ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 7

கொஞ்ச நேரத்தில் பாலமுருகனும் வெளியேறினார். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாமல் எங்கள் உரைகளை மட்டும் கேட்க வந்த ஏ.தேவராஜனை அப்போதுதான் பார்த்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எல்லாம் இலக்கிய கூட்டங்கள் சடங்குகளாகிவிட்ட அவலம் குறித்துதான். பாலமுருகனுக்குத் திடீர் என ஏதோ தோன்றியிருக்க வேண்டும். “ஆச்சரியமாக வல்லினம், பறை, மௌனம் ஆசிரியர்கள் மூவரும் இங்கு இருக்கிறோம். இது ஒரு இதழாசிரியர் சந்திப்பு” என்றுக்கூறி சிரித்தார். பாலமுருகனுக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.


மூவரும் திட்டமிட்டபடி கொண்டுவந்திருந்த புத்தகங்களை விற்பனைச் செய்யத் தொடங்கினோம். நான் வல்லினம் பதிப்புகளில் வெளிவந்த 3 புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தேன். பாலா அவரது கவிதை புத்தகத்தையும் சில பறை இதழ்களையும் கொண்டு வந்திருந்தார். இங்கும் கல்லூரி மாணவர்கள்தான் புத்தகங்களை வாங்கினர். ஒவ்வொன்றாகப் புரட்டி தேர்ந்தெடுத்து வாங்கும் லாவகம் அவர்களிடம் இருந்தது. அன்று இரவுக்குள் நான் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் பெரும்பாலும் விற்றிருந்தன. என் கவிதை புத்தகம்தான் முதலில் விற்று முடிந்திருந்தது. அன்று முழுவதும் பாலாவைக் கடுப்பேத்த இந்தச் சம்பவம் போதுமானதாக இருந்தது. என் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பற்றி பாலாவிடம் சொல்லிப் பெருமை பட்டுக்கொண்டிருந்தேன். பாலாவும் விடாமல் “நாளைக்குப் பாருங்கலா என் விற்பனை சாதனைய” என சமாளித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிரித்துக்கொண்டார். பாலமுருகனுக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.

சற்று நேரத்திற்கெல்லாம் பாலமுருகன் காணாமல் போயிருந்தார்.சிங்கையில்  கரிகாலச் சோழன் விருது கிடைத்ததற்காக சிறப்பு செய்யும் அங்கம் உள்ளே நடக்கிறதென கேள்விப்பட்டேன். என் புத்தகங்களோடு பாலாவின் புத்தகத்தையும் பாதுகாக்க வேண்டியிருந்ததால் உள்ளே செல்லவில்லை. அவ்வங்கத்தைப் பார்க்கவும் பெரிதாக விருப்பம் இல்லை. நிகழ்வுக்கு வந்ததிலிருந்தே பாலா அவ்வங்கத்தின் போது தயவு செய்து தனக்குப் பொன்னாடை போர்த்த வேண்டாமென ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்பாட்டாளர்கள் கேட்டதாய் இல்லை. “போத்துவோம்… போத்தியே தீருவோம்” என பிடிவாதம் பிடித்தனர். அவ்வாறு தடுப்பது தங்களை அவமானப்படுத்துவது போல என அன்பாகக் கோபித்துக்கொண்டனர். வேறு வழி இல்லாமல் பாலமுருகன் சம்மதித்திருந்தார். “என்னாலா புரிஞ்சிக்க மாட்டுறாங்க…” என ஒரு நிமிடம் வருந்தினார். பின்னர் , “பரவாயில்லை … அதை என் வீட்டு சன்னலுக்கு மாட்டிவிடலாம்” எனக்கூறி சிரித்தார். பாலமுருகனுக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.

சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் மூத்த எழுத்தாளர் மா.ராமையா அவர்களுக்கும் சிறப்பு செய்வதாகக் கேள்விப்பட்டேன். சிறப்பைப் பெற வேண்டிய மூத்த எழுத்தாளர்தான். அவர் எழுதிய ‘மலேசிய இலக்கிய வரலாறுதான்’ இன்று பலரும் மேற்கோளாகக் கொள்ள வசதியாக உள்ளது. ‘காதல்’ இதழுக்காக முன்பு அவரை விரிவான நேர்காணல் செய்திருந்தேன். எல்லா அதிகார மையங்களையும் அவர் சாடிய நேர்காணல் அது. மிகக் குறிப்பாக இதழ்களில் நடிகைகளின் படங்களைப் போட்டு விற்பனை செய்யும் இதழ்களை அவர் அப்பேட்டியில் கடுமையாகச் சாடினார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கடந்து அவர் சாடியதின் எல்லா தன்மைகளையும் கொண்ட ‘தென்றல்’ என்ற ஜனரஞ்சக இதழ் வழங்கிய விருதினையும் பெற்றுக்கொண்டார். போதாததற்கு ராஜேந்திரனை வைத்து புத்தகமும் வெளியிட்டு விட்டார். அதிகாரத்தின் சக்தியிடம் யார் யார் விழுகிறார்கள் என காலம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது.

