காலை உணவாக மீகூன் காத்திருந்தது. பாலாவின் உறவினர் சுவையாகப் பிரட்டியிருந்தார். நிதானமாகக் கிளம்பினோம். அங்கிருந்து டேசாரு கடற்கரைக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இம்முறை சிவா மகிழுந்தைச் செலுத்தியது இன்னும் நிதானத்தைக் கொடுத்தது.
பாலா டேசாரு கடல் தொடர்பாக விளக்கிக் கொண்டு வந்தார். கொந்தழிப்பு அதிகம் உள்ள கடல் என்றும் பலர் கடலில் மூழ்கி இறந்திருக்கின்றனர் என்றார். பாலா முதன் முதலாக அங்குச் சுற்றிப்பார்க்க வந்தபோது ஒரு சீன முதியவர் கடல்கரையில் இறந்து கிடந்ததாகவும், மரணத்தையே இக்கடல் தனக்கு நினைவுப்படுத்துவதாகவும் கூறினார். அநேகமாக நாங்கள் டேசாருவிலிருந்து திரும்புவதற்குள்ளாக பாலா மூன்று நான்கு முறையாவது இச்சம்பவத்தைச் சொல்லி பயத்தை ஏற்படுத்தியிருந்தார். முதன் முதலாகக் கடலைப் பார்க்க பயமாக இருந்தது.
தமிழ் முகங்கள் தெரிந்தவுடன்தான் தெம்பே வந்தது. சிலர் ஏற்கனவே பார்த்த முகங்கள். அடையாளம் கண்டுக்கொண்டு கைக்குலுக்கினர். பார்த்து சில ஆண்டுகளான நண்பர்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெயரைப் பதியும் போதுதான் நண்பர் வாசுதேவனைச் சந்தித்தேன். படத்தில் பார்த்ததைவிட இளமையாகக் காட்சியளித்தார். நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பியே ஜீவன்களில் ஒருவர். இணைய இதழ்கள் பற்றி பேச எங்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இடைநிலைப்பள்ளி ஆசிரியரான அவர் மலேசியாவில் முதன் முதலாக ( 2003 ) வலைப்பூவில் இயங்கிய தமிழ் ஆசிரியர்.
http://vivegam.blogspot.com/ மற்றும் http://vivegamm.blogspot.com/ எனும் வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார். வலைத்தளங்கள் மூலமாக எங்களை அறிந்தவரை அன்று நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்தோம். ஏற்பாட்டுக்குழுவில் இருந்த அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார். தங்கும் விடுதி எண் கிடைத்ததும் கிளம்பினோம். எங்கள் மூவருக்கும் ஒரே அறைதான் வழங்கப்பட்டிருந்தது. கூடுதலாக ஒருவர் தங்க வசதி இருந்தது. அந்த அதிஷ்டசாலி யார் என்று தெரியாமல் குளித்து தயாரானோம். அப்போதுதான் அந்த அதிஷ்டசாலி அறைக்குள் தயங்கியபடி வந்தார். ‘தென்றல்’ இதழின் புகைப்படக்காரர். நட்பாகப் புன்னகைத்தார். இதழோடுதான் மாற்றுக்கருத்தே தவிர அவரோடு இல்லையே. பையை வைத்துவிட்டு வேறொரு நண்பருடன் கிளம்பினார்.
சிவா அரைக்கால் சிலுவாருடன்தான் வருவேன்…அந்த உடையில்தான் மேடையில் ஏறுவேன் என அடம்பிடித்தார். அதிகம் குளிரும் என நான் பயம்காட்டியதைத் தொடர்ந்து முழுக்காலுடன் ‘HARD ROCK’ என எழுதப்பட்டிருந்த கருப்பு நிற டி-சட்டையை அணிந்து கொண்டார். நான் R க்குப் பதிலாக C இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றேன். ‘தேடினேன் கிடைக்கவில்லை’ என்றார் வருத்தமாக.
அன்று மதியம் எங்கள் உரை என்று முடிவாகியிருந்தது. சில தயார் நிலைகளைச் செய்ய முன்னமே சென்றுவிட்டோம். 2.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றதால் 2க்குள் சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக மண்டபத்திற்குள் புகுந்தோம். அரங்கம் பெரும்பாலும் காலியாக இருந்தது.
எங்களைத் தவிர எல்லோரும் எப்போதும் போல தெளிவாகவே இருக்கிறார்கள்.
… தொடரும்
நவீன், சிவா அரைக்கால் சிலுவாருடந்தான் வந்திருந்தால் நாம் இருவரும் விவசாயியைப் போல அல்லவா போயிருக்க வேண்டும், கோவனத்துடன். ஆஆஆஆஆ. உடை நாகரிகம் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். எனக்கு அது தெரியவே மாட்டேங்கிறது.
“டெசாரு என்னை அன்புடன் வரவேற்கவில்லை, கொடூரமான மரணத்திற்குப் பிறகு ஒரு பிணத்துடன் வரவேற்ற அனுபவத்தை இப்படித்தான் சொல்ல முடியும். இன்னும் ஒரு 2 நாட்கள் இருந்திருந்தால் உங்களையும் சிவாவையும் கடலிலேயே தள்ளிவிட்டிருப்பேன் பதற்றத்தில்.