அப்படி இப்படி என்று நிகழ்ச்சி தொடங்க 5.30 க்கு மேல் ஆகிவிட்டது. மண்டபத்தின் இறுதி இருக்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதில் கதைப்பதற்கும் மடிக்கணனிக்கு மின்சாரத் தொடர்பு கொடுப்பதற்கும் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சிவா, யுவராஜனை அழைத்துக்கொண்டு வந்தார். மூவரும் கணினியில் ஆழ்ந்தனர். நான் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் நிரம்பியிருந்தனர். எனக்கு என் கல்லூரி காலங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
கல்லூரி படிக்கும் போது பெரும்பாலும் தனியனாகவே இருந்தேன். வருங்கால ஆசிரியர்கள் எவ்வித அறிவு பகிர்தலுக்கான உரையாடலும் இன்றி இடுபணி காலங்களிலும் சோதனைக்காலங்களில் மட்டும் புத்தகங்களைச் சுமப்பதும் வேதனையாக இருக்கும். அதோடு அவர்கள் சமூக அக்கறை ‘மெய்சிலிர்க்க’ வைக்கும் . கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் ஏதாவது ஒரு தலைப்பை ஒட்டி நடக்கும் விவாதங்களில் அப்போதைய நடப்பு தொடர்பாக சக பயிற்சி ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்துகள் கண்டு வருங்கால மாணவர்களை எண்ணி வருந்துவேன். கருத்தில் சரி – தவறுகள் இருக்கலாம். ஆனால் கருத்துகளே இல்லாத ஒரு சமூகத்தை அங்குதான் பார்த்தேன். ஆனால் இவர்கள் தங்கள் நேரங்களை விழாக்கள் கொண்டாடுவதற்கும் அதில் ஏதாவது சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவதற்கும் செலவழிக்கத் தயாராக இருந்தனர்.
இப்போது ஓரிருவரைத் தவிர மற்றவர்களின் தொடர்பு முற்றாக இல்லை. யோசிக்கையில் கல்லூரி காலத்தில் நான் கடுப்பானவனாக இருந்தது கொஞ்சம் சரியாகவும் கொஞ்சம் தவறாகவும் தோன்றுகிறது. அப்போதைய மனநிலை மனிதர்களை நேசிப்பதற்கானதாக இல்லை. அறிவியல் மற்றும் கணிதம் ஆங்கில மொழியில் போதிப்பதற்கான சட்டம் அப்போதுதான் இயற்றப்பட்டிருந்தது. அதன் மூலம் தமிழ் மாணவர்கள் இழக்கப்போகும் கலைச்சொற்களை என்னால் நன்கு உணர முடிந்திருந்தது. அதே போல தமிழர்கள் சிறையில் சாகும் அவலமும் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருந்தது. இந்த உண்மைகளையெல்லாம் எடுத்தியம்பிக்கொண்டிருந்த ‘செம்பருத்தி’ மாத இதழுக்கு கல்லூரிகளில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் விழிப்புணர்வு அடைய ஒரே வாய்ப்பாக இருந்த ‘செம்பருத்தி’ நின்று விட்டதில் கவலையாக இருந்தது. அடுத்த மாதம் முதல் நானே ஒவ்வொரு மாதமும் செம்பருத்தி அலுவலகம் சென்று 50 பிரதிகளைக் கட்டிக்கொண்டு கல்லூரியில் மாணவர்களிடம் எவ்வித லாபமும் இல்லாமல் 1 ரிங்கிட்டுக்கே விற்கத்தொடங்கினேன். பலருக்கு வாங்குவதில் விருப்பம் இல்லை. ஒரு ரிங்கிட் அதிகம் என்றனர். ஓரிருவர் தடை செய்யப்பட்ட இதழை விற்பதாகப் பெட்டிஷன் போட்டிருந்தனர். விளைவாக கல்லூரி மாணவர் நல பொறுப்பாளரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அரசாங்கத்திடமிருந்து வந்திருந்த கடிதத்தை நீட்டி “இவ்விதழை விற்கக்கூடாது என கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. நீ எப்படி விற்கலாம் ?” எனக்கேட்டார். அவர் முகத்தில் கோபம் இருந்தது. நான் மிக பணிவாகக் கூறினேன்…”நான் விற்கவில்லை, அவர்கள்தான் என்னிடமிருந்து வாங்குகிறார்கள்”. அவர் முகத்தில் சிறு மாற்றம் தெரிந்தது. ‘இறுதி எச்சரிக்கை’ என கூறி அனுப்பிவிட்டார்.
இந்தச் சம்பவம் எனக்கு அதிகக் கோபத்தைக் கொடுத்தாலும் இதழின் பலம் என்ன என்று ஓரளவு எனக்கு உணர்த்தியது. அதை தொடர்ந்து தமிழ் மொழிக்கழக சீனியர்கள் உயிரில்லாமல் கல்லூரிக்குள் நடத்திக்கொண்டிருந்த ‘தேன் தமிழ்’ இதழை நான் அனுமதி பெற்று நடத்தத் தொடங்கினேன். அதற்கு முன் 50 சென்னுக்கு விற்றும் மிஞ்சி இருந்த இதழ்கள், 1.00 ரிங்கிட் விலை போட்டும் விற்று தீர்ந்தன. குப்பையை மென்று … புழுதியில் புரண்டு … உணவு … உடலுறவு … உறக்கம் என இருந்த கல்லூரி பன்றிகளுக்கு ஒவ்வொரு இதழிலும் கார்ட்டூன் மூலமாகவும் , கவிதை மூலமாகவும் அடித்திருந்தேன் ஆப்பு.