அன்றிரவு நல்ல உணவு. நிறைய இளம் பெண்கள் இருந்தனர். இவ்வளவு இளம் பெண்களைப் ஒரே இடத்தில் பார்த்து சில வருடங்கள் ஆகின்றன. மனதுக்குத் தெம்பாக இருந்தது. சிவா அந்தப் பெண்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம், “இலக்கியக் கூட்டமுன்னா இப்படி இருக்கனும்.பாருங்க எவ்வளோ அழகான பெண்கள். நீங்களும் நடத்துறீங்களே…” என்று கடுப்பாகிக்கொண்டார். கடற்கரை ஓரம் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். நண்பர்கள் தொலைவில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.

தனிமை.

பயணம் தொடங்கிய நாளிலிருந்து அன்று இரவு கிடைத்த முதல் தனிமை. கடல்காற்றும் அதன் ஓசையும் வெண் மணலும் மனதை இலேசாக்கிக் கொண்டிருந்தது. கடல் ஆணவத்தை அழிக்கிறது. நான் , எனது என்ற எல்லா நம்பிக்கைகளையும் சீறி வரும் ஒவ்வொரு நொடியும் சீண்டிச் செல்கிறது. இயற்கையின் முன் நான் ஒன்றும் இல்லாமல் போகின்ற தருணம் மகத்தானது. அது தனிமையில் மட்டும் சாத்தியம். தனிமையில் மட்டும்தான் நம்மால் உள் நோக்கி பயணிக்க முடிகிறது. மணலில் ஓரத்தில் சிவப்பு வண்ண கொடி ஊன்றப்பட்டு அபாயக்குறியைக் காட்டியது.

2004 ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் பலரும் கடலை வெறுக்கத் தொடங்கியிருந்தனர். கடலைக் கண்டு பயப்படவும் செய்தனர். பின்னர் மனிதர்களே அதை மறந்துவிட்டு  கடலுடன் சகஜமாகிவிட்டிருந்தனர். மனிதன் வெறுத்ததும் விரும்புவதும் கடலுக்குத் தெரியப்போவதே இல்லை. கடல் கடலாக இருக்கிறது.

கொஞ்ச நேரத்தில் பாலாவும் சிவாவும் வந்தனர். பாலா தான் பார்த்த பிணம் பற்றி மீண்டும் கூற ஆரம்பித்தார். அபாயக் கொடியை ஒருதரம் காட்டினார். கடல் சீற்றத்தை இரசித்தார். கொஞ்ச நேரம் அமர்ந்து பெண்களின் மன நிலை எவ்வாறு ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாறாகச் செயல்படுகிறது எனப் பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே சீறும் கடலைப் பார்த்துக்கொண்டோம். அது அச்சத்தைத் தருவதாக இருந்தது. பாலா சிரித்தார். அவருக்கு எல்லா சூழலிலும் சிரிக்கும் வரம் கிடைத்திருக்கிறது.

… தொடரும்

(Visited 134 times, 1 visits today)

18 thoughts on “ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 7

  1. நவீன், முடிந்தால் அந்தச் சிறப்பு செய்தலையே நான் மறுத்திருக்க வேண்டும். மேடையிலேயே அந்தப் பொன்னாடை போர்த்தப்பட்ட மறுகணம் அதைக் கழற்றி நாற்காலியில் எறிந்தேன். இனி இம்மாதிரியான ஏற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வழங்க வேண்டும். கடைசிவரை மீண்டும் போராடி, நாம் அனைவரும் உரையாற்றியபோது, நமக்கு வெறும் நினைவுச்சின்னம் வழங்கும்படியான சூழலை ஏற்படுத்தியதில் கொஞ்சம் மகிழ்ச்சி. மேடையிலேயே மாநாட்டு தலைவரிடம் சொல்லியிருந்தேன். எங்களுக்கு இதில் உடன்பாடில்லை என. அவரும் அதை ஏற்றுக்கொண்டு நமக்கு பரிசை மட்டும் கொடுக்கும்படி செய்திருந்தார். எப்படியோ உங்கள் கழுத்தில் பொன்னாடை விழாதபடிக்கு நான் காப்பாற்றிவிட்டேனே. ஆஆஆஆ

  2. ‘அவன்’ கொடுத்தால் அனுமதி.
    ‘நான்’ எடுத்தால் அனுபூதி.

