எ.வி.எம்அருகில் சென்றவுடன் அதன் உலக உருண்டை சுழன்று கொண்டிருந்தது. பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த உருண்டை. இந்நிறுவனம் பற்றி கேள்விப்பட்டதுண்டு. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பாரம்பரியம் நிறைந்த தயாரிப்பு நிறுவனம் என்றும் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ஆர். என ஐந்து முதல்வர்களை சம்பளம் தந்து வேலை வாங்கிய ஒரே நிறுவனம் என்பது அதில் முக்கியமானது.
உள்ளே நுழைந்தோம். இதற்கு முன் திரைப்படங்களில் கண்ட கட்டடங்கள் வல இடம் என இருந்தன. இயக்குநர் ராம் வழங்கிய எண்களுக்கு அழைத்த போது செட் அமைக்கும் குழுவில் இருந்த நண்பர் வெளிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.உள்ளே இதற்கு முன் திரைப்படங்களுக்காக அமைக்கப்பட்ட செட்டுகளைக் காட்டினார். சில திரைப்படங்கள் கண்முன் வந்து சென்றன.
உள்ளே செட் அமைக்கும் குழுவினர் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தனர். அதில் பிரதானமானது சிங்க உருவங்களை அமைப்பது. மிகுந்த நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அடங்கிய சிம்ம உருவங்களை கலைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். உக்கிரத்தில் கர்ஜிக்கும் சிங்கத்தின் கழுத்து முடியும் இடத்தில் பல்வேறு தோரணையில் மனித உருவங்கள் சிற்பங்களாக இருந்தன. ஓர் அங்குலம் உயரம் கொண்ட அவற்றின் தோற்றம் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிற்பங்களை உருவாக்கும் அந்தக் கலைஞர்களைப் பார்த்தேன். கைலியைக் கட்டிக்கொண்டு வேலையில் மும்முறமாக இருந்தனர். ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு அவர்களின் பங்கு அளப்பறியது. ஆனால் எந்தப் படத்தின் வெற்றியிலும் அவர்கள் பெயர்கூட உச்சரிக்கப்படுவதில்லை. அவர்களை இயக்கும் கலை இயக்குநருக்கு எல்லா புகழும் சேர்ந்துவிடுகின்றது. எங்களை உள்ளே அழைத்துச் சென்ற நண்பர் அன்று போட்டோஷீட் என்றும் உள்ளே அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றார். உள்ளே சென்று பார்த்தோம். குன்று அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி காட்டு செடிகள் சூழ்ந்திருந்தன.
“என்ன படத்திற்கான போட்டோஷீட்” என்றேன்.
“ரானா” என்றார்கள்.
“ரஜினி நடிக்கும் படமா” என்றேன்.
“ஆம்! இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என நண்பர் வேலையில் மூழ்கினார்”
வெளியில் வந்தபோது கே.எஸ்.ரவிக்குமார் ஏதோ விவாதத்தில் இருந்தார். இப்படத்திற்கு அவர்தான் இயக்குநர். பின்புறம் குதிரைகள் அரச குதிரைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன.” ரஜினி நடிக்கும் சரித்திரப் படம். இதில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ” என கிசுகிசுத்தார் சிவா. எங்களுக்கு ரஜினியைப் பார்க்கும் ஆர்வம் உண்டானது. ரஜினியைப் பற்றி நல்ல சித்திரமே என் மனதில் இருந்தது. தமிழகத்தில் உள்ள சில எழுத்தாளர் நண்பர்களும் அவர் உண்மையில் எளிமையானவர் என்றும் பழைய நண்பர்களை மறக்காத பண்பினர் எனவுன் கூற கேள்விப்பட்டதுண்டு. அதையெல்லாம் மீறி தமிழகத்தில் பெரிய ஆளுமையாக இருக்கும் அவரின் உழைப்பின் மீது எனக்கு மரியாதை உண்டு. ஜனரஞ்சகப் படங்களில் மட்டுமே அவரால் இயங்க முடிகிறதென்றாலும் அவை ஆபத்தற்றவை. தவறான முறையில் அரசியலை கையாலாதவை.
சிறிது நேரம் காத்திருந்தோம். இயக்குநர் பாலுமகேந்திராவை 5 மணிக்குப் பார்க்க வேண்டியிருந்ததால் 4 மணிக்கெல்லாம் கிளம்பிவிடலாம் என திட்டம். மணி நான்கை நெருங்கும் சமயம் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா மிகவும் பரபரப்பாக ஸ்டூடியோவிற்குள் சென்றார். சிவா “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்றார். சொல்லிவைத்தார் போல வேகமாக வந்து நின்ற காரிலிருந்து ரஜினி இறங்கினார். அரச வேடத்தில் இருந்தார். செம்பட்டை நிறத்தில் பின் வாரப்பட்ட முடி தோள்பட்டையைத் தாண்டியிருந்தது. அவரிடம் ஒடிச் சென்று உங்களின் ‘ஆறிலிருந்து அறுபது வரை, தில்லுமுல்லு, ராகவேந்திரா போன்ற படங்களின் ரசிகன் நான்’ எனச் சொல்லத் தோன்றியது. அது அவரைப் புண்படுத்தலாம். அவரது தற்காலப் படங்களை நான் நையாண்டி செய்வதாக எண்ணலாம். கூப்பிடும் தொலைவில் இருந்தே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
வந்தவர் நேராகச் சென்று குதிரைகளை ஒரு தரம் பார்த்தார். நான் அவரைப் புகைப்படம் எடுக்க கைத்தொலைப்பேசியை எடுத்தேன். அங்கிருந்த ஒருவர் என்னை முறைத்தபடி கைத்தொலைப்பேசியை கீழே இறக்கும்படி சைகை காட்டினார். சற்று நேரத்தில் ரஜினி உள்ளே சென்றவுடன் ஒரு கூட்டம் என்னைச் சூழ்ந்துக்கொண்டது.
ஏன் படம் எடுத்தீர்கள் எனக் கோபமாகக் கேட்டார்கள். நான் ‘இல்லை’ என மறுத்தேன். கைத்தொலைப்பேசியைக் காட்டச்சொன்னார்கள். காட்டினேன். அதில் முன்பே நான் பிடித்த குதிரையின் படம் இருந்தது. அதை உடனே அழிக்கச் சொன்னார்கள். அழித்தேன். நான் எந்த யூனிட் என வினவினார்கள். எங்களை உள்ளே அழைத்து வந்த நண்பர் எங்கள் யூனிட்தான் என நல்ல நேரத்தில் காப்பாற்றினார். பின்னர் கூட்டம் அகன்றது.
நண்பர் “கொஸ்டியூமை ரகசியமா வச்சிருப்பாங்க அதான்” எனக்கூறி சிரித்தார். நாங்களும் சிரித்து விடைப்பெற்றோம். அவ்வனுபவம் உற்சாகம் தருவதாய் இருந்தது. தாமதிக்காமல் மீண்டும் ராம் அலுவலகம் நோக்கி சென்றோம். ஹாரன் ஒலிகள் மீண்டும் எங்களைச் சூழ்ந்து கொண்டன.
… தொடரும்
தலையைப் பார்த்திருக்கீங்க. ஒரு ஆட்டோப்கிராப் கூட வாங்கலையா? என்ன கொடுமை சார் இது? நல்லவேளை ஏ.வி.எம் படநிருவனம் ரஜினி வன்முறை சங்கமாக மாறாமல் போனதே. தப்பித்தீர்கள் நவீன்.