பயிற்சி ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக நின்று இதழை வாசித்து விமர்சித்துக்கொண்டிருந்தனர். எவருக்கும் நெருங்கி விவாதம் செய்ய துணிவு வரவில்லை. உண்மையில் பலம் அது.
மண்டபத்தில் இருந்த கல்லூரி மாணவர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. பலரும் ஆர்வமாக வல்லினம் இதழ்களைப் புரட்டிப் படிப்பது கண்டு உற்சாகம் பிறந்தது. 7-8 வருடத்திற்கு முன் இல்லாத சூழல். அவர்களின் கவனம் நிகழ்ச்சி தொடங்கிய போதும் மேடையில் இல்லை. எல்லாம் உரைகள். பாராட்டுகள். நன்றிகள்.மாலைகள். பொன்னாடைகள்.
நிகழ்வு தாமதமாகத் தொடங்கியது குறித்த எவ்வித தயக்கமும் இல்லாமல் பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. எல்லோரும் பேசும்போது இளைய தலைமுறைக்கு இலக்கியம் சென்று சேரவேண்டும் என கோஷமிட்டனர். அந்தக் கோஷங்கள் இளம் தலைமுறையினர் காதில் விழாததுதான் அவர்கள் துரதிஷ்டம். இளைஞர்கள் இலக்கியத்தை அடைய ஆர்வம் காட்டுகின்றனர். அதை எடுத்துச் செல்லும் உக்தி இவர்களுக்குத் தெரிவதில்லை. மேடை போட்டு முழங்குவது மூலமாக அவை சாத்தியமாகும் என கருதுகின்றனர்.அதன் மூலம் அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் நன்மை செய்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
வாசுதேவன் மூலமாக எங்கள் அமர்வு கலந்துரையாடல் (forum) இல்லை, ஒவ்வொருவரும் 10 நிமிடங்கள் பேச வேண்டும் என உறுதி செய்யப்பட்டதும் அதற்கான மன நிலைக்குத் தயாரானேன். எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் என்று அரங்கில் பரிதாபமாக அமர்ந்திருந்தோம். பயண களைப்பு என்னைச் சோர்வடைய வைத்திருந்தது. கொடுக்கப்பட்ட 10 நிமிடத்தில் பயிற்சி ஆசிரியர்களுக்கு என்ன சொல்லமுடியும் என யோசித்துக்கொண்டும் குறிப்பு எடுத்துக்கொண்டும் இருந்தேன். அடிக்கடி முகம் கழுவியபடி இருந்தும் சோர்வு சூழ்ந்தபடியே இருந்தது.
வாசுதேவன் “உங்கள் அமர்வு நேரம் போதாமையால் நாளை மாற்றப்படுள்ளது” என்று சொன்னப்பிறகு அரங்கத்திலிருந்து வெளியே சென்று அமர்ந்தேன். கேட்டுக் கேட்டு அலுத்துப்போன, இணையத்தை தட்டினால் எளிதாய் கிடைக்கும் இலக்கியக் குறிப்புகளை யாரோ மேடையில் தான்தான் முதன் முதலாக எழுதியது போல முழங்குவது வெளியிலும் கேட்டது.
… தொடரும்
yenggalin mel ulla karuthuku romba nandri…..
கேட்டுக் கேட்டு அலுத்துப்போன, இணையத்தை தட்டினால் எளிதாய் கிடைக்கும் இலக்கியக் குறிப்புகளை யாரோ மேடையில் தான்தான் முதன் முதலாக எழுதியது போல முழங்குவது வெளியிலும் கேட்டது.
இந்த வரிகள் என்னைக் குறித்தும் இருக்கலாம் என்ற கருத்தில் என் பதிவினை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எனக்குக் கொடுக்கப்பட்டத் தலைப்பு – மலேசிய இலக்கியம் கடந்து வந்த பாதை. அவ்வகையில் நான் வரலாற்றுக் குறிப்புகளைத் தொடாமல் கட்டுரைப் படைத்தால் அது கட்டுரைத் தலைப்பை ஒட்டியிராது. அதே வேளையில் உங்களுக்கு அந்த வரலாறு பற்றிய செய்திகள் அத்துபடியாக இருக்கலாம், ஆனால், வந்திருந்த 85 சதவித பேராளர்களுக்கு அது புதிய செய்தியாகவே இருந்திருக்கும். மேலும், என்னுடைய ஆய்வு ஒரு வரலாற்று செப்பேடாக இல்லாமல், சமூகப் பதிவுகளைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பார்வையாகும். ஒரு புதிய பரிணாம வளர்ச்சியை எழுத்துத் துறையில் காண வேண்டு என்ற நோக்கிலேயே அவ்வாறு செயல்பட்டேன். உங்களுடைய அறிவுத் தள்த்திற்கு அது அமையாவிட்டாலும் கூட இத்தகைய முயற்சிகளையும் பொத்தாம் பொதுவாகக் கூறி செல்லும்போது கஷ்ட்டப்பட்டு கட்டுரை எழுதியதற்கு அர்த்தம் இல்லாமல் போகும்போது மனது வலிக்கிறது. நன்றி.