  3. சிறப்பு செய்யும் மாநாட்டின் நோக்கம் நல்லதாகவே இருக்கட்டும். அதில் எனக்கு எந்த முரணும் இல்லை. ஆனால் படைப்பாளனுக்கு நெருக்கமான தொடர்புடைய புத்தகப் பரிசை அவனுக்கு வழங்கினால் அது ஒரு நல்ல கௌரவிப்பாகவே கருதுகிறேன். கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் இம்மாதிரியான புத்தகப் பரிசுகளை வழங்கும் போக்கை சீ.முத்துசாமி தலைவராக இருந்த காலத்திலேயே செய்யத் துவங்கியது. மாற்றங்கள் தேவை. பொன்னாடைகளைப் போர்த்தும் வழக்கம் மாறுப்பட வேண்டும். குறைந்தபட்சம் படைப்பாளனுக்கு இதைச் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  4. //முடிந்தால் அந்தச் சிறப்பு செய்தலையே நான் மறுத்திருக்க வேண்டும்//
    பாலா அண்ணா, இதற்கு முன் பொன்னாடை போர்த்தப்பட்ட போதெல்லாம், இப்படி நினைத்து, அடுத்த நிகழ்ச்சிக்கு முன், அதை அப்படியே மறந்தவர்தானே அண்ணா நீங்கள். விடுங்க அண்ணா! இப்போது நினைப்பதை அடுத்த மேடைக்கு முன் அப்படியே மறந்து விடலாம். அடுத்த நிகழ்ச்சியிலும் பொன்னாடையை வாங்கிக் கொண்டு, மறுபடியும் – முடிந்தால் அந்தச் சிறப்பு செய்தலையே நான் மறுத்திருக்க வேண்டும் – என்று சொல்லிக் கொள்ளலாம். அதுதான் நமக்குக் கை வந்த கலை ஆயிற்றே!ஆஆஆஆ

    கில்லாடி அண்ணா நீங்கள். ‘பொன்னாடை போர்த்திக் கொள்ளும் பன்னாடை’களைப் பற்றி விமர்சிக்கும் நவீன் அண்ணாவோடு நிகழ்ச்சிக்குப் போய் விட்டு, பொன்னாடை வாங்கி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குளிர வைத்து விட்டு, //பாலாவிற்கு எல்லாச் சூழலிலும் சிரிக்கும் வரம் வாய்த்திருக்கிறது // என்று நவீன் அண்ணாவிடம் பாராட்டையும் வாங்கிக் கொள்ளும் உங்களை, கில்லாடி என்று சொல்லா விட்டால் வேறு யாரை, கில்லாடி என்று சொல்வது!கலக்குறீங்க பாலா அண்ணா. உங்கள் பாணியில் சொல்வதென்றால்,ஆஆஆஆ

  5. ஆஆஆஆ. பிளோமினா தங்களின் தீர்க்கத்தரிசனமான பார்வையைக் கண்டு மிரள்கிறேன். நான் இதற்கு முன்பு எந்த மேடையில் அல்லது எந்தக் கட்டுரையில் நான் இனி பொன்னாடையே பெற்றுக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லியிருந்தேன் என்பதை அறிவிக்கப்பட்ட திகதி, நேரம் உட்பட தக்கச் சான்றுகளுடன் சொல்லவும். அப்படிச் சொன்னீர்கள் என்றால் ரொம்பவும் கடமைப்படுகிறேன்.

    நவீன் தன் தொடரிலேயே தெளிவாகச் சொல்லியிருந்தாரே, இந்தப் பொன்னாடை போர்த்தும் வழக்கத்தைத் தன் மீது நடத்த வேண்டாம் என நான் ஏற்பாட்டாளர்களிடம் பலமுறை கூறியதைப் பற்றி. அப்படியும் சந்தேகமென்றால், பின்வரும் நபர்களை நீங்கள் தாராளமாகக் கேட்கலாம்.
    1. மின்னுலகில் படைப்பிலக்கியம் களத்தில் எங்களுக்குப் பேச வாய்ப்புக் கொடுத்த திரு.வாசுதேவன்
    2. மாநாட்டு ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.வேணுகோபால்,
    3. எழுத்தாளரும் தமிழர் சங்க செயலவை உறுப்பினருமான சீ.வடிவேலு
    மேற்கண்டவர்களிடம் வெவ்வேறு தருணத்தில் என் கருத்தைத் தைரியமாகத் தெரிவித்திருந்தேன். குறிப்பாக விருது கிடைத்தமைக்காக எனக்குச் சிறப்பு செய்யும் நிகழ்வில் அந்த மேடையிலேயே தலைவரிடம் தெரிவித்திருந்தேன். இதையெல்லாம் மீறி பொன்னாடை போர்த்தி சிறப்பிப்பதில் அவர்களுக்கிருக்கும் மரபார்ந்த பழக்கத்திற்கு யார் பொறுப்பாக முடியும்?

