள இருளை நோக்கி தானே மேற்கொள்ளும் சவாலான பயணம். ஒரு படைப்பு பிறரை காட்டிலும் அந்தப் படைப்பாளிக்கு முதலில் மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஐம்பது ஆண்டுகளாக முத்துசாமியிடம் மாற்றங்கள் நிகழாமல் இருளைப் பற்றிய கேள்விகள் மட்டுமே நிரம்பியுள்ளன. அவற்றின் பதில்கள் அனைத்தும் அச்சமும் பதற்றமும் ததும்பி வெளிப்படுகின்றன; அவை வாழ்வின் புதிய அர்த்தங்களை, வெளிச்சங்களை எங்குமே கொடுக்கவில்லை.

சீ.முத்துசாமி மலேசியாவுக்குக் கிடைத்த அற்புத படைப்பாளி. வாசகர்களின் புரிதலுக்காக மொழியைத் தட்டையாக்கி பலரும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தன்னாலான உட்சபட்ச சாத்தியங்களை மொழிவழி செய்துகாட்டியவர். அகவயம் சார்ந்த சிக்கலான பகுதிகளை மலேசிய இலக்கியத்துக்கு வழங்கிய முன்னோடி. என் வாசிப்பில் ‘மண்புழுக்கள்’ என்ற நாவலும் ‘இருளுள் அலையும் குரல்கள்’ என்ற குறுநாவலும் அவரது முக்கியமான பங்களிப்பு. தோட்டம் குறித்த வர்ணனையும் அதில் துடிக்கும் மனிதர்களும் கூடவே சாமிகளும், விலங்குகளும் போதுமான அளவு அவரால் பேசப்பட்டுவிட்டன. இனி அந்நினைவுளை விமர்சனங்களுடன் அணுகி புதிய தரிசனங்களைக் காண்பதுதான் அவர் தனக்கும் மலேசிய இலக்கியத்துக்கும் செய்யும் நன்மையாக இருக்கும்.

மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரை:

செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு

ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி

செம்மண்ணும் நீல மலர்களும்

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

இலட்சியப்பயணம்: சென்று சேராத முன்னோடி

ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் சயாம் மரண இரயில்

அ.ரெங்கசாமி நாவல்கள்

சை.பீர்முகம்மது நாவல்கள்

(Visited 467 times, 1 visits today)