தி. நகர் பேருந்து நிலையத்தில் பௌத்த அய்யனாருடன் பாவண்ணனும் இருந்தார். தொடக்கத்தில் நான் பாவண்ணனை பெயரளவில் அறிந்து வைத்திருந்த போது அவரை வாசிக்கத் தூண்டியவர் நண்பர் காளிதாஸ். கவிதை, சிறுகதை, கட்டுரைத்தொகுதிகள், குறுநாவல்கள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தைப்பாடல்கள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருப்பவர். மொழிபெயர்ப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர். அவரை ‘நேற்று வாழ்ந்தவர்கள்’, ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற இரு சிறுகதை தொகுதி மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில கட்டுரைகளை வாசித்ததுண்டு. இத்தனைக் குறைவாக வாசிப்பின் மூலம் அறிந்த ஒருவருடன் நேரில் அமர்ந்து பேசுவது ஒருவகையான கூச்சத்தைக் கொடுத்தது.
பௌத்த அய்யனார் ‘தீராநதி’க்காக அவரை அன்று நேர்காணல் செய்திருந்தார். அருகில் இருந்த ஓர் உணவகத்தில் நுழைந்தோம். பாவண்ணன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார். எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு புன்முறுவல் பூத்தார்.
பௌத்த அய்யனாருடன் தொலைப்பேசியிலும் ‘சாட்’டிலும் பலமுறை பேசியிருந்ததால் எளிதாகப் பேச முடிந்திருந்தது. ‘மீனாள்’ பதிப்பகத்தில் வெளிவந்த சில புத்தகங்களைக் கொடுத்தார். நானும் அவர் கேட்டிருந்த இளங்கோவனின் முழு நாடகப் பிரதிகளையும் வல்லினம் பதிப்பக புத்தகங்களையும் கொடுத்தேன். பரபரப்பான உணவகம் அது. பேசுவதற்கோ அமைதியாக கருத்துப் பரிமாறுவதகோ எவ்வகையான வாய்ப்பையும் வழங்கவில்லை.
பாவண்ணனின் ‘வேசம்’ என்ற சிறுகதை என் நினைவில் எப்போதும் இருப்பது. புறப்படுவதற்கு முன்பே நான் அக்கதையைப் பற்றி சிவாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அக்கதை எந்தத் தொகுப்பில் உள்ளது என சரியாக நினைவில் இல்லாவிட்டாலும் அக்கதைப் பற்றி நானும் காளிதாசும் அதிகம் விவாதித்ததுண்டு. அக்கதை மேடை நாடகமாக மாற்ற ஏற்ற கதையாக இருந்தது அதற்கு முக்கியக் காரணம்.
மலேசியாவில் மாற்று முறையிலான ஒரு மேடை நாடகம் செய்ய திட்டமிட்டிருந்தபோது எங்களுக்குப் பொருத்தமாகப் பட்டது அச்சிறுகதைதான். ஒருவகையில் அது மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தேவையான நாடகமும் கூட.
ஒரு பதிப்பகத்திற்கு அரசாங்கத்திடமிருந்து முதன் முதலாக புத்தகம் பதிப்பிக்கும் வேலை கிடைத்துள்ளது. அதை சிறப்பாகச் செய்து முடித்தால் அடுத்தடுத்து அரசாங்க வேலைகள் கிடைக்க வாய்ப்பு வரும். அது ஒரு தலைவரின் புத்தகம். பதிப்பகத்தில் கடைசி நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போய்விடுகிறது. மின்சாரத் தடை. என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் போது ஒரு திட்டம் உதிக்கிறது. அதன் படி தயார் செய்யப்பட்டிருக்கும் புத்தக அட்டையில் காலி காகிதங்களைப் பொருத்தி புத்தகம் போல சில பிரதிகளைத் தயாரிக்கின்றனர். மேடையில் அந்தப் புத்தகத்தைப் போற்றிப் புகழ்ந்து தலைவரின் சக கூஜாக்கள் பேசுவதாகக் கதை முடிகிறது (ஐந்து வருடங்களுக்கு முன் படித்தது. கதையில் சாரம் இதுதான். சில முக்கியப் பகுதிகள் விடுப்பட்டிருக்கலாம்.)
எனக்கு இக்கதை மலேசிய நாட்டில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாக்களை நினைவு படுத்தியது. எழுத்தாளன் ஒரு மேடை அமைத்து புத்தக வெளியிட அரசியல்வாதியை அழைப்பான். (அரசியல்வாதி என்று ஒருமையில் சொல்வது புது எழுத்தாளனுக்குத்தான். பல வருடங்கள் கொட்டைப் போட்டவர்கள் சில அரசியல்வாதிகளையாவது அழைப்பார்கள்) அந்த அரசியல்வாதிக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் புத்தகத்தையும் எழுத்தாளனையும் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளுவார்கள். கூடவே தங்கள் அரசியல் சாதனைகளைப் பற்றி பேசுவதோடு தங்கள் அரசியல் எதிர்களையும் கடுமையாகச் சாடுவார். எழுத்தாளனும் தனது ஏற்புரையில் தலைவரை ஏத்து ஏத்து என ஏத்துவார். கடைசியில் பணம் வசூழிக்கப்பட்டு தொகையைத் தலைவர் கூற எழுத்தாளன் கூன் வளைந்து வாங்கி கொள்வான். அந்தக் காட்சி அக்காலத்தில் புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பெற்றுக்கொண்ட பணமுடிப்பை காட்சிப்படுத்தும். அந்தத் தொகைதான் எழுத்தாளனின் விலை. அதோடு அவன் ஓர் அடிமை. அந்த அடிமை அதோடு இலக்கியம் என்றும் புரட்சி என்றும், தீவிரம் என்றும் வாய் கிழிய மேடைகள் தோறும் பேசித்திரியும். இலக்கியம் ‘அம்போ’ எனக் கிடக்கும்.
பாவண்ணனின் கதையையும் மலேசிய புத்தக வெளியீட்டின் சூழலையும் இணைத்து ஒரு மேடை நாடகமாக்கி , மலேசிய எழுத்தாளர்கள் அனைவரையும் அழைத்துவந்து அரங்கேற்ற வேண்டும் என்ற எங்கள் ஆசை இப்போது வரை நிறைவேறாமல்தான் இருக்கிறது. பாவண்ணனைப் பார்த்துவிட்டு திரும்பிய நிமிடம் மீண்டும் ‘வேசம்’ ஒரு நாடகமாக மனதில் ஓடத் தொடங்கியது.
…தொடரும்
பாவண்ணனை அநங்கம் இதழுக்காக ஒருமுறை சின்ன நேர்காணல் செய்ததுண்டு. இன்றளவும் இணையத்தின்வழி நல்ல பழக்கமுடையவர். அவருடைய வேசம் கதையும் படித்து வியந்தததுண்டு. குறிப்பாக தீராநதியில் அவர் எழுதிய தொடர் மிகவும் முக்கியமானது. அவருடன் உங்களுக்கு ஏற்பட்ட சந்திப்பு சுவாரசஷ்யம்தான் நவீன்.