    பொன்னாடை போர்த்துவது குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அதே சமயம் அது வழங்கப்படும் மேடையில் அதைத் தூக்கி எறிந்தோ அல்லது வாங்க மறுத்து அடாவடித்தனம் செய்தோ அவர்களை அசிங்கப்படுத்தும் மனநிலை எனக்கில்லை. மொண்னையான கருத்துகள் சொல்லி, வெறும் அலங்காரப் பேச்சுகளுக்காகப் பொன்னாடைகள் வாங்கிச் செல்பவர்கள் மத்தியில் என் உழைப்பின் சாரமான என் நாவலுக்குக் கிடைத்த சாதனைக்காகத் தரப்பட்ட பொன்னாடையை வேறு மனமில்லாமல் பெற்றுக்கொண்டதில் எனக்கு வருத்தம் இருப்பினும் மரியாதை நிமித்தமே இதை விமர்சனமாக முன் வைத்தேன்.

    மற்றுமொன்று நீங்கள் கவனிக்கத் தவறியிருப்பீர்கள். மலேசியா சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டில் உரையாற்றியவர்கள் பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் மின்னுலகில் படைப்பிலக்கியம் எனும் அரங்கில் பேசிய எங்களுக்கு வெறும் நினைவுச் சின்னமே வழங்கப்பட்டது. இதற்குக் காரணம் என்ன? அதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்ட எதிர்வினையின் அடைவு. இது எதிர்காலத்திலும் தொடரும்.

  6. பிளோமினா: எனது வங்கிக் கணக்கு எண் தருகிறேன். முடிந்தால் ஒரு பத்தாயிரம் போடவும். பொன்னாடைகளும் பன்னாடைகளும் இல்லாத சமரசமற்ற ஒரு நிகழ்வை நடத்திக் காட்டுகிறோம். அதற்கான அத்தனை தயார்நிலையும் மனநிலையும் உண்டு.

    அன்னை திரேசாவிற்கும் தான் 44 முறைக்கு மேல் பொன்னாடை போர்த்தப்பட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் பொன்னாடை போர்த்தப்படுகிறது. இதில் பொன்னாடை போர்த்தப்படுவது பிரச்சனையா அல்லது போர்த்தப்படும் நபர்களா? அந்தக் காலம் தொட்டே சாதனையாளர்களுக்கும் சேவையாளர்களுக்கும் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்படும் சடங்கு நடந்து வந்திருக்கின்றன. இது மிகவும் நியாயமான அணுகுமுறையே. ஆனால் எப்பொழுது பொன்னாடை குறித்து எதிர்வினைகளும் கருத்துகளும் வரத் தொடங்குகின்றன என்றால், நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் முதல் அரசியல்வாதிகள்வரை எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் பொன்னாடைகள் போர்த்தப்படும் மரபு அதீதமாக வளர்ந்தபோதுதான். இன்று பொன்னாடைகளுக்கு எதிராகக் கருத்துரைத்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் சூழ்நிலை காரணமாக அதை வாங்கியிருக்கிறார்கள்.

    முதலில் எழுத்தாளனுக்கு இது போன்ற சடங்கை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே என் கருத்து. அவனைக் கௌரவிக்க வேண்டுமென்றால் ஒரு புத்தகப் பரிசைத் தரலாம் என்பதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். நிகழ்வை ஏற்பாடு செய்வது அவர்களுடைய பங்காக இருப்பதால் அதை எப்படி நடத்த வேண்டும் என்பதன் மீது விமர்சனத்தை வைக்கும் அளவிற்கே முடிகிறது. அதையும் மீறி மேடை சடங்குகளைச் செய்துகொள்ளும் அவர்களைத் தடுக்கவா முடியும்.

    சமீபத்தில் கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் எனக்கு விருது கிடைத்ததன் தொடர்பாகச் சிறப்பு செய்யப்போவதாகத் தெரிவித்தார்கள். பொன்னாடை மாலை ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்கிறேன் எனத் தெரிவித்தேன். அவர்களும் என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு புத்தகப் பரிசைத் தருவதாகவும் என் நாவல் எழுதிய அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளுமாறும் தெரிவித்தார்கள். ஒரு எதிர்வினை ஆரோக்கியமான ஒரு கட்டத்திற்கு எழுத்தாளனை நகர்த்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. நம்பிக்கை இல்லையென்றால் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் திருமதி.க.பாக்கியம் அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    அதை விட்டுவிட்டு பிளோமினா, நான் என்ன நினைப்பேன் நான் என்ன செய்வேன் என்றெல்லாம் தீர்க்கத்தரிசனப் பைத்தியம் பிடித்து அலைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

