அன்புள்ள அண்ணா,
ஒலிப்பேழை சிறுகதையிலுள்ள சிறப்பம்சமே அதில் ஒழிந்திருக்கும் மிஸ்ட்டிரி தன்மையும், கதையில் அலை போல படர்ந்து வரும் பெண்டசி தன்மையும் ஊடும் பாவும் எனக் கலந்து வருவது தான். தன் குரலாலும், திட்டமிட்டு செய்த ஒரு கொலையாலும் மலேசியாவின் பேசு பொருளான மோனா ஒரு சரடென்றால். இந்த அண்டிக் கடை மற்றொரு சரடு.
இந்த கடையிலுள்ள ஒவ்வொரு விவரணையுமே கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது. உதாரணத்திற்கு மீனாட்சி க்கீ என்றதும், சாம்பல் கிளி என்கிறார் இஸ்மாயில். மலாய் பாடல் ஒன்று வந்தவுடன் சலோமா என்கிறார். பியோனிஸ் மலர்களை ரோஜா என்பவனிடம் திருத்துகிறார். இப்படி அண்டிக் தன்மையின் ஒவ்வொரு மைக்கிரோ டிட்டைலிங் மூலமே கதை மேல் செல்கிறது.
மற்ற சரடில் இழைகிறது மோனாவின் குரலும், கொலையும். அவள் குரலிலுள்ள அண்டிக் தன்மையை அவர் மட்டுமே கண்டடைகிறார். அவள் வார்த்தையிலுள்ள ஒவ்வொரு சொற்களும் ஒரு ஹந்துஸ்தானி இசையை கோர்க்கிறார். அந்த கடிதத்தை அவருடன் கொண்டே அவளை முழுமையாக கண்டடைகிறார். இதனை பிரயத்தனத்திற்கு பின் தான் அவரால் அந்த குரலை பேழையில் முதலில் கேட்கும் போதே கண்டடைய முடிகிறது. அந்த குரலை அந்த சாம்பல் கிளியும் கண்டடைகிறது அதனை கேட்பதற்கும், அதிலுள்ள சுவாரஸ்யத்தை ரசிப்பதற்கும் அண்டிக் தன்மைக் கொண்ட ஒரு மனம் வேண்டும். கதை சொல்லியின் அப்பா மணிராமாக இருந்திருந்தால் அந்த குரலை முதல் முறையே கண்டடைந்திருக்க முடியும். இங்கே அவர் இடத்தை அவர் கிளி நிரப்புகிறது.
கலைக்கும், வியாபாரத்திற்கும் ஒரு மயிரளவே தூரம். அதுவே போதுமானது மனதை வெகுதூரம் கொண்டு செல்ல, கதை சொல்லி இடும் வியாபார கணக்கு போல. அனைத்தையும் சேர்த்து வைத்த மணிராமின் வாழ் நாள் சாதனை போல. இதில் யார் கால்கள் சிறு தாளமிட்டு, வலது கை காற்றில் அலையுமென்பது அவரவர் மனத்தின் விசையே. நல்ல கதை வாழ்த்துக்கள் அண்ணா.
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி. , பெங்களூரு
மோனா எஃபெண்டியை மறந்து இருந்த பலருக்கு உங்கள் கதை மூலமாக அவளுக்கு உயிர் கொடுத்து நினைவுப் படுத்தி இருக்கிறீர்கள். கதைக்கான தரவுகளுக்கு மெனக்கட்டு இருப்பது படிக்கும் போதே தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு அறிய தகவல்கள். குறிப்பாக புராதன பொருள்கள் பற்றியும் அதன் விலையை நிர்ணயிப்பது எது என்பதை பற்றியும் அதை சார்ந்த விடயங்களும் கதைக்கும் வலுச் சேர்க்கிறது.
மோனாவின் வழக்கு நடக்கும் போது நான் சிறுவனாக இருந்தாலும் சில விடயங்கள் பசுமையாக நினைவில் இருக்கிறது. நான் அப்போது தலைநகரில் இருந்த பகுதி மலாய்க்காரர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி என்பதால் பறப்பறப்புக்கு சொல்லவா வேண்டும்? சிலர் அவள் இறந்த பிறகு குரங்காக பிறவி எடுப்பாள் என்றெல்லாம் சொல்லி திரிந்தார்கள். இன்னொன்று அவளின் பயமுறுத்திய சிரித்த முகம் பலரது தூக்கத்தை தொலைத்து இருக்கும். கதையை சாதாரண உரையாடல்கள் வழியே கொண்டு போனாலும் படிக்கும் போது நமது மனநிலை ஆமனுஷ்யமான உணர்வுக்கு போவதை தவிர்க்க முடியவில்லை. காரணம் கதையில் அவளின் இருப்பு இல்லாமல் போனாலும் கதை நெடுக மோனா இருப்பதாகவே நமக்கு தொன்றுவதால் தான். தவிர இஸ்மாயில் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே ஒரு புதிராக இருப்பதும் ஒரு காரணம். கதையை சோர்வு இல்லாமல் தொடர்ந்து படிக்க உதவுகிறது. அவ்வப்போது சில உடல் மொழிகள் பற்றிய வர்ணனையும் சிறப்பு. அதை காட்சிகளாக மனதில் கற்பனை செய்ய முடிந்தது.
ஒரு வேலை இஸ்மாயில் பணத்துக்காக ஒலிப்பேழையை பற்றிய கட்டுக் கதைகளை சொல்கிறார் என்று தோன்றினாலும் கதையில் ஏற்படும் திருப்பம் எதிர்பாராத ஒன்று.
ஒரு நபர் சம்பந்தப்பட்ட பொருள் அது எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஒன்று. அவர்களின் நினைவுகள் அதில் இருப்பதாகவே நம்பப் படுகிறது.அதனால் தான் இறந்தவர்களின் அந்தரங்கமான சில பொருட்களை யாரும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இது நம்பிக்கை சார்ந்த ஒன்று.இஸ்மாயில் பத்திரப்படுத்தி வைத்த ஒலிப்பேழை அவருடன் ஒரு ஆமனுஷ்ய உறவை ஏற்படுத்திக் கொண்டது. அவரால் அதில் இருந்து மீள முடியவில்லை. புராதான பொருட்களை சேகரிப்பவர்கள் அல்லது அதை வாங்கி விற்பவர்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் நன்றாகவே தெரியும். சிலவற்றுக்கு மதிப்பீடு என்பதே இல்லை என்பதும் தெரியும். கதைச்சொல்லி யின் அப்பா அப்படி தான் கதையில் கூறப்படுகிறார்.மகனான கதைச்சொல்லி இதற்கு நேரெதிராக இருக்கிறார். கதை சாதாரணமாக தான் ஆரம்பம் ஆகிறது. கடந்தக் காலத்தில் பிரசித்தி பெற்ற நபரை அவர் சார்ந்த சம்பவங்களை வைத்து வேறொரு அத்தியாயத்தை ஒரு சுவாரஸ்யமான புனைவாக உருவாக்கியது மிகச் சிறப்பு.உங்கள் கதைகளில் முடிவு எப்போதும் புதிராகவே முடியும். ஆனால் முழு கதைக்கும் முத்தாய்ப்பாக அவை இருக்கும். இந்த கதையை சாதாரணமாக முடித்து இருக்கலாம். ஆனால் பிரமாண்டமாக நிறைவு செய்தது தான் பிரமாதம். இஸ்மாயில் கொஞ்ச நாட்கள் மனதில் வந்து வந்து பாடி விட்டு போவார் யாருக்கும் தெரியாத பாடலை.
மகேந்திரன், மலேசியா