தாரா: ஒரு வாசிப்பு – ஹேமா

புதிய குடியேறிகளுக்கும் நிலத்தில் காலம்காலமாய் வசிப்பவர்களுக்கும் உண்டாகும் சர்ச்சைகளை, முன்னேறிய நாடுகளும் முன்னேறிவரும் நாடுகளும் காலம் காலமாய் எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய சர்ச்சைகளை எதிர்கொண்டு அவற்றைச் சமாளித்து அந்நிலத்தில் காலூன்றுவது புதிய குடியேறிகளுக்கு சவாலாக அமைகிறது.

இத்தகைய சவால் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது தாரா நாவல். இதில் இரண்டு அடுக்குகளை நான் பார்க்கிறேன்.

மலேசியாவில் சில தலைமுறைகளாக வசித்து வரும் தமிழர்களின் இடத்திற்கு, குறைந்த சம்பளத்தில் தனக்கு முழுதுமாய் அடிபணிந்து பணிபுரியத் தயாராய் இருக்கும் நேபாளிகளை வேறு நிலத்திலிருந்து அழைத்து வருகிறார் முதலாளி. நேபாளிகள் எந்த எதிர் கேள்விகளையும் எழுப்பாமல் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். அவர்களால் தங்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதாய் நினைக்கும் தமிழர்கள் அவர்களைத் தங்களில் வாழ்வாதரத்திற்கு வந்த மிரட்டலாய் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களின் எல்லைகளுக்குள் ஊடுறுவுவதாக நினைக்கிறார்கள். தங்களுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து அவர்களை விரட்ட நினைக்கிறார்கள். இதனால் ஏற்படும் சச்சரவுகள் பெருஞ்சண்டைகளாய் மாறி கொலை வரை செல்கிறது. இது முதல் அடுக்கு.

இரண்டாம் அடுக்கு, தமிழர்கள் தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து பிடிமண்ணாகக் கொண்டு வந்த அவர்களின் குலதெய்வமான கந்தாரம்மனையும், இரவில் பூக்கும் நீலத்தாமரையின் வழி இறங்கும் நேபாளிகளின் நடன தெய்வமான தாராவையும் கொண்டு மாய யதார்த்தத்த அடுக்காக விரிகிறது. இந்த இரண்டு தெய்வங்களின் இணைவு இரண்டாம் அடுக்கில் நிகழ்கிறது. இந்த இரண்டு அடுக்குகளையும் இணைப்பவர்களாக தமிழ் சிறுமி கிச்சியும், நேபாள யுவதியான அந்தராவும் இருக்கிறார்கள். கிச்சியின் மூலம் நாவலில் சிறுவர்களின் உலகம் அழகாய் விரிகிறது.

சிறுவர்களுக்கே உரிய அறியாமையால் அவள் உடைக்கும் கட்டுப்பாடுகள் அந்தராவுடன் அவளை இணைக்கின்றன. பின் அந்தராவின் கைகளில் ஒளிரும் நீலத்தாமரை கந்தாரம்மனின் கைகளில் இருக்கும் செயற்கைத் தாமரைக்குள் இறங்கி ஒளியூட்டுகிறது. இதன் வழி கந்தாரம்மன் தான் அந்த நிலத்தில் அமர சம்மதிப்பதையும், தன் நிலத்தில் நேபாளிகள் ஊன்றுவதை ஏற்றுக் கொள்வதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மேற்சொன்ன இரண்டு அடுக்குகளும் இயல்பாய் பின்னிக்கொண்டு மலேசிய மண்ணின் மற்றொரு பக்கத்தை வாசகர்களுக்குக் காட்டுகின்றன. கிச்சியின் அனுபவங்களின் வழியாக தமிழர்கள் வசிக்கும் கம்பத்தின் மண்வாசத்தை நம்மால் உணர முடிகிறது. சிறுவர்களின் உலகம் நவீனின் பலம். பேய்ச்சி, சிகண்டி மற்றும் தாரா நாவல்களிலும் அவரின் சிறுகதைகளிலும் இவற்றைப் பார்க்கலாம்.

முதல் அடுக்கில் நேபாளர்கள் வசிக்கும் பகுதி அழுக்காகவும் நெருக்கடியாகவும் இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்லப்பட்டுச் சென்று விட்டது. இதனால், தமிழர்களின் வாழ்வியல் மனதில் பதிந்தது போல நேபாளிகளுடையது ஆழமாய் உள்ளிறங்கவில்லை.

அம்மன் அவளது அனுமதி இல்லாமலேயே வலுக்கட்டாயமாக கோவில் அமர வைக்கப்பட்டதால் தாராவைப் போல உயிரோட்டமாய் இல்லாமல் சிலையாகவே கதை முழுக்க காட்சி தருகிறாள்.

தாராவைப் பற்றி முதற்பகுதியிலேயே கொஞ்சமாய் கோடிட்டுக் காட்டி மெல்ல மெல்ல பிற்பகுதிக்கு வாசகர்களைத் தயார் படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது.

மற்ற இரு நாவல்களைப் போலவே நவீனின் இந்த நாவலும் சுவாரஸ்யமானது. ரொம்ப நாள் கழித்து மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுப் படித்து முடித்த நாவல் தாரா.

(Visited 121 times, 1 visits today)