  7. ஃபிலோமினா, முதலில் உங்கள் கருத்தை இங்கு அனுமதிக்க மிக முக்கிய காரணம் இது குறித்த ஒரு பேச்சு இடம்பெற வேண்டும் என்பதால்தான். உங்கள் நான்கைந்து வரியில் இடம்பெற்றுள்ள கிண்டல்கள் எனக்கு நன்கு அறிமுகமான ஒரு கிண்டல் மன்னனை நினைவுறுத்துகின்றன. இருக்கட்டும். ஏதோ உங்களால் முடிந்தது. அறிவுலகத்தில் மேடை சடங்குகள் தேவையில்லை என்ற கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு. இது ஒருவகையில் எழுத்தாளன் மேல் திணிக்கப்படும் வன்முறையும் கூட. வேறு வழியே இல்லாமல் மேடையில் தனக்கு நிகழ்வதை பல எழுத்தாளர்கள் அனுமதிக்கின்றனர். சண்முகசிவா போன்றவர்கள் பல மேடைகளில் இதற்கு மாற்றான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இருந்தும் கேட்க யாரும் தயார் இல்லை. இதில் மாநாடு போன்றவை நடத்தப்படும் நோக்கம் அறிவுப்பகிர்வுக்கானதாக இல்லாத பட்சத்தில் முழுதுமாக எதையும் தடுக்க முடிவதில்லை. ஒன்று செய்யலாம். இவ்வாறு சடங்குகள் இல்லாத நிகழ்வுகளை நாம் உருவாக்கலாம். அல்லது இது குறித்த தொடர்ச்சியான உரையாடல் வழி பலருக்கும் இது குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தலாம்.

  8. பாலா அண்ணா, மொத்தத்தில் சொல்வதென்றால், என் விமர்சனம், தொடர்ந்து பொன்னாடை போர்த்துவதைப் பற்றி நாமே விமர்சித்துக் கொண்டாலும், ஏதாவது சாக்குபோக்குகள் சொல்லி இந்தச் சடங்குகளை ஏற்றுக் கொள்ளும் பலவீனமான நமது மனப்போக்கு பற்றியது. ஒரு நல்ல நிகழ்வைச் செய்ய பத்தாயிரம் செலவாகும் என்ற உங்கள் புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது அண்ணா.

    நீங்கள் என்னை ‘பைத்தியம்’ என்று விமர்சன எல்லைகளை மீறி விமர்சித்தாலும் கலலையில்லை. இந்தக் கருத்துப் பறிமாற்றங்களின் வழி, இனிவரும் நிகழ்ச்சிகளில் நீங்கள் பொன்னாடைகளை சாக்குபோக்குகள் இன்றி தவிர்க்கும் ஒரு உதாரண புருஷராக இருக்கக் கூடுமெனத் தோன்றுவதால், (நீங்கள் அளித்திருக்கும் விளக்கங்களின் பேரில்),அதற்கான பாராட்டுகளையும், வணக்கங்களையும் இப்போதே சொல்லி விடுகிறேன் பாலா அண்ணா.

    பொன்னாடையை வாங்கிக் கொண்டு, ‘அதை அடுத்த விநாடியே கழற்றி வீசி விட்டேனாக்கும்’ என்று பின்னால் எழுதுவதுதான் ஏற்பாட்டாளர்களை மிகவும் அவமதிக்கும் செயல் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார். அது திடீரென்று ஞாபகம் வந்து விட்டது. அதனால்தான் அந்த விமர்சனம்.

    பொன்னாடை தவிர்ப்பது உங்களால் முடிகிற காரியம்தான் பாலா அண்ணா. பொன்னாடையை கழற்றி விட்டுப் பாருங்கள்.அதன் கணத்தில் கூன் வளைந்த முதுகு நேராக நிமிர்ந்து விடும்! கெடா மாநில எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி குறித்து வாழ்த்துகள் பாலா அண்ணா!

  9. நவீன் அண்ணா,
    நான் யார் என்பதை தீர்மானிப்பதில் நேரத்தைச் செலவிடாமல் ஒரு கருத்துப் பறிமாற்றத்திற்கு வழி வகுத்ததற்கு நன்றி. என் கவலை என்னவென்றால், நாம் ஒரு சமூகத்தைத் சீரமைக்க வேண்டும் அல்லது அதன் அதிகாரக் கட்டமைப்பை விமர்சிக்க வேண்டும் என்று தவிக்கிறோம். ஆனால், நமது கோட்பாடுகள் சார்ந்து இயங்கக் கூடிய நம்மைச் சுற்றியுள்ளவர்களையே நம்மால் சீரமைக்க முடியாமல் போகும் பட்சத்தில், நமது கோட்பாடுகளும், கொள்கைகளும் எவரால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதுதான்.அப்படி ஆகும்போது, ‘தமிழ் வாழ்க’ என்று சொல்லிக்கொண்டு தனது பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பும் ஒரு திராவிடத் தலைவரிலிருந்து நாம் எப்படி மாறுபட்டுவிட முடியும்.

    நவீன் அண்ணா, பொன்னாடை போன்ற, இவ்வாறான சடங்குகள் இல்லாத நிகழ்வுகளை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஒருவேளை நீங்கள் ஜோகூர் மாநாட்டில் இன்னும் கூடுதலாக பலரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்குமெனில், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைமுறை சாத்தியமே என்பதற்கான உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு வந்திருக்கக் கூடும்.

    நிகழ்ச்சிகளை நடத்தும் விதங்களில் இருந்தான மாற்றம், ஒரு விரல் சொடுக்கில் நிகழ்ந்துவிடக்கூடிய மாயாஜாலமல்ல. ஆனால் இதுபோன்ற துணிச்சலான உரையாடல்களும், விவாதங்களும், நிகழ்ச்சிகளை நடத்துபவர்களின், பங்கேற்பவர்களின் மனப்போக்கில் போதிய மாற்றங்களைக் கொண்டு வரும் சாத்தியங்கள் மிகவும் அதிகம். எவ்வளவு தூரமான பயணத்திற்கான துவக்கமும், பெரியவர்கள் சொல்வது மாதிரி, ஒரு சிறிய அடியாகத்தானே இருக்கிறது!

  10. பிளோமினா, கிண்டல்களைக் கிண்டல் வழி எதிர்க்கொள்ள வேண்டும் எனத்தான் என் தாத்தாவும் சொல்லியிருக்கிறார். பல விசயங்களை நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். உங்களைப் போன்றுதான் எனக்கும் மேடை சடங்குகள் குறித்து எதிர்வினை உண்டு. மாநாட்டில் பொன்னாடை போர்த்தப்பட்டுவிட்டதால் எதற்கும் அடிமையாகாமல் மேடை சடங்குகள் அளிக்கும் பின்னடைவுகள் பற்றித்தான் எல்லார் முன்னிலையிலும் பேசினேன். அதைக் கவனிக்க யார் முன்வருவார்?

    மேடையில் பொன்னாடை போர்த்தப்படும்போது அதை அங்கேயே தடுத்திருந்தால்தான் ஏற்பாட்டு குழுவிற்கு நான் செய்யும் ஆக உச்சமான அவமானம் என்பதை நீங்கள் உணரவில்லையா? மிகவும் நாகரிகமாக மூன்று முறை பொன்னாடை சிறப்பு செய்யும் அங்கம் குறித்து நான் தெரிவித்த கருத்திற்கு அவர்கள் மதிப்பளிக்காதபோது, நிகழ்வின் கடைசி நிமிடம்வரை அதிகாரப்பூர்வமாக இதைப் பற்றி அறிவிக்காத ஏற்பாட்டுக் குழுவிடம் நான் காட்டும் மெல்லிய எதிர்ப்புதான் பொன்னாடையை நாற்காலியில் எறிந்தது. மற்றப்படி அவர்களின் கௌரவிப்பை நான் மரியாதை நிமித்தம் ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் இந்த நிகழ்விற்கு வந்து நாற்காலியைச் சூடாக்கியதற்காகத் தரப்பட்ட கௌரவம் அல்ல, 24 ஆவது வயதில் நான் எழுதிய முதல் நாவல் அடைந்த வெற்றிக்கு அவர்கள் கொடுக்கும் பாராட்டு.

    தொடர்ந்து நாம் மேலும் விவாதிக்க வேண்டியது, படைப்பாளனுக்குப் பொன்னாடை அவசியமா என்பதைத்தான் தவிர பொன்னாடை அவசியமா என்பதைப் பற்றி அல்ல. ஒரு சில துறையைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு பொன்னாடையும் கௌரவிப்பும் மிக அவசியமானது.

    குறிப்பு: பத்தாயிரம் கேட்ட காரணம், இன்னமும் புத்தகம் போட வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உதவி செய்து அதிகாரத்திடம் அவர்கள் சரண்டையாமல் இருக்க தடுக்கவும், மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தொகுப்பாகக் கொண்டு வந்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும்தான். ஆக உங்கள் பெயரைச் சொல்லி “நாலு” நல்ல விசயங்கள் பண்ணலாம் எனத்தான்.

  11. நவீன்: இந்த பிளோமினா யார் என ஓரளவிற்குக் கண்டுப்பிடித்தாகிவிட்டது. அதையும் நான் செய்யவில்லை. கணினியில் மிகுந்த நிபுணத்துவமுடைய நண்பர் இந்த ஐ.பி பதிவின் மூலம் பிளோமினாமிடமிருந்து வரும் மின்னஞ்சல் சிங்கையிலிருந்து வருவதாகத் தெரிந்தது. இன்னும் ஐ.பியின் மூலம் விரிவாக எந்தப் பகுதி, இடத்திலிருந்து இந்த மின்னஞ்சல் வருகிறது எனவும் கண்டறிய முடியும். ஆக இது நமக்கு ஒரு பொருட்டல்ல. அவர் முன்வைத்திருக்கும் விவாதம்தான் இப்பொழுது முக்கியம். அதுவும் சிங்கப்பூரிலிருந்து மலேசிய இலக்கியவாதிகள் மீது அவர் காட்டும் அக்கறை மிக முக்கியமானது. நம் முதுகு வளையாமலிருக்க அவர் வளையும் வளைவு மெய்சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு இந்தவேளையில் நன்றியதைத் தெரிவித்துக் கொண்டு நாம் இந்த உரையாடலை முன்னெடுப்போம். மிக முக்கியமான நேரத்தில் துவக்கப்பட்டிருக்கும் விவாதம்/உரையாடல் இது.

  12. அவர் அக்கறையை நானும் மதிக்கிறேன் பாலா. ஆனால் இதே அக்கறையோடு சிங்கையில் இலக்கியம் வளர்க்கிறேன் என்று கூறி சில பணக்காரர்களின் வால் பிடித்து சுற்றும் ஜென்பங்களிடமும், அனுமதியில்லாமல் விளம்பரத்தைப் பிரசுரித்து பணம் பிடுங்கும் சுரண்டல்வாதிகளிடமும் காட்டினால் அங்கும் கொஞ்சம் நேராகும் இல்லையா… முதுங்கெலும்பு!

  13. ஆமாம். சமீபத்தில் இப்படியொரு உத்தி அங்குக் கையாளப்படுவதை அறிந்தேன். இலக்கியத்தை முன்னெடுக்கிறோம் என்கிற தொனிக்குப் பின்னணியில் அதிகாரத்தின் கால்களில் விழுந்துகிடக்கும் இது போன்ற செயல்களை, பிளோமினா கண்டறிந்து சிங்கையில் நடப்பதைத் தோலுரித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  14. பாலா அண்ணா, நவீன் அண்ணா,

    உங்கள் அக்கறை ஒரு முறையான, ஆக்கப்பூர்வமான விவாதத்தின் மேல் இருக்கும் என்று எதிர்பார்த்தது என்னுடைய தவறோ. ஐ.பி அட்ரஸ் அது, இது என்று பேசும் பாலா அண்ணா.. அதை கண்டு பிடிப்பது அப்படியொன்றும் சிரமம் இல்லை என்பதைத் தெரியாத சின்னப் பையன்கள் யாரும் இங்கில்லை அண்ணா. நான் முன் வைத்திருக்கும் விவாதம்தான் என்று ஒப்புக் கொண்டிருக்கும் மட்டில் மகிழ்ச்சி.

    பாலா அண்ணா, நீங்கள் பிறப்பதற்கு முன்னும் மலேசிய இலக்கியம் இருந்தது. நீங்கள் போன பின்னும் அது இருக்கும். இது புரியாமல் சதிராட்டம் ஆடி அடங்கிய எத்தனையோ பேரை மலேசிய இலக்கியம் இதுவரை பார்க்கிறது. இனியும் பார்க்கும். நீங்களெல்லாம் சிங்கப்பூர் போன்ற பக்கத்து நாடுகளின் இலக்கியத்தைத் தோளில் தூக்கிச் சுமக்கத் தவியாய் தவிக்கையில், கனடா அல்லது ஆஸ்திரேலியாவில் இருக்கும் இன்னொரு தமிழன் மலேசிய இலக்கியத்தைத் தனது தோள்களில் தூக்கிச் சுமக்க முற்பட்டால், அது தவறாகி விடுமா என்ன.

    யார் யார் மீது என்ன வகையான அக்கறையைக் காட்டினார்கள் என்பதைக் காலம் பதிவு செய்யும். செய்திருக்கிறது. அக்கறை இருப்பவர்கள் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

  15. நவீன் அண்ணா,

    நீங்கள் பொன்னாடை பற்றிய விவாதத்தை மேலும் முன்னெடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தால்…வேறு எதற்கோ காத்திருந்தது போல், எங்கோ பாய்ந்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான நீங்களோ. சமூக அக்கறை, இலக்கிய அக்கறை, இலக்கிய சட்டாம்பிள்ளைத் தனம் என்று நீங்கள் அடுத்தவரிடம் ஏற்படுத்தத் தவிக்கும் பிம்பம் எல்லாம் அவ்வப்போது நீங்கள் கழற்றி மாட்டிக் கொள்ளும் அந்தந்த நேர சட்டைகள்தானோ.

    //சில பணக்காரர்களின் வால் பிடித்து சுற்றும் ஜென்பங்களிடமும், அனுமதியில்லாமல் விளம்பரத்தைப் பிரசுரித்து பணம் பிடுங்கும் சுரண்டல்வாதிகளிடமும்// என்று சொல்லும் நவீன் அண்ணா, நீங்கள் அதை ஆதரப்பூர்வமாக, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோடு வெளியிடத் தயாரா. அப்படி நீங்கள் வெளியிட்டால் சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி அதையும் கொஞ்சம் விசாரிச்சுப் பார்ப்போமே. அந்த முதுகெலும்பு உங்களுக்கு இருக்கிறதா. எங்கே காட்டுங்கள் … நாங்களும் பார்க்கிறோம் உங்கள் முதுகெலும்பை!

  16. பிலோமினா என்ற பெயரில் இருக்கும் கோழையான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. முதலில் மலேசிய இலக்கியம் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை. இங்கு ஏற்கனவே ஒருவன் வேறொரு பெயரில் இலக்கியம் வளர்க்கிறேன் என்று ‘அப்பாவியாய்’ தோட்டம் தோட்டமாகச் சென்று அங்குள்ள பெண்களிடம் வாலாட்டி வாங்கி கட்டிக்கொண்ட கதையெல்லாம் உண்டு. பிழைப்பு நடத்த இலக்கியம் , தமிழ் எனக்கு பிதற்றிக்கொண்டிருக்கும் உங்களிடம் பேச என்னிடம் ஒன்றும் இல்லை. பணம் சம்பாதிக்க நீங்கள் சிங்கையில் நடத்தும் இலக்கிய நாடகம் அறிவேன்.உங்கள் மொழி மூலம் என்னால் உங்களை அறிய முடிகின்றது. இவ்வளவு கேவலமான குரல் அங்கு ஒருவனுக்குதான் உண்டு. சுய பெயரைக்கூட சொல்லவிரும்பாத உங்கள் போன்ற கோழையின் பின்னூட்டத்தைப் போட்டதே உங்களுக்கு கௌரவம்தான். அப்படி இருக்கும் போது நீங்கள் கேட்கும் கேள்விக்கு வேறு பதில் சொல்லவேண்டுமா என்ன? நீங்கள் சொல்வது போல ‘நான்’ என்பது பொய்யான தோற்றமாகவே இருக்கட்டும். இப்போது அதனால் என்ன வந்தது? முடிந்தால் அதையே பிரச்சாரம் செய்யுங்கள். பின்னூட்டம் எழுதாதீர்கள். என் வலைப்பக்கத்தையும் படிக்காதீர்கள். நீங்கள் சொன்னது போல என் போலி முகத்தை மற்றவர்களுக்கும் அடையாளம் காட்ட உதவுங்கள். ஒன்றும் முடியவில்லையா? உங்கள் பொய் பேச்சுக்கு ஏமாறும் எவனாவது சிக்குவான் அவனிடம் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு செய்ய அதிக வேலை உண்டு.

  17. நவீன்: பிளோமினா எத்துனை அழகான பெயர். அவர் பேச்சும் எத்துனை அழகு வாய்ந்ததாக இருக்கிறது. பிளோமினா (அக்கா/தங்கை) நீங்கள் மலேசியா வந்தால் கட்டாயம் எங்களைச் சந்தியுங்கள். யாரெல்லாம் சிங்கப்பூரில் இலக்கியம் என்கிற பெயரில் தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்கிற உண்மையைச் சொல்கிறோம். கடந்த 4 வருடமாக சிங்கப்பூர் இலக்கிய நண்பர்களுடனும் நட்பு இருப்பதாலும் அங்குள்ள இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட அனுபவம் இருப்பதாலும் நீங்கள் என்னுடன் பேசலாம்.

    உங்களுக்கு மலேசிய இலக்கியத்தின் மீது அக்கறை இருப்பதைத்தானே சொன்னோம், அதற்கு ஏன் கனடா அது இது என பதற்றமடைகிறீர்கள்? ஆகையால் அங்கு இலக்கியத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு பணக்கார முதலைகளின் விளம்பரங்களை போட்டு வாங்கும் வியாபார உத்தியைச் செய்து கொண்டிருக்கும் முதல்தர அயோக்கியத்தனத்தைச் செய்பவர்களைக் கண்டறியுங்கள் நண்பரே. உங்களுக்குத்தான் ஐ.பி முதல் கொண்டு எல்லாமும் தெரியுமாயிற்றே, நீங்கள் பெரிய பிள்ளை வேறு. ம்ம்ம்ம்ம், ஆகட்டும்.

Leave a Reply to M Navin from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *